இம் மாதக் (ஜூலை 2022) கலைமகளில் மகாகவியின் ‘காற்று வெளியிடை’ப் பாடல் பிறந்த சூழல் பற்றி கவிஞர் இரா. உமா பாரதி எழுதியிருந்ததைப் படித்தேன். அது எனக்கு முற்றிலும் புதிய செய்தி. திருமதி செல்லம்மாள் பாரதி எழுதிய பாரதியார் சரித்திரம் என்ற நூலிலோ, பாரதியாரின் மகள் சகுந்தலா பாரதி எழுதிய பாரதி-என் தந்தை என்ற நூலிலோ அந்தச் சம்பவம் பற்றி ஏதும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
பாரதியார் சரித்திரம் என்று பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கும் திருமதி செல்லம்மாள் கடைய வாழ்க்கை பற்றி, ‘கடைய வாஸம்’, ‘புது நண்பர்கள்’, ‘விதி அவ்வளவுதான்’, என்று அதில் மூன்று அத்தியாயங்கள் எழுதியுள்ளார். அவற்றில் ஜெயபேரிகை கொட்டடா, நந்தலாலா பாடல்களைப் பாடியதாகவும் ஜகத்சித்திரத்தில் அந்த ஊரைப் பற்றிய வர்ணனை இடம் பெற்றதாகவும் குறிப்பிடும் செல்லம்மா இந்தப் பாடலைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை
கடையத்தில் பாரதியோடு வசித்த அவரது மகள் சகுந்தலா, “ என் தந்தை சில காதல் பாட்டுக்கள் தாமாகவே எழுதினார். செல்லம்மா பாட்டுக்கள் என்று அதில் குறிப்பிட்டிருக்கும். …..அந்தப் பாட்டுக்களைப் பின்னாளில் அச்சியற்றும் போது, அப்பாதுரை மாமா விருப்பப்படி செல்லம்மா என்று குறிப்பிடாமல், கண்ணனை அவர் பல முறை பாடியிருக்கும் முறைப்படி கண்ணம்மா என்று குறிக்கப்பட்டிருக்கிறது” என்று எழுதுகிறார். அவரும் இந்தப் பாட்டையோ சம்பவத்தையோ குறிப்பிட்டு எழுதவில்லை.
செல்லம்மா பெயரையே குறிப்பிட்டு ஸ்ரீ செல்லம்மா பாட்டு என்று ஒன்று எழுதினார். அந்தப் பாடல் அவர் மறைவுக்குப் பிறகு, திருமதி செல்லம்மாவும் அவரது சகோதரர் திரு அப்பாதுரையும் சேர்ந்து தொடங்கிய பாரதி ஆசிரமப் பதிப்பித்த சுதேசகீதங்கள் இரண்டாம் பாகத்தில் செல்லம்மா என்பது கண்ணம்மா என்று மாற்றப்பட்ட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதே போலக் காற்று வெளியிடைப் பாடலிலும் மாற்றப்பட்ட்டுள்ளது. இவ்விரு பாடல்களும் ஒரே தலைப்பில் (கண்ணம்மா) இரு பாடல்களாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன. நின்னையே ரதி என்ற பாடலும் மாற்றப்பட்டு கண்ணம்மாவின் அங்க வர்ணனை என்று தலைப்பிடப்பட்டு வெளியாகியிருக்கிறது
பாரதி வேறு சில கண்ணம்மா பாடல்களும் எழுதியுள்ளார் (சுட்டும் விழிச் சுடர்தான், மாலைப் பொழுதிலொரு, தில்லித் துருக்கர், மன்னர் குலத்தினிடை, தீர்த்தக் கரையினிலே, பாயுமொளி நீ எனக்கு,) இவை எதுவும் பாரதி ஆசிரமப் பதிப்பில் இல்லை. இவை பாரதியார் இருந்த போது (1917) வெளிவந்த நூலிலேயே இடம் பெற்றிருக்கின்றன.ஆனால் அவை பாரதி ஆசிரம நூலில் இல்லை. மாலைப் பொழுதில் மேடைமிசையே அநேகமாக அவர் புதுச்சேரியிலிருந்த போது எழுதியிருக்கலாம். மாடியை மேடை என்பது நெல்லை வழக்கு. அவர் வசித்த வீடுகளில் மாடி கொண்ட வீடாகப் புதுச்சேரியில்தான் அமைந்தது. திருவல்லிக்கேணி வீட்டில் மாடி இருந்திருக்கலாம். அதைப் பயன்படுத்திக் கொள்ள அவருக்கு அனுமதி இருந்ததா தெரியவில்லை. கடையத்தில் கடல் இல்லை.
