கதவைத் திறக்கும் வெளிச்சம்

maalan_tamil_writer

 

       மடத்துக் கதவு சாத்தியிருந்தது.

கதவைப் பார்க்கப் பார்க்கச் சிரிப்பாக வந்தது இவனுக்கு. நாலு பேராக இழுத்துத்தான் திறக்க வேண்டும். மூட வேண்டும் அதை. கிண்ணெண்று பாரியான தேக்கங்கதவு. எவனோ ஒரு தேர்ந்த ரசனையுள்ள தச்சன் இழைத்து இழைத்துப் பண்ணிய  கதவு. சின்னச் சின்னதாய்ப் பித்தளை குமிள்களும் மணியுமாக அலங்காரம் பண்ணின கதவு.

கதவைப் பார்க்கப் பார்க்க கிருஷ்ணமூர்த்திக்கு சிரிப்பு வந்தது. கதவுக்கு எதற்கு இத்தனை அலங்காரம் ? இத்தனை மெருகு ? இதற்கு எத்தனை பேர் மெனக் கெட்டார்களோ ?  எத்தனை  நாள் உட்கார்ந்து இழைத்தாரகளோ? மடத்துக்கு எதற்கு இப்படி ஒரு கதவு ?  கதவுக்கு  அப்பால் உட்கார்ந்திருக்கிறவரை  நினைத்தபோது  இன்னும் சிரிப்பு கொப்பளித்தது. சாமியாருக்கு என்னத்துக்கு இந்தக் கதவு? இத்தனை பெரிதாக ?  இத்தனை  வலுவாக ?

இது என்ன மாதிரித் துறவு? காவியைக் கட்டிக்கொண்டு கையை வீசிப்போட்டுப் போகிற போக்குக்கு இத்தனை படையா ? இப்படி  ஒரு பந்தாவா? இப்படிக் கோட்டை மாதிரி  இடமா ?  இந்த  மாதிரிக்  கதவா?

என்னத்துக்கு என்று கேள்வி கேள்வியாய் அரித்தது. இந்த அரிப்பைத் தாள முடியாமல்தான் ஊரைவிட்டு, உறவை விட்டுப் பிய்த்துக் கொண்டு கிளம்பி வந்திருக்கிறான். எல்லாவற்றையும் எட்டி உதைத்துவிட்டு, காவியைக் கட்டிக்கொண்டு எங்கேயாவது  போய்விடத்தான்  கிளம்பி  வந்திருக்கிறான்.

பதினெட்டு  வயது  வரைக்கும்  வாழ்க்கை அழகாகத் தானிருந்தது. படை படையாய் மண்டின பச்சைப் பயிரும், தோட்ட வீடும், முங்கிக் குளிக்கிற ஆற்றுத் தண்ணியும், கபடி விளையாட்டு, ஞாயிற்றுக்கிழமையுமாக அழகாகத்தான் இருந்தது. அந்தச்  செம்மண்ணை  உதறிவிட்டு  யூனிவர்சிட்டிக்கு வந்தபோது கூடச் சருகு கொட்டுகிற மரமும், சக வயதுத்  தோழமையுமாக  இனிமையாகத்தான்  இருந்தது.

சட்டென்று இருபத்து மூன்று வயதில் வாழ்க்கை தேங்கிப்  போனது.  நகரத்தின் இனிப்பு சீக்கிரத்தில் கரைந்தது. ப்ளாஸ்டிக் பூவைச் சொருகி வைத்திருக்கிற ஆபீஸின் செயற்கை கசந்தது. அடுத்த மேஜை லெட்சுமியின் சிரிப்பின் பொய் சுட்டது.

படித்த ஃபார்மசூடில் கெமிஸ்ட்ரியின் வெறுமை உலுக்கியது. அபார்ஷன் பற்றிய பஸ்ஸில்  விவாதிக்கிற  பதினைந்து  வயதுகள்  பயம்  காட்டின. எல்லாவற்றிற்கும் பறந்து பறந்து  ஓடுகிற  மனிதர்களைப்  பார்க்கும்போது  உள்ளூர  எரிந்தது.  தூக்கத்தில் பிடித்து உலுக்கின மாதிரி திடீரென்று ஒருநாள் கேள்விகள் பிடரியில் அறைந்தன. என்னத்திற்கு  இந்த  அலைச்சல் ? இந்த ஓட்டம் ?  எதை நோக்கி ? இந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் ?

