7
நடத்திய படையும் விரிக்கிற கடையும்
சில வருடங்களாகவே மனத்தில் ஒரு எண்ணம். இங்கே வந்ததும் அது பலமாக வலுப்பட்டுவிட்டது.
இரண்டு ஜெர்மனிகளும் இணைந்து கொண்டுவிட்டன. இன்று ரஷியாக்காரனும் அமெரிக்கனும் ஒன்றாக விண்வெளிக் கலத்தில் உலகைச் சுற்றுகிறார்கள். பாலஸ்தீனமும் இஸ்ரேலும் ஒன்றை ஒன்று அங்கீகரித்துக் கொள்கின்றன. தென்னாப்பிரிக்காவில், வெள்ளையர்களும், கறுப்பர்களும் கைகுலுக்கிக் கொள்கிறார்கள். அயர்லாந்திற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் சமரசம் ஏற்பட்டு விடுவதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன.
எலியும் பூனையுமாக இருந்தவர்கள் எல்லாம் நகமும் சதையுமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கும் நமக்கும் மட்டும் ஏன் இன்னும் பனிப்போர்?
தலைமுறை தலைமுறையாக விரோதம் வளர்ப்பதற்கு அவர்கள் நமக்குப் பகைவர்கள் அல்ல, பங்காளிகள். அர்த்தமில்லாத இந்த விரோதம் ஆங்கி லேயர்கள் செய்த அரசியல் சித்து விளையாட்டு. அதற்குப் பிறகு அமெரிக்கர் களும் ரஷியர்களும் அங்கே காய் நகர்த்தினார்கள். அதில் வெட்டுப்பட்டதும், வீழ்ச்சி கண்டதும் நாம்தான், வெள்ளைக்காரர்கள் அல்ல. ஆனால் இன்று உலகம் மாறிவிட்டது. வேருடன் இல்லாவிட்டாலும் வெளிப் பார்வைக்காவது, போரிடும் உலகம் சாய்ந்துவிட்டது. புதியதோர் உலகம் – New World Order – நோக்கி நாடுகள் நடக்கின்றன. ஆனால், இந்தியா? பாகிஸ்தான்?
உலகம் மாறிவிட்டது என்பதற்கு இந்த வாரத்து உதாரணம் வியட்நாம்.
வியட்நாம் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையை அமெரிக்கா விலக்கிக் கொண்டுவிட்டது.
முன்கதைச் சுருக்கம் தெரிந்தால்தான் இதன் முழு மகத்துவமும் உனக்குப் புரியும். முப்பது வருடத்திற்கு முந்தைய கதை அது. 1964ல், வட வியட்நாம் மீது – அப்போது வியட்நாம் வடக்கு தெற்கு என இரண்டாகப் பிரிந்திருந்தது, வட வியட்நாமில் கம்யூனிஸ்ட் ஆட்சி, ஹோ-சி-மின் என்றவொரு புரட்சித் தலைவன் எழுதிய எழுச்சிமிகு கவிதை அது – அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அறுத்த விரலுக்கு சுண்ணாம்பு கூடக் கொடுக்கமாட்டார்கள் என்று நம்மூரில் சொல்வார்களே, அதைப்போன்ற ஒரு தடை அது. அடிபட்டவர்களுக்கு மருந்துகூட அனுப்ப முடியாது.
தொடர்ந்து போரிலும் குதித்தது அமெரிக்கா. போர் எனில் அது போர் ! இரண்டாம் உலகப் போரின்போது, எல்லா நேசநாடுகளும் சேர்ந்து ஜெர்மனியின் மீது வீசிய குண்டுகளை விடப் பலமடங்கு குண்டுகளை, வியட்நாம் மீது மழையாகப் பொழிந்தது அமெரிக்கா. அவற்றில் நேபாம் என்கிற நெருப்புக் குண்டுகளும் உண்டு. அந்த யுத்தத்தில் இடிந்தவற்றில் இன்னும், 25 வருடத்திற்குப் பிறகும், 4000 பாலங்களும், 50 ஆயிரம் மைல் நீளத்திற்கு சாலைகளும் சரி செய்யப்பட வேண்டியிருக்கிறது என்றால் சேதத்தை நீயே ஊகித்துக் கொள்.
