காந்தியை மாற்றிய தமிழ்நாடு

maalan_tamil_writer

 காந்தியின் தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல,  இந்தியாவின் அரசியலிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது அவரது தமிழகப் பயணங்கள்

காந்தி தனது வாழ்நாளில் இருபது முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றிருக்கிறார்.. ஒவ்வொரு பயணமும் அவரது வாழ்விலும் இந்தியாவின் வரலாற்றிலும் திருப்பு முனையாக அமைந்தன, ஆடை மாறியது மட்டுமல்ல, அரசியல் மாற்றங்களும் தமிழகப் பயணத்தால் விளைந்தன

1896க்கும் 1946க்கும் இடைப்பட்ட 50 ஆண்டுகளில் இருபது முறை தமிழ்நாட்டிற்கு வந்தார். சென்னைக்கு மட்டுமல்ல, மதுரை, திருச்சி, நெல்லை போன்ற முக்கிய நகரங்களுக்கு மட்டுமல்ல, காரைக்குடி, தேவகோட்டை, ராமேஸ்வரம், விருதுநகர், கடலூர், தென்காசி போன்ற சிறிய நகரங்களுக்கும்,  சமயநல்லூர், குன்றக்குடி, பலவான்குடி, கோட்டையூர், அமராவதி புதூர், கானாடுகாத்தான், பள்ளத்தூர், வேலங்குடி, போன்ற சிற்றூர்களுக்கும் கூடச் சென்றார்.ஏன், நீலகிரி மலைப்பகுதிகளில் உள்ள கோத்தகிரிக்கும் அதன் அருகில் உள்ள கிராமங்களுக்கும் சென்றார். ஒரு முறை பரங்கிப்பேட்டையிலிருந்து கடலூர் வரை சரக்கு ரயிலில் (குட்ஸ் டிரெயின்) பயணம் கூடச் செய்திருக்கிறார்.!

முதல் பயணம்

காந்தி இந்திய அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பே சென்னைக்கு வந்திருக்கிறார்.1896 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முறையாகச் சென்னைக்கு வந்தார் காந்தி. அப்போது அவர் தென்னாப்ரிக்காவில்  வழக்கறிஞராகத் தொழில் செய்து வந்தார். அங்குள்ள இந்தியர்களுக்கு உரிமைகள் கிடைக்கப் போராடி வந்தார். தென்னாப்ரிக்காவில் தமிழர்கள் பலர் இருந்தனர். அவர்கள் இங்கிருந்து, அங்குள்ள தோட்டங்களில் வேலை செய்ய கொத்தடிமைகளாக வேலை செய்ய கொண்டு செல்லப்பட்டவர்கள் அல்லது அவர்களது வம்சாவளியினர்.

தென்னாப்ரிக்காவில் தான் நடத்தி வந்த போராட்டங்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக காந்தி சென்னை வந்தார். 1896 அக்டோபர் மாதம் 26ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அதில் “நம்மை அவர்கள் வீட்டு விலங்குகள் மாதிரி நடத்துகிறார்கள்.. சுகாதாரக் கேடான பகுதிகளில் அடைத்து வைத்திருக்கிறார்கள். பின் நம்மை “அழுக்குப் பிடித்த வழக்கங்களை உடையவர்கள் இந்தியர்கள்’ என்று தூற்றுகிறார்கள்” என்று சீற்றம் வெளிப்படப் பேசினார்.

அவருடைய இந்தப் பேச்சு பத்திரிகைகளில் வெளியானது. அதனால் தென்னாப்ரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் உண்மை நிலை, தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள பலருக்கும் தெரிய வந்தது.

