சப்பாத்திக் கள்ளிப் பழம் சாப்பிட்டிருக்கிறீர்களா? மிக இனிப்பாக இருக்கும். ஆனால் வெளிப்புறம் முழுவதும் முள் முள்ளாக இருக்கும். உள்ளேயும் கூட ஒரு முள் இருக்கும். கவனமாகக் கையாள வேண்டும்.
நம் காவலர்கள் கள்ளிப்பழத்தைப் போல. உள்ளுக்குள் இனிப்பானவர்கள். வெளியே கடுமையானவர்களைப் போலக் காட்சி தருவார்கள், காவல்துறை தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் டாக்டர். சைலேந்திரபாபுவைப் போல.
பள்ளிச் சிறுமி ஒருத்தியை அவளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஓட்டுநர் ஒருவர் பலாத்காரம் செய்து அவளையும் அவள் சகோதரனையும் கொன்ற கொடுஞ் சம்பவம் 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோயம்புத்தூரில் நடந்த போது கோவை மட்டுமல்ல, தமிழகமே கொதித்தெழுந்தது. அவனை என்கவுன்டரில் போட்டுத் தள்ளினார் சைலேந்திர பாபு. .அப்போது அவர் கோவை மாநகர கமிஷனராக இருந்தார். பொதுவாக இது போன்ற சம்பங்கள் போது கண்டனங்கள் எழும். எதிர்க்கட்சி ஆளும் கட்சியைச் சாடும். ஆனால் அந்த சம்பவத்திற்காக அன்று எதிர்கட்சியில் இருந்த ஜெயலலிதாவும், முதல்வராக இருந்த கருணாநிதியும் சைலேந்திர பாபுவைப் பாராட்டினர். காரணம் அவரது நேர்மை.
அவர் அண்மையில் காவல் துறை தலைமை அதிகாரியாகப் பதவி ஏற்றதும் சொன்னது காவலர்கள் பொது மக்களிடம் பரிவோடு நடந்து கொள்ள வேண்டும். குற்றவாளிகளைத் தண்டிக்கலாம். அப்பாவிகளை அடிக்கக் கூடாது.
முள்ளைத் தாண்டி இருக்கும் இனிப்பு இதுதான். எழுத்தாளன் எந்தச் சட்டை போட்டுக் கொண்டாலும் அதற்குள் இருக்கும் இதயத்தில் ஈரம் கசிந்து கொண்டு இருக்கும் என்பது என் நம்பிக்கை. காக்கிச் சட்டை போட்ட சைலேந்திர பாபு ஓர் எழுத்தாளரும் கூட அவரது 24 போர் விதிகள் வளர ஆசைப்படுகிற எவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.
புகைக்கு நடுவில் நெருப்பு இருப்பதைப் போல தமிழ் நாட்டின் துயரங்களுக்கு நடுவே நல்லதும் உண்டு. இரண்டு எழுத்தாளர்கள் இன்று தமிழகத்தின் நிர்வாகத்தைத் தலைமை தாங்கி வழி நடத்துகிறார்கள். ஒருவர் அரசுத் துறைகள் அனைத்திற்கும் தலைவரான தலைமைச் செயலாளர் டாக்டர் இறையன்பு. மற்றவர் காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு.
இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவரும் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள். இருவரும் வேளாண் பட்டதாரிகள். இருவரும் அடித்தளத்தில் இருக்கும் மாணவர்கள் மேலெழுந்து வர வேண்டும் என்பதற்காகத் தங்கள் பணிகளிடையே நேரம் ஒதுக்கிப் பல்லாண்டு காலமாக அவர்களுக்காக பயிற்சியும் ஊக்கமும் தந்து வருபவர்கள். அதற்குக் காரணம் ஒன்று உண்டு. அவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி. எஸ் தேர்வுகளுக்குத் தங்களைத் தயார் செய்து கொண்டிருந்த போது அவர்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லை. அதனால் கனவுகளோடு கிராமப்புறத்தில் வாழும் இளைஞர்களின் சிரமங்களை அனுபவ பூர்வமாக அறிந்தவர்கள்.
