நாத்திகராய் பாரதி

maalan_tamil_writer

“உலகத்தில் வாலிப பருவத்தில் ஒருவன் எவ்வாறு பழகினானோ அப்படியே வயோதிக பருவம் வரையில் நடக்கிறான் என்பது உண்மை. ஐந்தில் வராதது ஐம்பதில் வராது என்பது திண்ணம்”  என்று ஒரு கட்டுரையைத் தொடங்குகிறார் பாரதி. (இந்திய குருவும் ஆங்கில குருவும்- விஜயா 25 பிப்ரவரி 1910)

இவ்வளவு உறுதியாக பாரதியார் சொல்லும் விஷயம் அவருக்கும் பொருந்தும். அதனால்தான் அவரது இளமைப் பருவம், அதில் அவர் பெற்ற கல்வி, அடைந்த அனுபவங்கள், அவரை பாதித்த சிந்தனைகள் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் துரதிருஷ்டவசமாக அவரது பதின்ம வயது வாழ்க்கை, குறிப்பாக 16 முதல் 20  வயது வரையிலான (1898-1902) வாழ்க்கை பற்றி ஆதாரப்பூர்வமான செய்திகள் இதுவரை நமக்குக் கிட்டவில்லை.

நானறிந்த வரையில் பாரதியின் மனைவி செல்லம்மா எழுதியுள்ள பாரதியார் சரித்திரத்தில் இந்தக் காலகட்டம் பற்றி சில செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றில் முரண்பாடுகளும் இருக்கின்றன. “பாரதியார் 1902ஆம் வருஷம் காசியிலிருந்து ஊருக்குத் திரும்பினார்” என்று ஓரிடத்தில் எழுதும் செல்லம்மா, “காசியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், பாரதியாருக்கு வடநாட்டிலேயே தங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை மாற்றி அவரைத் தென்னாட்டிற்கு அழைத்து வந்தவர் எட்டையபுரம் மகாராஜாதான். அந்த சமயத்தில் தில்லி தர்பாருக்குச் சென்றிருந்த மகாராஜா திரும்புங்காலையில் காசியில் சிவமடத்தில் இறங்கினார். அங்கே பாரதியாரைச் சந்தித்து தம்முடன் எட்டையபுரம் வந்து இருக்கும்படி அழைத்தார்” என்றும் எழுதுகிறார்.

பிரிட்டீஷ் ஆட்சியில் மூன்று முறை தில்லியில் தர்பார் நடந்தது.(1877, 1903, 1911) இதில் 1877 ஆண்டின் போது பாரதி பிறந்திருக்கவில்லை. 1911 ஆண்டு புதுச்சேரியில் இருந்தார். இங்கிலாந்தில் புதிதாக அரசரோ அரசியோ அரியணை ஏறும் போது அவர்கள் தங்களது காலனி நாடுகளுக்கு விஜயம் செய்ய வேண்டும் என்பது மரபு. அதன்படி ஏழாம் எட்வர்ட் அரசரானபோது அவர் தில்லிக்கு வருவதற்கு 1903ஆம் ஆண்டு வைஸ்ராய் கர்சன் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்தார். பெரிய வெளியில் கூடாரங்கள் எழுந்தன. பிரத்தியேகமாக ஒரு ரயில் பாதை போடப்பட்டது. கப்பலில் பம்பாய் வரும் அரசர் அங்கிருந்து ரயில் மூலம் தில்லி வருவதாக ஏற்பாடு. அதே நேரம் கல்கத்தாவிலிருந்து கர்சன் வருவார், மேற்கிலிருந்து வரும் அரசரும் கிழக்கிலிருந்து வரும் வைஸ்ராயும் தில்லியில் சந்திப்பார்கள் எனத் திட்டம். மற்ற காவலர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் விதமான சீருடை அணிந்த சிறப்புக் காவல் படை உருவாக்கப்பட்டது. மின்சார கொண்டு வரப்பட்டு மின் விளக்குகள் நிறுவப்பட்டன. ஒருதபால் நிலையமும் நீதிமன்றமும் அமைக்கப்பட்டது. சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டது. 1903 ஜனவரி ஒன்றாம் தேதி, புத்தாண்டு அன்று, நாடெங்கிலிருந்தும் சமஸ்தான அரசர்கள் அவர்களிடமிருந்த விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிந்து தர்பாருக்கு வந்தனர். சிலர் யானை மீது தங்க அம்பாரியில் வந்தனர். அவர்களது யானைகளைக் கட்டவும் அவற்றுக்குத் தீனிபோடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அத்தனை கோலாகலம். ஆனால் அரசர்தான் வரவில்லை! ஏழாம் எட்வர்ட் தான் வராமல் தன் தம்பியை அந்த தர்பாருக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் இதெல்லாம் நடந்தது 1903ல். 1902ல் அல்ல. அதனால் எட்டையபுரம் மகாராஜா தில்லி தர்பாரிலிருந்து திரும்பிச் செல்லும் போது காசிக்கு வந்திருக்க  இருக்க முடியாது. அல்லது பாரதி எட்டையபுரம் திரும்பியது 1902ஆக இருக்க முடியாது.

