எழுந்தாள். உலவினாள். உட்கார்ந்தாள். இருப்புக் கொள்ளாமல் மீண்டும் எழுந்தாள். நடந்தாள். பால்கனியின் கிராதியைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.நிசியை நெருங்குகிற நேரம்.தெரு சலனமற்றுக் கிடந்தது. இருளிலிருந்து கொண்டு இரவில் தெருவைப் பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இதே பால்கனியில் பகலில் எத்தனையோ முறை வந்து நின்றிருக்கிறாள். வீதியில் திரண்டு நிற்கும் தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்திருக்கிறாள். வெறுமன கையசைப்பாக இல்லாமல் ஆங்கில வி போல் இரு விரல்களைக் காட்டுவாள்.
“எதற்குக்கா வி காட்டுறீங்க?” என்று சித்ரா ஒரு முறை கேட்டாள்
வித்யா ஏதும் பதில் சொல்லாமல் புன்னகைத்தாள்.
“சொல்லுங்கக்கா. அது வெற்றியின் அடையாளம் என்று சொல்றாங்களே, அதனாலயா?”
“ம். அது எல்லோரும் சொல்வது. வி. ஃபார் விக்டரி. இது அதுவும்தான். ஆனால் அதுக்கும் மேலே!”
“அப்டீனா?
“அப்டீனா, வி பார் விஷனரி, வி இஸ் வைப்ரண்ட், வைட்டல், வேல்யூஸ்”
“புரியலைக்கா”
“சுருக்கமா சொன்னா, வி இஸ் வித்யா!”
குழந்தையைப் போல் கைதட்டிக் குதித்தாள் சித்ரா.
‘இப்போது எதற்கு அவள் நினைவு?. ஓர் உளவாளியை நிழல் போல் நெருக்கமாக வைத்துக் கொண்டிருந்திருக்கிறேனே, நான் வெகுளியா? வி ஃபார் வெகுளி? இல்லை, முட்டாள், இல்லை எல்லோரும் சேர்ந்து ஏய்த்த ஏமாளி. ஐ ஆம் அ விக்டிம்.. வி ஃபார் விக்டிம்’
எத்தனை நேரம் இப்படியே இருட்டை வெற்றுப் பார்வையாகப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம்? உள்ளே போகலாம் என்று திரும்பினாள். புடவைத் தலைப்பை யாரோ பிடித்து இழுப்பது போலத் தோன்றியது. அழகுக்காக பால்கனி ஓரத்தில் வைத்திருந்த கள்ளிச் செடியின் முள்ளில் சேலைத் தலைப்பு மாட்டிக் கொண்டிருந்தது. காற்றில் அலைந்த அது முள்ளில் போய்ச் சிக்கிக் கொண்டிருக்க வேண்டும். தன்னைப் போல.
“வீட்டிற்குள் கள்ளிச் செடி வைக்கக் கூடாதுக்கா!” சித்ராதான் சொன்னாள்
“ஏன்?”
“ விளங்காமப் போன நிலத்திலதான் அது விளையும். அது பாலைவனத்துச் செடி. வீட்டில் வைத்தால் வீடும் விளங்காமப் போயிடும்னு சொல்வாங்க!”
வித்யா கடகடவென்று சிரித்தாள். “இப்படிப் பாரேன். வெளியில முள். உள்ளே ஈரம். பெண்களும் அப்படித்தான் இருக்கணும்னு நமக்கு ஞாபகப்படுத்தற மாதிரி அது ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டும்!”
கள்ளிச் செடியை வீட்டில் வைத்து வளர்க்கக் கூடாது. ஆனால் திருட்டுக் கள்ளிகளை அருகில் வைத்து வளர்த்து விடலாம்! ஹா ஹா! வித்யாவின் மனதுக்குள் ஒரு வறண்ட சிரிப்புப் புரண்டது.
வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் சித்ரா நினைவைப் பதித்து விட்டுப் போயிருக்கிறாள். அதிலிருந்து விடுபடுவது அத்தனை எளிதாக இராது என்று வித்யாவிற்குத் தோன்றியது.