ஐ.ஏ எஸ் தேர்வுக்குத் தயார் செய்து கொள்ளும் மாணவர்கள். ஒவ்வொரு நாளும் குறைந்தது இரு நாளிதழ்களாவது வாசிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் எழுதும் தேர்வில் பல கேள்விகள் நாட்டு நடப்புக் குறித்தவையாக இருக்கும்.. ஆனால் இறையன்பு ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தன்னைத் தயார் செய்து கொண்ட காலம் எப்ப்டி இருந்தது?
“‘அது பற்றி ஒன்றும் தெரியாமலேயே நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையில். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு, அதுபற்றித் தகவல்களைத் தேடி, தட்டுத்தடுமாறி புத்தகங்களைத் திரட்டி படிக்க ஆரம்பித்தபோது, அரசாங்கப் பணியும் கிடைத்தது.
தருமபுரி மாவட்டம், ராயக் கோட்டை கிராமத்தில், வேளாண் அலுவலர் பணி. அப்போது ராயக் கோட்டை மிகவும் பின்தங்கிய கிராமம். ஆங்கில நாளிதழ் வேண்டுமானால், ஒரு வாரத்துக்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் என் ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வுக்கான தயாரிப்புகள் ஆரம்பித்தன.
சின்ன குடியிருப்பு அது. பகலிலும் விளக்கு போட்டால்தான் வெளிச்சம் கிடைக்கும். மிகக் குறுகலான ஒரு அறை. பக்கத்து அறையில் எப்போதும் சீட்டாட்டம், கீழே டீக்கடையில் ஊருக்கே கேட்டும்படி சினிமாப் பாடல்கள் ஒலிபரப்பு. சீட்டுக் கச்சேரிக்கும் பாட்டுக் கச்சேரிக்கும் இடையில்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான தீவிரத்தில் இருந்தேன்.
காலையில் அவசரமாக உணவு அருந்திவிட்டு, ஒரு பொட்டலத்தில் நான்கு இட்லிகளையும் புளித்த சட்டினியையும் மதிய உணவுக்காக கட்டிக்கொண்டு, டவுன் பஸ் பிடித்து இறங்கி, அந்தந்த கிராமத்திலிருந்து வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு வேளாண் அலுவலர் பணியைத் தொடர்ந்துகொண்டிருந்த காலம் அது. பேருந்திலும்கூடப் படித்துக் கொண்டே செல்வேன். அந்த நாட்களும் நிச்சயம் அழகானவைதான்! காரணம்… சைக்கிள் பயணம், காய்ந்து போன இட்லி, புளித்த சட்டினி இவைதானே என் வைராக்கியத்தை இன்னும் அதிகப்படுத்தின!
வேளாண் அலுவலராக அப்போது தொட்ட திம்மனஹள்ளி, உத்தனஹள்ளி போன்ற கிராமங்களுக்கு சைக்கிளில் பயணித்தபோது, இன்னும் அதிகமாக மக்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். அது, ‘நிச்சயம் நான் வெற்றி பெற வேண்டும்’ என்பதைத் தீவிரமாக்கியது.
ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தமிழ் இலக்கியத்தை ஒரு விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தேன். அதில் ஒரு குழப்பம். வேளாண்மை இன்னொரு விருப்பப் பாடம். ‘இரண்டையும் தமிழில் எழுத வேண்டும்’ என்று இந்தத் தேர்வை ஏற்கெனவே எழுதித் தோற்றுப்போன ஒரு நண்பர் குழப்பிவிட்டார். வேளாண்மையை என்னால் தமிழில் எழுத முடியாது. ஏனென்றால், நான் படித்தது ஆங்கிலத்தில்! இந்தக் கேள்விக்கு விடை காண சென்னைக்கு ரயில் ஏறினேன். தலைமைச் செயலகத்தில் இருந்த என் உறவினர் உலகநாதன் மூலமாக விடை கிடைத்தது. பொது அறிவையும், வேளாண்மையையும் ஆங்கிலத்தில் எழுதலாம் என்று தெரிந்தபோதுதான் இழந்த சக்தி திரும்பியது.இப்படித் தமிழகம் முழுவதும் தடுமாறும் இளைஞர்கள் தடம் மாறக் கூடாது என்பதற்காகத்தான் இந்தத் தேர்வை அணுகுவது பற்றி, ‘ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்’, ‘ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்’ என்று நூல்களை எழுதினேன்” என்று இறையன்பு ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார்.
