மாமியா இது?
புத்தர் தன்னெதிரே வந்து வணங்கி நின்ற உருவத்தைப் பார்த்தார். நெடுநெடுவென்று நீண்டு முதுகை மறைந்தபடிக் கிடக்கும் கருங்கூந்தல் மழித்தெறியப்பட்டிருந்தது. ஆபரணங்கள் எதையும் காணோம். பிறந்ததிலிருந்தே பட்டு தவிர வேறெதுவும் உடுத்தி அறியாத உடம்பு கனத்த காவித் துணியைத் தரித்திருந்தது.
மாமியா இது?
மாமிதான். அவர் சித்தார்த்தனாக, அரண்மனையில் இளவரசனாக வளர்ந்த போது அவரை சீராட்டிக் கொஞ்சி உணவளித்துப் பேணி வளர்த்த மாமி கோதமிதான். முடியை மழிக்கலாம். துணியை மாற்றலாம். முகத்தை மாற்ற முடியுமா?
” என்ன மாமி இது?”
“எனக்கும் சந்நியாசம் கொடுத்துவிடு. நானும் ஒரு பிக்குணியாக மாறி உன் உபதேசங்களை ஊருக்கு எடுத்துச் சொல்கிறேன்”
“மாமி நீங்கள் எத்தனையோ முறை கேட்டுவிட்டீர்கள். நானும் எத்தனையோ முறை சொல்லிவிட்டேன். எங்கள் புதிய மதத்தில், குடும்பப் பெண்களுக்குத் துறவறம் கொடுப்பதில்லை”
“அதுதான் ஏன்?”
புத்தர் பேசவில்லை. கல் போல் அங்கு ஓர் மெளனம் இறுகிக் கிடந்தது.
“சரி நீ எனக்கு பதில் சொல்ல வேண்டாம்.ஆனால் நீ எனக்கு சந்நியாசம் கொடுக்கும் வரை இந்த இடத்தைவிட்டுப் போகமாட்டேன்.”
“இப்படியே நீங்கள் வற்புறுத்திக் கொண்டிருந்தால் நான் உங்களை சந்திப்பதையே தவிர்க்க நேரிடும். எனக்கு வேறு வழியில்லை”
அருகில் இருந்த ஆனந்தர் பதறிப்போனார்.
“சுவாமி அவசரப்பட்டு அப்படி ஏதும் செய்துவிடாதீர்கள். நீங்கள் இங்கு வைசாலியில் உள்ள மகாவனத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்பதைக் கேள்விப்பட்டு நெடுந்தூரம் நடந்தே வந்திருக்கிறார்கள். அவர்களது கால்கள் வீங்கிக் கிடப்பதைப் பாருங்கள். உங்களைப் போலவே அவர்களும் அரண்மனையை, அதன் வசதிகளை, செல்வத்தைத் துறந்து காவி அணிந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் இங்கு சில நாள்கள் இருக்கட்டும். யோசித்து முடிவு சொல்லலாம் சுவாமி”
புத்தர் அப்போது ஏதும் பேசவில்லை. ஆனால் பிறகு தனியாக ஆனந்தரிடம் சொன்னார்: “ஆனந்தரே, பெண்கள் இல்லற வாழ்வை விட்டு, நாம் விதித்த விதிமுறைகள், ஒழுக்கங்களை ஏற்று, வீடற்ற நிலையை எய்த வேண்டும் என்பதற்கு நாம் இசைவு அளிக்காமலிருந்திருந்தால், இந்த மதம் பலகாலம் நிலை பெற்றிருந்திருக்கும். இந்த நல்ல விதிகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு உறுதியாக நிலை பெற்றிருந்திருக்கும். ஆனால் இப்போது பெண்கள் துறவு பூணுவதற்கு இசைவு பெற்று விட்டமையால் இந்தத் தூய்மையான மதம் நீண்ட நாள் நிலைத்திருக்காது. இந்த மதம் ஐநூறு ஆண்டுகள்தான் உறுதியாக நிலை பெற்றிருக்கும்.”
புத்தரின் இந்தக் கூற்று, மாக்ஸ்முல்லர் ஆசிரியராக இருந்து பதிப்பித்த ‘ Sacred book of the East (vol xx) என்ற நூலில் இடம் பெற்றிருக்கிறது.