என்றாலும், ஏழை விவசாயிகளையே அதிகம் கொண்ட அந்த தேசம், உலகின் மிகப் பெரிய வல்லரசை தீரத்துடன் எதிர்த்துப் போராடியது. கடைசியில் அதுதான் வென்றது.
அமெரிக்கத் தரப்பில் 58 ஆயிரம் வீரர்கள் செத்தார்கள். கிளிண்டன் சொல்வதைப் போல், “எங்கள் தலைமுறைக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த யுத்தத்தில் செத்தவர்களில், குறைந்தபட்சம் ஒருவரையாவது தனிப்பட்ட முறையில் தெரிந்திருக்கும்.” அவமானத்துடன் அமெரிக்கா வெளியேறியது. இந்த நூற்றாண்டில், அமெரிக்காவை யுத்தத்தில் தோற்கடித்த ஒரே தேசம் வியட்நாம்தான்.
1975ல் இரண்டு வியட்நாம்களும் இணைந்து ஒன்றாயின என்றாலும், பொருளாதாரத் தடை தொடர்ந்தது. அமெரிக்காவோடு சேர்ந்து தடை விதித்த நாடுகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகத் தடையை விலக்கிக் கொண்டன. ஆனாலும் அமெரிக்கா பிடிவாதமாக இருந்தது.
அதற்கு ஒரு காரணம் இருந்தது. எல்லா யுத்தத்திலும் ‘களத்தில் காணாமல் போனவர்கள்’ – Missing in Action – என்று ஒரு சிலர் இருப்பார்கள். வீர மரணம் அடைந்தவர்களை, உடலை வைத்துக் கணக்கிடலாம். சரணடைந்து கைதியான, யுத்தக் கைதிகளைப் பட்டியலிடலாம். இரண்டும் இல்லாதவர்கள், என்ன ஆனார்கள் என்றே தெரியாதவர்கள்தான் இந்தக் களத்தில் காணாமல் போனவர்கள். வியட்நாம் போரில் அப்படி காணாமல் போனவர்கள், வியட்நாம் போரில் அப்படி காணாமல் போன அமெரிக்கர்கள் 2238 பேர்.
இந்த இரண்டாயிரத்துச் சொச்சம் பேரின் குடும்பத்தினர்கள், நண்பர்கள், சகாக்கள்தான், ஏழு கோடி வியட்நாம் மக்களுக்கும், அமெரிக்க அரசிற்கும் இடையே நந்தியாக மறித்து நின்றார்கள். காணாமல் போனவர்களின் கதி என்ன ஆயிற்று என்று வியட்நாம் அரசு விவரம் சொல்லும் வரை அவர்களுக்கு நெருப்புக்குச்சி கூடக் கொடுக்கக்கூடாது என்பது இவர்களது கட்சி. கிடுக்கிப்பிடி போட்டால்தான் அவர்கள் விஷயத்தைக் கக்குவார்கள் என்பது இவர்களது வாதம்.