தனது தென்னாப்ரிக்கப் போராட்டத்திற்கு நிதி திரட்ட அவர் ஒரு புதிய வழியை மேற்கொண்டார். ‘பச்சைத் துண்டுப் பிரசுரம்’ என்ற ஒரு சிறிய நூலை அச்சிட்டு அதை விற்பனை செய்தார்..தென்னாப்ரிக்கவில் இந்தியர்களின் நிலையை விவரிக்கும் சிறிய நூல் அது. எடுத்த எடுப்பிலேயே அது பத்தாயிரம் பிரதிகள் விற்றது. (அன்றைக்கு, ஏன் இன்றைக்கும் கூட அது பெரிய எண்ணிக்கைதான்) அதன் பின் இரண்டாவது பதிப்பு வெளி வந்தது

அவர் தனது முதல் பயணத்தின் போது சென்னையில் 14 நாட்கள் தங்கினார்.. அப்போது ஒரு புத்தகக் கடைக்குச் சென்று ஐந்து தமிழ்ப் புத்தகங்கள் வாங்கினர். அவருக்கு அப்போது தமிழ்ப் படிக்கத் தெரியாது. தென்னாப்ரிக்காவில் உள்ள தனது தமிழ் நண்பர்களுக்குக் கொடுக்க அவற்றை அவர் வாங்கியிருக்க வேண்டும். பின் தனது தென்னாப்ரிக்க நண்பர்கள் மூலம் தமிழ்க் கற்றார் காந்தி. திருக்குறளைத் தமிழிலேயே படிக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்க் கற்றார் எனச் சொல்வதுண்டு. எட்டையபுரத்தில் பாரதிக்கு மணிமண்டபம் கட்ட்ப்பட்டபோது அதற்கான வாழ்த்துச் செய்தியை தமிழிலேயே எழுதி, ‘மோ.க. காந்தி’ எனத் தமிழில் கையெழுத்திட்டு அனுப்பினார்.

தமிழர்கள் தந்த மகாத்மா பட்டம்

காந்திக்கு மகாத்மா  என்ற பட்டத்தைத் தாகூர் வழங்கினார் என்றுதான் பலரும் எழுதியும் பேசியும் வருகிறார்கள். தாகூர் 1915ஆம் ஆண்டு ஜனவ்ரி 21ஆம் தேதி இந்தப் பட்டத்தை வழங்கினார் என்று வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன. ஆனால் அதற்கும் முன்பே, 1912ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி, சுதேசமித்ரன் நாளிதழ் தனது தலையங்கத்தில் “தென்ஆபிரிகா இந்தியரின் கஷ்டங்களை நிவர்த்தி செய்ய வேண்டுமென்று தீஷை செய்து கொண்டிருக்கும் மிஸ்டர் காந்தி, ஒரு மகாத்மாவோ, ஈஸ்வராவதாரமோவென்று உலகோர் நினைக்கும்படி தன் மறுப்பையும், உறுதியையும் சாவதானத்தையும் காட்டி வருகிறார்” என்று எழுதியது. எனவே காந்தியை முதன் முதலில் இந்தியாவில் மகாத்மா என்று அழைத்தவர்கள் தமிழர்கள்தான்.

“முதலில் என்னைச் சுடு”

தென்னாப்ரிக்காவில் காந்தியோடு சேர்ந்து போராடங்களில் ஈடுபட்டவர்களில் தமிழ்ப் பெண்ணான வள்ளியம்மை ஒருவர். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள தில்லையாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர்.. தென்னாப்ரிக்காவில் ஒருமுறை டிரான்ஸ்வால் என்ற இடத்திலிருந்து நடால் என்ற நகரம் வரை காந்தி, ஏராளமான  தொண்டர்களோடு ஒரு நடைப் பயணத்தை நடத்தினார். அந்தப் பயணத்தின் போது அவரைச் சுட்டுவிடப் போலீஸார் திட்டமிட்டனர். ஒரு போலீஸ் அதிகாரி காந்தியைச் சுடக் குறி வைப்பதைக் கண்ட வள்ளியம்மை குறுக்கே புகுந்து “ முதலில் என்னைச் சுடு” என்று மறித்து நின்றார். இதை எதிர்பாராத போலீஸ் சுடும் முயற்சியைக் கை விட்டது. அன்று அந்தத் துப்பாக்கிச் சூடு நடந்திருந்தால் இந்தியாவிற்கு காந்தி என்ற தலைவரே கிடைத்திருக்க மாட்டார். அன்று காந்தியின் உயிரைக் காத்து நின்றது ஒரு தமிழ்ப் பெண்தான். பெண் என்பது கூடத் தவறு. ஒரு சிறுமி என்றுதான் சொல்ல வேண்டும். இந்தச் சம்பவம் நடந்த போது வள்ளியம்மைக்கு வயது 15. அந்தப் போராட்டத்தில் சிறை சென்று பின் மீண்ட வள்ளியமை தனது 16 வயதில், தான் பிறந்த நாளன்று (பிப்ரவரி 22) இறந்து போனார்.

