‘திசைகள்’ மாலன்

maalan_tamil_writer

‘திசைகள்’ மாலன்

நேர்காணல் – மஞ்சு ரங்கநாதன்

திசைகள் என்னும் இணையப் பத்திரிக்கை ஆசிரியர் திரு.மாலன் பன்முகம் கொண்டவர்.இந்தியா டுடே (தமிழ்) தினமணி, குமுதம் ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். இப்போது சன் நியூஸ் தொலைக்காட்சியின் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.Maalan அமெரிக்காவில் உள்ள புளோரிடா பலகலைக்கழகத்தில் இதழியல் படித்தவர். அங்கு படிக்கும் போது advanced editing  என்ற பாடத்தில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராகத் தேறியவர். செய்தி தொடர்பான பணிகளுக்கு நடுவே, இலக்கிய ஆர்வத்துடன் எழுத்தாளர்களையும், இளம்பாடகர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நேர்காணல்கள் செய்து வருகிறார்.உலகம் முழுவதும் இலக்கிய நண்பர்களைப் பெற்றவர். பாரதியாரின் படைப்புக்களை இணையதளத்தில் ஒரு சேர ஆவணப்படுத்த (“மணிமண்டபம்”)  வேண்டும் என்ற கனவை நனவாக்கும் முயற்சியைத் தொடங்கி வைத்தவர்.

இளம் வயதிலேயே இசை, இலக்கியம் பாரதி இவற்றுடன் பரிச்சயம் ஏற்பட்டு விட்டதா?

என் இளம் பருவம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் என் தாய்வழிப் பாட்டனார் நாராயணன் வீட்டில் கழிந்தது. அவர் மருத்துவர். பிரிட்டிஷ் அரசின் கல்விக் கொடை பெற்று படித்தவர். இருந்தும் அவர்களை எதிர்த்து நடந்த சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாய் கலந்து கொண்டவர். அந்த நாள்களில் வருடந்தோறும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பாரதியார் விழா நடக்கும். அந்த விழாவிற்கான மேஜை, நாற்காலிகள், பாரதி படம் எல்லாம் தாத்தா வீட்டிலிருந்து போகும். அந்த விழாவில் என் அம்மா, லலிதா, பாரதியார் பாடல்கள் பாடுவார். அதற்காக அவ்வப்போது எம்.எல்.வசந்தகுமாரி பாடிய பாடல்கள் கொண்ட இசைத்தட்டை அடிக்கடி போட்டு, கூடவே பாடிப் பழகுவார். அதனால் எனக்கு ஐந்து வயதிலேயே பாரதியார் பாடல்களுடனான அறிமுகம் ஏற்பட்டு விட்டது. அப்பா ஒரு தீவிர வாசகர். வார இறுதி நாள்களில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள பென்னிங்டன் நூலகம்சென்று புத்தகங்கள் எடுத்து வருவார். அது பெரிய நூலகம். புத்தகங்களைத் தேடுவதற்கு சில மணி நேரங்கள் எடுத்துக் கொள்வார். அவர் நூலகத்திற்குச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்வார். பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நடுவே நான் ஒரு பெஞ்சில் அமர்ந்திருப்பேன். ஆறு, ஏழு வயதிற்குள் பாடல்கள் புத்தகங்களுடான அறிமுகம் ஏற்பட்டு விட்டது. ஆண்டாள் கோவில் பகல் பத்து, இராப்பத்து என்று பத்து நாள் திருவிழாக்கள் நடக்கும். அரையர்கள் என்பவர்கள் ஆழ்வார்கள் பாசுரங்களைப் பாடிக் கொண்டு நடனம் ஆடுவார்கள்.அவர்களின் நடனமும் பாடலும் அந்த வயதில் தமிழின் மீதான ஆர்வத்திற்கு வித்திட்டது.

எழுத ஆரம்பித்தது எந்த வயதில்?

