“பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!”
தோளைச் சுற்றி இறங்கியிருந்த முந்தானையை இடது கையால் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்க வலக்கை முஷ்டியை மடக்கி உயர்த்தி முழங்கினாள் வித்யா.
“ம்!சொல்லுங்க! கூட்டத்தைப் பார்த்து கம்பீரமான குரலில் ஆணையிட்டாள் “பெண்மை…”
“வாழ்க!” என்று எதிரொலித்தது கூட்டம்.
“ம். இன்னொரு தரம், பெண்மை!…”
மந்திரம் போட்டது போல் மொத்தக் கூட்டமும் எழுந்து நின்று மறுபடியும் “வாழ்க!” என்றது.
மூன்று முறை வாழ்க முழக்கமிட்டுத் தன் பேச்சை முடித்துக் கொண்டு நாற்காலிக்குத் திரும்பினாள் வித்யா. நாடகம் போல் நவரசங்களால் நிரம்பியிருந்தது அவள் பேச்சு. சில இடங்களில் சீற்றம். ஆங்காங்கே எள்ளல், கிண்டல் கேலி. நடு நடுவே குட்டிக்கதை. இடையிடையே கேள்விக் கணைகள். ஆளும் கட்சிதான் அவளை அழைத்திருந்தது.. ஆனால் அதன் சாதனைகளையோ திட்டங்களையோ அவள் விவரிக்கவில்லை.கடந்த காலத்தில் எதிர்க்கட்சி ஆட்சியில் பெண்களுக்கெதிராக நிகழ்ந்த செயல்களைப் பட்டியலிட்டாள். பட்டியலோடு நிற்கவில்லை. ஒவ்வொரு கேள்வியை முடித்ததும் “சொல்லு கண்ணா, சொல்லு!” என்று எதிர்கட்சியை பதில் சொல்ல அழைக்கும் பன்ச் டயலாக்.
“சொல்லு கண்ணா சொல்லு, என்னனு எழுதப் போற?” என்றான் பத்திரிகையாளன் கருணாகரன் பக்கத்திலிருந்த ஆங்கில தினசரியின் நிருபர் ராகவனிடம்:
“சொல்ல என்ன இருக்கு.? வெறும் ‘ரெட்டரிக்’. நாலு வரி தேறாது.”
“ஆடியன்ஸைப் பார்த்தியா?
“ம்.அதைத்தான் எழுதப் போகிறேன்”
“என்னனு?”
“எனக்கு ஒரு வார்த்தை கிடைச்சிருச்சி. Frenzy”
ரகளை. உணர்ச்சிப் பெருக்கு. மூர்க்கம் வித்யாவின் பேச்சுகான எதிர்வினையை வர்ணிக்க. என்ன வார்த்தையை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம், கூட்டம் முழுக்க உற்சாகம் கரை புரண்டது. பெண்கள் முண்டியடித்துக் கொண்டு மேடையை நெருங்கினார்கள். கட்சித் தொண்டர்கள் கைகோர்த்து நின்று தடுப்பணை அமைத்தார்கள்..அதை உடைத்துக் கொண்டு ஓர் இளம் பெண் மேடையில் தாவி ஏறிச் சற்றும் எதிர்பாராத கணத்தில் வித்யாவின் கன்னத்தில் முத்தமிட்டாள். அவளைத் தொடர்ந்து இன்னும் நான்கைந்து பேர் மேடைக்குத் தாவினார்கள். வித்யா எழுந்து கொண்டாள்.
கற்றைப் பேப்பர்களைக் கையில் அடுக்கிக் கொண்டு மைக் அருகே இறுதி பேச்சாளராக வந்து நின்ற பெண் அமைச்சர், அவையில் அமைதி ஏற்படட்டும் என்று ஒரு நிமிடம் பேச்சைத் தொடங்காமல் தயங்கி நின்றார். அலை ஓய்வதாக இல்லை.