ஒரு முறை தமிழகத்திற்கு வந்த காந்தி, வள்ளியம்மையின் கிராமமான தில்லையாடிக்குச் சென்று அஞ்சலிக் கூட்டம் ஒன்றை நடத்தினார் (அந்தக் கூட்டம் நடந்த இடத்தில் இப்போது வள்ளியம்மைக்கு ஒரு நினைவுச் சின்னம் இருக்கிற்து)

ரெளலட் சட்ட எதிர்ப்பு

காந்தி இரண்டாம் முறையாகச் சென்னை வந்தது 1919 மார்ச் இறுதியில். அப்போது இங்கு 12 நாள் தங்கியிருந்தார் (இப்போது ராதக்கிருஷ்ணன் சாலையில் சோழா ஓட்டல் அமைந்துள்ள இடத்தில் அப்போது கஸ்தூரி ஸ்ரீநிவாச அய்யங்கார் வீடு இருந்தது. அதில் தங்கினார்) அவர் சென்னையில் தங்கியிருந்த போது ஆங்கிலேயே அரசு, “ரெளலட் சட்டம்” என்று அழைக்கப்படும் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது. அப்போது ஆயுதப் புரட்சியின் மூலமாக சுதந்திரம் பெறுவது என்ற இலட்சியத்துடன் இந்தியாவில் பல இயக்கங்கள் தோன்றியிருந்தன. அவற்றை ஒடுக்கும் நோக்கத்தோடு இந்தச் சட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரை காரணம் சொல்லாமல் கைது செய்யலாம். இந்தியாவில் உள்ள எந்தச் சிறையிலும் அடைக்கலாம். பிணை (ஜாமின்) கிடையாது. மேல் முறையீடு செய்ய முடியாது.

காந்திக்கு ஆயுதப் புரட்சியில் நம்பிக்கை கிடையாது. ஆனால் சட்டத்தின் கடுமையான விதிகளை அவர் கடுமையாக எதிர்த்தார். சட்டத்தைக் கண்டிக்கும் விதமாக நாடு தழுவிய கடையடைப்பிற்கு அறைகூவல் விடுத்தார். ஏப்ரல் ஆறாம் தேதி சென்னையிலிருந்துதான் அந்த அறை கூவல் விடுக்கப்பட்டது. மக்கள் அரசு விழாக்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

நாடு முழுவதும் ரெளலட் சட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஏப்ரல் 13  அன்று அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலா பாக் என்ற இடத்தில் கூடிய மக்கள் ஆயிரம் பேருக்கு மேல் குருவிகளைப் போலச் சுட்டுக் கொல்லப்பட்டனர். பத்து நிமிடத்திற்குள் 1650 முறை குண்டுகள் சுடப்பட்டன.