போருக்குப் போகிறவர்களில் சிலர், காதலிலும் இறங்கி, கந்தர்வ மணம் புரிந்துகொண்டு போன இடத்திலேயே நிரந்தரமாக இருந்துவிடுவது உண்டு. கண்ணெதிரே அடுக்கடுக்காக மரணத்தைத் தினம் தினம் கண்டு வாழ்வே மாயம் என்று சன்னியாசியாக மாறிவிடுவதும் உண்டு (ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசிய விமானி ஷெஷயர்தான் பின்நாளில், முதியோர்களுக்காக ஷெஷயர் இல்லத்தை உலகமெங்கும் துவக்கியவர். இரண்டாவது உலகப் போரில் போரிட்ட சாட்விக் என்பவர் சாது அருணாசலாவாக மாறி ரமணாஸ்ரமத்தில் வாழ்ந்து மறைந்தது உண்டு). இரண்டு மாதிரியும் இல்லாமல் நிஜமாகவே காணாமல் போவதும் உண்டு. போர் நடக்கிற காலத்தில் படைவீரர்கள் மனந்தளர்ந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சாவு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட வீர மரணம் அடைந்தவர்களைக் காணாமல் போனவர்கள் என்று அரசாங்கங்கள் சொல்வது உண்டு. இந்த மாதிரிப் பொய் சொல்வதில் அமெரிக்கா கில்லாடி (ஈராக் யுத்தத்தின்போது அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் வீசிய ஏவுகணைகளின் அற்புதங்களை நாம் பத்தி பத்தியாகப் பத்திரிகைகளில் படித்தோமே. அவற்றில் பல ஆகாசப் புளுகு என்பது அண்மையில் வெளியாகி இருக்கிறது. புஷ்ஷைக் கொல்ல ஈராக் சதி செய்தது என்று, போன வருடம் ஜுன் மாதம், கிளிண்டன் பதவிக்கு வந்த பிறகு, ஈராக் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதே ஞாபகம் இருக்கிறதா, அந்தச் சதி அண்டப்புளுகு என்று சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.)
ஆனால் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அவர்களில் பலர் உயிரோடிருக்கக்கூடும் என்று நம்புகிறார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் அவர்கள் பேச்சை அரசாங்கம் மறுத்துப் பேச முடியாமல் இருந்தது.
அதற்குக் காரணம் இங்கே வியட்நாம் என்பது, நம்மூர் இந்தி மாதிரி, ஒரு உணர்ச்சிப்பூர்வமான விஷயம். நீறு பூத்த நெருப்பு. ‘நம்மைத் தோற்கடிக்கத் தான்கள்ல அவன்களை நாற அடிக்கணும்’ என்று பலருக்கு அடிமனத்தில் நினைப்பு அல்லது அப்படி நினைப்பு இருப்பதாக ஜனாதிபதிகளுக்குச் சந்தேகம். வேலியில் இருக்கிற ஓணானை எடுத்து வேட்டியில் முடிந்து கொள்வானேன் என்று வாயை மூடிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் ஓடுகிற பாம்பைக் கையில் பிடிக்கிற இளம் கிழவர் அல்லவா கிளிண்டன்? தடையைத் தகர்த்துவிட்டார். இளைஞர்கள் எல்லோரும் கட்டாயமாக ராணுவத்தில் சேர்ந்து போருக்குப் போக வேண்டும் என்ற நிலை இருந்தபோது, இங்கே இருந்தால்தானே வம்பு என்று இங்கிலாந்திற்குப் படிக்கப் போனவர். போன இடத்தில் போருக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்.
அதனால், அவர் தாழ்ப்பாளை நீக்கயிதும், தகராறு வெடிக்கப் போகிறது என்று பத்திரிகைகள் பூச்சாண்டி காட்டின.
ஆனால் என்ன ஆச்சரியம் ! கற்களை விடப் பூக்களே அதிகம் விழுந்தன. கண்டனத்தை விட வரவேற்பே அதிகம்.
“ரொம்ப நாட்களுக்கு முன்பே பண்ணியிருக்க வேண்டிய விஷயம்” என்கிறார் ஜிம் கிரேவன். சமாதானத்தை விரும்பும் வீரர்கள் என்ற முன்னாள் ராணுவத்தினர் அமைப்பின் கெயின்ஸ்வில் நகரத் தலைவர். வியட்நாம் யுத்தத்தில் பங்குகொண்டு போரிட்டவர். ”அவசியமே இல்லாமல் அங்கே போய் சண்டை போட்டோம். அடி வாங்கித் தோற்றுப் போனோம். நஷ்டஈடாக அவர்களுக்கு அறுபது லட்சம் டாலர் தருவதாகச் சொன்னோம். அரைக் காசு கூடக் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள மீது தடை விதித்தோம். அதாவது ராணுவ ரீதியாகப் போரிடுவதை நிறுத்திக் கொண்டு பொருளாதார ரீதியாகப் போரிடத் துவங்கினோம். ஏன்? அவர்கள்தான் நம்மைத் தோற்கடித்த ஒரே தேசம். சரி போனதெல்லாம் போகட்டும், இனிமேலாவது புத்தியோடு நடந்து கொண்டால் சரி” என்கிறார் ஜிம்.
