கறுப்புப் பணமும்
பச்சைப் பொய்களும்
காலை நடைக்குப் போவதற்காக என் ஜன்னலுக்கு வெளியே நண்பர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அன்று என்ன பேசப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் எதுவும் பேசப் போவதில்லை. உலையில் வைத்த இரும்புத் துண்டு போல ஓர் ஊமைக் கோபம் என்னுள் கனன்று கொண்டிருந்தது. நடைக்கு நான் வரவில்லை என அவர்களுக்கு விடை கொடுத்துவிட்டு வந்தமர்ந்தேன்.
அன்று அதிகாலையில் தொலைக்காட்சியில் பார்த்த காட்சிகள் என்னை அதிர வைத்திருந்தன. தில்லி ராம்லீலா மைதானத்தில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்து விட்டிருந்த கண்மூடித்தனமான வன்முறை எனக்குள் கேள்விகளை எழுப்பியிருந்தன.
ஏன் இந்த நடுநிசித் தாக்குதல்? அனுமதியில்லாமல் அவர்கள் கூடியிருந்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அவர்களை வெளியேற்ற விடியும் வரை காத்திருக்க முடியாதா? அவர்களைக் கலைந்து போகச் சொல்லி ஆணையிட்டு, அவகாசமும் அளித்து, அப்போதும் அவர்கள் வெளியேறவில்லையென்றால் அதன் பின் நடவடிக்கை எடுத்திருக்க முடியாதா?
அனுமதியை மீறுவது என்பதும் தடைகளை அலட்சியப்படுத்திவிட்டு நடவடிக்கையில் இறங்குவது என்பதும் இந்த தேசத்தில் புதிது அல்ல. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து நடந்து வருவதுதான். தண்டி யாத்திரை அனுமதி அளிக்கப்பட்டுத்தான் நடந்ததா? அவ்வளவு தூரம் ஏன்? சில வாரங்களுக்கு முன் உத்திரப் பிரதேசத்தில் நிலங்களைக் கையகப்படுத்தியது தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது தடையை மீறித்தானே ராகுல் காந்தி போனார்? அப்போது அதை நியாயப்படுத்திய ஆட்சியாளர்கள் இப்போது ஏன் இதில் குறை காண்கிறார்கள்?
அந்த நடவடிக்கையில் அவசரம் என்பதை விட ஆத்திரம் அதிகம் இருந்தது. அந்த நடவடிக்கையை நியாயப்படுத்த அரசாங்கம் அவிழ்த்துவிடுகிற அறிக்கைகள் எல்லாம் அப்பட்டமான புளுகாக, அபத்தமாக இருக்கின்றன. அங்கே யோகா பயிற்சி அல்ல, உண்ணாவிரதம்தான் நடக்கப் போகிறது என்பது யாரும் அறியாத ரகசியம் அல்ல. நிச்சயம் அரசாங்கம் அறியாத ரகசியம் அல்ல.
சத்தியாகிரகம் என அறிவித்துவிட்டுத்தான் ராம்தேவ், தில்லிக்கு வந்தார். வந்த அவரை வரவேற்க பிரதமருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமைச்சர் பிராணப் முகர்ஜியும், கபில் சிபல்,சுபோத்காந்த் சகாய் என்ற வேறு இரு அமைச்சர்களும் விமானநிலையத்திற்கே சென்று காத்திருந்தனர். அன்று அந்த அளவிற்கு மரியாதை காட்டப்படத் தக்கவராக கருதப்பட்ட மனிதர் எப்படி இரண்டு தினங்களுக்குள் ‘பயங்கரவாதியாக’ப் பார்க்கப்படுகிறார்?
ராம்தேவின் செயல்களும் விமர்சனத்திற்குரியவையே.அவரது நோக்கம் உயர்ந்தது. ஆனால் நடவடிக்கைகள் நேர்மையானதாக இருக்கவில்லை. ஒரு புறம் உண்ணாவிரதம், இன்னொருபுறம் பேச்சுவார்த்தை என அவர் இரண்டு புறமும் தாவித்தாவி பந்தாட்டம் ஆடியது சந்தேகங்களை எழுப்புகின்றன. அது ஒரு உத்தி என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் பேச்சு வார்த்தைகள் ரகசியமாக இருக்க வேண்டியதன் அவசியம் என்ன? போராட்டம் என அறிவித்தவர் அதைச் சொல்லி அனுமதி பெறாமல் பயிற்சி முகாம் எனப் பொய் சொல்லி ஏன் அனுமதி பெற வேண்டும்? காவல்துறை நள்ளிரவில் உள்ளே புகுந்தபோது கைதை எதிர்கொண்டு சிறைக்குப் போயிருந்தால் அது கண்ணியமாக இருந்திருக்கும். ஆனால் பெண்கள் பகுதிக்குள் புகுந்து சூடிதாரை அணிந்து ஓடி ஒளிய முற்பட்டது அத்தனை கெளரவமாக இல்லை. அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத்ததால் நாட்டில் ஏற்பட்ட எழுட்சியின் வெளிச்சத்தில் விளம்பரம் தேடிக் கொள்ள முற்பட்ட வியாபாரி ராம்தேவ் என்ற விமர்சனம் காரமானதாக இருக்கலாம். ஆனால் நியாயமானதல்ல எனச் சொல்லிவிட முடியாது.
