முகவரி தவறிய கடிதம் ஒன்று என் முன் வாசலில் கிடந்தது. அது என் அண்டை வீட்டுக்காரருக்கானது. ஆனால் அவர் வீட்டைக் காலி செய்து கொண்டு போய் வெகு நாட்களாகியிருந்தன. புதிதாய்ப் போன இடத்தின் முகவரியை ஏனோ அவர் எனக்குக் கொடுக்கவில்லை. அந்தக் கடிதத்தின் உறையை ஒரு முறை பார்த்தேன். அனுப்பியவரின் முகவரியும் அதில் இல்லை. அடுத்தநாள் தபால்காரரைப் பார்த்தால் அவரிடம் கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவரும்தான் என்ன செய்வார்? ’அவ்வளவுதான், அந்தக் கடிதத்தின் பயணம் முடிந்துவிட்டது’ என மனதில் ஒரு வரி ஓடி மறைந்தது.
அந்தக் காலத்தில் இந்த மாதிரிக் கடிதங்கள் ’டெட் லெட்டர் ஆபீசு’க்கு அனுப்பப்பட்டுவிடும் எனச் சொல்வார்கள். மரணிக்கும் கடிதங்கள் என்ற சொல் யார் மனதையோ உறுத்தியிருக்க வேண்டும், அந்த அலுவலகத்தின் பெயரை இப்போது திரும்பி வந்த கடிதங்களின் அலுவலகம் என மாற்றி விட்டார்கள் எனக் கேள்விப்படுகிறேன்.
மாறிப்போன முகவரி கொண்ட கடிதங்கள் மரித்துப் போவது இருக்கட்டும். மரணமே கூட சில நேரங்கள் முகவரி மாறிய கடிதங்கள்தான். இளம் வயதில் இறந்து போகும் நண்பர்களின் இழப்பை வேறு எப்படி நான் விளங்கிக் கொள்ள?
இருக்கும் போது முகவரி மாறிப் போவதை விடப் பெருந்துயரம் இறந்த பின்பு மாறிப் போகும் முகவரிகள். அந்தத் துயரம் அண்டன் செகாவ்விற்கு நேர்ந்தது.
அண்டன் செகாவ் அற்புதமான சிறுகதைக் கலைஞன். ஆனால் அவன் வாழ்க்கையோ ஒரு துயர நாடகம். மளிகைக்கடைக்காரர் ஒருவரின் மகனாகப் பிறந்தவர் செகாவ், ஆழ்ந்த மத நம்பிக்கை உள்ள அப்பா, கண்டிப்பானவர். அடி பின்னிவிடுவார். கதை சொல்லும் கலையை அம்மாவிடமிருந்து கற்றார் செகாவ். அம்மா ஒரு துணி வியாபாரியின் மகள். வியாபாரத்திற்காகத் துணி மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராகப் போன அவர் கதை மூட்டையைச் சுமந்து கொண்டு திரும்பினார். அவர் சொன்ன கதைகள் செகாவ்வை உலகின் ஓர் சிறந்த எழுத்தாளனாக உருவாக்கியது
ஒப்பற்ற சிறுகதைகளுக்காகவும் நாடகங்களுக்காகவும் உலகப் புகழ் பெற்ற அவர் படித்தது மருத்துவம். ”மருத்துவம் என் மனைவி; எழுத்து என் காதலி” என ஓரிடத்தில் எழுதுகிறார் செகாவ்.
அவரது மரணம் சிறுகதைகளுக்குரிய முரண்களோடும், நாடகங்களுக்குரிய திருப்பங்களோடும் நேர்ந்தது. காசநோயால் அவர் நாளுக்கு நாள் நலிந்து வந்த நேரத்தில், ‘இனித் தேற மாட்டார்’ என எல்லோரும் கைவிட்ட நாள்களில் கூட அவர் நிறையவே எழுதினார். ஆனால் ஓய்வெடுக்கப் போன ஊரில், ஓர் அதிகாலை நேரத்தில் ஒரு கோப்பை ஒயினை அருந்திவிட்டு ஒரு குழந்தையைப் போல் ஒருக்களித்துப் படுத்த அவர் உறங்குவது போல் இறந்து போனார்.
