காங்கிரஸைக் கைவிடுமா திமுக?

maalan_tamil_writer

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப் பேரவை தேர்தல் இந்த வருடம் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு அதாவது 2023ல், , 2024ல் நிகழவிருக்கும்  மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, ஒன்பது மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதுதான் மக்களவைத் தேர்தலுக்கு அணுக்கமான தேர்தல் என்றாலும் இப்போது நடைபெறவுள்ள ஐந்து மாநிலத் தேர்தலை, ‘மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்’ அரையிறுதி ஆட்டம் என்றெல்லாம் ஊட்கங்கள் வர்ணித்து வருகின்றன. காரணம் உத்தரப் பிரதேசம்.

நாட்டிலேயே மக்களவைக்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை அனுப்பும் மாநிலம் அதுதான். 80 உறுப்பினர்களை அனுப்புகிறது. அந்த மாநில உறுப்பினர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்றவர்களே மத்தியில் ஆட்சி அமைக்க முடியும். அதனால் அங்கு எட்டப்படும் வெற்றி தோல்விகள் அரசியல் கணக்கிற்கு அவசியமாகின்றன. இதனால் அரசியல் நோக்கர்களின்  ஒரு கண், அல்லது ஒன்றரைக் கண் அங்கே பதிந்திருப்பதில ஆச்சரியமில்லை..

இன்னொரு காரணமும் உண்டு. இந்தாண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஜூன் மாத வாக்கில் நடைபெறக் கூடும். நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்கள், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள்தான் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதிலும் 403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப் பிரதேசச் சட்டமன்றத்தின் முடிவுகள் எதிரொலிக்கும்

இந்தக் காரணங்களால் அகில இந்திய ஊடகங்கள் உபி தேர்தலிலும் அதனுடன் நடக்கும் மற்ற சிறிய மாநிலங்கள் தேர்தல்களிலும் கவனம் காட்டி வருகின்றன. பல ஊடகங்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புக்களை வெளியிட்டுள்ளன.

ஏழு நிறுவனங்கள் தனித்தனியாக நடத்திய கருத்துக் கணிப்புக்கள்  உபியில் பாஜக 235 முதல் 249 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறுகின்றன. ஏழு கணிப்புகளிலும் பாஜகவே முதலிடம் பெற்றுள்ளது. ஏழு கணிப்புகளில் இரண்டாம் இடத்தை சமாஜ்வாதி கட்சி பெறுகிறது (137 முதல் 147 இடங்கள்)  காங்கிரஸ் ஏழு கணிப்புகளிலும் ஒற்றை இலக்க இடங்களை (3 முதல் 7 ) பெற்று நான்காம் இடத்தைப் பெறுகிறது.

மற்ற நான்கு மாநிலல்ங்களிலும், பஞ்சாப் நீங்கலாக, பாஜகவே முதலிடம் வகிக்கிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மி முதலிடம் வகிக்கிறது. இந்தக் கருத்துக் கணிப்புக்களின்படி எந்த ஒரு மாநிலத்திலும் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் காங்கிரஸ் இல்லை. இப்போது அது ஆண்டு கொண்டிருக்கும் பஞ்சாபில் ஆட்சியை இழக்கும் என்றவை கணிக்கின்றன

கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்படும் எண்ணிக்கைகள் உண்மையாகலாம் அல்லது பொய்த்துப் போகலாம். ஆனால் அவை மக்களின் மனப்போக்கை -trends- வெளிப்படுத்துபவை. எந்தக் கட்சி எவ்வளவு இடங்கள் பெறும் என்பதை அவை துல்லியமாகக் கணிக்கத் தவறாலாம். ஆனால் அரசியல் காற்று எந்தத் திசையில் வீசுகிறது என்பதைக் கணிப்பதில் அவை பெரும்பாலும் பொய்ப்பதில்லை.

அவை எப்படி இருந்தாலும் மூன்று முதல் ஏழு இடங்களைப் பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் ஒரு கட்சி 403 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் ஆட்சியைப் பிடிப்பது கற்பனையிலும் கூடச் சாத்தியமில்லை.

2014க்குப் பின் நடந்த பல சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் பெரும் வீழ்ச்சியைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. தில்லிச் சட்டமன்றத்திற்கு 2015, தேர்தலில் அது 70 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோற்றது. மறுபடியும் 2019ல் அங்கே 66 இடங்களில் போட்டியிட்டு பெற்றது பூஜ்யம். தென்னிந்தியாவில் பெரிய மாநிலமாக விளங்கிய, ஒரு காலத்தில் காங்கிரசின் கோட்டையாகத் திகழ்ந்த மாநிலம் ஆந்திரப் பிரதேசம். 1980ல் எமெர்ஜென்சியை அடுத்து வந்த தேர்தலில் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி இந்திராகாந்தி அங்குள்ள மேடக் தொகுதியிலும் போட்டியிட்டு வென்றார். பின்னர் நரசிம்மராவ் என்ற பிரதமரையும் நாட்டிற்குத் தந்த மாநிலம் ஆந்திரம். அங்கு 2019 சட்டமன்றத் தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.இன்னொரு பெரிய மாநிலமான மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 92 இடங்களில் போட்டியிட்ட அது பெற்ற இடம் பூஜ்யம். பெரிய மாநிலங்கள் என்று இல்லை. சிறிய மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, சிக்கம் போன்றவற்றில் கூட அது பெற்றது பூஜ்யம்தான்.