காற்று வெளியிடைப் பாடல் கடையத்தில் எழுதப்பட்டிருக்கலாம். கடையம் வீட்டைப் பற்றி எழுதும் செல்லம்மா,” நாலுபுறமும் விசாலமான வெளியுண்டு” என்று குறிப்பிடுகிறார். ஆனால் கட்டுரையாளர் குறிப்ப்பிடும் சம்பவத்தை உறுதி செய்து கொள்ள இயலவில்லை. அது குறித்து ஏதேனும் நூலில் குறிப்பிடப்பட்டிருந்தால் அதனை அறியத் தர வேண்டுகிறேன்
கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற பாடல்கள் பற்றி செல்லம்மாவோ சகுந்தலாவோ, அல்லது இருவருமோ தங்கள் நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இருவரும் குறிப்பிட்டிருக்கும் பாடல் நந்தலாலா. அது எழுந்த சூழலைப் பற்றிய செல்லம்மாவின் பதிவு: “ உற்சவ காலங்களில் தினம் காலையில் ஒரு பாகவதரின் தலைமையில் பஜனை கோஷ்டி உஞ்சவிருத்தி செய்வது வழக்கம். வழக்கமாகப் பாடும் பஜனைப் பாடல்கள் அனேகமாகத் தெலுங்கும் சமஸ்கிருதமும்தான். பாரதியாரும் அவர்களுடன் சுற்றுவதுண்டு. தினமும் பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் பாடகருக்கு ஒரு மாதமாகப் பாடித் தொண்டை கட்டிவிட்டது. பாடிய பாட்டுக்களையே தினந்தோறும் பாடும் விரஸம் ஏற்பட்டுவிட்டது. உடனே பாரதி நான் சொல்லிக் கொடுக்கிறேன்., புதுப்பாட்டு என்று, ‘கோவிந்த கிருஷ்ண பாஹி -யதுவீரா ராஜ கோபாலகிருஷ்ண பாஹி யதுவீரா என்ற பஜனைப் பாட்டு மெட்டில் ‘பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா” என்ற பாட்டை அப்படியே ஆசு கவியாகச் சொல்லவும் கோஷ்டியினர் சந்தோஷத்தோடு (தமிழ்ப் பாட்டாகையால்) அர்த்தம் தெரிந்து உரக்கப்பாடலாயினர். அவர்கள் இரண்டு பர்லாங் துரத்தில் வரும் போதே பாட்டின் கோஷம் கேட்கவாரம்பித்தது. “இதென்ன இன்று புது தினுசாயிருக்கிறதே பஜனை” என்று பார்த்ததும் பின்புதான் காரணம் தெரிந்தது” என்கிறார் செல்லம்மா.
பாரதியின் வாழ்நாளில் இந்தப் பாடல் எங்கும் பிரசுரமாகவில்லை. அவர் இந்தப் பாடலை சந்திரிகையின் கதையிலும் நந்தலால் பாட்டு என்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அங்கும் பாட்டு “பார்க்கும் மரங்களெல்லாம்” என்றுதான் தொடங்குகிறது. காக்கைச் சிறகினிலே என்பது இரண்டாவது வரி. சந்திரிகையின் கதையை எழுதிக் கொண்டிருக்கும் போதே பாரதி மறைந்து விட்டதால் அதுவும் எங்கும் பிரசுரமாகவில்லை
அப்படி இருந்தும் அவர் மறைவுக்குப் பிறகு (1922) சுதேச கீதங்கள் இரண்டாம் பதிப்பு வெளிவந்த போது காக்கைச் சிற்கினிலே, பார்க்கும் மரங்களெல்லாம், கேட்கும் ஒலியிலெல்லாம் என்று தொடங்கும் வரிகள் ஒவ்வென்றையும் தனித் தனிப் பாடல்களாகக் கருதி மூன்று பாடல்களாக வெளியிட்டிருந்தனர். பின் பிரசுரமான பாரதி கவிதை நூல்களில் எப்படியோ மரம் பின் தள்ளப்பட்டு காக்கை முதல் வரிக்கு வந்து விட்டது.
