திறமையான கூத்துக் கலைஞர் அவர்.வசனம் எல்லாம் பிச்சு வாங்குவார். ஜிகினா, ஜரிகை, சம்கி இவற்றால் அலங்கரிப்பட்ட ஆடைகளும்,கில்ட் நகைகளும் செயற்கை வெளிச்சத்தில் ஜிலு ஜிலுவென்று மின்னும். ஆனால் பாவம் அத்தனையும் வேஷம். ஆட்டம் முடிந்ததும் அத்தனையும் பெட்டிக்குள் போய்விடும். அடுத்த வேளைக்கு என்ன என்ற கவலை அவரைப் பற்றிக் கொள்ளும். இது அந்தக் காலத்து ராஜபார்ட்கள் கதை.
நம் காலத்து ராஜபார்ட் என்றால் அது திமுக கூட்டணிதான். பேச்சு, வசனம், உடுப்பு எல்லாம் பிரமாதமாக பளபளப்பாக ஜொலிக்கும்.ஆனால் யதார்த்தம்தான் அதற்குக் கவலை தருவதாக இருக்கும்
தமிழர்களை எளிதில் உணர்ச்சிவசப்படச் செய்யும் விஷயங்கள் இரண்டு. ஒன்று தமிழ். மற்றொன்று இடஒதுக்கீடு.பாஜக தமிழுக்கு எதிரி என்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயன்றது. ஆனால் மோதிக்கு திருக்குறள், பாரதியின் கவிதைகள் இவற்றின் மீதிருந்த உண்மையான் ஆர்வம் பரவலாகத் தெரியவந்த பிறகு பாஜக தமிழுக்கு எதிரான கட்சி என்ற பிரசாரம் எதிர்பார்த்த அளவு எடுபடாது போயிற்று.
எனவே அதனையடுத்து இப்போது பாஜக இந்துக்களுக்கு, குறிப்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான கட்சி என்று கட்டமைக்க முனைந்திருக்கிறது. அந்த முயற்சிக்கு அது கையில் எடுத்திருக்கும் ஆயுதம் இடஒதுக்கீடு.
ஜூலை 21ஆம் தேதி பேஸ்புக்கில் வெளியாகியிருக்கும் அறிக்கையில் “
“இந்துக்களுக்காக”க் குரல் கொடுக்கிறோம் என்று தொண்டை வற்றச் சப்தமிடும் பா.ஜ.க.,வினருக்கு பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்துக்களாகத் தெரியவில்லையா?” என்று கேள்வி எழுப்பும் ஸ்டாலின் “திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கட்சிகள், தோழமைக் கட்சிகள், சமூகநீதித் தத்துவத்தில் ஆர்வம் உள்ள அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்குவோம்.மக்கள் மன்றத்தில் நாம் எழுப்பும் குரல், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து பேரதிர்வுகளை ஏற்படுத்துவதாக அமையும்” என்று முழங்குகிறார்
அவர் அறிக்கை வரும் முன்னரே, இந்து விரோதி பிஜேபி என்ற தலைப்பில் பேஸ்புக்கில் எழுதிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி “இந்துகளில் தேசிய அளவில் 52 சதவீதமும் மாநில அளவில் ஏறக்குறைய 70 சதவீதமும் உள்ள பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இடஒதுக்கீட்டைப் பிஜேபி பறித்துள்ளது.ஆனால் உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு கொடுக்கிறது” என்று எழுதியுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை பாஜக பறித்துவிட்டது போல திமுக எம்.பி. ரவிக்குமாரும் எழுதியிருந்தார். நீதிமன்றத்தில் சாதகமான திர்ப்புக் கிடைக்காவிட்டால் அரசியல் ரீதியாக மேல் நடவடிக்கை எடுப்போம் என்ற ரீதியில் குறிப்பிட்டிருந்தார். இவையெல்லாம் ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்தை இந்தக் கட்சிகள் ஒருங்கிணைந்து கையில் எடுக்கத் தயாராகி வருகின்றன என்பதை உணர்த்துகின்றன
இதற்குப் பின்னால் இரு வேறு காரணங்களும் இருக்கின்றன. ஒன்று: பெரியாரிஸ்ட்கள் கந்த ஷஷ்டிக் கவசத்தை ஆபாசமாக விமர்சித்ததையடுத்து மக்களிடம் ஏற்பட்டிருக்கும் சினம் ஏற்கனவே இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று தங்கள் மீதுள்ள இமேஜை வலுப்ப்டுத்திவிடுமோ என்ற பதற்றம். இன்னொன்று இட ஒதுக்கீட்டு வழக்கில் ஜூலை 27ஆம் தேதி தீர்ப்பு வரும் முன் இதைப் பற்றிப் பேசி நீதிமன்றத்தின் மீது மறைமுகமாக அழுத்தம் செலுத்துவது.
