இ |
ந்தியாவை உலகம் ஏளனத்தோடு பார்த்து எள்ளி நகையாடிக் கொண்டிருந்த காலம் அது. விளக்கின் மீது குடத்தைக் கவிழ்த்ததைப் போல இந்து மதத்தின் மீது மூட நம்பிக்கைகள், சித்து வேலைகள், அர்த்தமிழந்த பழக்க வழக்கங்கள், ஜாதிப் பிரிவுகள், அதிகாரச் சூதாட்டம் எல்லம் கவிந்திருக்க எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. ஒரு காலத்தில் உலகெங்குமிருந்து வந்து கல்வி பயின்ற ஒரு தேசத்தில் அறியாமை தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. நமது கல்வி களவு போயிருந்தது. அந்த நிலையில்-
உலகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்த ஓர் ஒளி, தமிழ் நாட்டில்தான் உருவானது.
ராமகிருஷ்ண பரமஹம்சர் மறைவிற்குப் பின் இந்தியா முழுவதும் சுற்றி விட்டு விவேகானந்தர் 1892ம் ஆண்டு கன்யாகுமரிக்கு வந்தார். அவர் மனதில் கேள்விகள் அலை மோதிக் கொண்டிருந்தன. இந்தியாவின் கடந்த காலப் பெருமையும், நிகழ்கால வறுமையும் அவர் மனதில் வந்து போயின.எதிர் காலம் என்ன என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்து நின்றது. உட்கார்ந்து யோசித்தால் ஒரு வேளை பதில் கிடைக்கலாம். குமரிக் கடலில் குதித்தார். நீந்தினர். இந்தியாவின் இறுதிப் புள்ளியாக இருந்த பாறை மீதேறி அமர்ந்தார். மூன்று பகல் மூன்று இரவுகள். தியானத்தில் ஆழ்ந்தார். குளிர் காற்றும் கொந்தளிக்கும் அலைகளும் அவரை அசைக்க முடியவில்லை. 1892ம் ஆண்டு டிசம்பர் 24 முதல் டிசம்பர் 26 வரை அவர் கன்னியாகுமரியில் மேற்கொண்ட தியானத்தில் தெளிவு பிறந்தது. இந்தியாவிற்குப் புத்துயிர் அளிக்கும் திட்டம் அவர் மனதில் உருவாயிற்று . எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும், ஆம், இந்தியா உலகிற்கு அளிக்கும் என்று பாரதி உறுதிபட ஓங்கிச் சொன்னாரே அந்த நன்முறை தென் கோடித் தமிழகத்தில் உதயமாயிற்று. இமயமலையில் அல்ல குமரி முனையில் உருவானது ஒரு புதிய யுகம்!
கன்னியாகுமரியிலிருந்து சென்னை வந்தார் விவேகானந்தர்..1893ம் ஆண்டு புதிதாய்ப் பூத்திருந்தது. ”எனது நண்பர்கள்” என அன்போடும் பெருமையோடும் விவேகானந்தர் குறிப்பிடும் சென்னை இளைஞர்கள் அப்போதுதான் அவருக்கு அறிமுகமானார்கள். யார் அவர்கள்?
அ |
டையாறு தியாசபிகல் சொசைட்டியில் தங்கியிருந்த நண்பரை பார்க்கப் போயிருந்தார் அந்த டாக்டர். அங்கு அமெரிக்கர் ஒருவர் ஓர் அறையைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். குப்பை என்று சில காகிதங்கள் எரிப்பதற்காக மூலையில் குவிக்கப்பட்டிருந்தன. அதில் ஒருவரின் படமும் இருந்தது.இவர் ஒரு மகான் இவர் படத்தை நீங்கள் இப்படித் தூக்கிப் போடக் கூடாது என்று என்று அந்த அமெரிக்கரைக் கடிந்து கொண்ட டாக்டர், அந்தப் படத்தை எடுத்து வந்து கண்ணாடி போட்டு தனது வீட்டில் மாட்டி வைத்துக் கொண்டார். விவேகானந்தரை முதல் முறையாக வீட்டிற்கு அழைத்த போது டாக்டர், தனது வீட்டில் மாட்டியிருந்த படங்களை அவருக்குக் காண்பித்துக் கொண்டே வந்தார். அடையாறில் கிடைத்த படத்தைப் பார்த்ததும் விவேகாநந்தர் அப்படி நின்றுவிட்டார். அவர் கண்ணில் இருந்து நீர் பெருகுகிறது. கூட இருந்தவர்களுக்கு ஏன் என்று புரியவில்லை. என்ன என்ன என்று அவரைக் கேட்கிறார்கள். ”இவர்தான் என் குரு. ஸ்ரீ ராமகிருஷ்ணர்” என்கிறார் விவேகானந்தர் உணர்ச்சி பொங்க.