ரெஸ்டாரெண்டின் பாப் இசையில், ரயில் நிலைய பரபரப்பில், காசை முழுங்கிப் பால்  சுரக்கிற  எந்திரத்தில்  குலுங்கலில்,  தன்னுடைய மூளையும், உழைப்பும், கருத்தடை மாத்திரையாக வெளிவருகிற, கணக்கெடுக்கப்படுகிற குரூரத்தில், அந்தக் கேள்வி துரத்தி துரத்தி வந்தது. வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் ? காசா ? பதவியா ? புகழா ? அனுபவித்துத்  தீர்க்கிற உல்லாசமா ?  சாவா ?  என்ன  அர்த்தம் ?

படித்துப் பார்த்தான். புத்தகத்தில் அடங்கவில்லை வாழ்க்கை. கண்ணை மூடிக்கொண்டு,  கடவுளை  ஜெபித்துக்  கொண்டு  உட்கார்ந்து  பார்த்தான். பிடிபடவில்லை.  கஞ்சா  குடித்துக் பார்த்தான். கால் பாவாத மிதப்பாக இருந்தது. ஒரு நாள் கலைந்த தலையும், கசங்கிய சட்டையும் மூட்டை கனக்கிற முதுகுமாகக் கிளம்பி விட்டான்.  அந்தக்  கிளம்பல்  ஊர்  ஊராய்ச்  சுற்றி  இந்தக்  கதவுமுன்  வந்து  நிற்கிறது.

கதவு பரபரவென்று இழுபட்டது. சுவாமிகள் கையை உயர்த்தி ஆசீர்வாதம் பண்ணியபடி வெளியே வந்தார். வெடவெடவென்று நல்ல உசரம். தேய்த்து அலம்பின தாமிரம் மாதிரி முகத்தில் ஒரு மினுக்கம். குளுமையான புன்னகை. கண்ணில் ததும்பும் கருணை. ஒரு காவியைத் தான் இழுத்துத் தலைக்கும் மார்புக்கும் போர்த்தியிருந்தார். உடம்பில் அது ஒன்றுதான் துணி. ஒரு கையில் தண்டம்.

திமுதிமுவென்று  காலில்  விழுந்த  கூட்டத்தை  மிதித்து விடாத ஜாக்ரதையுடன் அடியெடுத்து நகர்ந்தார். நெருக்கியடித்து வந்த கூட்டத்தில் பட்டுக் கொள்ளாமலும் விலகிவிடாமலும் நடந்தார். பீடத்தில் உட்காரந்ததும் வரிசையாய் ஆரம்பித்தார்கள்.

“ பிள்ளைக்குக் கல்யாணம், பெரியவா ஆசீர்வாதம் பண்ணனும்.

பத்திரிகையை பவ்யமாக நீட்டினார் ஒருவர்.

“ ஜானவாசம் உண்டா?…

இல்லை, பிள்ளையே வேண்டாம்னுட்டான்…

வரதட்சணை…?

ஏதோ சாஸ்திரத்திற்கு… கொஞ்சமா…

அட ! சாஸ்திரத்தில் வரதட்சணை பற்றிச் சொல்லியிருக்காளா என்ன ! எனக்குத் தெரியலையே…

கூட்டம் கொல்லென்று சிரித்தது. இந்தக் கேள்வியைப் பார்த்து, வந்தவர் அசடு வழிய நின்றார்.

“ அதெல்லாம் இல்லாம சிம்பிளா பண்ணுகங்கோ…

பந்துக்கள் கோவிச்சுப்பா…

ஸ்வாமி இருக்காரே… பெரிய பந்து…ம்?

நீங்க போகலாம் என்கிற மாதிரி கையை அசைத்தார். புதியதாய் வியாபாரம் ஆரம்பிக்கிறேன். அம்மாவிற்கு ஆபரேஷன், பத்திரிகைக்கு ஆசிச் செய்தி, மனைவி கருத்தரித்திருக்கிறாள். பெண்ணுக்குக் கல்யாணம் தட்டிக் கொண்டே போகிறது, கணவன் கைவிட்டுவிட்டான் என்று ஒவ்வொன்றாய் வந்து கொண்டிருந்தன. சுவாமிகள் அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி குங்குமமோ, அம்பாள் படமோ, கல்கண்டோ தந்து ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிக் கொண்டிருந்தார்.