ஜின்னா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார். தாகூர் ஆங்கிலேயே அரசால் தனக்களிக்கப்பட்ட சர் பட்டத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையான அறைகூவல் சென்னையில் இருந்துதான் விடப்பட்டது

 “பாரதியைப் பாதுகாக்க வேண்டும்”

காந்தி சென்னையில் தங்கியிருந்த போது, அவரை சந்திக்க பாரதியார் வந்தார். “:மிஸ்டர் காந்தி! இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்கு தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?” என்று கேட்டார். காந்தி தனது செயலாளரிடம், “மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவலல்கள் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர்  “இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு, நாம் வேறோர் இடத்தில் இருக்க வேண்டும்” என்றார். உடனே காந்தி, “அப்படியானால், இன்றைக்கு வசதிப்படாது. தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப் போட முடியுமா?” என்று பாரதியிடம் கேட்டார். பாரதியார்: “முடியாது. நான் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி! தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டார்.. பாரதியார் வெளியே போனதும், “”இவர் யார்?”” என்று காந்தி கேட்டார். தாம் ஆதரித்துவரும் பாரதியாரைப் புகழ்ந்து சொல்வது நாகரிகம் அல்ல என்று நினைத்தோ என்னவோ, ரங்கசாமி அய்யங்கார் பதில் சொல்லவில்லை. காந்தியின் மெத்தையில் மரியாதை தெரியாமல் பாரதியார் உட்கார்ந்துகொண்டார் என்று கோபங்கொண்டோ என்னவோ சத்தியமூர்த்தி வாய் திறக்கவில்லை. ராஜாஜிதான், “”அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி”” என்று சொன்னார். அதைக் கேட்டதும், “”இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?”” என்றார் காந்தி. எல்லோரும் மௌனமாக இருந்துவிட்டார்கள். இந்த சம்பவத்தை பாரதியின் நெருங்கிய நண்பரும் பின்னாள் மணிக்கொடி, வீரகேசரி பத்திரிகைகளின் ஆசிரியாராக இருந்த வ.ராமசாமி தனது நூலில் எழுதியிருக்கிறார்.

ஆடையை மாற்றிய தமிழகம்

காந்தி தமிழ்நாட்டில் அதிகம் முறை சென்ற நகரம் மதுரை. ஐந்து முறை அங்கு சென்றிருக்கிறார். 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 20 முதல் 22 வரை மதுரையில் தங்கியிருந்த போதுதான் அவர் மேற்சட்டை அணியாமல், இடுப்பில் அரை வேட்டி மட்டும் உடுத்துவது என்ற முடிவெடுத்தார்.

காந்தி தென்னாப்ரிக்காவிலிருந்து திரும்பிய பின், அந்தக் காலத்தில் படித்தவர்கள் அணிவது போன்று கோட் சூட்தான் அணிந்து வந்தார். பிகாரில் சம்ப்ராண் என்ற மாவட்டத்தில் வெள்ளைகாரர்களின் நிலத்தில் வேலை செய்து வந்த விவாசாயிகள் கொத்தடிமைகளைப் போலக் கொடுமைப்படுத்தப்பட்டு வந்தனர். அவர்களுக்காகப் போராட 1917 நவம்பர் 8ஆம் தேதி சம்ப்ராணுக்குச் சென்றார். விவசாயத் தொழிலாளிகளில் பெண்களும் கணிசமான அளவில் இருந்ததால், அவர்களிடம் எடுத்துச் சொல்ல, எளிதாக இருக்கும் என்பதற்காகத்  தன்னுடன் தன் மனைவி கஸ்தூரிபாவையும் அழைத்துச் சென்றார்.  விவசாய வேலை செய்யும் பெண்கள் தினசரி குளித்து, சுத்தமான ஆடை உடுத்தினால் சுகாதாரமாக இருக்கலாம் என்பதை தனது மனைவி கஸ்தூரிபாய் மூலம் கிராமப் பெண்களுக்கு அறிவுறுத்தினார் காந்தி.