பள்ளிப் படிப்புக்கு மதுரைக்கு வந்து விட்டேன். எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். ஒரு நாள் காலையில், நாளிதழில், ஹைதராபாத் நிஜாமின் தோட்டத்தில் கட்டிட வேலைக்காகத் தோண்டியபோது, அங்கு பல காலத்திற்கு முன் புதைத்து வைக்கப்பட்டிருந்த பலகோடி மதிப்புள்ள கரன்ஸிகள் கரையானால் அரிக்கப்பட்டிருந்ததாக செய்தி பார்த்தேன். அந்த செய்தி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது  மனதில் பலவித சிந்தனைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. அந்த சிந்தனைகளின் பாதிப்பாக, பள்ளியில் பூகோள (புவியியல்) வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, கவிதை எழுதிக் கொண்டிருந்தேன்.எனது  ஆசிரியர் அதைப் பார்த்துவிட்டார். அருகில் வந்து நோட்டைப் பறித்துக் கொண்டார். கடுமையான திட்டு விழப் போகிறது, அத்தனை பேர் முன்னிலையிலும் அவமானப்படுத்தப் போகிறார் என நினைத்துக் கொண்டிருந்தேன். நேர்மாறாய் ‘கவிதை எழுதுவது எல்லோருக்கும் சாத்தியமில்லை,அது சிலரைத் தேர்ந்தெடுத்து கடவுள் அளிக்கும் பரிசு’ என்று கூறி அனைவர் முன்னிலையிலும் அழைத்து பாராட்டி தொடர்ந்து  எழுதுமாறு ஊக்கப்படுத்தினார். அன்று அவர் என்னை அந்த வார்த்தைகளைச் சொல்லிப் பாராட்டி யிருக்காவிட்டால் நான் ஒருவேளை எழுதாமலே போயிருக்கலாம்.

அந்த முதல் கவிதையைச் சொல்லுங்களேன்

நினைவிலில்லை.

‘கரன்சிகளில் கரையானின் காலனி.

காலம் பதித்த காலடி?

சிரமறுத்து சேர்த்த பணமோ?

சிறு பூச்சி செழிக்க உணவோ?’

என்ற முதல் சில வரிகள் மட்டும் நிழலாக நினைவிலிருக்கிறது பிறகு நானும் என் அண்ணனும் சேர்ந்து “அறிவுக்கதிர்” என்னும் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினோம். எழுத்துடனும் வர்ணங்களுடனுமான  வாழ்க்கை அது. அந்த இளம் வயதில் இவையெல்லாம் உணர்வுகளைக் கூர்மையாக வைத்துக் கொள்ள உதவின. ஆனால் சிந்தனையில் ஆழமான பாதிப்பு பள்ளி இறுதி வகுப்பில் இருந்தபோது ஏற்பட்டது. 1965ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் முதல் இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.  அதைக் கண்டித்து நகரில் பல சுவரொட்டிகள் தோன்றின. அவற்றுள் அண்ணாவின் உருவத்தைப் புள்ளிச்சித்திரமாக வரைந்திருந்த ஒரு சுவரொட்டியில் காணப்பட்ட வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது. ” உலகத்து தீமைகள் அனைத்திற்கும் தீமூட்ட உன் அண்ணனது கரங்களுக்கு வலுவில்லாமல் இருக்கலாம். ஆனால் உன்னை இரண்டாம் தரக் குடிமகனாக்கும் இந்திக்குத் தீமூட்ட அவை ஒரு போதும் துவளப் போவதில்லை.” என்பது அந்த வாசகம். ‘இரண்டாந்தரக் குடிமகன் என்ற சொல் என்னை மிகவும் யோசிக்க வைத்தது.அந்த ஜனவரி 25ம் நாள். நானும் எங்கள் பள்ளி மாணவர்களும் மதுரை வீதிகளில் ஊர்வலமாய் சென்றோம்.

