என் பையனுக்கு இரண்டரை வயதானபோது அவனைத் தனி அறையில் தூங்க வைத்தோம். தொடர்ந்து அவனை அங்கேயே தூங்கப் பழக்கினோம். அவனைத் தனியே தூங்க அனுமதித்ததில் அவனுக்கு ஒரே பெருமை. அங்கு அவன் அமைதியாக நன்றாகவே தூங்கினான். எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது.
ஒரு நாள் இரவு புயலடித்தது.வீட்டிற்கு வெளியே இருந்த வேலி படபடவென்ற சப்தத்தோடு முறிந்து விழுந்தது. அவன் அலறி அடித்துக் கொண்டு எழுந்தான். காற்றின் ஓசையும் வேலி முறிந்து விழுந்த சப்தமும் அவனை மிரளச் செய்திருந்தன. அவன் அழும் சப்தம் கேட்டு நான் அவன் படுத்திருந்த அறைக்குப் போனேன். என்னைப் பார்த்ததும் அவன் எழுந்து ஓடி வந்து கட்டிக் கொண்டான். தேம்பினான். நான் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று ஆறுதல் வார்த்தைகள் சொல்லி அவனைத் தேற்றினேன். அவன் விசும்பல் குறைந்தது. ஆனால் இருளாக இருக்கிறது என்று அவன் பயந்தான். அவனுக்கு தைரியம் கொடுப்பதற்காக நான் அன்று அவன் அருகில் படுத்துக் கொண்டேன். நன்றாக உறங்கினான்
மறுநாளும் நான் அவன் அருகில் படுத்துக் கொள்ள வேண்டும் என அவன் வற்புறுத்தினான். நான் மறுத்து விட்டேன். இரவு விளக்கைப் போட்டு விட்டேன். கொஞ்சம் அழுதான்.சமாதனப்படுத்தித் தூங்க வைத்தேன். இப்படியே சில நாள்கள் போயிற்று. பிறகு இரவு விளக்கு எரிந்தாலும் இருட்டு என்று சொல்லி அழுவான். எனக்குப் புரிந்து போயிற்று. நான் அவனை சமாதனப்படுத்தும் போது அவனுக்குக் கிடைக்கும் சந்தோஷத்திற்காகப் போலியாக அழுகிறான். அவன் அழுதால் நான் சமாதானப்படுத்துவேன் என்று எதிர்பார்த்து அழுகிறான் என்பது எனக்குப் புரிந்து போயிற்று.
இது சரிவராது என்று நான் இரவு விளக்கையும் அணைத்துவிட்டேன். இருட்டு என்று அவன் அழும் போது நான் சமாதனப்படுத்தவில்லை. மாறாக இருட்டைக் கண்டு பயப்பட ஏதுமில்லை என்று கொஞ்சம் கொஞ்சமாக விளக்கிச் சொல்ல ஆரம்பித்தேன். விழிப்பு வந்தால் மறுபடியும் படுத்துக் கண்ணை மூடிக் கொண்டால் சிறிது நேரத்தில் தூங்கிவிடலாம் என்று சொல்லிக் கொடுத்தேன். முதலில் அவன் நம்பவில்லை. ஆனால் அவன் செய்து பார்த்து அது உண்மைதான் என்று கற்றுக் கொண்டான்.