அதைக் கேட்ட ஒரு பெண் கஸ்தூரிபாவை விடுவிடுவென தனது குடிசைக்கு அழைத்துச் சென்றார். “இங்கே ஏதாவது பெட்டியோ, அலமாரியோ இருக்கிறதா பாருங்கள்” என்றார். கஸ்தூரிபா சுற்றும் முற்றும் பார்த்தார். மூலையில் ஒரு மண் அடுப்பும் பாத்திரங்களும் மட்டும் இருந்தன. அலமாரியோ பெட்டியோ இல்லை. “ எங்களிடம் துணிகள் கிடையாது. என்னிடம் இருப்பது ஒரு புடவைதான். குளித்தால் அது உலர்ந்தால்தான் வெளியே வேலைக்குச் செல்ல முடியும்.இந்த நிலையில் நீங்கள் தினம் குளி என்று அறிவுரை சொல்கிறீர்கள்!” என்று சொன்னார். அந்தப் பெண்ணின் நிலைமையைக் காந்தியிடம் சொன்னார் கஸ்துரிபா. தனது தலைப்பாகையைப் பிரித்து அந்தப் பெண்ணிடம் கொடுக்கும்படி கொடுத்து அனுப்பினார். பத்து கஜம் உள்ள என்னுடைய தலைப்பாகை இன்னொரு பெண்ணுக்கு மானம் காக்க உதவும் என்று சொல்லி அன்றிலிருந்து காந்தி தலைப்பாகை அணிவதை விட்டுவிட்டார்.

அதன் பின் சில ஆண்டுகள் கழித்து, 1921ஆம் ஆண்டு மதுரைக்குச் சென்னையில் இருந்து ரயிலில் புறப்பட்டார் காந்தி.எட்டு முழ் வேட்டியை வட இந்தியர்கள் அணிவது போல் அணிந்து மேலே முழுக்கைச் சட்டையும், அங்கவஸ்திரம் என்னும் மேல்துண்டும் அணிந்துதான் சென்னையிலிருந்து புறப்பட்டார்.

ரயில் அதிகாலையில் சோழவந்தானைக் கடந்து சென்றது. ஜன்னலுக்கு வெளியே பார்த்தார் காந்தி. மழைக் குளிரில் நடுங்கியபடி விவசாயத் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சி அவரை திடுக்கிடச் செய்தது. வட இந்தியாவில் விவசாயிகள் வயல் வேலையின் போது கூட சட்டை அணிந்திருப்பார்கள். ஏனென்றால் அங்குள்ள தட்ப வெப்ப நிலை அப்படி. இங்கு தமிழக விவசாயிகள் சட்டை கூட இல்லாமல் இருப்பதைப் பார்த்தார். மதுரையில் அன்றைய நிகழ்ச்சிகள் முடிந்த பின் இரவு ஒரு முடிவு எடுத்தார். இந்தியாவில் எல்லோருக்கும் நன்கு உடுத்தும் நிலை வரும் வரை தான் மேல் சட்டை அணிவதில்லை. தமிழக விவசாயிகளைப் போலே முழங்கால் வரை வேட்டியைத் தார்ப்பாய்ச்சி அணிவது என்பதுதான் அந்த முடிவு.

மறுநாள் செப்டம்பர் 22ஆம் தேதி, மதுரையில், பொதுக்கூட்டம் பேச சென்றார் (மதுரை காமராஜர் சாலையில் உள்ள அந்த இடம் காந்திப் பொட்டல் என்று அழைக்கப்பட்டு வந்தது. இப்போது அங்கு ஒரு தனியார் மருத்துவமனை இருக்கிறது) பொதுக்கூட்டத்திற்கு மேல்சட்டை இல்லாமல் முழங்கால் வரை கட்டிய அரையாடையுன் சென்றார்.. இங்கிலாந்து சென்று படித்த, அயல்நாட்டில் பெரும் வழக்கறிஞராகத் திகழ்ந்த, இந்தியாவில் லடசக் கணக்கான மக்களால் தலைவராகக் கொண்டாடப்படுகிற ஒருவர் மேல் சட்டை இல்லாமல் விவசாயக் கூலியைப் போல வந்திருக்கிறாரே என்று கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களும், வந்திருந்தவர்களும் திகைத்துப் போனார்கள். ஆனால் காந்தி இனிமேல் இதுதான் என்னுடைய ஆடை என்று சொல்லி விட்டார்.

