வீழ்வேன் என்று நினைத்தாயோ-10
சந்தை நடத்தும் சங்கம்
மாலன்
நீங்கள் உங்கள் கைப்பணத்தைப் போட்டு ஒரு தொழிலோ, கடையோ தொடங்குகிறீர்கள். உங்கள் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப வேலைக்கு ஆளை எடுப்பதற்கும், அவரின் பணி திருப்தி அளிக்கவில்லையானால் அவரை வேலையை விட்டு நீக்குவதற்குமான உரிமை உங்களிடம் இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் இல்லையா? தொழிலாளியைப் பணி நீக்கம் செய்யும் ஒவ்வொரு முறையும் நீங்கள் நீதிமன்றத்திற்குப் போய் நிற்க வேண்டும் என்றால் அதை நீங்கள் ஏற்பீர்களா? அப்படிப்பட்டச் சூழ்நிலையில் உங்களால் தொழிற்சாலையிலோ, கடையிலோ, ஒழுங்கை, கட்டுப்பாட்ட்டை நிலைநிறுத்த முடியுமா? அவற்றை நிலை நிறுத்த முடியாமல் போனால் உற்பத்தியோ, வணிகமோ சீராக இருக்குமா? அந்த மாதிரியான சூழலில் யாராவது முதலீடு செய்ய வருவார்களா?
இவை என் கேள்விகள் அல்ல.1965ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் மக்கள் செயல் கட்சியின் முன்னணி உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெக் யான் தாங் நிகழ்த்திய உரையில் இடம் பெற்ற சில வரிகள் இவை.
“தொழிலாளர் இயக்கங்களிலிருந்து அரசியல் போராட்டங்களைப் பிரிக்க முடியாது” என்ற வாதங்கள் ஒலித்த சிங்கப்பூரில் அது குடியரசாக மலர்ந்த நான்கு மாதங்களுக்குள்ளாகவே முதலீட்டிற்கு ஆதரவான குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. “மோதலில் இருந்து ஒத்துழைப்பிற்கு” என்று இந்த மாற்றம் அழைக்கப்பட்டது
நீண்ட தொழிற்சங்க வரலாறு கொண்ட சிங்கப்பூரில் ( உலக்ப் போரில் பிரிட்டனிடம் சரணடைந்து ஜப்பானியர்கள் வெளியேறிய ஒரு மாதத்தில், 1945ல் அங்கு முதல் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது) அது குடியரசாக மலர்ந்த போது ஒரே ஒரு தொழிற்சங்க அமைப்புத்தான் இருந்தது. அதுதான் NTUC என்றழைக்கப்படும் National Trade Union Congress. குடியரசாக ஆனதிலிருந்து ஐம்பதாண்டுகளாக சிங்கப்பூரை ஆண்டுவரும் மக்கள் செயல் கட்சியின் ஆதரவு பெற்ற தொழிற்சங்கம்
58 தொழிற்சங்கங்கள், இரண்டு வர்த்தக சங்கங்கள், 10 சமூக வணிக நிறுவனங்கள் ஆகியவை இணைந்த கூட்டமைப்பு.அது. ஆனால் அது Fair Price என்ற சூப்பர் மார்க்கெட்களையும் Comfort என்ற டாக்சி நிறுவனத்தையும், Income என்ற இன்ஷூரன்ஸ் நிறுவனத்தையும் நடத்தி வருகிறது. அவற்றின் மூலம் ஈட்டும் வருமானம் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு ஈவுத் தொகையாகவும் (டிவிடெண்ட்), ரொக்கத் தள்ளுபடியாகவும் (Cash rebate) அளிக்கப்படுகிறது.
1973ஆம் ஆண்டு உலகச் சந்தையில் கச்சா எண்ணையின் விலை கடுமையாக உயர்ந்த போது பலநாடுகளில் விலைவாசிகள் எகிறின. சிங்கப்பூரில் பணவீக்கம் இரட்டை இலக்கததைத் தொட்டது. காய்கறிகள், மாமிசம், பலசரக்கு, உணவுப் பொருட்கள் ஆகிய அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் தாறுமாறாக விலை ஏறிய போது தொழிலாளர்களை (பொதுமக்களையும்தான்) அந்த விலை உயர்விலிருந்து பாதுகாக்க, என்.டி. யூ.சி வெல்கம் என்ற பெயரில் ஒரு சூப்பர் மார்க்கெட்டைத் தொடங்கியது. அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அது ஃபேர் பிரைஸ் (நியாயமான விலை) என்று பெயரை மாற்றிக் கொண்டு மள மளவென்று வளர்ந்தது. இன்று சிங்கப்பூரில் 100 ஃபேர் பிரைஸ் அங்காடிகள் இருக்கின்றன. அவை தவிர பெட்ரோல் பங்குகளிலும் cheers என்ற பெயரில் சிறுகடைகள் நடத்துகிறது.