அவருக்கு ஏற்பட்டுள்ள சங்கடத்தைப் புரிந்து கொண்ட வித்யா மேடையிலிருந்து இறங்கிக் காரை நோக்கி நடந்தாள்.அவள் பின்னால் பெரும்கூட்டம் தொடர்ந்தது. அவளது சந்தன நிறத்தைத் தொட்டுப்பார்க்க கறுப்புப் பெண்களின் கரங்கள் நீண்டன. மப்டியில் இருந்த பெண் போலீஸ் வளையம் அமைத்து அவரை வண்டியில் ஏற்றினார்கள்
அவள் போனதும் பந்தலில் பாதி காலி. அமைச்சர் காகிதங்களை ஒதுக்கி விட்டு சம்பிரதாயமாக நான்கு வார்த்தை முதல்வரைப் புகழ்ந்து பேசினார். ஆனால் அதைக் கேட்கத்தான் அங்கே அதிகம் பேர் இல்லை
இது எல்லாவற்றையும் ஒன்று விடாமல் பெரியநாயகியின் வீடியோ கேமராக்கள் பதிவு செய்து கொண்டிருந்தன. அவளே பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தாள். பிரஸ் பாக்ஸ்க்குப் பக்கத்தில் அவளுக்கு ஒரு இடம் ஒதுக்கியிருந்தார்கள். மேஜை ஒன்று போட்டு அதில் ஒரு மானிட்டர் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். கூட்டத்தில் ஒரு பகுதி எழுந்து நின்று கோஷம் போட ஆரம்பித்த போது இவளும் எழுந்து திரும்பிப் பார்த்தாள். ‘உட்கார்! உட்கார்! என்று பின் வரிசையில் இருந்தவர்கள் கூச்சல் போட்டார்கள். அந்த ஒரு கணம் வித்யாவின் பார்வை இவள் மேல் விழுந்தது. பெரியநாயகிக்குப் புன்னகைக்கக் கூட பயமாக இருந்தது.
விடுதிக்குத் திரும்பிய வித்யா அவசர அவசரமாக அறைக் கதவைச் சாத்திக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். வாஷ் பேசின் குழாயைத் திறந்து இரு கைகளிலும் நீரை சேகரித்து முகத்தின் மீது விசிறி அடித்தாள். முத்தம் வாங்கிய கன்னத்தை அழுந்தத் துடைத்தாள். மறுபடியும் நீரை ஏந்தி முகத்தில் அடித்துக் கொண்டாள். குளித்தால் தேவலை போல் இருந்தது. ‘சே! என்ன ஜனங்கள்!. இப்படியா? இருக்கட்டும், அன்பாகவே இருக்கட்டும். அதற்காக? இப்படியா? அறிமுகம் இல்லாதவர்கள் கையைப் பிடித்து இழுப்பதும் கன்னத்தில் முத்தம் கொடுப்பதும்’ நினைக்கவே அவளுக்கு உடல் கூசியது. அலை போல் ஒரு நடுக்கம் அவள் உடலைக் கடந்தது.
ஏதோ ஒரு பிறந்தநாள் பார்ட்டி. அம்மா யாரையெல்லாமோ விருந்திற்கு அழைத்திருந்தாள் மெழுகுத்திரியை அணைத்து கேக் வெட்டி எல்லோருக்கும் கொடுத்தாயிற்று. ஒவ்வொருவராய் சுற்றிச் சுற்றிச் வந்து கொண்டிருந்த பெண்மணி ஒருவித உற்சாகக் களிப்பில் வித்யாவின் அருகில் வந்து கன்னத்தில் முத்தமிட்டாள். காமிராக் கண்கள் ஒரு கணம் ஒளிர்ந்து ஓய்ந்தன. வெடுக்கென்று அந்தப் பெண்ணின் முகத்தைத் தட்டிவிட்டாள் வித்யா. அப்போதும் ‘கோச்சுக்காதிடி கண்ணு’ என்று செல்லமாய் தட்டிவிட்டுப் போனாள்.
மூன்றெழுத்து ஸ்டியோ. ஒரு காட்சியைச் சுட்டுவிட்டு அடுத்த காட்சிக்கு ஒளிவிளக்குகளை நகர்த்தி சரி செய்து கொண்டிருந்தார்கள். அருகில் இருந்த ஏசி அறைக்குள் தனியே அமர்ந்து புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள் வித்யா. ஹிரோ அறைக்குள் வந்தார். பக்கத்தில் அமர்ந்தார்.குளிர் கண்ணாடியைக் கழற்றி வைத்தார். ஹலோ என்று சொல்லி பேச்சுக்கு இழுத்தார். புத்தகத்தில் இருந்து கண்ணை உயர்த்திய வித்யா என்ன என்றாள் ஏதும் பேசாமல் அரை நிமிடம் அவள் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர் பச்சக் என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டார். அடுத்த கணம் அவர் கன்னத்தில் பளார் என அறை விழுந்தது.