ஊர்வலம் செல்லக் காரணம் இந்திமொழி மீதான வெறுப்பா?

மொழிமீதான வெறுப்பில்லை. மொழித் திணிப்பின் மீதான எதிர்ப்பு.

அந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி உங்களிடம் என்ன மாதிரியான பாதிப்புக்களை ஏற்படுத்தியது?

எங்களது ஊர்வலம், வடக்கு மாசி வீதி வழியாக வந்து கொண்டிருந்த போது, எங்கள் மீது லத்தி சார்ஜ் நடந்தது. என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்ற உணர்வோ, சிந்தனையோ இன்றி காவல்துறை ஒரு எந்திரம் போல செயல்படுவதைக் கண்கூடாக முதன் முதலாய்ப் பார்க்கிறேன். எனக்கும் அடி விழுந்தது.  இடது காலில் ரத்தக் காயம். அது நாள் வரை என்னை யாரிடமும் அடி வாங்கியது இல்லை. பெற்றோரோ, ஆசிரியர்களோ, நண்பர்களோ, யாரும் அடித்ததில்லை. வலி, கோபம், அவமானம் எல்லாம் கலந்த ஒரு  கலவையான உணர்வு மனதில். அப்பா, அம்மா, தாத்தா எல்லோரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் ஆதலால், எங்கள் வீட்டில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26, ஆகஸ்ட்15 தினங்களில் கொடி ஏற்றுவோம். அந்த ஆண்டும் எங்கள் வீட்டில் அப்பா கொடியேற்றினார். சில நிமிடங்களில் அதை அகற்றிவிட்டு, நான் கறுப்புக்கொடி ஏற்றினேன். பிறகு அம்மாவின் விருப்பத்திற்கேற்ப அன்று தேசிய கொடியும், என் எதிர்ப்புணர்வின் அடையாளமாக கறுப்புக் கொடியும் வீட்டில் பறந்தன. அரசியல் நிகழ்ச்சிகளை கவனிக்கும் ஆர்வம் ஏற்பட அந்த நாள்கள் காரணமாக அமைந்தன.

அரசியலில் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக எழுதுவது பாதிக்கப்பட்டதா?

நான் ஒரு போதும் களத்தில் இறங்கி நேரடி அரசியலில் ஈடுபட்டதில்லை. நான் எந்த அரசியல் கட்சியிலும்  உறுப்பினராக இருந்ததில்லை. அரசியல் கட்சிகளின் மாணவ அமைப்புக்களிலோ, இளைஞர் அமைப்புக்களிலோ, இலக்கிய அணிகளிலோ அல்லது அவை சார்ந்த வேறு நிழல் அமைப்புக்களிலோ நான் ஒரு போதும் உறுப்பினராக இருந்ததில்லை. ஒரு குடிமகன் என்ற அளவிலும் ஒரு பத்திரிகையாளன் என்ற அளவிலுமே என் ஆர்வம் இருந்து வந்திருக்கிறது. ஆனால் இலக்கியம், எழுத்து இவற்றின் மீது எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. கல்லூரி நாள்களில் பின் வரிசையில் அமர்ந்து நண்பர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு வெண்பா எழுதியது உண்டு.  ஒருவர் ஒரு வரி எழுத மற்றவர் இன்னொரு வரி என்று தொடர, வகுப்பறையில் காகிதங்களோ நோட்டுப் புத்தகங்களோ பரிமாறிக் கொள்ளப்பட்டு எழுதிக் கொண்டிருப்போம் மகிழ்ச்சியாக இருக்கும். சி.சு. செல்லப்பாவின் எழுத்து, தில்லியிலிருந்து வந்து கொண்டிருந்த கணையாழி, நா.பார்த்தசாரதியின் தீபம் போன்ற  இதழ்களில் கவிதை பிரசுரமானது. பூச்செண்டு என்னும் மாணவர் பத்திரிகையின் ஆசிரியர்குழு, கல்லூரி மலரின் ஆசிரியர் குழு, என இதழியல் ரீதியாக செயலாற்றிக் கொண்டிருந்தேன்.