பல மாநிலங்களில் அது நெடுங்காலமாக ஆட்சிக்கு வரமுடியவில்லை. தமிழ்நாடு (51 ஆண்டுகள்) மேற்கு வங்கம் (44 ஆண்டுகள்)  உத்தரபிரதேசம் (32 ஆண்டுகள்) பிகார் (32 ஆண்டுகள்) ஜார்கண்ட் (32 ஆண்டுகள்) திரிபுரா (28 ஆண்டுகள்) குஜராத் (26 ஆண்டுகள்) ஒடிசா (21 ஆண்டுகள்) அசாம் (20 ஆண்டுகள்) தில்லி (10 ஆண்டுகள்)  ஆந்திர பிரதேசம் (7 ஆண்டுகள்) மஹாராஷ்டிரம் (7 ஆண்டுகள்) ஹரியானா (7 ஆண்டுகள்). புதிதாக உருவான மாநிலங்களான ஜார்கண்ட், தெலுங்கானா ஆகியவற்றில் அது ஒருமுறை கூட வென்றதில்லை.

ஆட்சிக்கு வர முடியவில்லை என்பது ஒருபுறம் என்றால், கையில் இருந்த ஆட்சியையும் இழந்தது இன்னொரு கதை. 2014lல் இருந்து 2021 வரை நடைபெற்ற தேர்தல்களில் அது சில மாநிலங்களில் அதன் வசம் இருந்த ஆட்சியை அது இழந்தது. கேரளம், ஹிமாச்சல பிரதேசம், மேகாலயா, உத்தரகாண்ட், கர்நாடகம், புதுச்சேரி ஆகியவை சில் உதாரணங்கள். மணிப்பூர், கோவா மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருந்தும், கட்சிக்காரர்களின் விசுவாசமின்மையால் அந்த இடங்களில் அது ஆட்சிக் கட்டிலில் அமரும் வாய்ப்பை இழந்தது. இந்த முறை கோவாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை கட்சி மாற மாட்டேன் என்று கோவில்களில் வைத்து சத்தியம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.

கட்சி மாறுவதற்கு அல்லது காங்கிரசிலிருந்து வெளியேறுவதற்குக் காரணம் கோஷ்டிப் பூசல். காங்கிரஸ் சற்றே வலிமையாக இருக்கும் மாநிலங்களில் அது உட்கட்சிப் பூசலில் சிக்குண்டு சிதைந்து கொண்டிருக்கிறது. இதற்குப் பஞ்சாப் ஒரு சிறந்த உதாரணம்.  அங்கு கட்சியின் முகமாகத் திகழ்ந்த அமரீந்தர் சிங்,  நவ்ஜோத் சிங் சித்துவிடம் ஏற்பட்ட மோதல் காரணமாக காங்கிரசிலிருந்து  வெளியேறினார். மத்திய பிரதேசத்தில் கமல்நாத்துடன் ஏற்பட்ட மோதலில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா வெளியேறினார். உத்ராகண்ட்டில் தேர்தல் நேரத்தில் கூட கட்சியினர்  ஒத்துழைக்க  மறுக்கிறார்கள் என்று ட்வீட் செய்துவிட்டு  வெளியேறத் தயாரான ஹரீஷ் ராவத்தை மேலிடம் அழைத்து சமாதானம் செய்து தக்க வைத்துக் கொண்டது. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேலுக்க்கும் அவரது சுகாதாரத் துறை அமைச்சர் சிங் தியோவிற்கும் மோதல் ஏற்பட்டு அவர்கள் இருவரையும் தலமை தில்லிக்கு அழைத்துப் பஞ்சாயத்து செய்தது. கேரளத்தில் ஓமன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் ஒருபுறமும், மாநிலக் காங்கிரஸ் தலைவர் சுதாகரன் தேசியச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மறுபுறமுமாகக் கட்சிக்குள் மூண்டிருக்கும் பூசல்கள் பற்றி அங்குள்ள பத்திரிகைகள் எழுதித் தள்ளுகின்றன

மேலிடத்திலேயே ‘கலகக் குரல்கள்’ எழுந்தன.குலாம் நபி ஆசாத், கபில் சிபில் உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் உட்கட்சித் தேர்தலை நடத்திக் காரிய கமிட்டியை வேண்டும் எனக் கோரி வருகிறார்கள்.