வருடக் கணக்கு முன் பின்னாக இருந்தாலும் செல்லம்மாவின் நூலை வரிகளுக்கு இடையில் வாசித்தால் சில செய்திகள் புலனாகின்றன. பாரதி சில காலம் நாஸ்திகராகவும் இருந்தார் என்பது அவற்றில் ஒன்று. “காளைப் பருவமானதாலும், பண்படாத சுதந்திர வீறுபடைத்த மனமாகையாலும் அவருக்கு நாஸ்திக வாதத்தில் பற்றுண்டாயிற்று” என்று எழுதுகிறார் செல்லம்மா.

பாரதியா? கணபதி, முருகன், சிவன், பராசக்தி,சரஸ்வதி, லக்ஷ்மி, காளி, மாரியம்மன், கண்ணன் என்ற இந்து தெய்வங்கள் மட்டுமன்றி, ஏசு, அல்லா என்று எல்லா தெய்வங்கள் மீதும் கவிதைகள் எழுதிய பாரதியா நாஸ்திகராக இருந்தார்? ‘தமிழா, பயப்படாதே, தெய்வத்தை நம்பு!” என்று எழுதியா நாஸ்திகராக இருந்தார்? வேத, உபநிஷத்களிடம் மனதைப் பறி கொடுத்து வேத ரிஷிகளின் கவிதை என ரிக் வேதப் பாடல்களையும், பகவத்கீதையையும் மொழிபெயர்த்த பாரதியா நாஸ்திகராக இருந்தார்?

ஆம். அவரது பதின்ம வயதில் அவர் ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் பால் ஈர்க்கப்பட்டிருந்தார். “அப்போது அவருக்கு ஷெல்லி, பைரன் என்ற ஆங்கிலக் கவிகளின் நூல்களை வாசிப்பதில் பிரியம் அதிகம்” என்று செல்லம்மா கூறுகிறார்.காசியிலிருந்து எட்டையபுரம் திரும்பிய பின் பாரதி ஷெல்லிதாஸ் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார் என்றும் குறிப்பிடுகிறார் செல்லம்மா.

எட்டையபுரத்திலிருந்தும் பாரதி வெளியேற எட்டையபுரம் மன்னரை விமர்சித்து திருநெல்வேலியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த சர்வஜனமித்திரன் என்ற இதழில் பாரதி எழுதியதுதான் காரணம் என்று பாரதியின் சகோதரர் சி.விஸ்வநாதன் தெரிவித்ததாக ஓரு குறிப்பு உண்டு. அதனை ஷெல்லிதாஸ் என்ற பெயரில் எழுதியதாக ராஜம் கிருஷ்ணன் தனது பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த நூல் கற்பனை வகையைச் சார்ந்தது என்று பிரேமா நந்தக் குமார் போன்றவர்கள் கருதுகிறார்கள். பாரதியின் அந்தப் படைப்பும் கிடைக்கவில்லை.

ஆனால் ஷெல்லிதாஸ் என்ற பெயரில் பாரதி எழுதிய வேறு ஒரு படைப்பை நாம் இன்றும் வாசிக்க முடியும். அது ‘துளசிபாயி என்ற ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’. பாரதியே ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி பத்திரிகையில் 1905 நவம்பர் தொடங்கி, 1906 ஜூலை வரை, இதழுக்கு இரண்டு பக்கங்கள் வீதம், இடைவெளி விட்டு விட்டு, ஐந்து மாதங்கள் வெளியான கதை. அது ஒரு மொழியாக்கக் கதை. அதை ஷெல்லிதாஸ் என்ற புனைப்பெயரைச் சூடி பாரதி எழுதினார்.

காசியிலிருந்து எட்டையபுரம் திரும்பிய பாரதி அங்கு ஷெல்லியின் பெயரால் ஷெல்லியன் கில்ட் (Shelleyan Guild என்ற ஓர் அமைப்பையும் தொடங்கியதை பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய முன்னோடிகளில் ஒருவரான ஆக்கூர் அனந்தாச்சாரியார் குறிப்பிடுகிறார்: “ஷெல்லி, கீட்ஸ் இவ்விரு கவிவாணர் மீதுதான் அவர் அளவற்ற மதிப்பு வைத்திருந்தார். தமது ஊரில் ஒரு சங்கம் ஏற்படுத்தி, அச்சங்கத்தில் ஷெல்லியின் நூல்களைப் படித்துக் காண்பித்து, அனுபவிக்கும்படி செய்து வந்தார்” (கவிச்சக்ரவர்த்தி சுப்ரமணிய பாரதி சரிதம் -ஆக்கூர் அனந்தாச்சாரி)

