அரையடி உயரத்தில் ஆறடி நீளத்தில் ஒரு மேடை.அதன் மேல் செயற்கைத் தரை விரிப்பு, முழங்கால் உயரத்திற்கு மைக் வைக்க ஏதுவாக ஒரு சிறு மேசை. அதைத் தவிர மேடையில் வெல்வெட் குஷனும், உயர்ந்த முதுகும் கொண்ட ஒரு நாற்காலி. ஒரே ஒரு நாற்காலி.
முன் வரிசையில் எம்.பிகள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் பெயர்கள் எழுதி ஒட்டப்பட்ட நாற்காலிகளில் அவர்கள் நிறைந்திருந்தார்கள். வித்யாவின் பெயர் எழுதியிருந்த இருக்கை காலியாக இருந்தது. அந்த நாற்காலி மூன்றாவது வரிசையில் இடது ஓரமாக இருந்தது.
பெரியவர் அறைக்குள் நுழைந்ததும் அனைவரும் எழுந்து வணங்கினார்கள். கைகள் வணங்கினவே தவிர கண்கள் பெரியவரின் பின்னால் அவருடனே சேர்ந்து நுழைந்த வித்யாவின் மீது பதிந்தன.
வித்யா தனது இருக்கையைத் தேடினாள். மூன்றாவது வரிசையில் இருக்கக் கண்டாள். ஆனால் அதை நோக்கிச் செல்லவில்லை. பெரியவரைப் பார்த்தாள்.
“நம்ம புது எம்.பிக்கு சேர் போடலையா?” என்றார் பொத்தாம் பொதுவாக. ஆனால் அவர் பார்வை முருகய்யன் மேல் விழுந்திருந்தது.
மூன்றாவது வரிசையில் இருந்த நாற்காலியை அள்ளிக் கொண்டுவந்து முதல் வரிசையில் திணிக்க முயன்றார்கள். வித்யா நின்று கொண்டே இருந்தாள். வித்யா மட்டுமல்ல, பெரியவரும். பெரியவர் நின்று கொண்டிருந்ததால் மொத்த அவையும் நின்று கொண்டிருந்தது.
“நீங்கள் இதில் உட்காருங்கள்!” என்றார் பெரியவர் தனக்குப் போடப்பட்டிருந்த அரியாசனத்தைக் காட்டி.
வித்யா அவசரமாக மறுத்தாள். முருகய்யன் உள்ளூற அதிர்ந்தார்.
அவசர அவசரமாக அரியாசனத்திற்கு நிகரான சரியாசனம் மேடையில் பெரியவர் இருக்கைக்கு அருகில் போடப்பட்டது. பெரியவர் “ஆரம்பிக்கலாமே!” என்றதும் ஒவ்வொருவராகப் பேச வந்தார்கள்.
புகழ்ச்சியில் இத்தனை விதங்கள் உண்டு என்பதை வித்யா அன்று கண் கூடாகப் பார்த்தாள். புரட்சி வீரன், பொன்னார் மேனியன், ஏழைப்பங்காளன், உழைப்பவரின் தோழன், நம்பிக்கை நட்சத்திரம், மரணத்தை வென்றவன், காலம் தந்த கொடை, கருணை வள்ளல் என்று பெரியவர் நடித்த படங்களின் பெயர்களைக் கொண்டே ஒருவர் அவரைப் புகழ்ந்தார். அவரை விஞ்சி விட வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ இன்னொருவர், பெரியவர் நடித்த படங்களிலிருந்த பாடல்களைத் தன் கரகர குரலில் பாடினார் இன்னொருவர் அகர வரிசையில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு சொல்லை உதிர்த்துப் புகழ்ந்தார். சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது என்று திருக்குறளை எடுத்து விட்டார் ஒரு தமிழாசிரியர், ஸ்ரீவிஜயத்தை வென்றபின்னும் அதைத் தன் வசம் வைத்துக் கொள்ளாமல், மீண்டும் அதை ஆண்ட சங்கராம விஜயதுங்கவர்மனுக்கே முடி சூட்டி அவனை அரசனாக அறிவித்த ராஜேந்திர சோழனுடைய பெருந்தன்மையைக் கதை போல் எடுத்துச் சொல்லி பெரியவர் எதிரிகளையும் மன்னிக்கும் குணம் கொண்டவர் என்று புகழ்ந்தார் ஒருவர்
இத்தனை புகழ்ச்சிகளையும் புன்னகை மாறாமல் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர் திடீரென்று முருகய்யனைப் பார்த்து. “ஆரம்பிக்கலாமே?” என்றார் மறுபடியும். ஒன்றும் புரியாமல் திருதிருவென்று முழித்தார் முருகய்யன். “ஏதோ அரசியல் குழுவில் விவாதிக்கணும்னு சொன்னீங்களே!” என்றார்.
