“உஷா, கொஞ்சம் காபி கொண்டாம்மா”
“என்னப்பா. மறுபடியுமா? இப்பத்தானே குடிச்சேள்?”
“இப்பவா? ரொம்ப நாழியாட்டமாதிரி இருக்கே?”
“இல்லப்பா. உங்களுக்கு காபி கலக்கும் போதுதான் குக்கர் வைச்சேன். அப்போ மணி பத்தரை. இன்னும் பதினொன்றரை கூட ஆகலை”
“கடியாரம் சொன்னாத்தான் காபி குடுப்பியா?”
“ஐயோ ! அதுக்குச் சொல்லலை. இப்ப காபி குடிச்சா எப்ப சாப்பிடுவேள்?”
“ஆமாம், பெரிய சாப்பாடு! இன்னிக்கு என்ன மெனு!”
“வழக்கம் போலத்தான், வெண்டைக்காய் சாம்பார், கொத்தவரங்காய் கறியமுது. சாத்துமது.”
“மோர். நார்த்தங்காய் ஊறுகாய். அதை விட்டுட்டேயே!”
“சரி என்ன பண்ணனும் உங்களுக்கு?”
“நேத்திக்கும் கொத்தவரங்காய் பண்ணினே இல்லியோ?”
“நேத்திக்கு இல்லை. முந்தா நேத்திக்கு”
“கடிகாரம் பார்த்து காபி கொடுக்கறதை விட்ரு. அதுக்கு பதிலா காலண்டர் பார்த்து சமையல் பண்ணு”
“அப்படித்தான் பண்ணிண்டு இருக்கேன். ஏதோ இன்னிக்கு இப்படி ஆயிடுத்து. வாசல்ல வந்தது. சின்னப் பொண்ணுனு பேர் சொன்னா. ஆனா படு கிழவி. பக்கத்து கிராமமாம். கொஞ்சம்தாம்மா இருக்கு. மொத்தத்தையும் வாங்கிக்கங்க. தலைச்சுமை தூக்கிட்டு அலைய முடியலைனா. பாவமா இருந்தது. சொன்ன விலைக்கு கொடுத்தா. கொஞ்சம் ஜாஸ்திதான். இருக்கட்டும் வத்தல் போட்டுக்கலாம்னு நினைச்சேன். வாங்கின முகூர்த்தம் வானம் மூடிண்டிருந்தது. முத்திடப் போறதேனு செலவு பண்ணிண்டு இருக்கேன்”
“என் பேர் நரசிம்மாச்சார். நானும் படு கிழவன்தான், 74 ஆச்சு. செண்டிரல் கவர்மெண்ட்ல டிபன்ஸ் அக்கெளண்ட்ஸ்லிருந்து ரிட்டையர் ஆகி ஒரு மாமாங்கம் ஆறது. நான் தலைச்சுமையோடுதான் சுத்திண்டு இருந்தேன். உன் அத்தைகளுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி கரையேத்திட்டேன்”
“அப்பா, எதுக்கு என்கிட்டேயே இப்போ உங்க பயோடேட்டா?”
“அந்தச் சின்னப் பொண்ணுக்கு மனசு இரங்கற. இந்த கிழவனைக் கண்டுக்க மாட்டேங்கிறியே!”
“ம்க்கும். உங்களுக்கு நரசிம்மாச்சார்னு பேர் வைச்சதுக்கு நக்கலாச்சார்னு பேர் வைச்சுருக்கலாம். காபிதானே? இதோ எடுத்துண்டு வரேன்”
“ சீக்கிரம் வா. நாக்கு நம நமங்கிறது”
“இந்தாங்கோ, சீக்கிரம் குடிச்சிடுங்கோ. சூடு ஜாஸ்தி இல்லை”
“புதுசா போடலையா?”
“டிகாஷன் கார்த்தால இறக்கினது இருந்தது. பால் புதுசா காய்ச்சலை. ஏற்கனவே காய்ச்சினது இருந்தது. சூடு பண்ணினேன். டிகாஷன் ஊற்றினதும் வெத வெதனு ஆயிடுத்து!”
“சர்க்கரை போட்டியோ?”
சக்கரை போடலை. நீங்க கேட்டாலும் போட மாட்டேன். கோவிச்சிண்டாலும் சரி”
“காபிக்கு சக்கரை வேண்டாம்மா. கசப்புதான் அதன் ருசி. கசப்பு எனக்குப் பிடிக்கும்”
“தனியா சொல்லணுமா? எனக்குத்தான் உங்களைத் தெரியுமே?.ஆச்சு போன ஜனவரில நாற்பதை தாண்டிட்டேன். கல்யாணம் ஆகிப் போயி புக்காத்திலிருந்த ஐந்து வருஷம் போக, முப்பத்தி ஐந்து வருஷமா பக்கத்திலிருந்து பார்த்துண்டுதானே இருக்கேன்”
“உங்க அம்மா அம்பது வருஷம் கூட இருந்தா. ஆனா அவளுக்கு நல்லதா காபி போடத் தெரியாது தெரியுமோ? முதல் காபி கொடுக்கும் போதே டம்பளர் அடியில பொடி நிக்கும்”
“அவ போயிட்டா மகராசி. அவளை எதுக்கு இப்போ வம்புக்கு இழுக்கறேள்?”