சுதந்திர வீறு கொண்ட மனம் வாய்த்த பாரதி, தன்னை எந்த மனிதருக்கும் தாஸன் என்று சொல்லிக் கொண்டதில்லை, ஷெல்லியைத் தவிர. சக்தி தாஸன், காளிதாசன் என்ற பெயர்களில் அவர் எழுதியதுண்டு. ஆனால் அவை இறைவியின் பெயர்கள். மனிதர்களில் அவர் தன்னை தாஸனாக அறிவித்துக் கொண்டது ஷெல்லி ஒருவருக்குத்தான்.

யார் இந்த ஷெல்லி? ஏன் அவர் மீது அவ்வளவு ஈர்ப்பு?

இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலம் சசக்ஸ். அந்த மாநிலத்தில் ஒரு பிரபு வீட்டுப் பிள்ளையாகப் பிறந்தவர் ஷெல்லி. அவரது தந்தை பிரிட்டீஷ் பாராளுமன்ற உறுப்பினரும் கூட. ஷெல்லி பிறந்தது 1792 ஆகஸ்ட்டில்.

அதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் 1789ல் நடந்த பிரஞ்சுப் புரட்சி ஐரோப்பாவையே உலுக்கியிருந்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது பிரஞ்சுப் புரடசியின் லட்சியமும், முழக்கமும் ஆகும். மன்னர் என்பவர் தெய்வத்தின் பிரதிநிதி, எனவே அரசாட்சி என்பது தெய்வீக உரிமை என்ற கருத்து ஒருகாலத்தில் இங்கிலாந்தில் நிலவி வந்தது (Sovereignty என்ற சொல்லை அதனால்தான் தமிழில் இறையாண்மை என்று மொழிபெயர்த்து வைத்திருக்கிறார்கள்) ஆனால் குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு என்று மக்கள் பிரதிநிதித்துவம் கொண்ட பாராளுமன்றம் வேண்டும் என்று 1688ல் நடந்த கிளர்ச்சியின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டதும் அந்தக் காலகட்டத்தில்தான்.

பிரபு வீட்டுப் பிள்ளையானாலும் மன்னராட்சிக்கு எதிரான கருத்துக்கள், சுதந்திரம், சமத்துவம் என்ற கருத்துக்கள் காதில் விழுந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான் ஷெல்லி வளர்ந்தார். அந்தக் கருத்துக்களின் தாக்கம்தான் அவரைக் கவிஞனாக்கியது. எட்டாவது வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தவர் ஷெல்லி. அவரை பிரஞ்சுப் புரடசியின் குழந்தை என அவரது கவிதைகளின் விமர்சகரான எட்மண்ட்ஸ் எழுதுகிறார்.

அரசன் தெய்வத்தின் பிரதிநிதி அல்ல என்ற புள்ளியில் தொடங்கிய ஷெல்லியின் சிந்தனை இறைவனுக்கு எதிராகவும் நீண்டது. அவர் தனது பதினேழாவது வயதில், ஆக்ஸ்போர்ட் பல்கலையில் படிக்கும் போது நாத்திகத்தின் தேவை (The Necessity of Atheism) என்ற நூலை எழுதினார். அது பிரஞ்சுப் புரட்சியின் தாக்கம் இளைஞர்களிடம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகக் கல்வி நிலையங்களில் கெடுபிடி நிலவிய காலம். அதனால் ஜெர்மியா ஸ்டக்லி என்ற புனை பெயரில் எழுதினார். அவர் கையெழுத்திட்டு நண்பர்களுக்கு அனுப்பி வைத்த நூலின் பிரதிகளை, நண்பர் ஒருவர்  மதகுருக்களுக்கு அனுப்ப, அந்த மதகுரு பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்ப, ஷெல்லி பிடிபட்டார். பல்கலைக்கழக துணைவேந்தரும் அதிகாரிகளும் ‘இதை எழுதியது நானல்ல’ என்று மறுத்துவிடு உன் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்’ என்று சொன்னார்கள்.  ஆனால் ஷெல்லி, “உங்கள் மதம் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுத்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் பொய் சொல்வது அற்பத்தனமான, கோழைத்தனமான காரியம் என்று நானறிந்த கொள்கைகள் சொல்கின்றன. நான் பெருமை கொள்ளத் தக்கதாக இந்த நூலை நான் எழுதவில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் அதற்காக அதைப் புறக்கணிக்கச் சொன்னால் அது என்னால் முடியாது” என்று மறுத்துவிட்டார். விளைவு பல்கலைக்கழகத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அதை அவமானமாகக் கருதிய அவரது தந்தை,  உன் போக்கை நீ மாற்றிக் கொள்ளாதவரை உன்னை என் மகனாக நான் ஏற்க மாட்டேன் என்று ஷெல்லிக்கு கடிதம் எழுதினார். தந்தையின் நிபந்தனைகள் எதையும் ஏற்கமறுத்த ஷெல்லி வீட்டை விட்டு வெளியேறினார்.  பெரும் பணக்கார வீட்டில் பிறந்த ஷெல்லி வாழ்க்கையில் பெரும்பகுதி மிகவும் சிரமமான சூழ்நிலையில் வாழ்ந்தார்.