இளகின ஒரு தருணத்தில் ‘அவர்’ கூட ஒருமுறை முத்தமிட்டார். இவளது முகச் சுளிப்பைப் பார்த்த பின் மறுமுறை முயற்சிக்கவில்லை.
கை குலுக்குவது ஓகே. கட்டிப் பிடிப்பது கூடப் பரவாயில்லை. ஆனால் இந்த எச்சிலை இழுசுகிற முத்தம்தான் சகிக்க முடிவதில்லை.
அறைக் கதவை யாருடைய முட்டியோ தட்டிக் கொண்டிருந்தது.நிமிட நேர இடைவெளி கூடக் கொடுக்காமல் தட்டிக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே எரிச்சலில் இருந்த வித்யா வெறுப்புடன் கதவைத் திறந்தாள். மூன்று பேர் நின்று கொண்டிருந்தார்கள். கும்பிட்டார்கள்.
:”வணக்கம் மேடம் ஒரு சின்ன பேட்டி”
“பேட்டியா?”
நாங்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் பத்திரிகைப் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
“ஸாரி. இப்போது பேட்டி கொடுப்பதற்கு இல்லை”
“இரண்டு மூன்று கேள்விதான் மேடம் “
“ஸாரி!”
“கட்சியில் சேரப் போகிறீர்களா மேடம்?”
இந்த முறை ஸாரி கூடச் சொல்லாமல் கதவை அறைந்து சாத்தினாள் வித்யா.
பிரபலமானவர்களுக்கு இந்த நாட்டில் அந்தரங்கம் என்று ஒன்று கிடையாதா? தனிப்பட்ட விருப்பு வெறுப்புக் கிடையாதா? அவர்கள் பொதுச் சொத்தா? யார் வேண்டுமானலும் கையைப் பிடித்து இழுக்கலாம். கட்டிப் பிடிக்கலாம். கன்னத்தில் முத்தமிடலாம். எங்கே போனாலும் பின்னாலேயே துரத்திக் கொண்டு வந்து என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்
மனது பொருமிக் கொண்டிருந்த போது மறுபடியும் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. இந்த முறை வித்யா உடனே எழுந்து போய் திறக்கவில்லை. தட்டட்டும் எத்தனை முறை தட்டினாலும் பேட்டி கிடையாது. பத்திரிகைக்காரகளாகவே இருக்கட்டுமே. அவர்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டுமா? எனக்கே பதில் தெரியாத கேள்விகளுக்கு நான் எப்படி பதில் சொல்வது? கட்சியில் சேரப் போகிறேனா? தெரியாது. இந்த நிமிடம் வரை கட்சியில் இல்லை. இனியும் ஏன் இருக்க வேண்டும்? பாரதி விழா என்று கூப்பிட்டார்கள். பெரியவரே பேசினார். மறுக்க முடியவில்லை.
ஆனால் ஏன் அப்படிப் பொங்கிப் பொங்கி அரசியல் பேசினேன்?. அரசியலா பேசினேன்? பெண்கள் இழிவுபடுத்தப்படுவதை, இளக்காரமாக, இரண்டாம் தரத்தினராக நடத்தப்படுவதை நினைத்த போது எனக்கு புசு புசுவென்று வந்தது. என்னை அறியாமலே சொற்கள் பெருகின. உள்ளே ஊறிக் கொண்டிருந்த கோபம் இன்று உடைத்துக் கொண்டு வந்துவிட்டது. அதிகமாகப் பேசிவிட்டேனோ? அதிகம் என்ன அதிகம்? அரசியலுக்கு வந்த பெண் நாற்பது வருஷம் நாயாய் உழன்றால், அதிக பட்சம் சமூக நலத் துறை அமைச்சராகலாம். முதலமைச்சராக முடியுமா? பாப்புலர் எழுத்தாளராக இருக்கலாம். பத்திரிகை ஆசிரியராக முடியுமா? எததனை வயசுக் கிழவனும் சினிமாவில் ஹீரோவாக நடிக்கலாம். ஆனால் உடம்பு ஒரு சுற்றுப் பெருத்துவிட்டால் கதாநாயகிக்கு மார்க்கெட் போய்விடும். இதுதானே இங்கு யதார்த்தம்?