ஆனால் அதன் பின்னர்தான் அந்த அபத்தம் நேர்ந்தது. அவர் உடலை ஓர் ஐஸ் பெட்டியில் வைத்து ஊருக்கு அனுப்பினார்கள். பெட்டியின் மீது பேர் எழுதி ஒட்டும் போது பிசகு நேர்ந்துவிட்டது. ”மீன்” என்று முகவரியிடப்பட்ட பெட்டியில் செகாவின் உடல் ஊர் வந்து சேர்ந்தது. ரயில் நிலையத்தில் அதை அலட்சியமாக எடுத்து ஓர் மூலையில் கடாசினார்கள்.
அந்தப் பெட்டி வந்த நேரம் இன்னொரு உடலும் ஊருக்கு வந்தது. அது கெல்லர் என்ற ராணுவத் தளபதியின் உடல். அந்தப் பெட்டியை செகாவின் உடல் உள்ள பெட்டி என்றெண்ணி ஊர்வலமாக எடுத்துப் போனார்கள். அந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கில் செகாவ்வின் ரசிகர்கள் அழுது கொண்டே அந்தப் பெட்டியைப் பின் தொடர்ந்தார்கள்.
புகழ் என்பது பெயருக்குத்தானே, உடலுக்கா?
விதியின் இந்தக் குறும்பை நான் அவரிடம் விவரித்தபோது அவர் விழுந்து விழுந்து சிரித்தார். அவரை ஒரு பாடகர் என்றுதான் ஊர் அறியும். ஆனால் அவருக்குள் ஒரு இலக்கிய ரசிகர் இருந்தார். அந்த ரசனை அவ்வப்போது கவிதைகளாகக் கசிவதுண்டு. ஓர் உணவு விடுதியில் உட்கார்ந்து கவிதை போன்ற ஒன்றை அவர் எப்போதும் எழுதிக் கொண்டிருப்பார்.இரண்டு மூன்று புத்தகங்களும் இருக்கும்.
நான் அந்த உணவு விடுதியில் அவரை அவ்வப்போது சந்தித்திருக்கிறேன். எழுதுவதற்கு இடைஞ்சலாக இருப்பானேன் என நான் ஒதுங்கிப் போனாலும் இழுத்து வைத்துப் பேசுவார். எழுதியதைப் படித்துக் காட்டுவார்.
எனக்கு அந்தக் குரல் பிடிக்கும். என்னைக் கிறங்க அடித்த குரல். அவர் ஒலித்த அந்த வரிகளில் ஒளிந்திருந்த தொனி – அது ’காலங்களில் அவள் வசந்த’த்தில் கோலமிட்ட உற்சாகமானாலும், ’மயக்கமா தயக்கமா’வில் மண்டிக் கிடந்த சோகமானாலும், ’மெளனமே பார்வையால்’க்குள் மறைந்து சிரிக்கும் நாணமானாலும் சரி – இளம் வயதில் என் மனதை அது எதிரொலித்தது. வாழ்வின் பருவங்களில் வசந்தத்திற்கு உரியது அவர் குரல் அவரது ’தென்னங்கீற்று ஊஞ்சலிலே’வை (கவிதை: ஜெயகாந்தன்) ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன். ஒவ்வொரு முறையும் என்னை உருக்குகிற குரல் அது.
காதல் கசியும் குரல். இலவம் பஞ்சைப் போல ஒரு மென்மையும், ஜரிகைச் சரத்தைப் போல ஒரு ஜொலிப்பும் கலந்த குரல். அந்தக் குரலுக்கு உரியவரை கூற்றுவன் கொண்டு போய்விட்டான் என நேற்றுச் செய்திகள் சொல்லின. அந்த Play Back Singer இனி நான் நேரில் பார்க்க மாட்டேன் என்ற உண்மை உறைக்க எனக்குச் சில நிமிடங்கள் பிடித்தன.
இனி உணவு விடுதியில் அந்த நாற்காலி, கவிதையின்றி யாருக்கோ காத்திருக்கும். கூற்றுவன் உயிரைக் கொண்டு போக முடியும். குரலைக் கொண்டு போக முடியுமா?
புகழ் குரலுக்கா? உடலுக்கா?
புதிய தலைமுறை ஏப்ரல் 26 2013