இவை அனைத்தும் எதைக் காட்டுகிறது? இந்திய அரசியலில் இனி காங்கிரஸ் ஆடசி அதிகாரத்தை, நாட்டின் அரசியல் போக்குகளைத் தீர்மானிப்பதில் பொருட்படுத்தும் சக்தியாக இயங்க இயலாது என்பது வெளிப்படை. இனி எதிர்கால அரசியல் பாஜக என்ற தேசிய கட்சிக்கும், மாநிலங்களில் வலுவாக உள்ள கட்சிகளுக்கும் என்பதாகவே இருக்கும். அப்போது தன்னை நிலைப்படுத்திக் கொள்வதில்தான் மாநிலக் கட்சிகளின் எதிர்காலம் இருக்கிறது. அதை திர்ணாமூல், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, போன்ற கட்சிகள் உணர்ந்து கொண்டுவிட்டன.

ஆனால் திமுக? அது இன்னும் ஏன் காங்கிரசைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்?

காங்கிரசினால் திமுக பெரிய பலன்களை அடைந்து விடவில்லை. இன்னும் சொல்லப்போனால் காங்கிரசால் அது பல துன்பங்களை எதிர் கொண்டிருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருந்த போது, ஆட்சிக்குத் துணையாக இருந்த போது, காங்கிரஸ் தமிழகத்தில் நடந்து கொண்டிருந்த திமுக ஆட்சியைக் கலைத்திருக்கிறது. ஒருமுறையல்ல, மூன்று முறை. எமெர்ஜென்சியின் போது ஸ்டாலின் உட்பட திமுகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் தாக்கப்பட்டனர். மன்மோகன் சிங் அமைச்சரவையில் திமுகவிற்கு இடமளிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அப்போதும் ஆ.இராசவும், கனிமொழியும் கைத்து செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கைப் பிரசினையைக் காங்கிரஸ் கையாண்ட விதத்தின் காரணமாக கருணாநிதிக்கு அவப்பெயர் ஏற்பட்டதும், திமுக திரும்பத் திரும்பத் தன்னிலை விளக்கமளிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டதும் வரலாறு. சர்காரியா கமிஷன் அமைத்தது, ஜெயின் கமிஷன் விசாரணை, 2ஜி ஊழல் குற்றச்சாட்டு,  எனப் பலமுறை திமுகவின் தேர்தல் தோல்விக்குப் காங்கிரஸ் காரணமாக இருந்திருக்கிறது. திமுக -காங்கிரஸ் உறவில் அதிகப் பலனடைந்தது யார் என அது அமைதியாக உடகார்ந்து கணக்குப் போட்டுப் பார்க்கட்டும்.

காங்கிரசைக் கைவிடுவது என்பதற்கு அர்த்தம் அது பாஜக அணியில் சேர்ந்து கொள்ள வேண்டுமென்பதல்ல. திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா, ஆம் ஆத்மி போல தனித்துவமான அடையாளத்தோடு அது தன் பாஜக எதிர்ப்பைத் தொடரலாம்

காங்கிரசிடமிருந்து பிரிவதால் திமுகவிற்கு மாநிலத்தில் இழப்பேதும் இல்லை. மத்தியில் பலன் கிடைக்க வாய்ப்புண்டு. ஒரு வேளை 2024 தேர்தலுக்குப் பிறகு பாஜகவிற்கு மாற்றாக மாநிலக் கட்சிகளின் அணி -பெடரல் பிரண்ட் என்று இப்போதைக்கு ஒரு பெயர் வைத்துக் கொள்வோம்- ஆடசி அமைக்க நேர்ந்தால் திமுக அதில் முக்கியப் பங்காற்ற வாய்ப்புக் கிட்டும். தேர்தலை காங்கிரசோடு சேர்ந்து சந்தித்துவிட்டு தேர்தலுக்குப் பின் மாற்று அணியை நாடிப் போகும் போது அதற்கு நற்பெயர் கிட்டாது. பேர பலமும் குறையும்

தமிழ்நாட்டிற்கும் நன்மையுண்டு. இன்னும் நான்காண்டுகளுக்கு ஆட்சி நடத்தியாக வேண்டும். மாநிலத்தின் நிதி நிலைமை உள்ளங்கை நெல்லிக் கனி. மத்திய அரசின் நிதிஉதவியோடு கூடிய திட்டங்களைச் செயல்படுத்தி நற்பெயர் பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டின்பால் அக்கறை செலுத்தி வரும் மத்திய அரசு, காங்கிரசின் கூட்டணிக் கட்சி அல்ல திமுக என்ற புதிய பார்வையோடு திமுகவைப் பார்க்குமானால் இரு  அரசுகளுக்குமிடையே இணக்கம் இன்னும் கூடலாம்

முடிவெடுக்க அவசரமில்லை. வர இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசைத் தனித்து நிற்குமாறு சொல்லி அதன் பலத்தை அளவிட்டுக் கூட முடிவெடுக்கலாம்.

திமுக சிந்திக்குமா?   

தினமணி 27.01.2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.