அந்த முடிவில் கடைசிவரை உறுதியாக நின்றார். இங்கிலாந்திற்குப் பேச்சு வார்த்தைக்குப் போன போதும் அதே அரையாடையில்தான் போனார். ராணியைப் பார்க்கும் போதும் அப்படித்தான். “அரை நிர்வாணப் பக்கிரி” என்று சர்ச்சில் அவரைக் கேலி செய்தார். ஆனால் அவர் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. அவரைச் சுற்றியிருந்த நேரு, ஜின்னா, படேல் போன்றவர்கள் “கெளரவமாக”  உடை அணிந்தார்கள். ஆனால் அவர்கள் நடுவில் “தமிழக விவசாயக் கூலி”க் கோலத்திலேயே இருந்துவிட்டார் காந்தி

ஆலயப் பிரவேசம்

1934ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி காந்தி மறுபடியும் வந்தார். அப்போது  அவரை சிலர் அணூகி மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருமாறு அழைத்தனர்.

அப்போது அந்தக் கோவிலுக்குள் செல்ல தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று அவரிடம் மதுரை வழக்கறிஞராக இருந்த வைத்தியநாத அய்யர் தெரிவித்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி கிடைக்கும் வரை தான் மீனாட்சி கோவிலுக்குள் செல்ல மாட்டேன் என்று அறிவித்த காந்தி அதற்கான போராட்டத்தை நாடெங்கிலும் தொடங்கினார். காந்தியை ஆதரித்து வந்த சில ஆசாரமான இந்துக்களிடம் இது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் காந்தி பின் வாங்கவில்லை

மதுரையில் காந்தியின் ஆசியுடன் வைத்தியநாதர் போராட்டத்தை நடத்தினார். ஆசாரமான ஹிந்துக்களும் அர்ச்சகர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஐந்தாண்டுப் போராட்டத்திற்குப் பின், கலவரமான சூழ்நிலை நிலவிய போதும், 1939ஆம் ஆண்டு ஜூலை எட்டாம் தேதி காலை 10 மணிக்கு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பாதுகாப்புக் கொடுக்க, வைத்தியநாதய்யர், தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு மீனாட்சி கோயிலுக்குள் நுழைந்தார். பெரும் எதிர்ப்பு எழுந்தது. வைத்தியநாத அய்யர் ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். மீனாட்சி கோயிலிருந்து வெளியேறிவிட்டதாகச் சொல்லி அர்சகர்கள் மதுரைத் தமிழ்ச் சங்கம் தெருவில் ஒரு வீட்டில் மீனாட்சி சிலை அமைத்துப் பூஜைகள் செய்தனர். 1945 வரை இந்த நிலை நீடித்தது

கடைசிப் பயணம்

காந்தி கடைசியாகட் தமிழகத்திற்கும் மதுரைக்கும் வருகை தந்தது 1946 பிப்ரவரியில். வைத்தியநாதய்யரின் ஆலயப் பிரவேசப் போராட்டம் வெற்றி அடைந்ததைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்து இம்முறை மீனாட்சி கோயிலுக்குச் சென்றார்

இரண்டாண்டுகளுக்குப் பிறகு காந்தி, 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மறைவுக்குப் பின் அவருக்கு பதிலாக, அவர் சுடப்பட்டபோது அணிந்திருந்த அவரது ஆடைகள் மதுரை வந்தன. ரத்தக் கறை படிந்த ஆடைகள் இன்றும் மதுரையில் காந்தி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.