இந்த அங்காடிகள் மக்களின் அன்றாட வாழ்வின் அம்சமாகிவிட்டன. இவை வாரம் முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகள். பொருட்களின் விலையும் மற்ற கடைகளோடு ஒப்பிடும் போது மலிவுதான்.என்டியூசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு கழிவு வேறு உண்டு. மூத்த குடிமக்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சலுகை விலையில் பொருட்கள் கிடைக்கும். இதைத் தவிர பாயிண்ட் சிஸ்டமும் உண்டு.வாங்கும் ஒவ்வொரு வெள்ளிக்கும் இரண்டு பாயிண்ட். இவற்றைச் சேர்த்துக் கொண்டே வரலாம். 20 வெள்ளிக்கு மேல் வாங்கும் போது பில்லில் பாயிண்ட்களுக்கு நிகரான தொகையைக் கழித்துக் கொள்ளலாம்.
பேர் பிரைஸ் இப்போது உணவுப் பொருட்கள் மட்டுமின்றி வேறு பலவற்றையும் விற்கின்றன. ஆங் மோ கியோ என்ற இடத்தில் ஒரு பிரம்மாண்டமான சூப்பர் மார்க்கெட்டை அது நடத்துகிறது. 77 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த அங்காடியை ஃபேர் பிரைஸ் எக்ஸ்ட்ரா ஹைப்பர் மார்க்கெட் என அது அழைக்கிறது. அங்கு எலக்ட்ரானிக் பொருட்கள் துணிமணிகள் கூட வாங்கலாம்.
உள்நாட்டில் பெரும் வெற்றி பெற்ற ஃபேர் பிரைஸ் இப்போது அயல் நாட்டிலும் தன் கொடியை நாட்டக் கிளம்பியிருக்கிறது. சீனம், வியட்நாம் ஆகிய இரண்டு நாடுகளிலும் ஹைப்பர் மார்கெட்களைத் திறந்திருக்கிறது
கார்ப்பரேட் பாணியில் நடத்தப்பட்டாலும் தன்னை ஒரு கூட்டுறவு நிறுவனம் என்று சொல்லிக் கொள்கிறது. வியாபாரம் செய்து ஈட்டிய லாபத்தில் தனது உறுப்பினர்களுக்கு சராசரியாக 5 சதவீதம் ஈவுத் தொகையும், அத்துடன் கூடுதலாக 3% கூடுதல் ஈவுத் தொகையும் கொடுக்கிறது.
நான் அங்கு வசித்த போது வாரத்திற்கு இருமுறையாவது ஃபேர் பிரைஸ் அங்காடிக்குச் செல்ல நேரிடும். அப்போதெல்லாம் கோவை சிந்தாமணியும் சென்னை காமதேனுவும் என் மனதில் நிழலாடும். வெற்றிச் சரித்திரங்களாக வரலாற்றில் பதியப்பட்டிருக்க வேண்டிய முயற்சிகள் அவை. எங்கே கோட்டைவிட்டோம்?
என்டியூசி வெற்றி கண்ட இன்னொரு துறை டாக்சி சேவை. சிங்கப்பூர் குடியரசாக ஆன கால கட்டத்தில் அங்கு 36000 டாக்சிகள் ஓடிக் கொண்டிருந்ததாக ஒரு கணக்கு சொல்கிறது அவற்றில் 90 சதவீதம் மூன்று தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. அவை தவிர பலர் தங்களது கார்களை பதிவு செய்யாத டாக்சிகளாக ஓட்டிக் கொண்டிருந்தனர்.கட்டணங்கள் ஆளுக்கும் மனதிற்கும் தகுந்தாற்போல்.
