வெற்றி பெறுவதைவிட சிரமமானது வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டி போல பரபபரப்பாக நடந்த சட்டமன்றத் தேர்தலும், ஒரு நாள் போட்டி போல சற்று மந்தமாக நடந்த உள்ளாட்சித் தேர்தலும் ஜெயலலிதாவிற்கு அடுத்தடுத்து வெற்றிகளை அளித்திருக்கிறது.

இது அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்பது எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு இதற்கு முன் பொறுப்புகளில் இருந்தவர்கள் மீது மக்களுக்கு இருந்த கோபத்தை வெளிப்படுத்துகிறது என்பதும் உண்மை.

மக்களுக்கு அப்படி என்ன கோபம்?

பல நகரங்களில் நகராட்சிகள் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை. மக்களின் எதிர்பார்ப்புகள் மலையளவு இருந்தன. ஆனால் பொறுப்பில் இருந்தவர்களால் செய்ய முடிந்ததோ நெல்லிக் கனி அளவுதான்.

ஏன்?

வழக்கமான ஊழல் தவிர வேறு சில காரணங்களும் இருக்கின்றன. முதல் காரணம் அரசியல். கட்சிகள் தங்களுக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு ‘ஏதாவது’ செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், இலவசச் சாப்பாட்டிற்கு டோக்கன் கொடுப்பதைப் போல, ஒரு அமைப்பை நிர்வகிப்பதற்குத் திறமை இருக்கிறதா, தகுதி இருக்கிறதா என்றெல்லாம் பார்க்காமல் சகட்டு மேனிக்கு ஆட்களைத் தேர்தலில் இறக்குவது. அவர்கள் கட்சித் தலைவரை முக்கியமானவராகக் கருதுகிறார்களே அன்றி மக்களை அல்ல. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்த அன்று வெற்றி பெற்றவர்கள் அனைவரும், அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த வெற்றி எங்கள் தலைவருக்குரியது என்றுதான் தொலைக்காட்சியில் சொன்னார்கள். மக்கள் தந்த வெற்றி எனச் சொன்னவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த மனோபாவத்தோடு இருப்பவர்கள் மக்கள் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுவார்கள் என எண்ண இயலவில்லை.

மற்றொரு முக்கிய காரணம், நிதி. மாநில அரசு தனது வருவாயில் 8 சதவீதத்தை உள்ளாட்சிகளுக்கு ஒதுக்குகிறது. இந்த எட்டு சதவீத்தில் பாதிக்கு சற்று அதிகமாக ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. நகரங்களில் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க தேவைகளும் அதிகமாகின்றன. அவற்றை நிறைவேற்ற பணம் போதுமானதாக இருப்பதில்லை. அரசு ஒவ்வொரு ஊராட்சிக்கும் என்ன தேவை என்பதை மக்களைக் கொண்டே திட்டங்கள் வகுக்கச் செய்து, அதை வட்ட அளவில் தொகுத்து பண ஒதுக்கீடு செய்யலாம்.

நிதி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் திட்டங்களை வகுப்பதற்கும் நிறைவேற்றுவதற்குமான அதிகாரங்கள். அரசு சென்னையிலோ தில்லியிலோ வகுக்கப்படும் திட்டங்களை நிறைவேற்றும் ஏஜெண்டுகளாக உள்ளாட்சிகளை நடத்தாமல் அதிகாரங்களைப் பரவலாக்க வேண்டும். மாநில உரிமைகளுக்காகப் போராடும் அரசியல் கட்சிகளுக்கு உள்ளாட்சிகளின் உரிமைகளைப் புரிந்து கொள்வது அத்தனை கடினமல்ல.

உண்மையான சவால் இனிமேல்தான் துவங்குகிறது. இதோ மழைக்காலம் வந்து கொண்டே இருக்கிறது. அதை எப்படி புதிதாகப் பொறுப்பேற்றவர்கள் கையாளப் போகிறார்கள் என்பதைக் காண மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதில் வெற்றி பெற வாழ்த்துகள்.

புதிய தலைமுறை 3.11.2011