தரையில் சிந்திய தண்ணீர் எட்டுத் திக்கிலும் தவழ்ந்து பரவுவதைப் போல தகவல் ஊடகம் என்பது இன்றைக்குப் பலமுகங்கள் கொண்டு விரிந்து கிடக்கிறது. பாரம்பரியமான அச்சு ஊடகத்திலிருந்து பத்து ஆண்டுகளுக்கு முன் (2004) அறிமுகமான சமூக ஊடகங்களான முகநூல் டிவிட்டர் வரை பலவாறாக பரிணமித்துள்ளது தகவல் ஊடகம் 140 எழுத்துருக்களுக்குள் எழுதப்பட வேண்டிய குறுஞ்செய்தியிலிருந்து நூற்றுக் கணக்கான வார்த்தைகளில் எழுதப்படும் தலையங்கங்கள் வரை அவை அளிக்கும் தகவல்கள் பலகோடி நூறாயிரம்
தமிழ் என்ற சொல் அதன் இலக்கிய இலக்கணங்களை மட்டுமே சுட்டுவதாக எண்ணிக் கொள்வது ஒரு பார்வை. ஆனால் அது ஒரு கலாசாரத்தையும் வரலாற்றையும் உள்ளடக்கியது என்பதைப் புரிந்து கொள்கிறவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் அதன் வேறு பல பரிமாணங்களையும் அறிந்தவர்கள்.
தகவல் ஊடகங்களின் வழி நடந்த தமிழ் விட்டுச் சென்ற தடங்கள் என்ன என்பதைத் தொட்டுக் காட்டுவதே என் முயற்சி
தமிழில் பத்திரிகைகள் தோன்றியது ஒரு தற்செயல். காது கேளா மனைவிக்குக் கருவி செய்யப் புறப்பட்ட கிரஹாம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்ததைப் போல, சமயப் பிரசாரத்திற்காக தோன்றிய பத்திரிகைகள், சங்க இலக்கியம் பேசி, பின் வெற்று அரட்டையில் வீணாய்க் காலம் போக்கி, திடீரெனெ விழித்தெழுந்து விடுதலைக்குப் பிரசாரம் செய்து, இடையிடையே இலக்கியம் பகிர்ந்து, இன்றைக்கு துறைக்கொன்றாய் கிளை பரப்பி நிற்கின்றன.
ஆனால் அதன் ஆரம்ப நாட்கள் தட்டுத் தடுமாறி தவறி விழுந்து பின் எழுந்து நிற்பதாகவே அமைந்தன.” ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களில் நடக்கும் பத்திரிகைகளுடன் தமிழ்நாட்டுப் பத்திரிகையை ஒப்பிட்டுப் பார்த்து, இவற்றின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு, ‘ஆஹா’ இப்படிப் பட்ட தமிழ் நாடுஎங்கே பிழைக்கப்போகிறது!’ என்று எண்ணி பாழும் நெஞ்சு “உடைந்து போகவேண்டாம். ஏனென்றால், வர்த்தமானப் பத்திரிகை நாமாக உண்டாக்கிய கருவியன்று. பிறரிடமிருந்து கற்றுக்கொண்டதந்திரம்; சென்ற முப்பது வருஷங்களாகத்தான்தெரிந்து கொண்டிருக்கிறோம். இன்னும், சரியாக முதிர்ச்சி அடையவில்லை” என்று எழுதுகிறார் பாரதி
தற்செயலாகக் கிடைத்த கருவி என்ற போதிலும், தட்டுத் தடுமாறி எழுந்து நின்றோம் என்ற போதிலும், அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் ஊடகங்கள் அளித்த கொடைகள் மூன்று வகை
- மொழிக்குச் செய்த பங்களிப்பு
- தமிழரின் அறிவை விரிவாக்க அவை மேற்கொண்ட/மேற்கொள்ளும் முயற்சி
- வாசிப்புப் பழக்கத்திற்குத் தந்த ஊக்கம்