1969 ல் அகில இந்திய வானொலி நடத்திய காந்தி நூற்றாண்டு விழா கவியரங்கில் பங்கேற்றதை அடுத்து வானொலியிலும் ஆர்வம் பிறந்தது. அந்தக் காலகட்டத்தில் திருச்சி வானொலி, இளையபாரதம் என்ற இளைஞர்களுக்கான நிகழ்ச்சியைத் துவக்கியது. நான் எழுதிய கவிதை அந்த நிகழ்ச்சியின் தலைப்புப் பாடல் (signature) ஆக பல ஆண்டுகள் ஒலிபரப்பப்பட்டு வந்தது.

கண்ணதாசன், தீபம், கணையாழி, கசடதபற போன்ற இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும், ஆனந்த விகடன், கல்கி, தினமணிக் கதிர் போன்ற வெகுஜன இதழகளிலும் ஒரே நேரத்தில் எழுதி வந்திருக்கிறேன். தி.ஜானகிராமன் கணையாழி ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட போது அவரது அழைப்பை ஏற்று கணையாழி ஆசிரியர் குழுவில் பங்கேற்றேன்.

அரசியலில் ஆர்வம் அவ்வப்போது வரும் போகும். ஆனால் இலக்கியத்தின் பால் இடையறாத ஈடுபாடு இருந்து வருகிறது. சுருக்கமாகச் சொல்வதானால் அரசியலைப் பொறுத்தவரை  நான் ஓரத்தில் நின்று கமெண்ட் அடிக்கிற பார்வையாளன். இலக்கியம் இதழியலில் களம் இறங்கி ஆடி காயம் பட்ட ஆட்டக்காரன்.

இலக்கியப் பத்திரிகைகளிலும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் எப்படி ஒரே நேரத்தில் எழுத முடிந்தது?

1970கள் வரை இலக்கிய சிற்றிதழ்களுக்கும், வெகுஜனப் பத்திரிகைகளுக்கும் இடையே பெரிய இடை வெளி இல்லை. இன்று இலக்கியச் சிறு பத்திரிகைகளால் பெரிதும் கொண்டாடப்படும், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, நா.பார்த்தசாரதி போன்றவர்கள் வெகுஜன பத்திரிகைகளிலும் எழுதியவர்கள்தான். அதே நேரம் சினிமா என்ற பிரம்மாண்டமான வெகு ஜன ஊடகத்தில் செயல்பட்டு வந்த கண்ணதாசன் இலக்கிய சிற்றிதழ் வெளியிட்டு வந்தார்.

ஆனால் 70 களில் தமிழின் வெகுஜனப் பத்திரிகைகளில் ஒரு அதிர்ச்சி தரும் மாற்றம் நிகழ்ந்தது. அதன் ஆசிரியர்கள், நல்ல எழுத்தாளர்களை ஓரம் கட்டிவிட்டு, ஆபாசம் தொனிக்கும் செக்ஸ் கதைகளை பெண் பெயரில் வெளியிடத் துவங்கினார்கள். அந்தக் கதைகள் அந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவினராலே எழுதப்பட்டன. உதாரணமாக ஸ்ரீவேணுகோபாலன் தினமணிக்கதிரில் குமாரி புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் எழுதினார். குமுதம் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு. ரா.கி. ரங்கராஜன், மிஸ். மாலினி என்ற பெயரில் எழுதினார். ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவினர் குமாரி.டபிள்யூ. ஆர். ஸ்வர்ணலதா என்ற பெயரில் எழுதினர். பெண்கள் பெயரில் எழுதியதோடு அல்லாமல், குமாரி, மிஸ், போன்ற அடைமொழிகள் சேர்க்கப்பட்டதன் பின்னுள்ள நோக்கங்கள் ஊகிக்க முடியாதவை அல்ல. இருபது முப்பது வருட காலமாக வீட்டிற்குள் வரவழைத்துப் படித்த வார இதழ்கள் இப்படி மாறி விட்டது மத்தியதர வர்க்கத்திடையே ஒரு கலாசார அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரம் இலக்கிய சிற்றிதழ்களில் குழாயடி சண்டைகள் போலக் குழுச் சண்டைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. இலக்கியம் அறிந்தவர்கள்.  உணர்ச்சிவசப்படாமல் அறிவு ரீதியாகச் சிந்தித்து எதையும் அணுகுபவர்கள் என்று கருதப்பட்டவர்கள் இப்படி ஒருவரை ஒருவர் தனிப்பட்ட ரீதியில் வசைபாடிக் கொண்டது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