எல்லோரும் ஜிம்மைப் போல் இருந்து விட்டால் உலகில் ஏன் சண்டை வரப்போகிறது? எதிர்ப்புக் குரல்களும் இருக்கத்தான் செய்தன.
“இந்த தேசத்திற்காகப் போராடினோம். ஆனால் எங்களை எல்லாம் முற்றிலுமாகத் தண்ணி தெளித்து தலை முழுகிட்டாங்க. வாக்குத் தவறிவிட்டார் கிளிண்டன்” என்று பொருமுகிறார் ஆன்மில்ஸ் கிரிபித். இவர் காணாமல் போனவர்கள் அமைப்பின் தலைவர். காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்த பிறகு தடையை நீக்கி இருக்க வேண்டும் என்பது இவரது வாதம்.
“தடையைத்தான் நீக்கியிருக்கிறோம். உறவை ஏற்படுத்திக் கொண்டுவிட வில்லை” என்கிறார் கிளிண்டன். “காணாமல் போனவர்கள் பற்றித் தகவல் திரட்ட இந்த நடவடிக்கை உதவும். அதுதான் நோக்கம். வியாபாரம் பண்ணி லாபம் சம்பாதிப்பது அல்ல” என்பது கிளிண்டன் சொல்லும் நியாயம்.
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று பேசுவதுதான் சந்தேகத்திற்குக் காரணம். பெரிய வர்த்தக நிறுவனங்கள் கொடுத்த மறைமுக நிர்பந்தம்தான் தடை விலகக் காரணமேயன்றி, முன்னாள் ராணுவத்தினர் மீதுள்ள அன்போ, வியட்நாம் மீதுள்ள காதலோ அல்ல என்று பத்திரிகைகள் எழுதுகின்றன.
அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்களை (லாபம், வியாபார அளவு, முதலீடு இவற்றின் அடிப்படையில்) பார்ச்சூன் (Fortune) என்ற பத்திரிகை பட்டியலிடுவது வழக்கம். அதில் முதல் 500 இடங்களைப் பிடிக்கிற நிறுவனங் களை – பார்ச்சூன் பைவ் ஹண்ட்ரட் என்று சொல்வதுண்டு. வர்த்தக உலகில் பார்ச்சூன் பைவ் ஹண்ட்ரட் கம்பெனி என்றால் அது பெருமைக்குரிய விஷயம்.
இந்த பார்ச்சூன் 500 நிறுவனங்கள், அமெரிக்க ஆசியன் கவுன்சில் என்ற ஒரு அமைப்பை, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறிவதற்காக நடத்திவருகின்றன. அந்த அமைப்பு வியட்நாமில் வருடத்திற்கு எண்ணூறு கோடி டாலர்களுக்கு வியாபாரம் பண்ணலாம் என்று கண்டறிந்திருக் கிறது.
தென்கிழக்காசியாவிலேயே மக்கள் தொகை அதிகமாக உள்ள இரண்டாவது தேசம், படித்த, கடினமான உழைப்பிற்குப் பழகிப்போன மக்கள் இருக்கும் தேசம், பெட்ரோல், மரம் போன்ற இயற்கை வளங்கள் உள்ள தேசம், ஆசியாவில் பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறிவரும் தேசம் என்பதால், வியட்நாம் மீது அமெரிக்காவிற்கு ஒரு கண்.