ஷெல்லியின் வாழ்க்கை, மன்னர்களைப் பற்றிய அவரது எள்ளல் (A King, a heartless beast, pageant, a name – ஒரு மன்னன், இதயமற்ற மிருகம், அலங்கார அணிவகுப்பு, வெறும் பெயர்) அதிகார எதிர்ப்பு, சமத்துவத்திற்கான வேட்கை, ஏழைகள் மீதான ஷெல்லியின் பரிவு (I am the friend of the unfriended poor- நான் நண்பர்களற்ற ஏழைகளின் நண்பன்)) மதகுருக்களுக்கு எதிரான உணர்வாகத் தோன்றி விரிந்த நாத்திகம் இவையெல்லாம் பதின்ம வயது பாரதியை வசீகரித்திருக்க வேண்டும். எட்டையபுர அரசரை முட்டாள் என வர்ணித்ததால்தான் அரசர் சினமடைந்தார் எனச் சொல்கிறார்கள். “The fool whom the courtiers nickname monarch, whilst a slave even to the basest appetites” – அரசப் பிரதிநிதிகளால் அரசன் என்றழைக்கப்படும் முட்டாள், கீழான வேட்கைகளுக்கு அடிமை என்பது ஷெல்லியின் வரிகள்.

நாத்திகத்தைத் தவிர ஷெல்லியின் கருத்துக்களின் தாக்கத்தைப் பல படைப்புகளில் காணலாம். அரசரையும், அரசவையையும் ஏளனம் செய்வது (சின்னச் சங்கரன் கதை) மதகுருக்கள், அமைப்புக்கள் மீதான விமர்சனம் (சங்கரன் நாயர் விஷயம் தொடர்பாக சங்கராச்சாரியார் பற்றி இந்து நாளிதழுக்கு எழுதிய கடிதம்) ஏழைகள் மீது பரிவு (மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ?) சமத்துவத்திற்கான வேட்கை (ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில்) அதிகார எதிர்ப்பு (பல பாடல்கள்/கட்டுரைகள்) எனச் சில உதாரணங்களைக் கூறலாம்.

நேரடியான உதாரணம் காந்தாமணியின் தொடக்க வரிகள்:” வெயிலொளி எந்தப் பொருள் மீது பட்டாலும், அந்தப் பொருள் அழகுடையதாகத் தோன்றுமென்று ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிராயன் சொல்லுகிறான். எனக்கு எந்த நேரத்திலும் எந்தப் பொருள்களும் பார்க்க அழகுடையனவாகத் தோன்றுகின்றன” என்று காந்தாமணி என்ற கதையைத் தொடங்குகிறார் பாரதி.

இதில் கவனிக்க வேண்டிய ஓர் செய்தி உண்டு. காந்தாமணி பாரதி மறைவதற்கு ஈராண்டுகளுக்கு முன், செப்டம்பர் 1919ல் எழுதப்பட்ட கதை. 1905ல் ஷெல்லிதாசன் என்ற பெயரில் தன் எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கி 1921 அமரராகும் வரை ஷெல்லி பாரதி மீது தாக்கம் செலுத்தி வந்திருக்கிறார் என்பதற்கான வலுவான சான்று இது.

இன்னொரு சான்றும் உண்டு. தனது மரணத்திற்குச் சில மாதங்கள் முன்பு, 1921 பிப்ரவரி மாதம் பாரதி மகாமகம் என்று ஒரு கட்டுரை எழுதினார். அதில் எழுதுகிறார்: “ இந்திரனை தேவ தேவ என்ப. மற்ற மனிதருக்கு வானவர் எப்படியோ, அப்படி வானவருக்கு அவன் என்பது குறிப்பு. வடமொழியில் வால்மீகி காளிதாசர்களையும், தமிழில் கம்பனையும் புகழேந்தியையும் இங்கிலீஷில் ஷெல்லியையும் கவிகளின் கவி என்று சிறப்பித்துச் சொல்கிறார்கள்”

ஷெல்லியைப் பற்றி அப்படிச் சொல்பவர், நமது கவிகளின் கவியான பாரதி!    

கலைமகள் -மே 2024  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.