“இதிலே வம்பு எங்கே வந்தது? நான் உள்ளதைச் சொன்னேன்”
“அவ அப்ராணி. உங்களுக்கு நாக்கு நாலுமுழம். அவளுக்கு வாயே கிடையாது”
“உனக்கு ஒண்ணு தெரியுமா? கசந்து பேசறவா, உள்ளுக்குள்ள இனிப்பா இருப்பா. இனிக்க இனிக்க பேசறவா உள்ளே விஷம் இருக்கும்”
“ஒரு மடக்குதானே குடிச்சேள் அதற்குள்ள உபந்நியாசமா?”
“நான் வேதாந்தி இல்லமா, கணக்கன். நம்பர்ல மட்டுமில்லை. மனுஷாளையும் கணக்குப் போட்டு வைச்சிருக்கேன்”
“சரி, இருக்கட்டும். அரை மணி கழிச்சு சாப்பிட வாங்கோ. சாப்பிட்டு ஒரு தூக்கம் போடுங்கோ. தூங்கி எழுந்திருந்ததும், சூடா, பிரஷ்ஷா, காபி போட்டுத் தரேன்”
“ஐயோ அவ்வளவு நேரம் தாங்காதுமா. அக்கெளண்ட்ஸ் பார்க்கிற வேலையா? நம்பரை பார்த்துண்டே இருந்தா கண்ணு சோர்ந்திரும். அதனால அப்பப்ப போய் ஒரு கப் ஊத்திக்கிறதுதான். அதான் பழக்கமாயிடுத்து.”
“அப்பா இந்த சாக்கை என்கிட்ட எத்தனாவது தரமா சொல்றேள் தெரியுமா? எப்படீனாலும் சரி, இனிமே மூணு மணிக்கு முன்னால காபி இல்ல. சாப்பிட்டு தூங்குங்கோ.”
“காபி சாப்பிடலைனா எனக்கு தூக்கமே வராதும்மா”
“அப்பா, ஒரு கப் காபிக்காக பொய் சொல்லாதீங்கோ. தூக்கம் வராம இருப்பதற்காக காபி குடிப்பா. பரிட்சைக்குப் படிக்கறச்சே பிரண்ட்ஸ் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். நீங்க சொல்றது தலைகீழா இருக்கே”
“இல்லம்மா, என் உடம்பு வாகு அப்படி. என்னைத் தெரிஞ்ச எல்லாருக்கும் அது தெரியும். நான் ரிட்டையாகும் போது ஃபிரண்ட்ஸ் எனக்கு காபி மேக்கர்தானே பிரசெண்ட்டா கொடுத்தா? ஆமா, அது எங்க?”
“அதோட ஜார் உடைஞ்சிடுத்து. வேற கிடைக்கலை”
“பத்திரமா வைச்சுக்கக் கூடாதோ?”
“ஆமா. நாந்தான் வேணும்னு போட்டு உடைச்சேன். மேடையில் வைச்சிருந்ததை எலி தள்ளிடுத்து”
“கோவிச்சுக்காதே. போயிட்டு போறது. ஆனா அது சரியில்லை. டிகாஷன் நீர்க்க இறங்கும். அமெரிக்கா மாதிரி பால் சேர்க்காம, கடுங்காபியா குடிக்கிறவாளுக்குத்தான் அது சரிப்படும். நமக்கெல்லாம் டிகிரி காபிதான் உசிதம்”
“உங்களுக்கே டிகிரி கிடையாது. எஸ் எஸ் எல் சி முடிச்சதும் ஷார்ட் ஹாண்ட் டைப்பிரட்டிங் முடிச்சு வேலைக்குப் போயாச்சு. ஆனா உங்க காபிக்கு டிகிரி வேணும்”
“அது வேற டிகிரி. காபிக்கு இல்லமா. அது பாலுக்கு”
“தெரியும் தெரியும். நீங்க என்ன சொன்னாலும் மூணு மணிக்கு முன்னால காபி கிடையாது”
“ஏன் இப்படி மல்லு கட்றே?”