அதுவரை பலருக்கு அவரின் குரு யார் என்று தெரியாது. அவரிடம் கேட்கும் போதெல்லாம், “ நான் அவரின் சிறந்த சீடன் அல்ல, அவர் பெயரைச் சொல்லும் தகுதி எனக்கில்லை” என்று மறுத்து விடுவாராம்.
அந்த டாக்டர்தான், டாக்டர் நஞ்சுண்டராவ். ஆனி பெசண்ட் போன்ற பிரபலங்களுக்கும் அதே நேரம் ஏழைகளுக்கும் மருத்துவம் செய்தவர். தனது வீட்டை மாணவர் இல்லத்திற்காகக் கொடுத்தவர்.அந்தக் காலத்திலேயே ’கவிக்குயில்’ சரோஜினிக்கும் கோவிந்தராஜு நாயுடுவிற்கும் கலப்புத் திருமணம் செய்து வைத்து ஜாதி மறுப்புத் திருமணங்களை ஆதரித்தவர்.பிரம்ம வாதின், பிரபுத்த பாரதா போன்ற பத்திரிகைகளை வெளியிட்டவர்.
மற்றொருவர் ‘கிடி’ என்று விவேகானந்தரால் செல்லமாக அழைக்கப்பட்ட சிங்காரவேலு முதலியார். கணித மேதை ராமானுஜத்தின் குரு. நாத்திகர் என்று கருதப்பட்டவர். ஆனால் விவேகானந்தரைச் சந்தித்த பின் மாறிப் போனார். அவருக்கு விவேகானந்தர் எழுதிய கடிதங்கள் பெரும் பொக்கிஷங்கள்.
இன்னொருவர் ரங்காச்சாரி. பல்துறை அறிஞர். வேதியில் பேராசிரியர்.அதே சமயம் வடமொழியில் வல்லுநர்.ராமநுஜரின் கீதை உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
இவர்களோடு விவேகானந்தருக்குத் தலைப்பாகை அளித்த் டி.ஆர்.பாலாஜி ராவ், (பின்னாளில் இந்தியன் வங்கியின் செயலாளர்) தமிழின் ஆரம்பகால நாவல்களில் ஒன்றான கமலாம்பாள் சரித்திரத்தை எழுதிய ராஜம் ஐயர், அன்று மிகப் பிரபலமான உயர்நீதி மன்ற வழக்கறிஞராக விளங்கிய பிலிகிரி ஐய்யங்கார், விவேகானந்தரால் ஜிஜி என்றழைக்கப்பட்ட நரசிம்மாச்சாரியர், மற்றும் சிலர் ரஹமத் பாக் என்ற வீட்டில் விவேகானந்தரைச் சந்தித்தனர்,
இவர்களை அழைத்துச் சென்றவர் அளசிங்கப் பெருமாள். பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர். “வாலிபராகிய எங்களையெல்லாம் நடத்துவதற்குத் தகுந்த தலைமை சென்னையில் இல்லையே?” என பாரதியார் கேட்ட போது, “அழகிய சிங்கப் பெருமாளிருக்கிறார்” என்று நிவேதிதா தேவியால் அடையாளம் காட்டப்பட்டவர். ;இந்தியா’ பத்திரிகை துவக்கப்படுவதற்கு மூலகாரணமாயிருந்தவர்களிலே ஒருவர். .”விவேகானந்தர் யாரோ ஒரு சந்நியாசியாக வந்து தென்னிந்தியாவில் சஞ்சரித்துக் கொண்டிருந்த காலத்தில் அவருடைய மகிமையை கண்டு பிடித்து நாட்டிற்கெல்லாம் பெருமை தேடி வைத்தவர் ஸ்ரீ அழகிய சிங்கப் பெருமாளே” (இந்தியா 15.5.1909) என்று ஆணி அடித்த மாதிரியாக அழுத்தம் திருத்தமாக எழுதுகிறார் பாரதியார்
ர |
ங்காச்சாரியைத் தவிர எல்லோரும் முதன்முறையாக விவேகானந்தரை சந்திக்கிறார்கள். நீள வளர்த்த தாடி, சடை. நெற்றி நிறைய திருநீறு, கழுத்தில் ருத்ராட்சம் எனப் பட்டையும் கொட்டையுமாக இருக்கும் வடநாட்டுச் சாமியார் ஒருவரைச் சந்திக்கப்போகிறாம் என்ற எண்ணத்தோடு வந்தவர்களுக்கு ஒரு ஆச்சரியம். அவர்கள் அங்கே கண்டது காவியை நவீனமான முறையில் அணிந்த ஒர் முப்பது வயது இளைஞரை. அந்தச் சந்திப்பைப் பற்றி பின்னாளில் ;ஜி.ஜி’ எழுதுகிறார். ”சிரித்த முகம், அதிசயமான, சுடர் விடுகிற, சுழலும் கண்கள்!….