இலக்கிய சிற்றிதழ்களில் எழுதிக் கொண்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்த வெகுஜன இதழ்களை வாசித்துக் கொண்டு இருந்த எனக்கு இந்த இரண்டு போக்குகளும் வருத்தமளிப்பதாக இருந்தது. இந்த இருவகை இதழ்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க நானும் என் நண்பர்களும் சில திட்டங்களை வகுத்தோம். அதை நிறைவேற்றும் உத்திகளை சிந்தித்தோம். அந்த உத்திகளை செயல்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டோம். அவையெல்லாம் வீண் போய்விடவில்லை என்பதை இன்றுள்ள வார இதழ்களைப் பார்க்கும் யாரும் கண்கூடாக அறிந்து கொள்ளலாம்.

அந்த முயற்சிகளில் ஒன்றுதான் திசைகள் வார இதழா?

ஒருவிதத்தில். அன்று வார இதழ்களில் குறிப்பிட்ட ஆறு அல்லது ஏழு எழுத்தாளர்களே மாறி மாறி எழுதிக் கொண்டிருந்தனர். நான்கு அல்லது ஐந்து ஓவியர்களே படம் வரைந்து கொண்டிருந்தனர். நம் வார இதழ்களில் இளைஞர்களுக்கு இடமில்லை, அவை இளைஞர்களைப் பிரதிபலிப்பதாக இல்லை என்று நான் சாவி ஆசிரியர் குழுக் கூட்டங்களில் தொடர்ந்து வாதிட்டு வந்தேன்.

குங்குமம் வார இதழில் இருந்து விலகிய பின் ஆசிரியர் சாவி தனது சொந்த இதழான சாவி வார இதழைத் துவக்கிய போது, அதற்கு அவ்வப்போது ஆலோசனைகள் சொல்ல, என் நண்பர்களான பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, ஆகியோரையும் என்னையும் அழைத்திருந்தார். நாங்கள் அந்த இதழின் முழு நேர ஊழியர்கள் அல்ல. சாவி வார இதழ் ஓராண்டை நிறைவு செய்த நேரத்தில், ஆசிரியர் சாவி ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் வெளி நாட்டுக்குக் கிளம்பும் முன் என்னை அழைத்து ” பத்திரிகையை உங்கள் பொறுப்பில் விட்டுச் செல்கிறேன். நான் திரும்பி வரும் வரை சாவி இதழுக்கு நீங்கள்தான் அறிவிக்கப்படாத (defacto) ஆசிரியர்” என்று சொன்னார். எனக்கு அது ஒரு இனிய அதிர்ச்சி. நான் அப்போது சாவி வார இதழின் முழு நேர ஊழியர் அல்ல. ஏன் முழு நேரப் பத்திரிகையாளனும் அல்ல. எந்த வெகுஜன இதழிலும் எந்தப் பொறுப்பிலும் இருந்ததில்லை. சாவி வார இதழோ அப்போது வெளிவந்து கொண்டிருந்த இதழ்களில் ஜூனியர். நாற்பது ஐம்பது வருடங்களாக வந்து கொண்டிருந்த இதழ்களுக்கு நடுவே ஒரே ஒருவருடத்தை நிறைவு செய்திருந்த இதழ். அதன் selling pointஏ ஆசிரியர் சாவிதான். சாவி இதழ் என் பொறுப்பில் இருந்த போது, உள்ளடக்கம், விற்பனை இரண்டிலும் தொய்வு ஏற்பட்டுவிடாமல் அதை நடத்திய விதம் சாவிக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது. சிறிது நாள்களிலேயே, என்னை ஆசிரியராக அறிவித்து ஒரு வார இதழை வெளியிட்டார். அதுதான் திசைகள். அந்த இதழை முழுக்க முழுக்க என் விருப்பப்படி நடத்த முழு சுதந்திரம் தந்தார். நான் அதில் தமிழ் எழுத்துலகிற்கு முற்றிலும் புதியவர்கள் எழுத, ஓவியங்கள் வரைய இடமளித்தேன். அவர்களில் பலர் இன்றும் ஊடகங்களில் வெற்றிகளைக் குவித்து வருகிறார்கள்.