இவனுக்குப் பார்க்கப் பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. வேடிக்கையாய் இருந்தது. இதற்குப் பேர் என்ன துறவறம் ?  இது எதை விட்டுவிட்ட விலகல் ? ஒவ்வொருத்தர் வீட்டுச் சொந்த சந்தோஷத்திலும், துக்கத்திலும் புரண்டு எழுந்துவிட்டு வருகிற இவர் என்ன சந்யாசி ?

இவனுக்கு முன்னால் ஒரு வெள்ளைக்காரன், கச்சலாய் ஆறடி உயரம். முகத்தில் உபரியாய்க் குழந்தை சதை. பூணை மயிரில் மீசை. அழுக்கில் திளைத்த பைஜாமா. சிரமப்பட்டுக் காலை நீட்டி நமஸ்காரம் பண்ணினான். “ என்ன ? என்று ஒரு வார்த்தைத்தான் கேட்டார் சுவாமி.

பொத்துவிட்ட மாதிரி மடமடவென்று பேச்சுப் பொங்கிக் கொண்டு வந்தது.

“ என் பெயர் பாப் மெகார்த்தி, ஆனால் நான் யார் என்று எனக்குத் தெரியவில்லை. அமெரிக்காவில் நாஷிலில்லிக்குப் பக்கத்தில் பிறந்தேன். டென்னஸியில் படித்தேன். ஆனால் இதை என் தேசம் என்று சொல்ல முடியவில்லை. கிராமத்திலிருந்து நகரத்தில் வந்து நாலு வருஷம் படித்த என்னால் திரும்ப அந்த மண்ணில் போய் ஒட்டிக் கொள்ள முடியவில்லை. என்னுடைய அப்பா மாதிரி, தாத்தா மாதிரி சந்தோஷமான விவசாயி ஆகிவிட முடியவில்லை. நடுவில் தங்கியிருந்த நகரத்தின் உறுப்பாகவும் ஆகிவிட முடியவில்லை. அங்கே எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத் தன்மை இருக்கிறது. எந்திரத் தன்மை இருக்கிறது. எதுவும் அதன் இயல்புகளோடு இல்லை. மென்மையான என் இயல்புக்குத் தக்க வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையை என்னால் விரும்ப முடியவில்லை. நான் என் சமூகத்திற்கு, தேசத்திற்கு அன்னியமாகிப் போனேன். எனக்கு அதோடு உறவுகள் இல்லை. அங்கே நான் அநாதையாகிப் போனேன். மழலைக்குக் கொஞ்சுவோரும், அழுகைக்கு மிரள்வோரும் இல்லாத அநாதைப்பிள்ளை. இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என்று தெரியவில்லை.

எதைப் பார்த்தாலும் வெறுப்பாக எரிச்சலாக வருகிறது. எங்கேயாவது ஓடிப்போய் விடலாம் என்று தோன்றுகிறது. எனக்குத் தீட்சை கொடுங்கள். காவியைக் கட்டிக்கொண்டு இங்கேயே தங்கிவிடுகிறேன். அது முடியாதென்றால் என்னை உங்கள் அநாதை ஆஸ்ரமம் எதிலாவது சேர்த்துக் கொள்ளுங்கள்… இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன். கிருஷ்ணமூர்த்திக்கு அவன் தன் சுயசரிதத்தின் அமெரிக்கப் பாதிப்பு என்று  தோன்றியது. சுவாமிகள் இதைப் புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

“ காவி கட்டிண்டறதுங்கிறது அவ்வளவு சுலபமா என்ன? ம் ? என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார். இவனை மென்மையாக ஒரு கணம் பார்த்தார். நிதானமாகச் சொன்னார்.

