சு.ரா: காற்றில் கலந்த பேரோசை

maalan_tamil_writer

காலா உனை நான் சிறு புல் என மதிக்கிறேன் – என்றன் காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன் என்ற வரிகளை பாரதி எழுதியபோது அவனுக்கு வயது 37 (டிசம்பர் 1919).

நாலாயிரம் காதம் விட்டு அகல்! உனை விதிக்கிறேன்! என்று அவன் காலனுக்கு ஆணையிட்டான். என்றாலும் அதற்கு இரண்டாண்டுகளுக்குப் பின் அவன் இறந்து போனான் (செப்டம்பர் 1921). ஆனால் அந்தக் கவிதை இன்னமும் உயிரோடு இருக்கிறது.

என் மூளையில் பொதிந்துள்ள அனைத்தையும் என் பேனா கண்டுணர்ந்து கொள்ளும் முன் நான் இறந்து போவேனோ? என்ற பயம்  ஆங்கிலக் கவிஞன் ஜான் கீட்ஸிற்கு இருந்தது நான் இறந்துவிடக்கூடும் என்ற அச்சம் எனக்கு ஏற்பட்ட போது என்ற 14 வரிக் கவிதையை கீட்ஸ் எழுதிய போது அவனுக்கு வயது 23 (1818). மூன்று வருடம் கழித்து அவன் இறந்து போனான். ஆனால் அந்தக் கவிதையும் இன்று உயிர்ப்போடு இருக்கிறது.

நுண்ணர்வு மிகுந்த படைப்பாளிகள் பலர், எல்லாவற்றையும் போலத் தங்கள்  மரணத்தைப் பற்றியும் சிந்தித்திருக்கிறார்கள்.  எழுதியிருக்கிறார்கள். அண்மையில் மறைந்த சுந்தர ராமசாமியும் கூட.

“நான் விடை பெற்றுக் கொண்டுவிட்ட செய்தி
உன்னை வந்து எட்டியதும்,
நண்ப,
பதறாதே.
ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் எதுவும் அதில் இல்லை.

இரங்கற் கூட்டம் போட ஆட் பிடிக்க
அலையாதே
நம் கலாச்சாரத் தூண்களின்
தடித்தனங்களை எண்ணி
மன்ச்சோர்வில் ஆழ்ந்து கலங்காதே.

நண்ப
சிறிது யோசித்துப் பார்
உலகெங்கும் கணந்தோறும்
இழப்பின் துக்கங்களில்
ஒரு கோடிக் கண்கள் கலங்குகின்றன.
ஒரு கோடி நெஞ்சங்கள் குமுறி வெடிக்கின்றன

நண்ப
நீ அறிவாயா
உன் அடிச்சுவடு ஒவ்வொன்றிலும்
அழிகின்றன ஒரு கோடி உயிர்கள்.

1987ம் ஆண்டு, கொல்லிப்பாவை என்ற சிற்றிதழில் சுந்த்ர ராமசாமி எழுதிய என் நினைவுச் சின்னம் என்ற கவிதையின் சில வரிகள் இவை.

இன்று சுந்தர ராமசாமி அவரது நாவல்களுக்காகப் போற்றப்படுகிறார்.அவரது ஒரு புளிய மரத்தின் கதை, ஜே.ஜே.சில குறிப்புக்கள் என்ற இரு புதினங்களும் தமிழ் நாவல் உலகில் குறிப்பிடத் தகுந்த படைப்புக்கள். சிலர் அவரது கட்டுரைகளில் காணப்படும் கறாரான கருத்துக்களுக்காக, அவரது நிலைபாடுகளுக்காகப் பாராட்டுகிறார்கள். இன்னும் சிலர் அவரது உரைநடையின் செழுமைக்காக அவரை வியக்கிறார்கள். இத்தனைக்கும் நடுவில் அவர்  தமிழ் கவிதைக்கு அளித்த பங்களிப்பு கவனம் பெறாமல் போகிறதோ என் நான் நினைப்பதுண்டு.