அருகில் போய் தலைப்பை மெல்ல விடுவித்தாள்.
படுக்கையில் போய் விழுந்தாள். உறக்கம் வரவில்லை. வரும் என்று தோன்றவில்லை. மாத்திரை போட்டுக் கொள்ளலாமா என்று நினைத்தாள். வேண்டாம் என்று தோன்றியது. ‘இன்றைக்கு ஒரு நாளைக்குப் பரவாயில்லை” என்றும் தோன்றியது. வேண்டாம், அதுவே வழக்கமாகி விடும் என்று ஒரு தயக்கம் ஏற்பட்டது. அதை உதறிவிட்டு, மருந்துகள் வைக்கும் ஷெல்ஃப்க்கு போனாள். அது பூட்டியிருந்தது. சித்ரா சாவியை எங்கே வைத்துவிட்டுப் போயிருக்கிறாள் எனத் தெரியவில்லை.அவள் இல்லாமல் நம் வீட்டில் நம்மாலேயே ஏதும் செய்ய முடியாது என்று தெரிந்த போது எரிச்சலாக வந்தது.
சலித்துப் போய் படுக்கையில் வந்து அமர்ந்தாள். பக்கத்து மேஜையில் இருந்த அம்மா படம் கண்ணில் பட்டது. சிறு குழந்தையாக இருந்த போது தூக்கம் வரவில்லை என்றால் அம்மா ஒரு ஸ்லோகம் சொல்லி, அதை 21முறை சொல்லிக் கொண்டே இரு என்பாள். மனம் ஸ்லோகத்தில் லயிக்காது. ஒன்று இரண்டு என்று எண்ணுவதில் கவனம் விழும். “21 முறை சொல்லியாச்சு, தூக்கம் வரலியே!” என்று கேள்வி கேட்டால், “சுப்! தூங்குடி! கண்ணை மூடிக்கொண்டு சொல்லிக் கொண்டே இரு!” என்று அதட்டுவாள்.
அது என்ன ஸ்லோகம்? சட்டென்று ஞாபகம் வரவில்லை. அதே மாதிரி ஒரு ஸ்லோகம் பள்ளிக் கூடத்தில் சரஸ்வதிக்கும் சொல்லச் சொல்வார்கள். அது என்ன? அது நினைவுக்கு வந்தால் இதைப் பிடித்து விடலாம்.
மனம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நினைவடுக்கில் ஸ்லோகத்தைத் தேட ஆரம்பித்தது. எதிர்பாராத ஒரு தருணத்தில் அது அகப்பட்டது. யாதேவி சர்வ பூதேஷு நித்ரா ரூபணே ஸம்ஸ்திதா, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை.
எல்லாவற்றுக்கும். ஒரு தேவி. ஒரு கடவுள். காரியம் ஆக வேண்டுமானால் அவர்களுக்கு ஒரு கும்பிடு போட்டால் போதும். இந்தக் கற்பனை எத்தனை இதமாக இருக்கிறது! இதை ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை சுலபமாக இருக்கிறது! மூளையைக் கழற்றி வைத்து விட்டால் எல்லாம் சுலபம்தான். நம்பிக்கை இருந்தால் கேள்வி இல்லை. மூளை இருந்தால்தான் கேள்வி. கேள்வி இருந்தால்தால் தர்க்கம். தர்கம் என்று இறங்கிவிட்டால்தான் நிரூபணங்கள் தேவை. மூளை இருந்து என்ன பயன்? சித்ராவை நம்மால் கண்டுபிடிக்க முடிந்ததா?
கேள்விகளை விட்டு விட்டு யாதேவி சர்வ பூதேஷு…. என்று மனதுக்குள் முணுமுணுக்க ஆரம்பித்தாள். எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை. விடிந்த போது வெள்ளை வெயில் அறைக்குள் நுழைந்திருந்தது.