இதை பாஜக, குறிப்பாக அதன் தமிழ் மாநிலக் கிளை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது காத்திருந்து கவனிக்க வேண்டிய விஷயம். ஆனால் இடஒதுக்கீடு குறித்து சில விஷயங்களை நினைவு கூர்வது வாசகர்களுக்கு உதவும்
இடஒதுக்கீடு பறிக்கப்படுகிறது என்பது அப்பட்டமான பொய். இப்போது நீதிமன்றத்தின் முன் உள்ள வழக்கே அகில இந்திய கோட்டாவில் (AIQ) பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்பது குறித்துத்தான். மற்றவற்றில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதாக எங்கும் புகார் இலை. இந்த AIQ குறித்த புகாரையும் தமிழக அரசியல் கட்சிகள்தான் எழுப்பியுள்ளன. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இது பற்றிப் பேச்சே இல்லை.
சரி, ஏன் அகில இந்திய கோட்டாவில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை?
இது இன்று தோன்றிய நிலை அல்ல. .உச்சநீதிமன்ற ஆணையின் காரணமாக 1986 முதல் அகில இந்திய கோட்டாவில் (AIQ) இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை..
கவனிக்க 1986ல் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். 31 அக்டோபர் 1984 முதல் 2 டிசம்பர் 1989வரை நாட்டை ஆண்டது ஜோதிமணியின் அபிமான தலைவர் ராகுல் காந்தியின் அப்பா ராஜீவ் காந்தி. அப்போது ஜோதிமணியின் முன்னாள் தலைவர் ப.சிதம்பரம் இணையமைச்சராக இருந்தார்.
தோதிமணியின் கூற்றுக்களின்படியே பார்த்தால் தேசிய அளவில் 52 சதவீதம் உள்ள OBCக்களின் இட ஒதுக்கீட்டை மட்டுமல்ல, எஸ்.சி/எஸ்.டிக்களின் இட ஒதுக்கீட்டையும் பறித்த ‘இந்து விரோத’ கட்சி காங்கிரஸ்தான். அப்போது திமுகவோ, கம்யூனிஸ்ட்களோ இதைக் குறித்துக் குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை
பத்தாண்டுகளுக்குப் பிறகு, எஸ்.சி,எஸ்.டி களுக்கு இட ஒதுக்கீடு செய்யும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.அப்போது ஜோதிமணியின் முன்னாள் தலைவர் ப.சிதம்பரம் (ஆம் அப்போது காங்கிரசிலிருந்து விலகி தமாகா வின் பிரதிநிதியாக, காங்கிரசிற்கு எதிரான அணியின் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்) திமுகவின் முரசொலி மாறன், தமிழ்நாட்டைச் சேர்ந்த தனுஷ்கோடி ஆதித்தன், எஸ்.ஆர் பாலசுப்ரமணியன், டி.ஆர்.பாலு, என்.வி. என் சோமு ஆகியோரும் அமைச்சரவையில் இருந்தனர். ஆனால் அவர்கள் அப்போது OBCக்கு இட ஒதுக்கீடு கோரி அழுத்தம் கொடுக்கவில்லை
2015ஆம் ஆண்டு OBCகளுக்கும் இடஒதுக்கீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நிலுவையில் இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு விஷயத்தில் அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. எடுத்தால் அது நீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.
இந்த விஷயத்தில் பாஜக அரசு என்ன செய்திருக்கிறது?
உச்சநீதிமன்றத்தின் முன் அது ஒரு திட்டத்தை வைத்திருக்கிறது.. ஆனால் அது குறித்த முடிவை உச்ச நீதிமன்றம்தான் எடுக்க வேண்டும்
பாஜக அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கல்வி, வேலை வாய்ப்புக்களைத் தட்டிப் பறிப்பதாக ஸ்டாலின் சொல்கிறாரே?