நாங்கள் ஒவ்வொருவரும் புதிய மேலைக் கலாசாரத்தின் ஏதேனும் ஒரு துறையைப் பற்றி நன்கு அறிந்தவர்களாக இருந்தோம். இலக்கியம், விஞ்ஞானம், சரித்திரம், தத்துவம் என்று பல தலைப்புகளிலும் நண்பர்கள் கேள்விகள் கேட்டனர். சுவாமிஜி யிடமிருந்து, ஆற்றல் மிக்க செவிக்கினிய. சுருக்கமான பதில்கள் மின்னல் போல் வெளிவந்தன.. . இலக்கிய, விஞ்ஞான, சரித்திர, தத்துவத் துறைகளின் சிறந்த ஆசிரியர்களிடமிருந்து சரமாரியாக மேற்கோள்கள் காட்டி பதில் கூறினார் சுவாமிஜி”
அதன் பின்னர் சென்னையில் இருந்த நாள்களில் மெரினா கடற்கரையில் விவேகானந்தரும் அளசிங்கரும் அவரது நண்பர்களும் விவாதித்துக் கொண்டே நடப்பது வழக்கமாயிற்று.
அ |
னைத்து சமயப் பேரவைக் கூட்டம் (Parliament of World Religions) அமெரிக்காவில் நடக்க இருப்பது குறித்து அளசிங்கருக்கு, அவரது உறவினர் ஒருவர் மூலமும், நண்பர்கள் வழியேயும் தெரிய வந்தது. சரியான ஒருவரை அனுப்பி இந்து மதத்தின் உண்மையான பெருமையை உலக அரங்கில் எடுத்துச் சொல்ல வேண்டும், அதன் மீது அப்போது பொழியப்பட்டு வந்த அவதூறுகளைத் தூள் தூளாக்க வேண்டும் என்ற ஓர் தவிப்பு அளசிங்கருக்கு இருந்து வந்தது.யாரை அனுப்புவது என்ற தேடலில் இருந்தார்
ஒரு நாள் உரையாடலின் போது விவேகானந்தர் அமெரிக்கா சென்று அனைத்து சமயப் பேரவையில் பங்கேற்க வேண்டுமென்ற தன் விருப்பத்தை வெளியிட்டார் அளசிங்கர். விவேகானந்தர் ”தேவியின் திருவுள்ளம் அதுவானால் அப்படியே நடக்கட்டும்” என்றார் சிரித்துக் கொண்டே. அவரிடம் ஏற்கனவே, ஜுனாகட் அரசர், போர்பந்தர் திவான், ராமநாதபுரம் அரசர் போன்றோர் இது மாதிரியான யோசனைகளைத் தெரிவித்திருந்தனர்.
அளசிங்கர் உற்சாகமாக பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய முனைந்தார். பணத்திற்கு என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது.இரண்டு அரசர்கள் உதவி அளிப்பதாகச் சொல்லியிருந்த போதும், விவேகானந்தர் பொதுமக்களிடமிருந்து நன்கொடை பெற வேண்டும் என விரும்பினார். “ நான் பேரவையில் பங்கேற்க வேண்டும் என்பது தெய்வத்தின் விருப்பம் என்றால், நான் யாருக்காகப் போராடிகிறேனோ அந்த மக்கள் பணம் கொடுப்பார்கள்” என்று சொன்னார் சுவாமிஜி.
இளைஞர்கள் களம் இறங்கினார்கள். நன்கொடை கமிட்டி அமைத்து நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் மக்களில் பலருக்கு இதில் ஆர்வமில்லை. எங்கேயோ இருக்கும் அமெரிக்காவிற்குப் போய் ஏன் இந்து மதத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்றார்கள்.சிலர் நல்ல காரியம்தான் ஆனால் நான் உதவும் நிலையில் இல்லை என்று கை விரித்தார்கள். இன்னும் சிலர் துறவிக்கு எதற்குப் பணம் என்றார்கள், சிலர் இளைஞர்கள் போகும் பாதை சரியல்ல என்று கடிந்து கொண்டார்கள். ஏளனங்கள், ஏமாற்றங்கள், அலட்சியங்கள், ஊக்கமிழக்கச் செய்யும் வார்த்தைகள் இவைகளுக்கு நடுவே அழகிய சிங்கரும் அவரது நண்பர்களும் திரட்டிய தொகை 500 ரூபாய். அன்று அது பெரிய தொகைதான். ஆனால் அமெரிக்க செல்ல அது போதாது.
நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த விவேகானந்தர் மனதில், தெய்வத்தின் விருப்பப்படிதான் இந்தக் காரியத்தைச் செய்கிறோமா, அல்லது எனது சொந்த விருப்பத்திற்காகச் செய்கிறேனா எனக் கேள்வி எழுந்தது.ஒரு கட்டத்தில், இளைஞர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து, இனி நிதி திரட்ட வேண்டாம், திரட்டிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள், அல்லது ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்து விடுங்கள் என்றார். அழகிய சிங்கருக்கு ஏமாற்றம். மனதுக்குள் கனமான கல்லாக வருத்தம் வந்தமர்ந்தது.
ஒ |
ர் இரவு. விவேகானந்தர் படுத்திருக்கிறார். கனவில் அவரது குரு ஸ்ரீராமகிருஷ்ணர் தோன்றி கடலலைகள் மீது நடந்தபடியே, பின்னால் திரும்பி விவேகானந்தரைப் பார்த்து வா வா என்று அழைக்கிறார்.
விவேகானந்தரின் மனம் தெளிவடைந்தது. தான் அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது குருவின் அருளாணை என்ற முடிவுக்கு வருகிறார். அழகிய சிங்கரிடம் அதைத் தெரிவித்த போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
ஆனால் மறுபடியும் பணம் திரட்டுவது எளிதான காரியமாக இல்லை. வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்த பின் மீண்டும் போய்க் கேட்டால் எப்படி நம்பிக் கொடுப்பார்கள். உயர்நீதி மன்ற நீதிபதி சுப்ரமணியமும், இராமநாதபுர அரசரும் தலா 500 ரூபாய் கொடுக்கிறார்கள். பெரிய மனிதர்கள் கொடுப்பதைப் பார்த்து மற்றவர்களும் கொடுக்க ரூ 4000 வரை நிதி திரள்கிறது.
அளசிங்கர் வேறு சில முக்கியமான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்.விவேகானந்தருக்கு ஒரு கடிகாரம் வாங்கிப் பரிசளித்தார். மேலை நாட்டுப் பாணியில் உடைகள் தைக்க டெய்லரிடம் அழைத்துப் போனார். 100முகவரிச் சீட்டுக்கள் அச்சடிக்க வேண்டும் என்கிறார். அப்போதுதான் சுவாமி தன் பெயரை ‘விவேகானந்தர்’ என்று அச்சிடுமாறு கூறுகிறார்.அதுவரை அவரது பெயர் சச்சிதானந்தர்.
விவேகானந்தர் 1894ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி பம்பாயில் கப்பலேறுகிறார் அவரது பெட்டியைத் தூக்கிக் கொண்டு பின்னால் செல்லும் அளசிங்கரால், திரட்டிய நிதியில், டிக்கெட் செலவு போக 2805 ரூபாய்தான் கொடுக்க முடிகிறது., கண்ணீர் பொங்க விவேகானந்தரின் காலில் விழுகிறார்.குழந்தை போல விசும்பி அழுகிறார். விவேகானந்தர் அவரை அணைத்துக் கொண்டு தேற்றுகிறார். உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கும் அவரால் அப்போது அதிகம் பேச முடியவில்லை.
பின்னாளில் விவேகானந்தர் அளசிங்கருக்கு எழுதுகிறார்: “ சுயநலம் ஏதுமின்றி எனக்காக நீ செய்த வீரப் பணிக்காக, உனக்கும் ஜிஜிக்கும், சென்னை அன்பர்களுக்கும் நான் எவ்வளவு கடமைப்பட்டுள்ளேன் என்பதைச் சொல்லித் தீர்க்க முடியாது. நீங்கள் அனைவரும் என்ன சாதிக்க முடியும் என்பதை இப்போது தெரிந்து கொண்டீர்கள்.
ஆம், சென்னை இளைஞர்களே நீங்கள்தான் உண்மையில் அனைத்தையும் செய்து முடித்தவர்கள். நான் முன்னணியில் இருந்தேன் அவ்வளவுதான்”
One thought on “”சென்னை இளைஞர்களே, நீங்கள்தான் உண்மையில் அனைத்தையும் செய்து முடித்தவர்கள்””
This is the ideal answer. Evenroye should read this