“அடிக்கடி காபி குடிச்சா உடம்புக்காகாதுப்பா.’ உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்”
“ஆமாம். இன்னும் நூறு வருஷம் இருந்து இந்த தேசத்தை ஆளப்போறேன்! என் மாமனார் பேர்தான் சக்ரவர்த்தி. நானில்ல”
“ராஜ்யத்தை ஆண்டாதானா? பாரதியார் ஆசைப்பட்ட ஆட்சி நடக்கிறதுனு சொல்வேளே, அதப் பார்த்துண்டு அனுபவிச்சிண்டு சந்தோஷமா இருக்கப்படாதா?”
“காபி இல்லேனா நான் செத்துடுவேன்மா1”
*
“நீங்க அவர் மகளா? அவருக்கு என்ன பிராப்ளம்?”
“ டாக்டர், நானே சொல்றேன்”
“இருங்க சார், அவங்க சொல்லட்டும் முதல்ல”
“என் பிரசினையை நான் சொல்லலைனா எப்படி?”
“சரி சார், கோபப்படாதீங்க. சொல்லுங்க”
“தூக்கம் வரமாட்டேங்குது. அப்பப்ப தலை சுத்துது. அடிக்கடி யூரின் போகுது”
“ஆமாம். உங்க பிபி அதிகமா இருக்கு. உங்க வயதுக்கு தூக்கம் வராம இருக்கறது இயல்புதான்”
“ எனக்கு காபி குடிச்சா தூக்கம் வரும் ஆனா இப்பெல்லாம் ராத்ரி ரெண்டு மூணு காபி குடிச்சாலும் தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்”
“காபியா? ராத்ரியா? காபியா, பாலா?”
“டாக்டர். அவர் சரியா சொல்ல மாட்டேங்கிறார். அவர் காபி அடிக்ட். கொஞ்ச நாளா அடிக்கடி யூரின் போகிறார். போகும் போது அடிவயிறு வலிக்கிறது என்கிறார்”
“கீழ வீக்கம் இருக்கா?”
“இல்லை டாக்டர். கால்ல எல்லாம் ஒண்ணும் பிரசினை இல்லை”
“கால் இல்லமா. புராஸ்ட்ரேட்டில”
“அப்டீனா?”
“விரையில வீக்கம் இருக்கா?”
“என்ன டாக்டர். இதெல்லாம் அவளை வைச்சுட்டு கேக்கறீங்க?”
“ஸாரி சார். மேடம், நீங்க கொஞ்சம் வெளிய இருங்க:
“இல்ல, அவ இருக்கட்டும்”
“எனக்கு சங்கடமா இருக்கும் சார்:
“சரி டாக்டர் நான் வெளியே இருக்கேன். செக் பண்ணிட்டு கூப்பிடுங்க!”
“சார். நீங்க இந்த பெட்ல படுங்க. செக் பண்ணிடலாம்”
“படுக்கணுமா?”
“பயப்படாதீங்க. நான் இப்போ சர்ஜரி ஏதும் பண்ணப்போரதில்லை. செக்கப்தான்”
“.ஆ! வலிக்குது டாக்டர், மெல்ல.”
“ ஓகே, ஓகே. தாங்க்யூ ஸார். ஃபார் யுவர் கோ ஆப்பரேஷன். நீங்க பாண்ட் போட்டுக்கலாம். நீங்க உள்ள வரலாம்மா”
“அப்பாக்கு என்ன டாக்டர்?”
“பயப்பட ஒண்ணுமில்லமா. புராஸ்ட்ரேட் என்லார்ஜ்மெண்ட் இருக்கு. தொட்டா கத்தறார். சிவியர் இன்பளமேஷனா இருக்கலாம். இருந்தாலும் கான்சரை ரூல் அவுட் பண்ணிடறது நல்லது.பயாப்சி பார்த்திடலாம்”
“ஐயோ, கான்சரா?”
“அவசரப்படாதீங்க. ரிசல்ட் வரட்டும். . அதுவரைக்கும் மாத்திரை தரேன்.”
“டாக்டர்.! நான் ஒண்ணு கேக்கலாமா?”
“கேளுங்க ஸார், என்ன சந்தேகம்னாலும் நல்லா கேளுங்க!”
“ உங்க ஆஸ்பத்ரி கேண்டீன்ல, காபி நல்லா இருக்குமா?”
“அது எனக்குத் தெரியாது. ஏன்னா, நான் காபியே குடிக்கிறதில்ல”
*
“ ரிப்போர்ட் என்ன சொல்லுது டாக்டர்? கான்சரா?”
“நல்ல வேளை! இல்லமா. ஆனா டி.ஆர்.யூ.பி. பண்ணி, இன்ஃபிளேம்ட் செல்சை ஃபிளஷ் பண்ணிறது நல்லது”
“அப்டீனா என்ன? சர்ஜரியா?”
“அதை நாங்க சர்ஜரினு சொல்லமாட்டோம். அது வெறும் புர்சீஜர்தான்”
“அட்மிட் பண்ணனுமா?”