இந்தத் தருணத்தில், 1970ல் என்டியூசி டாக்சி சேவைகள் அளிக்க 1000 வண்டிகளுடன் களமிறங்கியது. 1973ற்குப் பிறகு டாக்சிக்கான பெர்மிட்கள் என்டியூசிக்கு மட்டும்தான் அளிக்கப்படும், தனியாருக்கு வழங்கப்படமாட்டாது என அரசு அறிவித்தது. அதோடு அந்த காலகட்டத்தில் டீசல் டாக்ஸ் என்ற ஒரு புதிய வரியும் விதிக்கப்பட்டது. பல தனியார் டாக்சி நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குச் சென்ற போது அதன் தொழிலளர்கள் என்டியூசிக்கு மாறினார்கள்.
காலத்திற்கு ஏற்ற பல புதுமைகளை என்டியூசி கம்ஃபர்ட் அறிமுகப்படுத்திக் கொண்டே வந்தது. அவற்றில் ஒன்று 80களில் அறிமுகப்படுத்தப்பட்ட ரேடியோ டாக்சி. நீங்கள் தொலைபேசி மூலம் டாக்சியை அழைக்கலாம். ரேடியோ அலைகள் மூலம், உங்களிடத்திற்கு அருகில் உள்ள டாக்சிக்குத் தகவல் சொல்லப்பட்டு,அவை நீங்கள் இருக்குமிடத்திற்கு வரும். (இப்போது மொபைல் தொலைபேசிகளில் செயலியைப் பயன்படுத்தி டாக்சியை பதிவு செய்வது போல) பின்னர் டிஜிட்டல் மீட்டர்கள் வந்தன. ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட டாக்சிகள் வந்தன. இன்று சிங்கப்பூரில் எல்லா டாக்சிகளுமே ஏர்கண்டிஷன் செய்யப்பட்டவைதான். அதற்குத் தனிக் கட்டணம் கிடையாது.
அண்மைக்காலமாக கம்ஃபர்ட் ஊபரின் போட்டியை எதிர் கொண்டு வருகிறது.என்றாலும் விமான நிலையம் போன்ற சில இடங்களுக்கு ஊபர் டாக்சிகளைப் பயன்படுத்த முடியாது.
என்டியூசி முதலில் தொடங்கிய நிறுவனம் இன்கம் என்ற இன்ஷீரன்ஸ் நிறுவனம்.. 1969ல் ‘தொழிற்சங்கங்களை நவீனப்படுத்துதல்’ என்று ஒரு கருத்தரங்கு நடத்தப்பட்டது. அதில் என்டியூசியின் நிறுவனரான தேவன் நாயர், தொழிற்சங்கங்கள் கூட்டுறவுத் தொழில் நிறுவனங்களாக –இப்போது அவற்றை social enterprises என்று அழைக்கிறார்கள்- மாற வேண்டிய அவசியத்தைப் பற்றிப் பேசினார். அதன் பின் 1970களில் இன்கம் என்ற இன்ஷூரன்ஸ் நிறுவனம் உதயமாயிற்று.. அன்று இன்ஷூரன்ஸ் என்பது வசதி படைத்தவர்களுக்கானதாக மட்டும் இருந்தது. இன்கம் என்டியூசி உறுப்பினர்களுக்கு ஆயுட்காப்பீடு அளிப்பதில் ஆரம்பித்தது. பின்னர் மருத்துவக் காப்பீடு, வாகனங்களுக்கான காப்பீடு என விரிவடைந்தது. இன்று அது 20லட்சம் பேருக்கு சேவை அளித்துக் கொண்டிருக்கிறது.
தொழிற்சங்கம் என்றால் எப்போதும் பேச்சு வார்த்தை, பேரம், போராட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம், மறியல், வேலை நிறுத்தம், கொடி, கோஷம் என்று இருக்க வேண்டியதில்லை, மாறாக அவை சமூகத்திற்குப் பயனளிக்கும் வணிக நிறுவனங்களாக மாறி, நியாயமான விலையில் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள்,ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு, பொதுமக்களுக்கு பிரச்சினை இல்லாத பொதுப் போக்குவரத்துச் சேவை இவற்றை வழங்கலாம், அப்படி வழங்குவதன் மூலம் கிடைக்கும் லாபத்தை தொழிற்சங்க உறுப்பினர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கலாம் என்று மெய்ப்பித்துக் காட்டுகிறது சிங்கப்பூர்.
இந்த யோசனையை அங்கு விதைத்தவர் தமிழ் பேசிய இந்தியர். அவர் திரு.தேவன் நாயர். ஆனால் அவர் வாழ்க்கை ஒரு துன்பியல் நாடகம் போன்றது!
-அது அடுத்த வாரம்