தமிழ்ப் பத்திரிகைகள் மொழிக்குச் செய்த பங்களிப்புக்களில் முக்கியமானது, முதன்மையானது, உரைநடையை நிலை பெறச் செய்தததும் அதை மக்கள் வழக்கிற்கு அருகில் கொண்டு நிறுத்தியதுமாகும், தமிழில் பத்திரிகைகள் தோன்றும் முன்னரே உரைநடை இருந்தது. ‘பாட்டிடை வைத்த குறிப்பினானும்’ எனத் தொடங்கும் தொல்காப்பியச் சூத்திரம் எங்கெல்லாம் உரை நடை பயிலும் எனப் பட்டியலிடுகிறது. நச்சினார்கினியர், பரிமேலகழகர், இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், தெய்வச் சிலையார் எனப் பல உரையாசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். கல்வெட்டுக்கள் உரைநடை கொண்டு செதுக்கப்பட்டுள்ளன. சற்றே முறுகிய, சாதாரண மக்களின் பேச்சு வழக்கிற்கு அப்பாற்பட்ட உரைநடைகள் அவை. இன்னொரு வகை உரை நடை இருந்தது. அது ஆனந்தரங்கம் பிள்ளையின் ‘சேதிக் குறிப்பு’களில் காணப்படும் உரை நடை. தமிழ்ப் பத்திரிகைகள் தோன்றுவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே 1781ல் ஆனந்தரங்கம் பிள்ளை மறைந்துவிட்டார்.தமிழின் முதல் இதழ் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடும் தமிழ் மேகசீன் தோன்றியது 1831ல்.அதற்கு 25 ஆண்டுகளுக்குப் பின்தான் (1856) தினவர்த்தமானி வருகிறது அதற்கு 27 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் 1883ல் சுதேசமித்திரன் வருகிறது. தமிழில் வெகுஜன (’Main Stream’) பத்திரிகை தோன்றுவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் உரைநடை எழுதப்பட்டுத்தான் வந்தது.
ஆனால் ஆனந்தரங்கர் போல மக்கள் மொழியிலே எழுதப்படுவதற்குப் பண்டிதர்களின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. 1879ல், சுதேசமித்திரன் தோன்றுவதற்கு நான்காண்டுகள் முன்பு, வேதநாயகம் பிள்ளை உரைநடையில் எழுதப்பட்ட முதல் நாவலான பிரதப முதலியார் சரித்திரத்தை எழுதினார். அதற்கு முன்னுரை எழுதக் கேட்டுப் பலரை அணுகினார். ஆனால் அது உரைநடையில் எழுதப்பட்டது என்பதால் அதற்கு யாரும் அணிந்துரையோ, முன்னுரையோ எழுதித்தர முன்வரவில்லை. ஆனால் அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய நீதிநூலுக்கு வள்ளலார் உட்பட 56பேர் சாற்றுக் கவி எழுதினார்கள். ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட உரைநடை நூலுக்கு யாரும் முன்னுரை எழுத முன்வரவில்லை. வேதநாயகம் பிள்ளையே ஆங்கிலத்தில் ஒரு முன்னுரை எழுதினார்.
தமிழில் பத்திரிகைகள் தோன்றியிராவிட்டால், உரைநடைக்கு இன்று இருக்கும் மதிப்பு ஏற்பட்டிராது ஆனந்தரங்கரின் பிள்ளைத் தமிழ் போல, எங்கே முடியும் எனத் தெரியாத நெடிய வாக்கியங்களும், முற்றுப்புள்ளி, கால் புள்ளி, ஆச்சரியக்குறி ஏதுமற்ற பெருவெள்ளமாக அது இருந்திருக்கும்.