“ஆமாம். மூணுநாலு நாள் இருக்க வேண்டியிருக்கும். இரண்டு நாள்ல அனுப்ப முயற்சி பண்றேன். ஆனால் வீட்டில் இரண்டு மூணு வாரம் ரெஸ்ட்டில் இருக்கணும்”
*
“என்னாச்சு சிஸ்டர்? அப்பாவை ஏன் ஐசியூக்கு கொண்டு போறீங்க?”
“ஒண்ணுமில்லீங்க. மயக்க மருந்து கொடுத்திருக்காங்க. நினைவு திரும்ப மூணு நாலு மணி நேரமாகலாம். அதுவரைக்கும் மானிட்டர் பண்ணனும். அதற்காகத்தான்”
“நான் கூட இருக்கலாமா?”
“நீங்க இருந்து என்ன செய்யப்போறீங்க. ஐசியூங்கிறதுனாலா நீங்க இருக்க முடியாது. வெளில கண்ணாடிக் கிட்ட இருந்து பாருங்க. கண்முழிச்சதும் நாங்களே கூப்பிடறோம்”
*
“போய்ப்பாருங்க, கண் முழுச்சிட்டாரு”
“என்னம்மா, என்னை இப்படி அம்போனு விட்டுட்டுப் போயிட்ட?”
“நான் எங்கேயும் போலப்பா. இங்கதான் இருக்கேன்”
“தாகமா இருக்கு. ஒரு கப் காபி கொடுமா”
“இருங்கப்பா பாக்கறேன்”
“என்னத்தை பாக்கப்போற?”
“இல்லப்பா, டாக்டர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிர்ரேன்”
“சிஸ்டர், காபி கேட்கறாரு, கொடுக்கலாமா?”
“மூச்! தண்ணி கூட குடுக்கக் கூடாது. அவங்க அப்படித்தான் கேட்பாங்க. ஆனா குடுத்திறாதீங்க மயக்க மருந்து கொடுத்திருக்கில்ல.”
“என்னம்மா காபி வாங்லையா?”
“தண்ணி கூட கொடுக்கக் கூடாதுங்கிறாங்க!”
“அவங்க அப்படித்தான் சொல்வாங்க! எல்லாம் பணம் புடுங்க”
“அப்பா இப்போ சண்டை வேண்டாம்!”
“ரொம்ப தாகமா இருக்குமா?”
“சிஸ்டர். ரொம்ப தாகமா இருக்குங்கிறாங்க, கொஞ்சமா கொடுத்துப் பார்க்கலாமா?”
“சொன்னா கேளுங்க. உங்க நல்லதுக்குத்தான் சொல்றோம். கொடுத்தா வாந்தி எடுத்துருவாரு. டாக்டர் என் தோலை உரிச்சிருவாரு”
“என்னம்மா? காபி கிடைக்கலையா?”
“குடுக்கக் கூடாதுங்கிறாங்கப்பா!”
“காபி இல்லேனா நான் செத்துருவேன்!”
“,,,,,”
“காது கேட்கலையா? காபி இல்லைனா நான் செத்துருவேன்!”
*
“ஸாரி. திஸ் இஸ் மோஸ்ட் அன் எக்ஸ்பெக்டட், அப்போ, புரசீர்ஜர் போது, ஸ்டேபிளாத்தான் இருந்தாரு. இது சடன் ஹார்ட் அட்டாக், இதற்கும் நாங்க செய்த புரோசீஜருக்கும் சம்பந்தம் இல்லை.. பட் ஹாஸ்பிட்டல் கட்டணத்தில உங்களுக்கு கன்சஷன் கொடுக்கச் சொல்றேன். ஆம்புலன்சிற்கும் நீங்க ஏதும் கொடுக்க வேண்டாம். ஸாரி.வீ ஆர் வெரி ஸாரி!”
^
“வாங்க உஷா. எப்படி இருக்கீங்க? அப்பா போய் ஒரு வருஷமாச்சு. ஆனா உங்க பழைய சிரிப்ப முகத்தில காணோமே?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல. நல்லாதான் இருக்கேன். போன மாசம் கூட கவிதைக் குயில்கள் கூட்டத்திற்கு வந்திருந்தேனே. இப்ப கூட பாலகுமாரன் புஸ்தகத்தைத் திருப்பிக் கொடுக்கலாம்னுதான் வந்தேன்”
“வந்தது சந்தோஷம் கொஞ்சம். உட்காருங்க. காபி குடிக்கிறீங்களா? எங்க வீட்டுக் காபி பிரமாதமா இருக்கும்”
கண நேரம் சுவற்றையே பார்த்துக் கொண்டிருந்தாள் உஷா. அடக்கமாட்டாமல் அவளுக்குள் இருந்து ஒரு விம்மல் வெடித்துப் பீறிட்டது.
***
லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2023