விடிந்த போது மனம் தெளிந்திருந்தது. ஆனால் தலை கனத்தது. இரவு கேள்விகள் மனதை மொய்த்துக் கொண்டிருக்க நெடுநேரம் தூக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்தது காரணமாக இருக்கலாம். அல்லது மன அழுத்தம் காரணமாக இருக்கலாம். அச்சுறுத்தும் தனிமை காரணமாக இருந்திருக்கலாம்.
காபி குடித்தால் தேவலை போலிருந்தது.ஆனால் காபி அவள்தான் போட்டுக் கொள்ள வேண்டும். கொண்டு வந்து கொடுக்க சித்ரா இல்லை.
அடுக்களைக்குள் நுழைந்தாள். அடுப்பைப் பற்ற வைக்க லைட்டரைத் தேடினாள். சமையலறை அலமாரிகளைத் திறந்து பார்த்தாள். அதன் விளிம்புகளில் எங்காவது மாட்டப்பட்டிருக்கிறதா எனத் தேடினாள். கடைசியில் அது அடுப்புக்குப் பக்கத்திலேயே கிடந்தது. அடுப்பில் சுடர் வந்து அதன் மீது பால் பாத்திரத்தை ஏற்றிக் கொண்டிருந்த போது அவசரமாக, பருமனான ஒரு பெண் பரபரப்பாக ஓடி வந்தாள். “அம்மா நீங்க உட்காருங்க, நான் காஃபி கொண்டாறேன்” என்றாள்.
வித்யா அவளை ஏற இறங்கப் பார்த்தாள். “நீ யாரு?” என்றாள்
“நான் துளசி. நாந்தான் இங்க சமையல் செய்யறேன். நீங்க படி எறங்கி வர்றதுக்குள்ள காபி ரெடியாயிரணும்னு அக்கா சொல்லியிருக்காங்க. உங்களை இன்னும் காங்கலையேனு அதுக்குள்ள கோலத்தைப் போட்டு வந்திருவோம்னு போயிருந்தேன், நீங்க வந்துட்டீங்க!”
“யாரு உன் அக்கா?”
“சித்ராதான், அவ..” நாக்கைக் கடித்துக் கொண்ட துளசி சொன்னாள், “அவங்க எனக்கு தூரத்து சொந்தம். என் தம்பி மக முறை”
வீடு முழுக்க நினைவுகளை விட்டுச் சென்றதில்லாமல், ஆட்களையுமல்லவா விட்டுச் சென்றிருக்கிறாள்!. தூரத்து சொந்தம், பக்கத்து பந்தம் என்று ஒரு படையே அல்லவா இங்கே முகாமிட்டிருந்திருக்கிறது!
வித்தியாவிற்குள் சினம் பொங்கியது. சீற்றம் எழுந்தது. “வெளியே போ!” என்று இரைந்தாள்.
“நாங்க என்னம்மா செய்தோம்? நாங்க எங்கம்மா போவோம்? மன்னிச்சுக்கங்கம்மா. இன்னிக்கு இப்படி ஆயிடுச்சு. இனி இப்படி நடக்காது”
துணிச்சலாக துளசி நாங்க என்னம்மா செய்தோம்னு கேட்டது வித்யாவின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.
“வெளியே போனு சொன்னா, உனக்கு விளங்காதா? தமிழ்லதானே சொல்றேன். அவளையே அனுப்பியாச்சு. இன்னும் உங்களை வைச்சுக்கிட்டு சீராடணுமா?”
