வெள்ளை வேட்டியை விரித்தது போல் வெளியே வெயில் தகதகத்துக் கொண்டிருந்தது.சித்திரை இன்னும் பிறக்கவில்லை. ஆனால் அன்று அதிகமாக ஒரு கைப்ப்பிடி உண்டுவிட்டேனோ என்னவோ நித்திரை நெருங்கி வந்தது.தூக்கத்தைத் துரத்தத் துணிந்தேன்.புத்தகங்கள் அடுக்கியிருந்த பக்கத்து அறைக்குப் போனேன்.சில எழுத்துக்கள் நமக்கு விழிப்புணர்வு கொடுக்கும்.சில புத்தகங்கள் நம்மைத் தூங்க வைக்கும்.
பார்வை புத்தக வரிசைமீது பதிந்திருந்த போது மனதில் நகை ஒன்று நடந்து கடந்தது. சிரிப்புக்குக் காரணம் அண்மையில் நண்பர் சொன்ன ஜோக். “இப்போதெல்லாம் தலையணை தலையணையாகப் புத்தகங்கள் வருகின்றனவே எப்படி இருக்கின்றன?” என்று அவரைக் கேட்டேன். “நல்ல தலையணைக்கான அடையாளம் நம்மைத் தூங்க வைப்பதுதானே?” என்றார் அவர்
தூக்கம் என்ற சொல் நித்திரை என்பதற்கு நிகரான சொல்லாகப் பழைய இலக்கியங்களில் பயன்படுத்தப்படவில்லை. அன்று தூங்குதல் என்றால் தொங்குதல் என்று அர்த்தம். அன்று தொங்கிக் கொண்டிருந்த ஒன்று இன்று விழுந்து கிடக்கிறது.
இன்றையத் தூக்கத்திற்கு அன்றையத் தமிழ்ச் சொல் உறக்கம். சொற்களை அழகுற அடுக்கிக் கொண்டு போவதில் கம்பனுக்கு இணை இன்று வரை எவருமில்லை. எவை எவை எங்கெங்கு உறங்குகின்றன என்று அவர் ஒரு பட்டியல் போடுகிறார்:
நீரிடை உறங்கும் சங்கம்;
நிழலிடை உறங்கும் மேதி;
தாரிடை உறங்கும் வண்டு;
தாமரை உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை;
துறையிடை உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம்;
பொழிலிடை உறங்கும் தோகை
சங்கம் என்றால் சங்கு. மேதி என்றால் எருமை. செய்யாள் என்பது லட்சுமி. இப்பி என்பது சிப்பி. போர் என்பது வைக்கோல் போர்
கம்பனைப் போல் ஆண்டாள் பட்டியலிடவில்லை. போகிற போக்கில் அந்தக் கவிமேகம் பேருறக்கம் (‘ஈதென்ன பேருறக்கம்’) என்று ஒரு சொல்லைப் பெய்துவிட்டுப் போகிறது.
பேருறக்கம் என்றால் கும்பகர்ணன்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் கம்பனைப் படித்தவர்கள் (ராமாயணம் கேட்டவர்கள் அல்ல) கும்பகர்ணனைக் கொண்டாடவே செய்வார்கள். அப்படிக் கும்பனைப் பற்றிக் கம்பன் என்ன சொல்கிறார்? ‘எளிய வாழ்வு வாழ்பவன், குணத்திலும் ஒழுக்கத்திலும் தாழ்வில்லாதவன்.தானுயுர்ந்த தவத்தினன். வானுயர்ந்த வரத்தினன்’. அதையெல்ல்லாம் விட என்னை ஈர்த்த அவனது குணம் ”ஆவது ஆகும்,காலத்து அழிவதும் அழிந்து சிந்திப் போவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்” என்று நம்பியவன். இதை இன்றையத் தமிழில் சொன்னால் ஒரு பொருள் கை கூடி வரும் நேரத்தில் தானே கைகூடி வரும். போக வேண்டிய காலம் வந்தால் எவ்வளவுதான் பாதுகாத்தாலும் ஒழிந்து போகும். இந்த முதிர்ச்சி வந்து விட்டால் மனிதருக்குக் கவலை ஏது? கவலை இல்லாதவன் ஆழ்ந்து உறங்குவதில் என்ன அதிசயம்?