கடையம் வாழ்க்கை பற்றி செல்லம்மாவும் சகுந்தலாவும் சொல்வதில் அதிகம் பேசப்படாத இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று பாரதி ஸமஸ்கிருதத்தில் ஒரு பாடல் புனைந்தார் என்பது. கடயத்திலிருந்து சென்னை திரும்பிய பாரதி சைதாப்பேட்டையில் தனது சகோதரர் விஸ்வநாதன் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தார். அப்போது அங்கு விஸ்வநாதனின் தாயும், பாரதியின் சித்தியுமான (பாரதியின் தந்தையினுடைய இரண்டாவது மனைவி) வள்ளியும் விஸ்வநாதனுடன் தங்கி இருந்தார். சகுந்தலா எழுதுகிறார்: “அவர் (வள்ளி) என் தந்தையிடம், “சுப்பையா நீ பாடிக் கேட்டு ரொம்ப நாளாயிற்று. நீ புதிதாகக் கட்டின பாட்டுக்கள் பாடு” என்று சொன்னார். “வள்ளி, நான் புதிதாக எழுதியிருப்பதெல்லாம் காதல் பாட்டுக்கள் உனக்குப் பிடிக்குமா? நல்ல வேளை ஞாபகம் வந்தது. ஸ்மஸ்கிருதப் பாட்டொன்று எழுதியிருக்கிறேன். அது உனக்குப் பிடித்தமாயிருக்கும் என்று தாமியிற்றிய ‘தேகிமுதம் தேகி ஸ்ரீராதே ராதே’ என்ற பாடலைப் பாடினார்.
பாரதி கடையத்தில் பஞ்சகச்சத்தை விட்டுத் தட்டு வேஷ்டிக்கு மாறினார் என்றொரு தகவலை செல்லம்மா சொல்கிறார். கடையம் வீட்டருகில் “புளிய மரமும், வேப்ப மரமும் உண்டு.ஏழைக் குடியானச் சிறுவர்கள் தினந்தோறும் அதிகாலையில் வந்து வேப்பம்பழம் பொறுக்கிக் கொண்டும் அடுப்பெரிக்கப் புளிய இலைச் சருகுகள் அரிந்து கொண்டும் செல்வார்கள். ஒருநாள் பாரதியார் அவர்களிடம் சென்று “சிறுவர்களே! எதற்காக வேப்பம் பழம் பொறுக்குக்கிறீர்கள்?’ என்றார். “சாமி, வயிற்றுக்கில்லாததால் வேப்பம்பழத்தைத் தின்கிறோம்” என்றார்கள். அவர்களுடன் தாமும் சேர்ந்து வேப்பங்காயையும் புளியங்காயையும் பறித்துத் தின்றார். “பகவானுடைய சிருஷ்டிப் பொ.ருட்கள் யாவும் அமிர்தம் நிறைந்தவை. ‘வேப்பங்காய் கசக்கும்’ என்று மனதில் எண்ணுவதால்தான் கசக்கிறது. அமிர்தம் என்று நினைத்தால் தித்திக்கிறது” என்று சொல்லி அன்று முதல் நாவின்பத்தைத் துறந்தார்.
சின்ன வயதில் நெய் சிறிது நாற்றமடித்தாலும் அவர் பாத்திரத்தோடு எடுத்துச் சாக்கடையில் ஊற்றி விடுவார். அதி ருசியான உணவும், நேர்த்தியான புதிய புதிய ஆடையும் வேண்டுபவரான பாரதியார் மனத்துறவு ஏற்பட்டு ஹரிஜனச் சிறுவர்களோடு சேர்ந்து வேப்பங்காய் தின்னவும் இடுப்பில் மட்டும் நாலுமுழ வேஷ்டி அணியவும் ஆரம்பித்தார்” என்று எழுதுகிறார் செல்லம்மா.
பாரதியை தட்டுச் சுற்றாகக் கட்டிய நான்கு முழ வேஷ்டியில் கற்பனை செய்து பார்க்கிறேன். ஜம்மென்றுதான் இருக்கிறார்!
கலைமகள் ஆகஸ்ட் 2022
One thought on “செல்லம்மாவும் கண்ணம்மாவும்”
சிறப்பு