பாஜக அரசு மத்தியக் கல்வி நிறுவனங்களில் OBC இடஒதுக்கீட்டிற்கு வகை செய்துள்ளது.இதற்கான சட்டம் 2019ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு அது ஜூலை 9, 2019 தேதியிட்ட கெசட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது
தாழ்த்தப்பட்டோருக்கு பாஜக அரசு என்ன செய்திருக்கிறது?
பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த உடன், அந்த இட ஒதுக்கீடு தொடரும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்தது. நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு மட்டுமே பெரும்பான்மைக்குப் போதுமான எண்ணிக்கை இருந்த போதிலும் தலித் கட்சிகளைச் சேர்ந்த ராம்விலாஸ் பாஸ்வான், ராம்தாஸ் அதாலே போன்றோரை அமைச்சர்களாக்கியிருக்கிறது. தமிழக் பாஜகவின் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினரை நியமித்திருக்கிறது. தமிழகத்தில் பாஜகவைத் தவிர எந்த கட்சிக்கும் தாழ்த்தப்பட்டவர் தலைவராக இல்லை என்பது கவனிக்கத் தக்கது (தலித் கட்சிகள் தவிர)
உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கிறது என்கிறாரே ஜோதிமணி?. அவரின் கட்சி அதற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்திருக்கிறது. அப்போது அந்தக் கட்சியின் தலைவராக அவரது அபிமானத் தலைவர் ராஹுல் காந்தி இருந்தார். அந்த இட ஒதுக்கீடு தவறு என்று அவரோ, அந்தக் கட்சியோ கருதியிருக்குமேயானால் அதற்கு ஆதரவாக ஏன் அவர்கள் வாக்களிக்க வேண்டும்? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதற்கு ஆதரவாக வாக்களித்தது என்பது கவனிக்கத் தக்கது
இன்னொன்று: அது “உயர் சாதி”யினருக்கான இட ஒதுக்கீடு அல்ல. அது பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான இட ஒதுக்கீடு (Reservation for Economically Weaker Section). அதன் மூலம் ஏழை இஸ்லாமிய கிறிஸ்துவ சகோதரர்களும் பலன் பெறுவர்.
OBC இடஒதுக்கீட்டிற்கு காங்கிரஸ் செய்தது என்ன?
மண்டல் கமிஷனை அமைத்தது காங்கிரஸ் அரசல்ல. மொரார்ஜி தேசாய் தலைமையிலானா ஜனதா கட்சி அரசு 1979ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி மண்டல் கமிழனை அமைத்தது (இந்த அரசில் இன்றைய பாரதிய ஜனதாவின் முன்னாள் வடிவமான ஜனசங்கம் இடம் பெற்றிருந்தது)
அது எப்போது அறிக்கை கொடுத்தது?
1980 ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிக்கையை அளித்தது.அதற்குள் மொர்ராஜி அரசு கவிழ்ந்து இந்திரா அரசு பதவி ஏற்றது அது அந்த அறிக்கையைக் கிடப்பில் போட்டது. இந்திராவை அடுத்து ராஜீவ் பதவிக்கு வந்தார் அவரது அரசும் கிடப்பில் போட்டது.
அதை அமல்படுத்தியது யார்? அறிக்கை அளிக்கப்பட்ட பின் பத்தாண்டுகள் கழித்து.அதை 1990ல் அமல்படுத்தியது வி.பி.சிங். அரசு.
மண்டல் கமிஷன் பரிந்துரைத்த இடஒதுக்கீட்டை எதிர்த்துத் தீக்குளிக்க முயன்ற ராஜிவ் கோஸ்வாமி எந்தக் கட்சியின் அமைப்பைச் சேர்ந்தவர்?
காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான NSUIஐச் சேர்ந்தவர். அந்த அமைப்பினால் தில்லிப் பல்கலைக்கழக மாணவர் யூனியன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்டவர்.
இதுதான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் வரலாறு.OBC இடஒதுக்கீட்டிற்காக அதிகாரத்தில் இருந்த போது ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாத, மாறாக மண்டல் அறிக்கையைக் கிடப்பில் போட்ட காங்கிரஸ் இன்று கூச்சல் போடுவது அப்பட்டமான சந்தர்ப்பவாதம். அரசியல் இரட்டை வேடம்
5.8.2020