கத்தியதில் மூச்சிறைத்தது. சில நாள்களாக இது ஒரு பிரசினை. அதிரப் பேசினால், விரைந்து நடந்தால், மூச்சிரைக்கிறது. உடல் கூட நம்மைக் கை விட்டுவிட்டதா? சலிப்போடு சோஃபாவில் வந்து சரிந்தாள் வித்யா. அவள் வசவுகளைப் பொருட்படுத்தாமல் துளசி பின்னாலேயே வந்து காபியை வைத்து விட்டுப் போனாள். அடுத்தாற்போல் அன்றைய தினசரிகளை எடுத்து வந்து வைத்தாள்
சூடாக காபி தொண்டையில் இறங்குவது இதமாக இருந்தது. மெல்ல ஒரு நிதானம் பிறந்தது. தினசரிகளை எடுத்துப் பிரித்தாள். எப்போதும் போல் முதலில் அவள் பார்வை அன்றைய ராசிபலனில் பதிந்தது. ‘சிறிதும் நியாயம் பிசகாத சிம்ம ராசி நேயர்களே! எளியவர்கள் மீது கருணையும் எதிலும் கம்பீரமும் கொண்ட நீங்கள். . . ” என்று ஆரம்பித்திருந்ததைப் படித்த போது அவளை அறியாமலே அவளிடம் புன்னகை பூத்தது.
‘நாங்க என்ன தப்பு செய்தோம்? என்று அவள் கேட்டது அதிகப் பிரசங்கித்தனம்தான். ஆனால் அது நியாயமான கேள்விதானே?
அவள் என்ன செய்தாள்? அவள் ஏவிய வேலையைச் செய்கிற எடுபிடி. எய்த அம்பு. வில்லை ஏந்தி நிற்பவரை விட்டு விட்டு இவளிடம் கத்துவதில் என்ன பயன்? பலவீனமானவர்கள் மீது பாய்வது அற்பத்தனமானது அல்லவா? நான் என்ன செய்திருக்க வேண்டும்? இத்தனைக்கும் காரணமான பெரியவரிடமல்லவா என் கோபத்தைக் காட்டியிருக்க வேண்டும்? ஆத்திரத்தை கொட்டியிருக்க வேண்டும்?
இந்த எண்ணம் எழுந்ததும் வித்யா பரபரப்பானாள். குளித்து உடைமாற்றிக் கொண்டு புறப்பட்டாள். வாசலுக்கு வந்ததும் வணங்கி விட்டு வண்டியை எடுக்கச் சென்ற டிரைவரை தடுத்து நிறுத்தினாள். தானே காரில் ஏறி விசையை முடுக்க்கினாள். கலா நிலயத்திலிருந்து கார் வெளியேறிய வேகத்தைப் பார்த்த டிரைவர் கலக்கமடைந்தார்.
கால் ஆக்சிலேட்டரிலும் கண்கள் சாலையிலும் இருந்தாலும் மனம் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தது. இன்று இரண்டில் ஒன்று கேட்டுவிட வேண்டும். நடிப்பிலிருந்து ஓய்ந்து விட்டாலும், படிப்பு எழுத்து என்றிருந்தவளை நீங்கள்தான் வீடு தேடி வந்து அரசியலுக்கு இழுத்தீர்கள்..கட்சியில் முக்கியத்துவம் கொடுத்தீர்கள். தில்லிக்கு அனுப்பி வைத்தீர்கள். அப்புறம் ஏன் வேவு பார்க்க ஆள் அனுப்பினீர்கள்? நம்பிக்கைக் குறைவா? தில்லியோடு சேர்ந்து கொண்டு உங்கள் அதிகாரத்தை முடக்கிவிடுவேன் என்ற அச்சமா? கட்சிக்குள் கோஷ்டி சேர்த்து புரட்சி செய்து விடுவேன் என்ற சந்தேகமா? சமயம் பார்த்து காலை வாரிவிட்டு விடுவேன் என்ற பயமா? எழுதுகிறேன், இலக்கியம் பேசுகிறேன், சாணக்கியனைப் போலத் திட்டம் வகுக்கிறேன், சாதுர்யமாக நடந்து கொள்கிறேன் என்பதால் நானும் இன்னொரு அருட்செல்வனைப் போல ஆகிவிடுவேன் என்ற மிரட்சியா? ஏன் ? ஏன்?