தமிழ்நாட்டில், தமிழ்க் கவிதை, அதிலும் குறிப்பாகப் புதுக் கவிதை, அது கவனம் பெறத் துவங்கிய எழுபதுகளில் ஒரு நெருக்கடியை சந்தித்தது. கோஷங்களை கவிதையாக்குகிற முனைப்பில் சிலர் இருந்தார்கள். எழு!, நட! எழுது! புரட்டு! கொளுத்து! திருத்து! என்று இந்தக் கவிஞர்கள் தங்கள் வாசகர்களுக்கு ஏதாவது உத்தரவிட்டுக் கொண்டிருப்பார்கள். இடதுசாரி  முகாம்களில் இது போன்ற கவிஞர்கள் பலரைப் பார்க்கலாம்.இதற்கு நேர் எதிரான தளத்தில் தர்மு சீவராம், கசடதபற இதழைச் சார்ந்த கவிஞர்கள் இயங்கி வந்தார்கள். சிக்கலான மொழிநடையில், விளங்கிக் கொள்ளக் கடினமான கவிதைகளை எழுதி வந்தார்கள். ஒரு வித கிறக்கம் தரும் மொழிநடையை நோக்கி ரொமாண்டிக் கவிஞர்கள் பயணித்துக் கொண்டிருந்தார்கள். ரத்த புஷ்பங்கள், ஸ்நேகிக்கும் தருணங்கள், சார்வாகப் பட்சிகள், சொப்ன லிகிதங்கள் என்று வடமொழிக்கும் மலையாளத்திற்கும் இடைப்பட்ட நிலைக்குத் தமிழ்க் கவிதை  மொழி நகர்ந்து கொண்டிருந்தது. வானம்பாடிக் கவிஞர்களிடம் இந்த இழைகளைப் பார்க்கலாம். எதுகையை இழந்த அறு சீர் விருத்தங்களை புதுக்கவிதை என நம்ப வைக்க சிலர் முயன்று கொண்டிருந்தார்கள். சி.மணி, ஞானக்கூத்தன், கவிதைகளில் இதைக் காணமுடியும்.
இந்த காலகட்டத்தில் சுந்தர ராமசாமியும் கவிதைகள் எழுதினார். பசுவைய்யா என்பது அவர் கவிதைகள் எழுதத் தேர்ந்தெடுத்துக் கொண்ட புனைப்பெயர்.

பசுவைய்யாவின் கவிதைகள் ஒரு நுட்பமான உள் மன உலகை, ஒரு நேரான மொழியில் சொல்ல முனைபவை. சொல்ல முயற்சிப்பவை என்பது கூட முற்றிலும் சரியான விவரிப்பல்ல. கோடிகாட்டுபவை என்றுதான் அவற்றைச் சொல்ல வேண்டும். அழுத்திப் பிடித்தால் கசங்கி விடும் மலர் போல் அதில் ஓர் மெல்லிய இழை இருந்தது.

மற்ற எவரையும் விட ராமசாமிக்குத் தன் கவிதை பற்றிய ஒரு தெளிவு, தான் ஏன் கவிதை எழுதுகிறோம், என்ற தெளிவு இருந்தது. தன் மறைவுக்குப் பின், கவிதையை உயிர்ப்பித்தவர்களில் ஒருவனாகத்தான், தான் நினைக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். மேலே சுட்டிய என் நினைவுச் சின்னம் கவிதையின் எஞ்சிய வரிகள் இவை:

நண்ப
ஒன்று மட்டும் செய்.
என்னை அறியாத உன் நண்பனிடம்
ஓடோடிச் சென்று
கவிதையை எழுப்ப முயன்று கொண்டிருந்தவன்
மறைந்துவிட்டான் என்று மட்டும் சொல்.
இவ்வார்த்தைகளை நீ கூறும் போது
உன் கண்ணீர்
ஒரு சொட்டு
இந்த மண்ணில் உதிரும் என்றால்
போதும் எனக்கு.

இறுக்கமான குரலில், விடாப்பிடியாக வாதிடும் சுந்தரராமசாமியின் குரலை மட்டும் அவரது கட்டுரைகள் மூலம் அறிந்தவர்களுக்கு, அவரது நுட்பமான மனக்குகை ஓவியங்கள் வியப்பளிக்கலாம். ஆனால் சு.ராவே ஆச்சரியங்கள் பல நிறைந்தவர்.

இன்று தமிழின் முக்கியமான எழுத்தாளராகக் கருதப்படும் அவர் இளமையில் பள்ளியில் தமிழ் படித்ததில்லை. அங்கு அவர் படித்ததெல்லாம் ஆங்கிலம், மலையாளம், சமஸ்கிருதம் இவைதான். அவர் இன்று பெரிதும் மதிக்கப்படும் அறிவுஜீவிகளில் ஒருவர். ஆனால் ‘நான் முட்டாள் அல்ல என்பதை நிரூபித்து என் தந்தையை ஒப்புக் கொள்ளச் செய்துவிட வேண்டும் என்பதற்காகவே எழுத ஆரம்பித்தேன்’ என்று சுந்தர ராமசாமி ஒரு முறை தீபத்தில் எழுதியிருந்தார். அவர் ஒரு இடதுசாரியாக, சாந்தி, சரஸ்வதி இதழ்களில், எழுதத் துவங்கியவர். ஆனால் சாதாரண மனிதனை, அவனது நம்பிக்கைகளை, கவலைகளை, ரசனைகளை அவரது எழுத்துக்கள் பிரதிபலித்தன என்று சொல்லிவிட முடியாது. சுராவே சொல்கிறார்: ” வெகு ஜனத்தின் நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதோ, புதிய நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளும்படி தூண்டுவதோ என்னுடைய வேலை அல்ல” அவர் வாசகர்களுக்காக எழுதுவதை விடத் தனக்காக எழுதினார் என்றுதான் சொல்ல வேண்டும். ” நான் எனக்காக மட்டும் எழுதக்கூடியவனாக இருக்க வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன்.” என்று வெளிப்படையாகவே அறிவித்தார். வாசகர்களைக் கருத்தில் கொண்டு எழுதுவது ஒரு வித சமரசம் என்றே அவர் கருதினார். “வாசகனின் தரத்தோடு சமரசம் செய்து கொள்வது இலக்கிய கர்த்தாவின் நோக்கத்திற்கே எதிரானதாகும்”  என்பது அவரது நம்பிக்கை.