ஆனந்தரங்கருடைய நடை ஒரு பிரவாகம் என்றால் ஆரம்பகாலத் தமிழ் இதழ்களின் நடை ஆங்கில வெள்ளம். 1916ல் சுப்ரமணிய சிவா சினம் பொங்க சுதேசமித்திரனுக்கு ஒரு கடிதம் எழுதினார். “ ஹிஸ் எகசெலன்சி கவர்னர், யுவர் மெஜஸ்டீஸ் ஒபிடியண்ட் சர்வர்ண்ட் என்ற வார்த்தையெல்லாம் சுதேச மித்திரனில் பிரசுரிக்கப்படுகிறது.சுதேசமித்திரன் அறிவைப் பரப்புகிறதா, அல்லது ஆங்கில பாஷையைப் பரப்புகிறதா?” என்று பொங்கியிருந்தார்
பத்திரிகைத் தமிழைப் பண்படுத்திய பெருமை ’தேசபக்தர்’ திருவிகவைச் சாரும் இன்னும் சொல்லப் போனால் தலைமைத் தமிழாசிரியான அவரது நடையை தமிழ் நாளிதழ்கள் மாற்றின
“இலக்கணத்தை விடாத பண்டிதன் என்று 1917ல் தேசபக்தன் பத்திரிகைகளைப் படித்தவர்கள் குறிப்பிட்டனர். என்னுடைய வாழ்க்கையில் மூன்று வித நடைகள் மருவின. ஒன்று இளமையில் உள்ளது. இன்னொன்று சங்க இலக்கியச் சார்பு பெற்றபோது பொருந்தியது. மற்றொன்று பத்திரிகை உலகை அடைந்த நாளில் அமைந்தது” என்று திருவிகவே எழுதுகிறார். அந்தப் பத்திரிகை நடையே அவரது இயற்கையான நடையாக நிலைத்தது எனவும் அவர் சொல்கிறார்
“தேசபக்தனுக்கென்று ஒரு தனி நடை கொண்டேன். சிறு சிறு வாக்கியங்கள் அமைக்கலானேன்.எளிமையில் கருத்துக்களை விளக்கும் முறையைப் பற்றினேன், அந்த நடையை நாடோறும் எழுதிப் பண்பட்டமையால் அதுவே எனக்குரிய இயற்கையாயிற்று” என்றும் எழுதுகிறார் அவர்
பத்திரிகைத் தமிழைப் பாமரத் தமிழுக்குப் பக்கத்தில் கொண்டு சென்ற இன்னொருவர் டாக்டர்.பா.வரதராஜுலு நாயுடு. “ பண்டிதர்கள் கூடினால் விளங்காத தமிழ். இங்கிலீஷ் படித்த தமிழர்கள் கூடினால் விளங்காத இங்கிலீஷ். இந்தக் கட்டுப்பாடான குறும்புத் தனத்தைத் தவிடு பொடியாக்கிய ஏகபோக பாக்கியமும் பாத்தியதையும் வரதராஜுலு நாயுடு அவர்களுக்கே உரித்தானதாகும்” என்கிறார் வ.ரா
பத்திரிகைகள் தமிழுக்கு அளித்த இன்னொரு கொடை கலைச்சொற்கள். இன்றைக்கு மிகச் சாதாரணமாக வழங்கப்படும் காசோலை, நீதியரசர் போன்ற சொற்கள் நமக்கு இலங்கை இதழ்களிலிருந்து கிடைத்தவை. நாடாளுமன்றம், பேராளர் போன்ற சொற்கள் சிங்கப்பூரிலிருந்து கிடைத்தவை .
நேர நெருக்கடியின் வெப்பத்திற்கு நடுவே ஒளி பொருந்திய கலைச் சொற்களை உருவாக்கிக் கொடுத்தன தமிழ் நாளிதழ்கள் அந்தச் சூழ்நிலையைப் பற்றி தினமணியின் முன்னாள் ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம் விவரிக்கிறார்.
“பிரான்சில் ஜெர்மானியர் பருந்துப் பாய்ச்சல் விமானங்களை உபயோகித்தார்கள் என்ற செய்தியைத் தமிழ்ப் பத்திரிகைகளில் நீங்கள் படித்திருப்பீர்கள். படிப்பவர்களுக்கு இந்த வாக்கியத்தில் புதிதாக ஏதும் இருப்பதாகத் தெரியாது. ஆனால் பத்திரிகைக்காரர்களுக்குத்தான் அதில் உள்ள கஷ்டம் தெரியும்.