“ ம் … என்னைக் கேட்டா வாழ்க்கையோட மூவ்மெண்ட்லே அது அது அதன் இடத்திற்குப்  போய்ச் சேர்ந்துண்டு இருக்கு. எவ்ரிதிங் ஃபால்ஸ் இன் இட்ஸ் ப்ளேஸ். இதான் வாழ்க்கையோட டைனமிக்ஸ். இதை அடையாளம்  கண்டுபிடிச்சு புரிஞ்சிக்கிறதுதான்- ரெககனைஸ் பண்ணிக்கிறதுதான் – நம்ப வேல. கண்டு பிடிக்கறது மட்டுமில்லை, புரிஞ்சுக்கிறது மட்டுமில்லை, அதோடு சம்பந்தம் வைச்சுக்கணும். லைஃப் இஸ் டு ரிலேட் திங்ஸ். நமக்கு எல்லாத்தோடயும் சம்பந்தம் இருக்கு. மனுஷாளோடு மட்டுமில்லை. இந்த சுவத்தோட, கதவோட, மரத்தோட, பூவோட, நட்சத்திரத்தோட எல்லாத்தோடயும் சம்பந்தம் இருக்கு. கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பார்த்தா இது உங்களுக்கும் புரியும். இதைப் புரிஞ்சுண்டா உங்களுக்கு இத்தனை இம்சை இராது. யாரோடும் கோவிச்சுக்க முடியாது.

எங்க மடத்திலே,  வேத பாடசாலை நடத்தறா,  தொழிற்சாலை நடத்தறா. இங்கிலீஷ் ஸ்கூல் நடத்தறா, ஆஸ்பத்திரி நடத்தறா, பசு பராமரிப்பு சாலை நடத்தறா, என்ன என்னல்லாமோ அங்கங்க நடந்திண்டு இருக்கு. ஆனா அநாதை ஆஸ்ரமம்னு கிடையாது. ஏன்னா அநாதைனு யாருமே உலகத்திலே கிடையாது. அது பெரிய பிரமை.

தனிச்சு போயிடறதுக்காக காவியைக் கட்டிண்டு கிளம்பக்கூடாது. இந்தத் தேசத்திலே காவியைக் கட்டிண்டவா எல்லாம், எல்லாத்தையும் உதறிவிட்டுக் கிளம்பினவா இல்லை.  எல்லாத்தையும் இழுத்து அணைச்சுக்கிறதுக்குக் கிளம்பினவாதான். நமக்குக்  குடும்பத்தோடு  மட்டும்  இல்லை.  அதற்கு  மேலும் இத்தனை சம்பந்தம் உண்டு. உறவு உண்டுன்னு புரிஞ்சுண்டு இருக்கிறவாதான். நீங்க இங்கிலீஷ்லே சொல்றேளே, யூனிவர்சல் லவ் அதோட நிறந்தான் காவி. நீங்க கேள்விப்பட்டிருக்கேளோ என்னவோ, எங்களுடைய ஆதி குரு எட்டு வயசிலே சந்நியாசம் வாங்கிண்டவர். அவர் கிளம்பறச்சே முதலை மாதிரி அவா அம்மா பிடிச்சிண்டா, அப்போ அவர் என்ன சொன்னா தெரியுமா ? “ நான் இனிமே ஒரு அகத்துக் குழந்தை இல்லை. எல்லா அகத்துக்கும் குழந்தை. எல்லா அகமும் நமக்குச் சொந்தம்…எல்லாவீடும் நம்மோடதாயிடுத்துன்னா, நாம எதிலேயிருந்து அன்னியமாறது, எப்படி அநாதையாவோம், ம்? சொல்லுங்கோ…

இத்தனை வார்த்தையும் தன்னைப் பார்த்துச் சொன்னதாய் பட்டது கிருஷ்ணமூர்த்திக்கு. பேசிக்கொண்டே குழந்தைகளுக்கு கொடுப்பது மாதிரி கல்கண்டு எடுத்துக் கொடுத்தார் சுவாமிகள்.

கிருஷ்ணமூர்த்தியைப்  பார்த்து, , “ ம் … எனக்கு என்ன … கஷ்டம் … என்று கேட்டு புன்சிரிப்பாய் சிரித்தார்.

கண் விளிம்பில் ஜலம் கோர்த்துக்கொள்ள தடாலென்று காலில் விழுந்து வணங்கினான் கிருஷ்ணமூர்த்தி.

மானத்தின் கதவு திறந்து கொண்டு விட்டிருந்தது.

(சாவி )

      

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.