பெண்கள் துறவறம் மேற்கொள்வதை புத்தர் அனுமதித்தார் என்றாலும் அதை அவர் முழு மனதாக ஏற்கவில்லை என்று கருத இது ஒரு சான்று. தமிழிலிலேயே கூட தொடக்கத்திலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை, பெண்களில் மணிமேகலை ஒருவரையே பெளத்த துறவியாகவும், கவுந்தி அடிகள் ஒருவரையே சமணத் துறவியாகவும் இலக்கியங்களில் பார்க்க முடிகிறது.
பெண்கள் துறவிகளாவதை மட்டுமல்ல, அவர்கள் பூசாரிகள் ஆவதைக் கூடப் பெருமபாலான மதங்கள் அனுமதிப்பதில்லை, ஊக்குவிப்பதில்லை. சந்நியாசியாகி புற உலகச் செயல்களிலிருந்து விலகி, உள்முகமாகத் திரும்பி, ஆன்மீகத் தேடலில் ஈடுபடுவது என்பது ஒன்று; பூசாரிகளாகி, மதங்கள் விதித்துள்ள நெறிகளின்படி சடங்குகளை நடத்தி வைப்பது, கோவில்களில் பூஜை செய்வது என்பது வேறு. ஆனால் இந்த சடங்குகளை நடத்தி வைக்கக் கூடப் பெண்களைப் பெரும்பாலான மதங்கள் அனுமதிப்பதில்லை.
இந்தப் பின்னணியில், அண்மையில் வந்தவொரு செய்தி, ஆச்சரியமும் மகிழ்வும் அளிப்பதாக அமைந்திருந்தது.
தமிழகச் சட்டமன்றத்தில் கோவில்களில் பெண்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்களா என்று ஓர் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். ஆகம விதிகள் படித்தறிந்த, தகுதியான, பெண்கள் இருந்தால் அவர்களை அரசு நியமிக்கும் என்று அமைச்சர் பதிலளித்தார். இது ஆகம விதிகளுக்கு எதிரான செயல் என்று விஸ்வ இந்து பரிஷத் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.
ஆனால் ஆதிகாலத்தில் சமயச் சடங்குகளைப் பெண்களே நிறைவேற்றி வந்திருக்கின்றனர். உலகெங்கிலும் உள்ள ஆதிகுடிகளிடையே இதை இப்போதும் பார்க்கலாம். விளைநிலம் சார்ந்த சடங்குகளை- தானியம் விதைப்பது, இயற்கையைத் தொழுது பாடுவது, விளைச்சலுக்கான வண்மை சேர்ப்பது இவற்றையெல்லாம் பெண்கள்தான் செய்து வந்திருக்கிறார்கள். இப்போதும் சில வேளாண் சமூகங்களில் செய்கிறார்கள். கோவை மாவட்டம் பேரூருக்கு அருகில் வேளாண் வகுப்பினர், பயிர்த் தொழிலைத் துவக்கும் முன் பத்து நாட்களுக்கு விழா எடுக்கிறார்கள். அந்த விழாவில் சடங்குகளைப் பெண்களே செய்கிறார்கள். இந்தியா முழுவதும் மழை வேண்டி நடக்கும் சடங்குகளைப் பெண்களே செய்கின்றனர். ஊருக்கு ஊர் இந்த சடங்கு முறையிலே மாற்றம் இருந்தாலும், சடங்குகளைப் பெண்கள் செய்வது என்பதிலே மாற்றம் இல்லை.
ஆதி மரபுகளை விட்டுவிட்டு வேதமரபுகளை எடுத்துக் கொண்டால் வழிபாடுகளில் முதனமையான பாத்திரம் வகிப்பவை மந்திரங்கள். ரிக்வேதம் ‘வாக்’ என்று ஒரு பெண்ணைத்தான் ஒலிக்குரிய தேவதையாகக் குறிப்பிடுகிறது. ‘பிரபஞ்சம் முழுமையும் தன் ஆணையால் ஒன்றுபடுத்தும் தெய்வம்’ என்று அது அவளின் இயல்புகளைக் குறிப்பிடுகிறது.
ஞானம் தருபவையாக, ரிக் வேதம், மூன்று தெய்வங்களைக் குறிப்பிடுகிறது இலா, சரஸ்வதி, பாரதி ஆகிய அந்த மூவரும் பெண்கள். அதில் இலா வேள்வி செய்யும் முறையை மனிதர்களுக்கு போதித்த ஆசான். பாரதி நாவன்மையின் தேவதை. கவிதைகள் பிறக்க இவள் அருள் வேண்டும். அறிவு, விவேகம், சாதுரியம், கற்பனை வளம், படைப்பாற்றல், புதிய கண்டு பிடிப்புகள், நுண்கலைகள் அனைத்தையும் பாதுகாக்கும் ஞான தேவதை சரஸ்வதி.