பின் ஏதாவது நிஜமான ஆபத்து என்றால் மட்டுமே நான் வருவேன். மற்றப்படி அழுதால் வரமாட்டேன் என்று சொல்லி விட்டேன். மெல்ல மெல்ல அவன் இருளுக்குப் பழகிக் கொண்டுவிட்டான் இப்போது இரவு மிகவும் தேவையிருந்தால் ஒழிய அவன் என் அறைக்கு வருவதில்லை. நான் கொஞ்சம் இடம் கொடுத்திருந்தால் அவன் வாழ்நாள் முழுவதும் அமைதியாகத் தூங்கியிருக்க மாட்டான்
இது பெட்ரண்ட் ரஸல் தனது அனுபவம் பற்றி எழுதியிருப்பது. ரஸல் செல்லம் கொடுப்பதால் ஏற்படும் அசட்டுத் துணிச்சலுக்கும் கற்றுக் கொடுப்பதால் உண்டாகும் மனோ தைரியத்திற்கும் வேறுபாடு உண்டு. செல்லம் கொடுத்து வளர்த்த பிள்ளை எவர் சொல்லும் கேளாது, எதையும் மதிக்காது பதராய்ப் பழுதாகும். சைக்கிள் பழகும் போது ஏற்பட்ட பயம் கற்றுக் கொள்ளலில் விலகிப் போகும்
எழுபதாண்டு காலச் சுதந்திரம் இந்தியர்களுக்கு எதைக் கொடுத்திருக்கிறது? செல்லம் கொடுத்து (Pamper) வளர்க்கப்பட்ட சண்டியர்களையா? கற்றுக் கொண்டு வளர்ந்த தன்னம்பிக்கையாளர்களையா? இங்கு சுயச்சார்பு எனபது சமூகம் சார்ந்தது அல்ல,தனிநபரின் சுயநலம் என்றும், சுயக் கட்டுப்பாடு என்பது ஏமாளித்தனம் என்றே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
‘விலகி நில்லுங்கள்! விலகி நில்லுங்கள்!’ என்று டெலிவிஷனைத் திறந்தால், கைபேசியை இயக்கினால், நாளிதழைப் புரட்டினால், மன்றாடுகிறது அரசு. பிரதமர், முதல்வர், பெரிய நட்சத்திரங்கள் என இடைவிடாமல் பிரச்சாரம் செய்கிறார்கள். கவிதைகளும் காணொளிக் காட்சிகளும் சமூக ஊடகங்களை நிரப்புகின்றன. அத்தனையையும் மக்கள் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள், படிக்கிறார்கள். ஆனால் கோயம்பேடோ, மதுக்கடையோ, மீன் சந்தையோ திறந்தால் விழுந்தடித்துக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டு பாய்கிறார்கள். சுயநலம் அவர்களை உந்துகிறது. உபதேசங்கள் காற்றில் பறக்கின்றன.
இது தேவையின் காரணமாக ஏற்பட்ட நெரிசல் என்று சிலர் நியாயப்படுத்துகிறார்கள். ஏதோ இன்று மட்டும் விதிமுறைகள், வேண்டுகோள்கள் மீறப்பட்டிருந்தால் அந்த வாதத்தில் சத்து இருக்கிறது. ஆனால் போக்குவரத்து சிக்னலில் சிவப்பு எரியும் போது செல்வது, ஒரு வழிப் பாதையில் வண்டி ஓட்டிப் போவது, ஹெல்மெட் அணியாமல் சுற்றுவது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவது, வலது பக்கமாக வண்டியோட்டிச் செல்வது, வாகனம் ஓட்டும் போது கைபேசியில் பேசுவது, சாலை நடுவே இருக்கும் மீடியனை ஏறிக் குதிப்பது, கண்ட இடத்தில் சாலையைக் கடப்பது, அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டுவது என்று சிறு சிறு விஷயங்களில் கூடப் பொது ஒழுங்கைப் புறக்கணிப்பது என்பது நம் கலாசாரமாகவே ஆகிவிட்டது
ஹெல்மட் அணிந்து வண்டி ஓட்ட வேண்டும் என்ற நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து வழக்கறிஞர்கள் ஊர்வலம் போன மாநிலம் இது. இத்தனைக்கும் அவர் புதிதாக எதையும் சொல்லிவிடவில்லை. மோட்டர் வாகனச் சட்டத்தில் இருக்கிற விதியை நடைமுறைப்படுத்தச் சொன்னார். சட்டத்தை எதிர்த்து ஊர்வலம் போனவர்கள் சாதாரணர்கள் அல்ல. சட்டத்தை அமல் செய்வதில் பங்குதாரர்களான வழக்கறிஞர்கள்
அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டால், திட்டத்தை அறிவித்தால், அடுத்த நாள் தடை கோரி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கலாகிறது. அந்த மனுக்களுக்குப் பின் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ அரசை முடக்க வேண்டும், குறைந்த பட்சம் அது செயல்படுவதைக் காலதாமதப்படுத்த வேண்டும் என்ற அரசியல் நோக்கம் இருப்பது நாளிதழ் படிக்கிற எல்லோருக்கும் அப்பட்டமாகத் தெரியும். நீதிபரிபாலனம் செய்வோரைத் தவிர. மனு அனுமதிக்கப்படும். நோட்டீஸ் அனுப்பப்படும். இடைக்காலத் தடை அளிக்கப்படும். இரண்டு மூன்று மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படும்
இத்தனை ஆண்டுகளில் நமது அமைப்பு முறை கடமைகளைக் கற்றுத் தரவில்லை. உரிமை என்ற பெயரில் கடமைகளைப் அலட்சியப்படுத்தக், கற்றுக் கொடுத்திருக்கிறது. படிக்காவிட்டலும் பாஸ் என்ற பாடம் ஆரம்பப் பள்ளியிலேயே நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. நேரத்திற்கு வேலைக்கு வர வேண்டும் என்று பயோமெட்ரிக் முறையை அறிமுகப்படுத்தினால், அதை எதிர்த்து வழக்குப் போடுபவர் ஆசிரியர்! மாணவர்கள் நேரத்திற்கு வகுப்பிற்கு வர வேண்டும் என்பதை இவர் எப்படி அறிமுகப்படுத்துவார்? பணம் கொடுத்துப் பல்கலைக்கழகத்தின் பெரிய பதவிகளில் அமர்பவர்கள் எப்படிக் கல்லூரிகளில் நடக்கும் ஊழலைக் களைவார்கள்? காவல்துறை அதிகாரிகள் பாலியல் குற்றங்களிலும் ஐஏ.எஸ் அதிகாரிகள் வரதட்சணைக் கொடுமையிலும் ஈடுபடுவார்கள் என்றால் அமைப்பு எப்படி அறம் சார்ந்து இயங்கும்.?
கசப்பான உண்மை நம்மிடம் சுயச் சார்பும் இல்லை. சுயக் கட்டுப்பாடும் இல்லை. அதை விடக் கசப்பான யதார்த்தம் இவை இரண்டும் இல்லாமல் கொரானாவின் தாக்குதலிருந்து விடுபட முடியாது என்பது.
கொரானவின் தாக்குதலுக்கு உள்ளான பொருளாதாரம் சரிந்து விடாமல் அண்டைக் கொடுத்து நிறுத்த சில திட்டங்களை அறிவித்துள்ளது. அதன் அடிப்படை, அதன் சாரம், சுயச்சார்பு. அரசால் விடுவிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் உரியவர்கள் கைக்குப் போய்ச் சேர வேண்டும், அரசு அளிக்கும் நிதியைப் பெறுபவர் அதை உற்பத்திக்குச் செலவிட வேண்டும், அந்தப் பணம் பொருளாகவோ, சேவையாகவோ, பணமாகவோ மீண்டும் சந்தைக்கு வரும் வண்ணம் சுழல வேண்டும், கடன் என்பது மானியம் அல்ல, திருப்பிச் செலுத்தப்பட வேண்டியது என்ற பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் அந்த அறிவிப்புகளின் பின் இருக்கின்றன.
சுருக்கமாகச் சொன்னால் அரசு செல்லம் கொடுக்க மறுக்கிறது. கற்றுக் கொடுக்க முனைகிறது. கற்றுக் கொள்ளும் காலம் சிரமமானது. கற்றுக் கொண்டால் கையை விட்டுவிட்டு சைக்கிள் ஓட்டலாம்.
செல்லம் கொடுத்தால் உடனடியாக நல்ல பெயர் வாங்கலாம். ஆனால் கற்றுக் கொடுக்கிற வாத்தியார் கசப்பானவர். அது அவர்களுக்கும் தெரியும். ஆனால் ஆள்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. தேசபக்தர்கள். அவர்களுக்கு இன்று கிடைக்கக் கூடிய ஓட்டுக்களை விட நாட்டின் நாளைய நலன் பெரிதாகத் தெரிகிறது. மகிழ்ச்சி
ஆனால் சாட்டையை எடுக்காமல் சண்டி மாடு நகராது என்றால் அதற்கும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும்
3.6.2020