பெரியவர் இப்படிப் போட்டுடைப்பார் என்பதை முருகய்யன் எதிர்பார்க்கவில்லையென்றாலும், வித்யா மீது குற்றப்பத்திரிகை வாசிக்க ஒரு கூட்டத்தைக் கூட்டி வந்திருந்தார் என்பதால் அவர் சற்றே மகிழ்ச்சியும் அடைந்தார்.
“புதுக்கோட்டை எம்.எல்.ஏ ஏதோ பேசணும் என்கிறார். அவர் முதல்ல பேசட்டும்” என்றார்
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் வரலாறு, அதற்காக தனது தொகுதியில் தீக்குளித்தவர்களின் குடும்பம் இருக்கும் நிலை, தான் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் போது சிறை சென்றது இவற்றையெல்லாம் அவர் உருக்கமாகப் பேசினார். “எங்கள் இதயம் ஒவ்வொரு நொடியும் தமிழ், தமிழ் என்றே துடிக்கிறது. அந்த இதயத்தில்தான் பெரியவர் தெய்வமாக நிறைந்திருக்கிறார். அவரைப் பின்பற்றுகிறவர்களால் உருவான இயக்கம் இது. நாம் போய் தில்லியில் இந்தியில் பேசலாமா? அவர்களது ஆதிக்கத்திற்கு நாம் அடிபணிந்துவிட்டோம் என்பதன் அடையாளமல்லவா அது?” என்று பொருமலும் பொங்கலுமாகப் பேசி முடித்த போது கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது. “மானம் அழிந்துவிடவில்லை மறத் தமிழ்க் குடிக்கு! இந்தியை எங்கும் எதிர்ப்போம், என்றும் எதிர்ப்போம், எதிலும் எதிர்ப்போம்.தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!” எனச் சீறினார் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ. “அனுபவம் இல்லாததால் இந்தத் தவறு நடந்திருக்கலாம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்று பெருந்தன்மையைப் பேச்சில் பொழிந்தார் நெல்லை மாவட்டச் செயலர்.
இதன் பின் எழுந்த முருகய்யன், “கட்சியின் அமைச்சர்கள், எம் எல் ஏக்கள், எம் பி கள், மாவட்டச் செயலாளர்கள் மூத்த உறுப்பினர்கள் மாற்றுக் கட்சித் தலைவர்களை -அவர்கள் கூட்டணிக் கட்சியினர் என்றாலும் கூட- தனிமையில் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும், அழைப்பு வந்தால் கூட சந்திக்கும் முன் கட்சித் தலைமையிடம் அனுமதி பெற வேண்டும் என்று ஒரு மரபை பெரியவர் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து கடைப்பிடித்து வருகிறோம். கல்யாண வீடுகள், துக்க வீடுகள், பொது நிகழ்ச்சிகளில் தற்செயலாக சந்திக்க நேர்ந்தால் கூட அதைக் குறித்துத் தலைமையிடம் விளக்க வேண்டும் என்பதுதான் நாம் பின்பற்றும் வழக்கம். பெரியவர் ஏன் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து அவருடன் இருப்பவர்களுக்குத் தெரியும். புதிதாக நேற்று கட்சிக்கு வந்தவர்களுக்கு இது தெரியாமல் இருக்கலாம்” என்று வித்யாவைப் பார்த்தார். பின், ”பெரியவர் கட்சி தொடங்கிய போது அவரை அரசியலில் தனிமைப்படுத்திவிட வேண்டும், பலவீனப்படுத்திவிட வேண்டும். என்று அவரது எதிரிகள் முயன்றார்கள். சிலரை அச்சுறுத்தினார்கள், சிலருக்கு காசை வீசினார்கள், சிலருக்கு பதவி கொடுத்தார்கள், சிலரிடம் காண்டிராக்ட், லைசன்ஸ் என்று வியாபாரம் பேசினார்கள். அதற்கு மயங்கி சிலர் நமக்கு துரோகம் செய்துவிட்டுப் போனார்கள். அவர்கள் எல்லாம் யார் என்று நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. கட்சியின் வரலாறு தெரிந்தவர்களுக்கு அவர்களைத் தெரியும். புதிதாக வந்தவர்களுக்குத் தெரியாது இருக்கலாம். ஆனால் பெரியவரோடு நெருங்கிப் பழகி, அன்றாடம் விருந்துண்டு பின், உண்ட உப்புக்குத் துரோகம் செய்து, முன்னாலே சிரித்துப் பின், முதுகிலே குத்தியவர்கள் யார், கூட இருந்தே குழிபறித்தவர்கள் யார் என்று நமக்குத் தெரியும் .