அந்த திசைகள் தான் இப்போது மீண்டும் உயிர் பெற்றுள்ளாதா ?

வார  இதழாக அச்சில் வந்த திசைகளுக்கும், இணையத்தில் மாத இதழாக வந்து கொண்டிருக்கும் திசைகளுக்கும் (http://www.thisaigal.com) சிலவிதங்களில் தொடர்ச்சி உண்டு. அன்று திசைகள் தமிழ் எழுத்துலகை இளைஞர்களைக் கொண்டு செழுமைப்படுத்தியது. இப்போது தொழில் நுட்பத்தைக் கொண்டு மேம்படுத்த விரும்புகிறது. அன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மறைந்து கிடந்த திறமைகள் அரங்கேற அது உதவியது. இன்று உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளக் களம் அமைத்து இருக்கிறது.

இன்று தமிழ் இலக்கியம் என்பது தமிழ்நாட்டில் மட்டும் எழுதப்படும் இலக்கியமல்ல. பாரம்பரியமாகத் தமிழ் வழங்கி வரும் இலங்கை, சிங்கை, மலேசியாவில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற வட அமெரிக்க நாடுகள், அரபு நாடுகள், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்தும் இன்று இலக்கியம் பங்களிப்பு பெறுகிறது. ஆனால் இந்தப் படைப்புக்கள் எல்லாம் எல்லா நாடுகளில் இருப்பவர்களுக்கும் எல்லா நேரங்களிலும் கிடைப்பதில்லை. ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், இந்தப் படைப்புக்கள் கிடைத்தால் எழுதுபவர்கள், வாசகர்கள் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வாய்ப்பை திசைகள் அளிக்கும். இதன் காரணமாக தமிழ் மொழியின் மீதுள்ள பிடிப்பு ஆழப்படும்; இலக்கியத்தின் மீதான ஆர்வம் பரவலாகும்.

நீங்கள் விரும்பி வாசித்த நூல்கள்?விரும்பிய கதாபாத்திரம் ? ஏன்?

தி.ஜானகிராமனின் மலர்மஞ்சம், ஜெயகாந்தனின் பாரீசுக்குப் போ, ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம். ஹென்றியின் பார்வை பல இடங்களில் என்னுடைய கருத்துக்களுடன் ஒத்துப்போவதுபோல் இருப்பதால் பிடித்திருக்கலாம். பாரதியின் கவிதைகள் கதைகள் கட்டுரைகள் மிகவும் பிடிக்கும்.

எழுத்தை விடுத்து வேறு துறைகளில் விருப்பம் ? இசை,விளையாட்டு …

இசையை ரசிப்பேன்.கேள்வி ஞானம் தான். செஸ் ஆடுவேன். கிரிக்கெட் பார்ப்பேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.