வித்யாவின் கார் தோட்டத்தை அடைந்த போது அங்கிருந்து ஒரு ஆம்புலன்ஸ் புறப்பட்டுக் கொண்டிருந்தது. ஒதுங்கி வழிவிட்டு உள்ளே போர்டிகோவில் காரை நிறுத்திய போது பணியாள் ஒருவர் பதறிக் கொண்டு ஓடி வந்தார்.
“ஆம்புலன்சில் யார்? யாருக்கு என்ன உடம்பு?”
“ஐயாவைத் தான் ஆஸ்பத்திரிக்கு இட்டுக்கினு போறாங்க”
“பெரியவரா?”
வேலைக்காரன் ஆம் என்று மேலும் கீழும் தலை அசைத்தான்
“என்னாச்சு?”
“பேசிக்கிட்டே இருந்தாங்க. மயக்கம் போட்டுட்டாரு.டாக்டர்கள் வந்து பார்த்தாங்க. அவசரம்னு அழைச்சிக்கினு போறாங்க”
வித்யா மேலும் விளக்கங்கள் கேட்க நிற்கவில்லை. காரைக் கிளப்பி புயல் வேகத்தில் புறப்பட்டாள். வண்டி வந்த வேகத்தைப் பார்த்து எதிரே வந்த வாகனங்கள் மிரண்டன. அவர்களின் வசை கண்ணாடியத் தாண்டிக் காதில் விழவில்லை என்றாலும் உதடுகளின் அசைவில் உச்சரிப்புப் புரிந்தது. அவை இங்கே எழுதும் அளவிற்கு கண்ணியமான வார்த்தைகள் அல்ல. அவளது கார் எந்த சிக்னலிலும் நிற்காமல் ஆஸ்பத்திரியை அடைந்த போது பெரியவரை ஐசியூக்குள் கொண்டு போயிருந்தார்கள்.
வராந்தாவில் முருகய்யன் இறுக்கமான முகத்தோடு கடிகார ஊசல் போல் இடமும் வலமுமாக உலாத்திக் கொண்டிருந்தார். அதை இடைமறித்து வித்யா அவர் எதிரே போய் நின்றாள்.
“என்னாச்சு?”
முருகய்யன் அவளை ஏறிட்டுப் பார்த்தார். எதுவும் பேச விரும்பாதவர் போல முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டார்.
வித்யா விறு விறுவென்று டாக்டர் அறைக்குள் நுழைந்தாள். நாலைந்து பேராக தங்களுக்குள் கிசுகிசுவென்று விவாதித்துக் கொண்டிருந்தவர்கள், விரியத் திறந்த அறைக் கதவைத் திரும்பிப் பார்த்தார்கள். வித்யாவைப் பார்த்து ஒருவர் கை கூப்பினார்
“பெரியவருக்கு என்ன பிரசினை?” என்றாள் வித்யா, எந்த முகமனும் கூறாமல்.
“பேசிக் கொண்டிருந்தவர் மயக்கமாகி விட்டார்”
“அது எனக்குத் தெரியும். ஆனால் ஏன்?”
நேரிடையான இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று டாக்டர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களில் மூத்தவராகத் தோன்றியவர் சொன்னார்:
“இரத்த ஓட்டத்தில் பிரசினை இருக்கிறது. எங்கோ ஒரு பிளாக் இருக்கிறது.”
“எங்கு?”
“அதைத்தான் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இதயத்தில் இல்லை என்பது நல்ல செய்தி . ஆனால் அது மூளையில் இருக்கலாமோ என்று சந்தேகிக்கிறோம். இருந்தால் அது கெட்ட செய்தி”
அப்போது இடைமறித்த இன்னொரு டாக்டர் சொன்னார்: “கவலைப்படாதீர்கள். உயிரைக் காப்பாற்றிவிடலாம். ஆனால்…”
“ஆனால்?”
“நினைவு வர சில நாள்களாகலாம்”
திகைப்பில் உறைந்து போனாள் வித்யா
(முதல் பாகம் முற்றிற்று)
One thought on “தோழி -20”
பிரமாதம் பிரமாதம்
வேறென்ன சொல்ல
👌👌👏👏