எதிரிக்கும் கருணை காட்டுகிற பெரியவரின் அன்பை ஏமாளித்தனம் என்று, அவரது பெருந்தன்மையை பலவீனம் என்று. எண்ணிச் சொந்தக் காரியங்களை சாதித்துக் கொள்ள நினைக்கிறவர்கள் ஏமாந்து போவார்கள்.கட்சியின் காவல் நாய்கள் கண நேரமும் தங்கள் கடமையிலிருந்து தவறமாட்டார்கள்” என ஆவேசமாகப் பேசி முடித்ததும் படபடவென்று கைதட்டல்கள் எழுந்தன
முன் வரிசையில் இருந்த மூத்த எம்பி எழுந்தார். “ மறைமுகமாக நமக்குள்ளே பேசிக் கொள்வதால் பிரயோசனம் இல்லை. ஒரு குடும்பமாக இருக்கிறோம். நமக்குள்ளே என்ன ஒளிவு மறைவு? நான் உடைத்தே பேசி விடுகிறேன். நான் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். கூட்டணிக் கட்சி என்றாலும் கூட அதிகாரத்தில் இருப்பவர்கள் எங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்பதுதான் என் அனுபவம். எங்கள் ஊரில் ரயில் நிலையம் வேண்டும் எனக் கேட்டு நான் ரயில்வே அமைச்சரிடம் நடையாய் நடந்திருக்கிறேன். அப்படியும் அது வர மூன்று வருஷமாயிற்று. மக்கள் பிரசினைகளை பேச முற்படும் போதெல்லாம் மறித்து அமரச் சொல்கிறார்கள். பிரதமர் தானாக அழைத்து எங்களைச் சந்திப்பதில்லை. திருமதி “ என்றவர் வேண்டுமென்றே ஒரு சிறிய இடைவெளி கொடுத்து “மன்னிக்கவும், செல்வி வித்யா பேசியதை பிரதமர் உன்னிப்பாகக் கேட்டதை நான் கவனித்தேன். வித்யா அவர்கள் பிரதமரைச் சந்தித்ததாகவும் கேள்விப்படுகிறேன். அது உண்மைதானா? அவர் எதன் பொருட்டுச் சந்தித்தார் என்பதை அவைக்கு விளக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று முடித்தார்.
அவையின் பார்வை முழுவதும் வித்யா மீது விழுந்தது. வித்யா பெரியவர் பக்கம் திரும்பி கிசுகிசுப்பாக உரையாடுவதை அது கவனித்தது. ஆனால் அவரது உதட்டின் அசைவிலிருந்து அது என்னவாக இருக்கும் என ஊகிக்க முடியாமல் இருந்தது.
வித்யா பேச எழுந்த போது அவையில் கனத்த மெளனம் நிலவியது
“அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு வரலாறு, இந்திய வரலாறு,ஓரளவு உலக வரலாறு இவற்றை ஊன்றி வாசித்தவள் நான். தமிழ் மொழியின் வளமையும், செழுமையும், இனிமையும் இன்னொரு மொழிக்கு இல்லை.நம்முடைய தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல மொழிகளை எதிர்கொண்டு வந்திருக்கிறது. பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் ஆகியவை ஆதிகாலத்தில் இங்கு வந்தன. விஜய நகர சாம்ராஜ்யம் நம்மை ஆண்ட போது இங்கு தெலுங்கு வந்தது. சரபோஜிகளோடு மராத்தி வந்தது. மொகலாயர்களோடு உருது வந்தது.ஆங்கிலேயர்களோடு ஆங்கிலம் வந்தது. போர்த்துக்கீசியர்களும் பிரன்ச்காரர்களும் ஐரோப்பிய மொழிகளைக் கொண்டு வந்தார்கள். செளராஷ்டிரர்கள் தங்கள் மொழிகளைக் கொண்டு வந்தார்கள். ஒன்றுபட்ட சென்னை ராஜதானியாக இருந்த போது மலையாளமும், கன்னடமும், துளுவும் இங்கு வழங்கின. இத்தனை மொழிகள் இரண்டாயிரம் வருடங்களாக, அடுத்தடுத்து அலை போல வந்த பின்னும் தமிழ் அழிந்து விடவில்லை. அழிந்து விடும் என்ற அச்சம் அவசியமற்றது என்பது என் எண்ணம். தாய் என்ற சொல் இரண்டாயிரம் வருடத்திற்கு முன் குறுந்தொகையில் பயன்படுத்தப்பட்ட சொல். இன்றும் அதைப் பயன்படுத்துகிறோம்.இன்றும் தாய் இருக்கிறாள். என்றும் நம்மோடு இருப்பாள்” என்று சொல்லி சிறிய இடைவெளி விட்டாள்.