முடிவுகள் மட்டுமல்ல, வழிமுறைகளும் நியாயமானதாக இருக்க வேண்டும் என மகாத்மா சொல்வது மறுபடியும் ராம் லீலா மைதானத்தில் நிருபணமாகியிருக்கிறது.
மெய்யான பிரச்சினையின் முன்னால் இந்தக் கேள்விகள் எல்லாம் அற்பமானவை. உண்மையான பிரச்சினை என்ன? இந்தியா எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் இடறச் செய்வது கருப்புப் பணம் என்ற முட்டுக்கட்டைதான். பயங்கரவாதச் செயல்களுக்குப் பலமளிப்பது அதுதான். அரசுக்கு நிகராக இன்னொரு திசையில் ஒரு பொருளாதாரத்தை உருவாக்கி விலைவாசி உயர்வுக்கு வித்திடுவதும் அதுதான். தேர்தல் களத்தில் பணத்தைப் பாய்ச்சி ஜனநாயகத்தைப் பணநாயகமாக்குவதும் அதுதான்.
கறுப்புப் பணத்தை, அதிலும் அயல்நாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றி நாட்டின் சொத்தாக்கும் போது இன்று நம்மை வருத்தும் இன்னல்கள் நீர் கிடைக்காத வேரைப் போல பலமிழந்து பட்டுப் போகும். இது எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை என்ற போதிலும் அரசு இந்த விஷயத்தில் ஏன் போதுமான வேகம் காட்டவில்லை என்பதுதான் புரியாத புதிர். அது யாரையேனும் காப்பாற்ற விரும்புகிறதோ?
2009ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி மாநிலங்களவையில் பேசும் போது, அயல்நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் துவங்கி விட்டன என் அறிவித்தார். ஆனால் இரண்டாண்டுகள் ஆகியும் ஏதும் பெரிதாக நடந்துவிடவில்லை.
மாறாக வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்குமாறு மீண்டும் மீண்டும் உச்சநீதி மன்றம் வற்புறுத்திய பிறகும் அதை வெளியிட இயலாது என அரசு சொல்லிவிட்டது. ஒரு ஆங்கில இதழும், தொலைக்காட்சியும் சில பெயர்களை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டன. ஆனால் அவர்கள் மீது ஏதும் நடவடிக்கை இல்லை.2010ம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட் என்ற நாட்டில் தேர்தல் நடந்தது. மக்கள் அங்கிருந்த சர்வாதிகாரியை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்தார்கள். அதன் பின் சில மாதங்களுக்கு முன் டினீசியாவிலும், எகிப்திலும் ஆட்சியாளர்கள் பதவி இறங்கினர். இந்த மூவரையும் அடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் இவர்களது ஸ்விஸ் வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என் ஸ்விட்சர்லாந்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அவர்களது கணக்குகள் முடக்கப்பட்டன. மிகச் சிறிய நாடுகளால் செய்ய முடிந்ததைக் கூட நம்மால் செய்ய முடியவில்லை.
நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் பிரச்சினை குறித்து உரக்க குரல் எழும் போதெல்லாம் அதை ஆராய குழுக்கள் அமைப்பதுதான். 1971ல் நீதிபதி வாஞ்சூ கமிட்டி, 1980ல் டாங்க்லி கமிட்டி, 1983ல் ராஜா செல்லையா கமிட்டி, என இதுவரை மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1985ம் ஆண்டு பொது நிதி மற்றும் கொள்கைகான தேசிய நிறுவனத்தின் மூலம் ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. என்ன பயன்? மீண்டும் ஒரு ஆய்வை மேற்கொள்ளுமாறு மூன்று தேசிய நிறுவனங்கள் பணிக்கப்பட்டுள்ளன. அதைத் தவிர நேரடி வரிகளுக்கான மத்திய வாரிய தலைவரின் தலைமையில் இன்னொரு குழுவும் தேவையான சட்டத் திருத்தங்களைப் பரிந்துரைக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மக்கள் விரும்புவதெல்லாம் செயல். பலனளிக்கும் செயல். துணிச்சலான நடவடிக்கைகள். அதைச் செய்ய அரசுக்கு அரசியல் உறுதி (Political will) வேண்டும். அது இருக்கிறதா என்பதுதான் கேள்வி.