யுத்தம் நடக்கிற வேகத்தில் எத்தனையோ புதுப் புது வார்த்தைகளும் சொற்றொடர்களும் சிருஷ்டியாகின்றன. இவையெல்லாம் தாய் பாஷை பத்திரிகைக்காரர்களின் தலையில் வந்து விடுகின்றன. தந்திகள் எல்லாம் ஆங்கிலத்தில் வருவதால் ஆங்கிலப் பத்திரிகை நடத்துபவர்களுக்கு மொழிபெயர்க்க வேண்டிய சிரமம் ஏதும் கிடையாது. வந்த வார்த்தையை அப்படியே போட்டுவிடலாம். தமிழ்ப் பத்திரிகைகள் அதை மொழி பெயர்த்தாக வேண்டும். சாவகாசமாக யோசித்து ஒரு தமிழ் வார்த்தையைக் கண்டுபிடிக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அன்று வந்த செய்திகள் அன்று மாலைப்பத்திரிகையில் போயாக வேண்டும். அதற்குள்ளாக வார்த்தையைக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவு அவசரம். எனவே புதிதாக ஒரு வார்த்தை என்று வந்துவிட்டால் பத்திரிகை ஆபீசில் ஏற்படும் பரபரப்பைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒவ்வொருவரும் மூளையை ஓட்டுவார்கள். ஒவ்வொருவரும் ஒரு வார்த்தையச் சொல்லுவார்கள். எல்லாவற்றையும் பார்த்து அவற்றில் எது பொருத்தமானது என்று தோன்றுகிறதோ, அது அன்றையப் பத்திரிகையில் வரும். Dove Bombers என்ற வார்த்தைக்குப் பருந்து பாய்ச்சல் விமானங்கள் என்ற தமிழ்ப் பெயரைக் கேட்ட பின்பு அது பொருத்தமாயிருக்கிறது என அநேகர் ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அந்த வார்த்தை பத்திரிகை நிலையங்களில் எவ்வளவு வேலையைக் கொடுத்தது என்பது வெளியிலுள்ளவர்களுக்குத் தெரியாது”
வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்காமல், அர்தத்தை உள்வாங்கிக் கொண்டு அதை மொழி மாற்றித் தர தமிழ்ப் பத்திரிகைகள் மெனக்கிட்டன என்பதற்கு இது ஓர் உதாரணம் சொக்கலிங்கம் கொடுத்துள்ள எடுத்துக்காட்டில், புறா பருந்தாகிவிட்டது. அதாவது Dove Bombers பருந்துப் பாய்ச்சல் விமானங்களாகிவிட்டன. விசுவாசமான மொழி பெயர்ப்பில்லை ஆனால் சுவாரஸ்யமான மொழி பெயர்ப்பு.
தமிழ்ப் பத்திரிகைகள் இவ்வளவு மெனக்கிட்டதன் காரணம் வாசகன் வாசகர்களது அறிவின் விளிம்புகளை விரிவாக்குவதற்குப் பாடுபட்ட பத்திரிகைகளும் பத்திரிகை ஆசிரியர்களும் பலர். . மரணமடைகிற இரவில் கூட ‘அமானுல்ல்லாகான் பற்றி சுதேசமித்திரனுக்கு வியாசம் எழுத வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தவர் பாரதியார் ஜி.சுப்ரமணிய அய்யர், பாரதியார், சாமிநாத சர்மா, ஸ்டாலின் ஸ்ரீநிவாசன், இரட்டமலை சீனிவாசன், அயோத்திதாசர், பெ.ந. அப்புசாமி, பெரியார், ஏ,என் சிவராமன், ஏ.ஜி.வெங்கடாச்சாரி,கல்கி, புதுமைப்பித்தன் என நீண்டு செல்லும் பட்டியலில் நம் சமகாலத்தில் வாழும் பலரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் சாதரணத் தமிழன், அரிஸ்டாடிலிருந்து ஒசாமா பின்லேடன் வரை தகவல் ஊடகங்கள் வழியேதான் அறிந்தான் அரசியல், நீதிமன்ற நடவடிக்கைகள். உலக நடப்புக்கள், அறிவியல், மருத்துவம், பொருளாதாரம். கல்வி, வேளாண்மை, வர்த்தகம், கணினி தொல்லியல், திரைப்படம், விண்வெளி, விளையாட்டுக்கள் என எல்லாம் தமிழருக்கு ஊடகங்கள் வழியேதான் அறிமுகமாயின. காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்திலிருந்து கால்பந்துக் கோப்பை வரை பல சொற்கள் தமிழ் ஊடகங்கள் தந்ததுதான்
சுதேசமித்திரனுக்கும் முன்னர் வெளியான உதயதாரகை “உதயதாரகைப் பத்திரத்தில் கற்கை, சரித்திரம், பொதுவான கல்வி, பயிர்ச்செய்கை, அரசாட்சி மாற்றம் முதலானவை பற்றியும் பிரதான புதினச் செய்திகள் பற்றியும் அச்சடிக்கப்படும்” என்று தனது முதல் இதழில் பிரகடனஞ் செய்தது.