தாய் என்ற வார்த்தையைக் கேட்டதும் கண்ணும் முகமும் சிரிக்கக் கைதட்டினார் பெரியவர்.
“நான் தமிழ்த் தாயைச் சொல்கிறேன்”, என்று புன்னகைத்த வித்யா தொடர்ந்து பேசினாள்: “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. இது திருக்குறள். இதில் உள்ள எல்லாச் சொல்லும் இன்றும் நம்மிடம் இருக்கின்றன.
மொழிக்கு பெருமை சேர்ப்பது இலக்கியம். மாற்றுக் கருத்தில்லை. ஆனால் கருத்துப் பரிமாற்றம் என்பதற்கும் கருவி மொழிதான். அயல் மொழியாளர்களிடம் பேசும் போது அவர்கள் மொழியில் பேசினால் அவர்களுக்கு இயல்பாக நம்மிடம் நெருக்கம் ஏற்படுகிறது. நமக்கு வேலையாக வேண்டும் என்றால் அவர்கள் மொழியில் அவர்களிடம் பேசினால் அவர்கள் அதைச் செய்ய முன்வருவார்கள். இல்லை என்றால் நாலைந்து முறை நடக்க வேண்டியதுதான். காரியம் பெரிதா? வீரியம் பெரிதா?
ஒருவரிடம் அவரது மொழியில் பேசினால் நாம் அவர்களுக்கு அடிமையாகி விட்டோம் என்று அர்த்தமா? அபத்தம்!. பிரதமர் தமிழ்நாட்டிற்கு வரும் போது வணக்கம் என்று பேச்சைத் தொடங்குகிறார். அதற்கு அர்த்தம் அவர் நமக்கு அடிமையாகி விட்டார் என்பதா? அவர்களது டெக்னிக்கைத்தான் நான் அவர்களிடம் காட்டினேன். I paid them in their own coin.”
பெரியவர் மீண்டும் கைதட்டினார்.
“பிரதமரை சந்தித்தேன். அந்த சந்திப்புப் பற்றி நான் ஏதும் இப்போது சொல்ல விரும்பவில்லை. சொல்ல வேண்டியவர்களிடம் அது பற்றிச் சொல்லிவிட்டேன். அந்த சந்திப்பின் காரணத்தைக் காலம் உங்களுக்குச் சொல்லும்.
மற்றப்படி யார் விசுவாசி, யார் அறிவாளி, யாருக்கு முன் இருக்கை, யாருக்கு மூன்றாம் வரிசை என்பது பெரியவருக்குத் தெரியும். தலையிருக்க வாலாடலாமா? வாலாட்டுவது சிலதுக்கு, ஸாரி சிலருக்கு வாடிக்கை. எப்போதும் உடன் இருப்பதால் மட்டுமே ஒன்று சிறப்படைவதில்லை. சில உடன் பிறந்தே கொல்லும் நோய்களுக்கு மருந்து வெளியிலிருந்துதான் வர வேண்டும். சில மருந்துகள் கசக்கலாம். ஆனால் அவற்றின் பலன் நாள்பட நாள்படத் தெரியும். நன்றி.”
வித்யா தன் இருக்கையை நோக்கி நடந்த போது அந்த நடையில் தன்னம்பிக்கையும் முகத்தில் பெருமிதமும் பொலிந்தது.
மற்போர் போல் நடந்த சொற்போரில் பெரியவர் என்ன சொல்லப் போகிறார், அவர் யார் பக்கம் என அறிய அவை ஆவலாக மெளனம் காத்தது.
பெரியவர் எழுந்து கொண்டார். தோளிலிருந்த துண்டை சரி செய்து கொண்டார். அவையைப் பார்த்து அகன்ற புன்னகையை வீசினார். இரு கையையும் இணைத்து கும்பிட்டார். பின் ஏதும் பேசாமல் வாசலை நோக்கி நடந்தார்.