வாசகன் சமூகத்திலிருந்தும் படைப்பாளி தன் உள் உலகங்களிலிருந்தும் தோன்றுகிறார்கள் என்பது உண்மைதான். இந்த இரண்டும் . ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாக இருக்கலாம்; ஆனால் ஒன்றோடொன்று முரண்பட்டவை அல்ல. ஒன்றை ஒன்று செழுமைப்படுத்துபவை; காயப்படுத்துபவையும் கூட. எனவே ஒரு இலக்கியப் படைப்பை மதிப்பிடும் போது அது உருவாகும் / வாசிக்கப்படும் சமூகத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பது என் நிலை.

ஆனால் சு.ராவின் நிலை அதுவல்ல.

அதனால் 1993ம் ஆண்டு தங்க முனை விருதுக்குரிய சிறுகதையைத் தேர்ந்தெடுக்க அவர் சிங்கப்பூருக்கு அழைக்கப்பட்டபோது சிங்கப்பூர் சிறுகதைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தொன்றினை வெளியிட்டார்:

“இக் கதைகளில் தரம் என்பது சிறிய அளவில் கூட இல்லை” என்பதைத் தன் உறுதியான முடிவாக அறிவித்தார். அந்தக் கதைகள், ” சிறுகதையின் உருவம் பற்றி அறியாதவர்கள் எழுதிய கதைகளாகப்பட்டன” என்றும் தெரிவித்தார்.

அவருக்கு அடுத்த ஆண்டு இந்த விருதுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுக்க நான் அழைக்கப்பட்டிருந்தேன். சிங்கப்பூர் எழுத்தாளர்கள் சிலரின் மனம் சுந்தர ராமசாமியின் இந்தக் கருத்துக்களால் புண்பட்டிருந்ததை அப்போது என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

சுந்தர ராமசாமிக்கும் எனக்கும் பல விஷயங்களில் கருத்து முரண்பாடுகள் உண்டு. படைப்பாளியை விட வாசகன் எந்த விதத்திலும் தாழ்ந்தவன் அல்ல,  ஒரு எழுத்தாளன் சமூகத்தை முன் வைத்து எழுதுவது  ஒரு எழுத்தாளன் தனக்காகவே எழுதிக் கொள்வதை விட எந்த விதத்திலும் தாழ்வானது அல்ல,

ஒரு சமூகத்தின் கலை ரசனை, படைப்பாற்றல் இவை தோன்றுவதற்கும், மாறுவதற்கும், மேம்படுவதற்கும் சமூக வரலாற்றுக் காரணங்கள் உண்டு எனவே அவற்றின் பின்னணியில் அவை மதிப்படப்பட வேண்டும் என்பது என் நம்பிக்கைகள். இவை சுந்தர ராமசாமியின் நிலைக்கு நேர் எதிரானவை.

என்றாலும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இலங்கைப் படைப்புலகம் செழுமைப்பட அதன் விமர்சகர்கள் ஒரு முக்கிய காரணம். கைலாசபதி, ஏ.ஜி.கனகரட்ணா, சிவத்தம்பி, தளையசிங்கம் போன்றவர்கள் பொது அரங்கில் வைத்த விமர்சனங்கள் ஒரு முக்கிய காரணம். தமிழகத்தில் புதுமைப்பித்தன் போன்றவர்கள் படைப்பாளிகளாக மட்டுமன்றி விமர்சகர்களாகவும் இருந்து இலக்கியத் தகுதிக்கான ஒரு குறைந்த பட்சப் பொது எல்லையை (common minimum denominator) நிறுவ முயன்றார்கள்.

பல இளம் படைப்பாளிகள் வெகு வேகமாக மலர்ந்து, இணையம் மூலம் தங்கள் படைப்பை பொது அரங்கில் வைக்க முற்படும் சூழ்நிலை சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில், சிங்கப்பூருக்கும், கைலாசபதி போல் படிப்பறிவும், வரலாற்று நோக்கும், கொஞ்சம் கருணையும் கொண்ட விமர்சகர்கள் தேவை.

யாரேனும் முன்வருவார்களா?

தமிழ் முரசு சிங்கப்பூர் அக்டோபர் 26 2005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.