இலக்கியத்திற்கு ஊடகங்கள் செய்துள்ள பங்களிப்பு எல்லையற்றது. தமிழின் இலக்கிய முயற்சிகள் பலவும் தமிழ் இதழில்தான் துவங்கின. ஆறில் ஒரு பங்கிற்கும் முன்னதாக பாரதியார் சக்ரவர்த்தினியில் துளசிபாயீ என்னும் ரஜபுத்திர கன்னிகையின் கதையை எழுதினார். தமிழின் ஆரம்பகால நாவலான. கமலாம்பாள் சரித்திரம் விவேக சிந்தாமணியில் வெளியானது. சிங்கப்பூரர்கள் தங்களது முதல் சிறுகதை எனக் கருதும் மக்தூம் சாயிபுவின் விநோத சம்பாஷணை சிங்கை நேசனில் வெளியிடப்பட்டது. மலேசியாவின் முதல் நாவல் இரத்தின மாலை அல்லது காணமல் போன இராஜகுமாரி பினாங்கு ஞானாசாரியனில் வெளியாயிற்று. தமிழின் பெரும் இலக்கிய ஆளுமைகளான பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன் கல்கி போன்றோர் பத்திரிகைப் பணியாற்றியவர்களே.
ஆரம்ப நாள்களில் மட்டுமல்ல, இன்றும் கூடப் புனைகதைகள் தமிழ் கலாச்சாரத்தின் ஓர் அடையாளமாக உருப்பெற்றதில் தமிழ் ஊடகங்களுக்குப் பெரும் பங்குண்டு. பிற மொழிகளில் குறிப்பாக ஆங்கில செய்தி இதழ்களில் (News Magazine) புனைகதைகளுக்கு இடம் அளிக்கப்படுவதில்லை. நான் இந்தியா டுடே இதழின் தமிழ்ப் பதிப்பிற்குப் பொறுப்பேற்றபோது அதில் தமிழ் புனைகதைகளுக்கு இடமளிக்க வேண்டும் எனக் கோரினேன், செய்தி இதழில் புனைகதைகளா? என ஆச்சரியம் பொதிந்த கேள்விதான் முதலில் எனக்குக் கிடைத்த எதிர்வினை. உலகில் புனைகதை வெளியாகும் செய்தி இதழ் ஒன்றை உங்களால் காட்டமுடியுமா என்றும் கேள்விகள் வைக்கப்பட்டன. புனைகதைகள் தமிழ்க் கலாசாரத்தில் பொதிந்துள்ள அம்சம் (idiom) என்ற நெடும் விளக்கத்திற்குப் பின் இந்தியா டுடே தமிழ் இதழில் மட்டும் புனைகதைகளுக்கு அனுமதி கிடைத்த்து. பின் மலையாளம் தெலுங்கு பதிப்புகளும் தமிழைப் பின்பற்றின.
. பத்திரிகைகளுக்கும் படைப்பிலக்கியத்திற்கும் இடையே உள்ள உறவு கணவன் மனைவி உறவு போன்றது. ஒன்றை ஒன்று சார்ந்திராதது.ஆனால் ஒன்றை ஒன்று போஷிக்ககூடியது. இரண்டும் தனித் தனி வரலாறுகள் கொண்டவை ஆனால் ஒரு புள்ளியில் சந்தித்து இயங்கும் தன்மைகள் கொண்டவை இரண்டும் காலத்தின் பதிவுகள். ஒன்று அகவயமானது.மற்றொன்று புறஉலகு சார்ந்தது
இன்று நவீன இலக்கிய ஏடுகள் என்று குறிக்கப்படும் இதழ்களும் புனைவிலக்கியமல்லாத பத்திகள், செய்திக் கட்டுரைகள், செய்தி விமர்சனக் க்ட்டுரைகளைத் தாராளமாக வெளியிடும் தகவல் ஊடகங்களாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளன. இத்தகைய மாற்றம் ஏற்பட வெகுஜன செய்தி இதழகள் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ பங்களித்துள்ளன.