ஆழ்ந்து உறங்குகிறவனைச் சித்தரிக்கிற கம்பன், தூங்காமல் விழித்திருக்கிற ஒரு பாத்திரத்தையும் குறிப்பிடுகிறார். அந்தப் பாத்திரத்தை ‘உறங்கா வில்லி’ என்று ஒரு சொல்லால் குறிக்கிறார். அந்தப் பாத்திரம் லட்சுமணன்.காட்டில் ராமன் இருந்த காலம் முழுவதும் தூங்காமல் விழித்திருந்து ‘ அல்லையாண்டு அமைந்த மேனி அழகன்’ ராமனையும், அண்ணியையும் காத்தார் என்பதால் இளைய பெருமாளுக்கு இந்தப் பெயர்.
இதற்குச் சுவையேற்ற சொற்பொழிவாளர்கள் குட்டிக்கதை ஒன்றைக் கூறுவதுண்டு. எவனொருவன் 14 ஆண்டுகள் தூங்காமல் விழித்திருக்கிறானோ அவனே தன்னைக் கொல்ல முடியும் என்று இந்திரஜித் ஒரு வரம் வாங்கி வைத்திருந்தானாம். அப்படித் தூங்காமல் விழித்திருந்ததால்தான் லட்சுமணனால் இந்திரஜித்தைக் கொல்ல முடிந்தது என்பார்கள் அவர்கள்.
தூக்கத்தைப் பற்றி எத்தனை கதைகள்! தூங்குவதற்காகக் குழந்தைகளுக்குக் கதை சொல்கிறோம். ஆனால் தூங்காமல் இருப்பதற்காகக் கதைகள் சொல்லப்படுவதும் உண்டு. நான் குறிப்பிடுவது ஆயிரத்தொரு இரவுக் கதைகளை மட்டுமல்ல. (அலாவுதீனும், அலிபாபாவும், சிந்துபாத்தும் அதில்தான் வருகிறார்கள்) தமிழகத்தின் சில கிராமங்களில் சிவராத்திரியின் போதோ, வைகுந்த ஏகாதசியின் போதோ, இரவெல்லாம் விழித்திருக்க மக்கள் கூட்டமாக உட்கார்ந்து கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் கதை சொல்வார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம்.
ஆனால் வைகுந்தத்தை விட சுகமான சொர்க்கம் காதலியின் தோளில் சாய்ந்து தூங்குவது என்கிறார் வள்ளுவர். (குறள் 1103)
இலக்கியம் இருக்கட்டும், அறிவியல் என்ன சொல்கிறது? மத்தியானம் போடும் குட்டித்தூக்கம் மனதுக்கும் உடம்புக்கும் நல்லதாம். 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று வாஷிங்டன் போஸ்ட் மதியத் தூக்கம் ஹார்ட் அட்டாக்கைக் குறைக்கிறது என்று விரிவாக ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. கிரீஸ் நாட்டை உதாரணம் காட்டிப் பேசுகிறது அந்தக் கட்டுரை. தென்கிழக்கு ஐரோப்பாவில் இருக்கிறது கிரீஸ். தெற்கு ஐரோப்பாவில் மத்தியானத் தூக்கம் வாழ்க்கையின் ஒரு அம்சமாக இருந்தது. ஒவ்வொரு நாட்டிலும் அதற்கு ஒவ்வொரு பெயர். அவற்றில் மிகப் பிரபலமானது ‘சியாஸ்டா’.
சியஸ்டா என்ற ஸ்பானியச் சொல்லின் மூலம் ஒரு லத்தின் சொல். அதற்கு ஆறுமணி நேரத்திற்கு அப்புறம் என்று அர்த்தம். விடிந்ததிலிருந்து கணக்கு. ஆறுமணிக்குப் பொழுது புலர்ந்தது என்றால் உச்சிவேளைக்குப் பிறகு உண்டுவிட்டு உறங்குவது என்பது வேளாண் சமூகங்களில் ஒரு வழக்கமாகவே இருந்தது.கழனி வேலைகளுக்காகவும், கால்நடைகளைப் பராமரிக்கவும் அதிகாலையில் அவர்கள் எழுந்து கொண்டுவிடுகிறார்கள், காலை உணவும் அதிகம் உட்கொள்வதில்லை அதனால் மதியம் ஒரு கட்டுக் கட்டிவிட்டு தூங்கப் போவது அவர்களுக்குக் கலாசாரமாகவே ஆகி விட்டதாம். அங்கு மட்டுமல்ல, எல்லா வேளாண் சமூகங்களிலும், வெயில் பொரியும் நாடுகளிலும், இந்தியா உள்பட, அதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது.