இளைஞர்கள் மீது பரிவு கொண்ட இருவர் முக்கிய முடிவுகள் எடுக்கும் நாற்காலிகளில் அமர்ந்திருப்பது தமிழகத்திற்கு வாய்த்த வரம்.
*
அதிகாரிகளில் எழுத்தாளர்கள் பலர் இருப்பதைப் போல அரசியல்வாதிகளிலும் பல எழுத்தாளர்கள் உண்டு. நாடறிந்த நல்ல உதாரணங்கள், அண்ணா, கலைஞர். ராஜாஜி, வீரப்ப மொய்லி, சசி தரூர் ஆகியோர் சாகித்ய அகதெமி பரிசு பெற்றவர்கள். வாஜ்பாய் கவிஞர். எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறவர் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ். இது அவரது நூற்றாண்டு.
அவர் பிரதமாக இருந்த போது எனக்கு அவரோடு சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு கிட்டியது. விமானத்தில் என் இருக்கையில் அமர்ந்து நான் காபிரியல் கார்சியா மார்க்கஸ் எழுதிய லவ் இன் தி டைம் ஆஃப் காலரா என்ற நாவலை வாசித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பக்கமாக வந்த நரசிம்ம ராவ் கையிலிருந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தார். “நன்றாக இருக்கிறதா” என்றார். “ம். காதல்கதை. சுவாரஸ்யமாகப் போகிறது” என்றேன். ஓராண்டிற்குப் பிறகு வேறு ஒரு கூட்டத்தில் என்னைப் பார்த்தவர், என்னருகில் வந்து “படித்து விட்டேன். சுவாரஸ்யமான நூல்தான்” என்றார். என்னையும் நூலையும் ஞாபகத்தில் வைத்திருக்கிறாரே என்று எனக்கு ஆச்சரியம்.
நரசிம்மராவ் இளம் வயதிலேயே பத்திரிகை நடத்தியவர். பல மொழிகள் அறிந்தவர். ஆங்கிலத்திலிருந்து தெலுங்கிற்கும், தெலுங்கிலிருந்து ஹிந்திக்கும், மராத்தியிலிருந்து தெலுங்கிற்கும் புகழ் பெற்ற நூல்களை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.
அவர் எழுதியிருக்கும் தி இன்சைடர் என்ற நாவலை அண்மையில் படித்தேன்.லட்சியங்களால் உந்தப்பட்டு அரசியலில் இறங்கும் ஆனந்த் என்ற இளைஞன் இரு பெரும் தலைவர்களுக்கிடையே கட்சிக்குள் நடக்கும் மோதலில் சிக்குண்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் முன்னேறி மாநிலத்தின் முதல்வராகிறான். பின் தில்லி அரசியலுக்கு அழைக்கப்படுகிறான். அங்கு பிரதமராக இருப்பவர் படுகொலைக்குள்ளான போது அரசியலில் இருந்து ஓய்வு பெற எண்ணுகிறான். ஆனால் அப்போது பிரதமர் பதவி அவனைத் தேடி வருகிறது. இதற்கிடையில் ஒரு காதல், அதில் முறிவு.
நரசிம்மராவின் வாழ்க்கையின் சாயல் கொண்ட நாவல். அதில் உள்ள பாத்திரங்கள் எல்லாம் நம்மிடையே உலவிய அரசியல்வாதிகள் நேரு, இந்திரா எல்லோரும் அவரவர் பெயரிலேயே வருகிறார்கள். ஆனால்.. ஆனால் வேறு பெயர்களில் உலவியவர்கள். யார் எவர் எனத் தெரிந்தால் உங்களுக்கு நாவல் இன்னும் சுவாரசியமாக இருக்கும்
*
இறுதியாக ஒரு பொன்மொழி. இறையன்பு சொன்னது:
அடுத்தவர்கள் நலனுக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரார்த்தனைதான்! ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்பு உணர்வுடன் அணுகினால் வாழ்க்கையே வழிபாடுதான்!