ஊடகங்களை ,மக்களுக்கு அருகே எடுத்துச் செல்வது வேறெதையும் விட முக்கியமானது என்று கருதியவர்களின் முயற்சியால் ஒரு வாசக சாம்ராஜ்யமே உருவாயிற்று. இந்தத் திசையில் முன்னேர் நடத்தியவர்களில் முக்கியமானவர் தினத்தந்தியை நிறுவிய சி,.பா.ஆதித்தனார் அவர்கள். “சாதாரணமாகத் தங்களுக்குத் தெரிந்ததைப் பிறருக்குச் சொல்வதற்காகப் பத்திரிகைகளை நடத்துவார்கள்.சிலர் என்ன நடந்தது என்று நடந்ததை எடுத்துச் சொல்வதற்கு இதழ்கள் நடத்துவார்கள், சிலர் மக்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ, எதை விரும்புகிறார்களோ அதற்காகப் பத்திரிகை நட்த்துவார்கள். நான் மூன்றாவது சொன்ன பத்திரிகையை நடத்த முன்வந்திருக்கிறேன்” என்ரு ஆதித்தனார் ஓரிட்த்தில் எழுதுகிறார்.
அவர் மொழியைத்தான் மக்கள் மொழியாக வைத்துக் கொண்டாரே தவிர, ஆசிரியர் பிரிவின் நிர்வாகத்தை ஆங்கிலப் பத்திரிகைகளைப் போலத்தான் அமைத்துக் கொண்டார். ஆங்கிலப் பத்திரிகைகளைப் போல Style Book ஒன்றை உருவாக்கினார். எளிய மக்கள் வாயில் எளிதில் நுழையாத கிரந்தச் சொற்களையும் இந்திச் சொற்களையும் தவிர்த்த அதே சமயம் பண்டிதத் தமிழாகவும் ஆகி விடாத ஒரு நடையைப் பின்பற்றினார். உதாரணமாக பந்த் என்பதை கடையடைப்பு என்றும், தர்ணா என்பதை மறியல் என்றும், ரயில் ரக்கோ என்பதை ரயில் நிறுத்தப் போராட்டம் என்றும் எழுதினார்.
தினத்தந்தியின் இந்த மக்கள் தமிழும், நிர்வாக முறையும் அதனை அதிக அளவில் படிக்கும் இதழாக ஆக்கின. ஒரு நாளைக்கு ஒரு கோடிப் பிரதிகள் விற்கும் பத்திரிகையாக தினத்தந்தி ஆயிற்று. ஆறேழு கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட ஒரு மாநிலத்தில் தினம் ஒரு கோடிப் பிரதிகள் என்பது சாதாரண விஷயமல்ல. ஆயிரம் பிரதிகளை எட்ட சுதேசமித்திரனுக்கு 10 ஆண்டுகள் பிடித்தன. பரவலான விற்பனை என்பது பத்திரிகைகளுக்கு ஒரு உறுதித்தன்மையையும் –Financial Viabilty-தந்தது. புறப்பாடும் நிப்பாடுமான வாழக்கை இன்று இலக்கியச் சிற்றேடுகளைத் தவிர பெரும்பாலான ஏடுகளுக்கு இல்லை
மக்களோடு நெருங்கிய ஊடகங்கள் மலிவான நடையில் பரபரப்பாக செய்திகளைத் தருகின்றன என்ற குற்றச்சாட்டுகளுக்கிடையில்,மக்களுக்கு நெருக்கமாகவும் அதே நேரம் ஒரு கண்ணியமான கனவான் தோற்றத்துடனும் வானொலி விளங்கியது. அச்சு ஊடகங்களுக்கு இல்லாத ஒரு நம்பகத் தன்மை அரசு ஊடகமான அதற்கு இருந்தது. தனியார் தொலைக்காட்சிகள் தலையெடுத்து அவை செய்திகளை நிகழும் போதே தரமுற்பட்ட அசுர வேகத்தில் வானொலி இசைபாடும் கருவியாக மாறிப்போனது.
வதந்தியானாலும் பரவாயில்லை அதை விரைந்து தா என்ற மக்களின் செய்தி தாகத்தை தணிப்பது சமூக ஊடகங்கள் என அழைக்கப்படும் தனிநபர் ஊடகங்களான முகநூலும் டிவிட்டரும். அவை அளித்த ஆக்கபூர்வமான பங்களிப்புகள் என்ன என்பதை அளவிட இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.
இன்னும் சில காலத்திற்குப் பின் அவற்றில் ஆதிக்கம் செலுத்தப்போவது தமிழா இந்தியா என்ற கேள்வி தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் பேச வேண்டாம் என்ற முணுமுணுப்புக் காதில் விழுகிறது. ஆனால் அரசியல் இல்லாமல் தகவல் ஊடகங்கள் ஏது?
தினமணி தமிழ் இலக்கியத் திருவிழா- 21.6.2014- சென்னை