கிளிண்டனின் அறிவிப்பு வந்த அடுத்த சில நிமிடங்களில், நிஜமாகவே சில நிமிடங்களில் ஹோ-சி-மின் நகர வீதிகளில், பெப்சிகோலா இலவசமாக மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. கோகோ கோலா தனது சோடாவைப் பத்து பைசாவிற்கு விற்கப்போவதாக அறிவித்திருக்கிறது (இந்தியாவிற்கும், கோகோ கோலா வந்திருக்கிறதே, என்ன விலை? எந்த தேசத்திலும் கதவைத் திறந்தவுடன், சோடாக் கடைக்காரர்களும், பீடாக் கடைக்காரர்களும்தான் முதலில் காலடி எடுத்து வைக்கிறார்கள் ; தொழில்நுட்பம் வரமாட்டேன் என்கிறது என்பதைக் கவனித்தாயா?) “எவ்வளவு குறைந்த விலைக்குக் கொடுக்க முடியுமோ, அவ்வளவு மலிவாகக் கொடுக்க விரும்புகிறோம். வெப்பமும், புழுக்கமும் நிறைந்த நாடு வியட்நாம். அங்கே எங்களுக்கு வாய்ப்பு அதிகம் என்றுதான் தோன்றுகிறது” என்கிறார் கோகோ கோலா நிறுவன அதிகாரி, ஆண்ட்ரூ ஏங்கல்.
கோகோ கோலாவை அடுத்து அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் தனது கிரடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானம் விடப்போகிறது. மோபில் என்ற பெட்ரோல் கம்பெனி பெட்ரோல் எடுக்க வருகிறது. கிடுகிடுவென்று 34 கம்பெனிகள் தங்கள் அலுவலகங்களைத் திறந்துவிட்டன.
வியட்நாமியர்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்களுக்கு இப்போது அன்னிய முதலீடு அவசரமாகத் தேவைப்படுகிறது. “அமெரிக்கர்கள் வெளியேறினால்தான் தேசம் பிழைக்கும் என்று வியட்நாமியர்கள் அன்று நினைத்தார்கள். அமெரிக்கர்கள் வந்தால்தான் தேசம் பிழைக்கும் என்று இன்று நினைக்கிறார்கள். என்னைக் கேட்டால், இரண்டு நினைப்புமே தப்பு” என்று ஒரு ஹாங்காங் வியாபாரி சொல்வதாக ‘டைம்’ சொல்கிறது. சீனாவிற்குத் தேற்கே, வியட்நாமிற்குப் பக்கத்தில் கடலின் ஆழத்தில் பெட்ரோல் இருக்கிறது. அதன் ஒரு பகுதி சீனாவிற்கும் சொந்தம். யார் முதலில் தோண்ட ஆரம்பிக்கிறார்களோ, அவர்கள் கூடக் கொஞ்சம் காசு பார்க்கலாம். சீனா இன்னும் தோண்ட ஆரம்பிக்க வில்லை. ஆனால் வியட்நாம் வேலையை ஆரம்பித்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தனது கடற்படையைக் கொண்டு அந்தப் பகுதியில் உலாத்தி வருகிறது. வியட்நாம் தோண்ட ஆரம்பிக்க வேண்டுமானால் முதலில் பணம் வேண்டும். அப்புறம் துணைக்கு ஆள் வேண்டும். அமெரிக்கா வந்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்கனி, அமெரிக்கா முதலீடு இருக்கிறது என்று தெரிந்தால், சீனா சண்டை போடத் தயங்கும். அமெரிக்காவின் “மிகப் பிரியமுள்ள நாடுகளின் பட்டியலில் (Most Favourite Nations) சீனாவும், – ஆமாம் கம்யூனிஸ்ட் சீனாதான் – இருக்கிறது.
யுத்தம் செய்தவர்கள் எல்லாம் முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள். நடுநிலைமை பேசிய நாம் மட்டும் தனித்துப் போய் நிற்கிறோம். நாம் இளிச்சவாயர்களா? இல்லை நியாயவான்களா?