நம் வாழ்க்கை நகர்மயமானபோது நாம் மதியத் தூக்கத்தை இழந்தோம். ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நாகரீகத்தில் அதற்கு இடம் இல்லை. இப்போது கீரிஸிலும், ஸ்பெயினிலும், தென்னமரிக்க நாடுகளிலும் குட்டித் தூக்கம் போடும் வழக்கம் குறைந்து கொண்டு வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அமெரிக்காவும் இங்கிலாந்தும் அதன் அவசியத்தைப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். வேலைக்கு நடுவில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்தால் புத்துணர்வோடு பணிகளைத் தொடர முடிவதால் அதை ‘பவர் நாப்’ (power nap) என்று அழைக்கிறார்கள்.
தமிழர்கள் இதற்கு அற்புதமான சொல்லொன்று வைத்திருக்கிறார்கள். கண்ணயர்தல். மதியத் தூக்கம் கண்ணயர்தல்.இராத் தூக்கம் கண்வளரல்.
இரவுத் தூக்கமும் மதியத் தூக்கமும் ஒன்றல்ல.’கட்டையைப் போல கிடந்து உறங்கினான்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அதைப்போல உருளாமல் புரளாமல் கிடந்த மேனிக்கு உறங்குவது இராத் தூக்கம். மதியம் அதிகம் போனால் அரைமணி நேரத்திற்கு மேல் தூங்க முடிவதில்லை. அதற்குப் பிறகு சோம்பல் முறித்துக் கொண்டு சும்மா படுத்துக் கிடக்கலாம், தூங்க முடிவதில்லை.சுருக்கமாகச் சொன்னால் மரக்கட்டைத் தூக்கம் ராத்தூக்கம்.கோழித்தூக்கம் மதிய உறக்கம்
கோழி தூங்குவதை நான் பார்த்ததில்லை.ஆனால் யானை தூங்கும் படம் ஒன்றைப் பார்த்தேன். சில மாதங்களுக்கு முன் சீனாவில் 16, 17 யானைகள் கூட்டமாகப் ‘பாட்டியின்’ தலைமையில் பயணம் புறப்பட்டன (யானைக் கூட்டங்களை எப்போதும் மூத்த பெண் யானைகள்தான் தலைமை தாங்கி வழி நடத்துகின்றன) யானைகள் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் இடம் பெயர்வது வழக்கம்தான். ஆனால் இம்முறை அவை நீண்டதூரம் -500 கீ.மீ.- தென்மேற்கிலிருந்த காட்டிலிருந்து புறப்பட்டு தெற்கு நோக்கி மியான்மரை நோக்கி பயணிக்கத் தொடங்கின. என்ன காரணம் என்று சூழலியளார்கள் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். இறுதியில் இருக்க இடம் இல்லாததுதான் காரணமாக இருக்கும் என்று முடிவுக்கு வந்தார்கள். சீனாவில் யானைகளைக் கொல்லத் தடை இருக்கிறது. அதனால் அவை இருந்த காட்டில் யானைகள் பெருகிவிட்டன. 173 யானைகள் இருந்த இடத்தில் 300 யானைகளாகிவிட்டன.
அந்த யானைகள் இரவில் தூங்கும் காட்சிகளை டிரோன் மூலம் படம் எடுத்து வெளியிட்டிருந்தார்கள்.அவை மாடுகளைப் போல தரையில் காலை மடக்கி உட்கார்ந்த நிலையில் தூங்கவில்லை. குதிரைகள் நின்று கொண்டு தூங்கும் என்பார்கள். அவை அப்படியும் தூங்கவில்லை. மனிதர்களைப் போல உடலைப் பக்கவாட்டில் கிடத்தி செளகரியமாகக் காலை நீட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தன. யானைகள் துதிக்கையைத் தரையில் கிடத்தித் தூங்கும் என்கிறது புறநானுறு.
யானைப் போல் தூங்கினாலும் சரி, கோழியைப் போல் தூங்கினாலும் சரி, இரவிலோ பகலிலோ நன்றாகத் தூங்குங்கள். மாலனைப் போல –அதாவது விஷ்ணுவைப் போல- ‘அறிதுயில்’ (சுற்றி நடப்பதை அறிந்து கொண்டே தூங்குவது) மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு உதவாது.
குமுதம் 26.1.2022