இருந்தாலும் எதிர்க்கட்சியை இழுத்திருக்கக் கூடாதோ? அடக்கி வாசித்திருக்க வேண்டுமோ? அடக்கி வாசிக்க என்ன இருக்கிறது? அந்தக் கட்சியில் அப்படித்தானே நடக்கிறது? கவிஞர் என்பார்கள். புலவர் என்பார்கள். ஆனால் பெண்ணைப் பற்றி பேச, எழுத, ஆரம்பித்தால் மானே மயிலேதான். கண் , கருங்கூந்தல், கழுத்துக்குக் கீழே விம்மிய கோளங்கள் இதைத் தாண்டி பார்வை போகாதா? புத்தி யோசிக்காதா? இடையே இல்லையாம். இடையில்லாத பெண் எப்படி எழுந்து நிற்பாள்? நிற்கக் கூடாது என்பதற்காகத்தானே இடையை ஒடித்து விடுகிறார்கள்?
கதவுச் சத்தம் ஓய்ந்து விட்டது. திரும்பிப் போயிருப்பார்கள். போனதும் பேனாவைத் திருகி அமிலத்தைக் கொட்டுவார்கள். ஏமாற்றத்தை விஷமாக மாற்றுவார்கள். தலைக்கனம் என்பார்கள். ஆணவம் என்பார்கள். ஆணவம்! அதில் ‘ஆண்’தான் இருக்கிறான். அவன் அகம்தான் இருக்கிறது.
தனிமையில் இருந்ததாலோ என்னவோ எண்ணங்கள் தடையின்றிப் பெருகின. தற்செயலாகக் கைபட்ட தம்பூராவின் தந்திகள் அதிர்ந்து காற்றில் கார்வை எழுப்புவது போல சிந்தனை மனதில் ரீங்கரித்துக் கொண்டிருந்தது
அந்தத் தவ வேளையைக் குலைப்பது போல அறையிலிருந்த போன் அடித்தது. இருந்த இடத்திலிருந்தே எட்டிப் பார்த்தாள். அது டயல் இல்லாத போன். இண்டர்காமாகத்தான் இருக்க வேண்டும். எழுந்து போய் எடுத்தாள்.
“மே ஐ பார்ஜ் இன்?” எதிர்முனைக் குரல் கம்பீரமும் இனிமையும் குழைத்துக் கேட்டது
“ஹூ ஆர் யூ?” என்று வித்யாவும் ஆங்கிலத்திலேயே மிழற்றினாள். அதில் இனிமை இல்லை. எரிச்சல் இருந்தது
அதற்குள் எதிர்முனையில் ரிசீவர் கை மாறியிருக்க வேண்டும். ”கலெக்டரம்மா வந்திருக்காங்க!” என்று பவ்யமும் பணிவுமாக ஓர் ஆண் குரல் சொல்லியது.
பத்திரிகைக்காரர்களைப் போல இவர்கள் மீது பாய்ந்து சீற முடியாது. முகத்தில் கதவை அறைந்து மூட முடியாது. இது அதிகாரத்தின் குரல். அரசு அதிகாரம்.
கதவைத் திறந்த வித்யா கண நேரம் திகைத்துப் போனாள். “ஸ்ரீ நீயா!” என்றாள்.வியப்பில் அவள் குரல் சற்றே கீச்சிட்டது. “இங்கே என்ன செய்யற? தலைமைச் செயலகத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன் என்று கடைசியாகப் பார்த்த போது சொன்ன ஞாபகம்!”
:”குப்பை நெடி ஜாஸ்தியாக இருந்தது. இங்கே மாற்றிக் கொண்டு வந்துவிட்டேன்” என்று புன்னகைத்தாள் ஸ்ரீ ரஞ்சனி. “மீட்டிங் முடிஞ்சதா? சாப்பிடப் போகலாமா என்று அழைக்க வந்தேன்”
“வெளியிலா? ஐயோ!”
“என் வீட்டிற்கு”
“ஆகா! இன்று சாண்ட்விச்சோடு சாப்பாடு முடிந்தது என்று நினைத்தேன். ஆனால் சக்கப் பிரதமன் என்று எழுதியிருக்கிறான் ஆண்டவன்!”
“ஆண்டவனையும் ஆள்பவர்களையும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது” என்றாள் ரஞ்சனி. இருவரும் கட கடவென்று சிரித்தார்கள்.
.