ஆனால் இந்த சரஸ்வதி பூஜையைக் கூட இன்று பெண்கள் செய்யமுடியாது. வேள்விகளை செய்வதற்குரிய முறைகளைக் கற்பித்த ஆசான் பெண். பூஜையின் ஆதாரமாக உள்ள மந்திரங்கள் பெண். அதற்கான நாவன்மையும், படைப்பாற்றலும் தருபவள் பெண். ஆனால் அவள் பூசை செய்ய முடியாது!
ஆண்களை விடப் பெண்களுக்கு பக்தி அதிகம். நான் ஆண்களில் நாஸ்திகர்களை சந்தித்த அளவு பெண்களில் சந்தித்ததில்லை. சுயக்கட்டுப்பாடுகள் பெண்களிடத்தில் அதிகம். விரதம் இருக்கும் காலங்களில் தேநீர் கூடப் பருகாமல் பணியாற்றுகிற பெண்களை நான் பார்த்திருக்கிறேன். அதே போல ‘மாலை போட்டுக்கொண்ட’ நாட்களில் கூட புகைப்பதை விட முடியாத ஆண்களையும் பார்த்திருக்கிறேன்.
ஆனாலும் ஆண்கள் பூசாரிகளாகப் பூஜை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு அது மறுக்கப்படுகிறது.
ஏன்?
‘கருப்பை அரசியல்’தான் காரணம்.
‘பெணகள் தங்கள் உடலியல் அமைப்புக் காரணமாக மாதததில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மாதவிலக்கை சந்திக்கிறார்கள். அந்த நாட்களில் அவர்கள் தூய்மை குறைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அதனால் அவர்கள் பூஜை செய்வதற்கு அருகதை அற்றவர்களாகி விடுகிறார்கள்’ என்று சிலர் வாதிடுகிறார்கள்.
ஆனால் இதற்குப் பின் ஒரு அரசியல் இருக்கிறது என நான் சந்தேகிக்கிறேன். ஒருகாலத்தில் சமூகத்தலைமை, அரசியல் தலைமை ஆகியவை பெண்களிடம் இருந்தன. நாடு சார்ந்த அரசுரிமையைக் குறிக்கும் சொல் ‘தாயம்’ (திருவாங்கூர் அரசு மருமக்கள் தாயம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்) தாய் என்ற அடிச் சொல்லில் இருந்து பிறந்த சொல் தாயம்.
புறநானூற்றில் ஒக்கூர் மாசாத்தியாரின் கவிதையாக ஒரு பாடல் இருக்கிறது. ‘கெடுக சிந்தை, கடிதிவள் துணிவே’ என்று துவங்கும் அந்தப் பாடல் நமக்கு ஒரு கதை சொல்கிறது. முதல் நாள் போருக்குத் தன் தந்தையையும் சகோதரனையும் போருக்கு அனுப்புகிறாள் ஒரு பெண். அவர்கள் போரில் இறந்து விட இரண்டாம் நாள் தன் கணவனை அனுப்புகிறாள். அவனும் பெரும்படையை எதிர்த்துப் போரிட்டு மாய்ந்து போகிறான். இத்தனைக்கும் பின், போர்ப்பறை கேட்டவுடன் தன் ஒரே மகனை போருக்கு அனுப்பி வைக்கிறாள். இவள் துணிவு வலுவானது. இவளுக்கு புத்தி கெட்டுப் போக என்று செல்லமாகக் கடிந்து கொள்கிறாள் ஒக்கூர் மாசாத்தி.
இதில் நான் முன்று செய்திகளைப் பார்க்கிறேன் :
1.யார், என்று போருக்குப் போக வேண்டும் என்று முடிவெடுக்கிற அதிகாரம் பெண்ணிடம் இருந்தது.
2. போருக்கு ஆண்கள் அனுப்பப்பட்ட வரிசை.
3. அந்தக் காலக் குடும்ப அமைப்பு.
ஒரு பெண்ணுடன் அவளது தந்தை, உடன் பிறந்தவர்கள், கணவன், அவளது குழந்தைகள் என்று குடும்பம் அமைந்திருந்தது (இன்று இதற்கு நேர் மாறாக கணவன், அவனது பெற்றோர்கள், அவனது உடன் பிறந்தோர், மனைவி, குழந்தைகள் என்று ஆணை மையப்படுத்தி அமைந்திருப்பதைக் கவனித்தால் குடும்பத்தில் பெண்ணிற்கு இருந்த முக்கியத்துவம் புரியும்)
குழந்தை என்பது ஆண் பெண் கலப்பினால் உருவாகிறது என்ற உண்மை புலப்படாமல், ஆதி சமூக மனிதன், இறந்து போனவர்கள் பெண்களின் மூலமாக மறு பிறப்பு எடுக்கிறார்கள் என்று கருதிய போது பெண்களுக்கு தெய்வத் தன்மைகள் கொடுக்கப்பட்டன. அவர்களைக் குறித்து ஓர் அச்ச உணர்வு இருந்து வந்தது.
வேட்டை சமூகம்- வேளாண் சமூகம்- நிலவுடமை சமூகம் என்ற பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு, சொத்து என்ற கருத்தாக்கம் வலுப்பட்டபோது ‘அரசியல்’ துவங்கியது. வேள்வி செய்பவருக்கே சொத்துரிமை என்பது ஏற்பட்டபோது, சொத்துரிமையைக் கைப்பற்றிக் கொள்வதற்காகப் பெண்களுக்கு வேள்வி செய்யும் உரிமை மறுக்கப்பட்டது. பின் அதற்கு ஆதராமான கல்வி உரிமை மறுக்கப்பட்டது. பின் சொத்துக்கள் அவள் தேர்ந்தெடுக்கும் ஆணின் வசம் போய்விடக் கூடாதென்பதற்காக அவளே தன் துணையை வரித்துக் கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டது.
இது எல்லாவற்றையும் நியாயப்படுத்தவும், இதைக் குறித்துக் கேள்விகள் எழாமல் தடுக்கவும், ஆணிடம் இல்லாத பெண்ணிடம் மட்டுமே உள்ள கர்ப்பப்பை முன்னிறுத்தப்பட்டது. பெண்ணினுடைய பிறப்பின் பயனே குழந்தை பெற்றுக் கொடுப்பதுதான் என்ற கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. சிறுவயதிலிருந்தே பெண்கள் தங்கள் உடமபைப் பற்றிய உணர்வு (பிரஞ்கை) ஊட்டப்பட்டே வளர்க்கப்பட்டார்கள்.
அதில் ஒன்று மாதவிலக்கு என்பது ‘தீட்டு’ என்ற கருத்தாக்கம். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்வரை, தமிழ்நாட்டில், குறிப்பாக வேளாண் தொழிலை மேற்கொள்ளாத பிராமண சமூகங்களில். அந்த அசெளகரியமான நாட்களில் பெண்கள் தீண்டத்தகாதவர்களைப் போலவே நடத்தப்பட்டு வந்தார்கள். படித்து வேலைக்குப் போகும் நிலை ஏற்பட்டு, அதிக இடம் இல்லாத அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் நிலை ஏற்பட்டுவிட்ட பிறகும் கூட இது ஏற்படுத்தியுள்ள மனத் தடுப்புக்களைத் தாண்டி வரமுடியாத பெண்கள் பலர் இப்போதும் இருக்கிறார்கள்.
பிறரிடம் இல்லாத செல்வம் தன்னிடம் இருந்தால், பிறரிடம் இல்லாத கல்வி தன்னிடம் இருந்தால், பிறரிடம் இல்லாத படைப்பாற்றல் தன்னிடம் இருந்தால், பிறரிடம் இல்லாத தொழில் நுடப அல்லது வணிக அறிவு தன்னிடம் இருந்தால், பிறரிடம் இல்லாத அழகு தன்னிடம் இருந்தால் மனிதர்கள் பெருமை கொள்கிறார்கள். ஆனால் ஆண்களிடம் இல்லாத மனித உயிரைப் பிறப்பிக்கும் ஆற்றல் தங்களிடம் இருப்பது குறித்துப் பெண்கள் கர்வம் கொள்வதற்குப் பதில் கூச்சம் கொண்டதால் அடிமைப்பட்டுப்பட்டுப் போனார்கள்.
பெண்களைப் பூசாரிகளாக நியமிக்கிற காலம் வந்தால் அவளது மனத் தடைகள் கரையும்.பல விலங்குகள் உடைபடும். சமூகம் ஒரு முறை குலுங்கித் தன்னை சமன் செய்து கொள்ளும். அப்படி ஒரு நாள் வருமா?அல்லது
அரசின் எத்தனையோ அறிவிப்புக்களைப் போல இதுவும் இன்னுமொரு அறிவிப்பாகவே நின்றுவிடுமா?
எனது வலைப்பூ ‘என் ஜன்னலுக்கு வெளியே’வில்
மார்ச் 16 2005 அன்று எழுதியது