அந்தக் குழந்தைக்கு இனிப்பு மீது அவ்வளவு பிரியம். ஆனால் அது இனிப்பு சாப்பிடுவது குறித்து அதன் அம்மா கவலை அடைந்திருந்தார். அதனால் உடம்பிற்குக் கேடு ஏற்படுமோ, வளர வேண்டிய குழந்தையாயிற்றே என்று அவருக்கு அச்சம். அன்பாக அறிவுரை சொல்லிப் பார்த்தார். எடுபடவில்லை. கடுமையான குரலில் கண்டித்துப் பார்த்தார்.பயனில்லை. இனிப்புகளை ஒளித்து வைத்துப் பார்த்தார். குழந்தை திருட ஆரம்பித்தது. அம்மாவின் கவலை அதிகரித்தது. உடல் கெட்டு விடும் என்று நாம் விதிக்கும் தடை, மனதையும் கெடுத்துவிடும் போலிருக்கிறதே என்று கலங்கினார். வீட்டில் இனிப்பு செய்வதையும் வாங்குவதையும் நிறுத்தினார். குழந்தை வெளியில் சாபிட்டுவிட்டு வீட்டில் பொய் சொல்ல ஆரம்பித்தது. வேறு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். குழந்தை மிகவும் மதிப்பு வைத்திருந்த ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் மீது குழந்தைக்கு தேவதா விசுவாசம். அவர் ஒரு வார்த்தை சொன்னால் அதை அந்தக் குழந்தை மீறாது.
ஒருநாள் அவரை சந்தித்துக் குழந்தையின் பிரசினையைச் சொன்னார். ஆசிரியர் ஒரு சில நிமிடங்கள் யோசித்தார். அடுத்த வாரம் கூட்டி வாருங்கள் நான் சொல்லிப் பார்க்கிறேன் என்றார்.அம்மா மனம் அமைதியடைந்து திரும்பினார். அவர் மகனுக்கு இனிப்பு உண்பதால் ஏற்படும் கேடுகளை எடுத்துச் சொல்வார், அதை எப்படித் தவிர்ப்பது என்பதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுப்பார், அனுபவக் கதைகளை உதாரணமாகச் சொல்வார்,பெரியவர்களின் வார்த்தைகளை எடுத்துச் சொல்லி அறிவுரைகள் வழங்குவார் என்றெல்லாம் எண்ணிக் கொண்டார் அம்மா. அதற்காகப் படித்துத் தயார் செய்து கொள்வதற்காகத்தான் ஒருவாரம் அவகாசம் கேட்கிறார் என்று அந்த அம்மா நினைத்துக் கொண்டார்
மறுவாரம் மகனை அழைத்து வந்தார் அம்மா. ஆனால் ஆசிரியர் “ தம்பி இனிமேல் இனிப்பு உண்பதை நிறுத்திவிடு” என்று ஒற்றை வாக்கியம் மட்டும் சொன்னார். “இதைச் சொல்வதற்கா உங்களுக்கு ஒருவாரம் தேவைப்பட்டது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார். “ஆமாம் அம்மா, நீங்கள் என்னிடம் வந்து முறையிட்டபோது எனக்கே இனிப்பு மீது ஈர்ப்பு இருந்தது. இனிப்பு சாப்பிடும் வழக்கம் இருந்தது. நான் பின்பற்றாத ஒன்றை, நான் கடைப்பிடிக்காத ஒன்றைச் செய்யுமாறு மற்றவர்களிடம் நான் எப்படிச் சொல்ல முடியும்? அவர்கள் அதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்? நான் என் பழக்கத்தை நிறுத்துவதற்கு ஒரு வாரம் தேவைப்பட்டது. இப்போது இனிப்பு உண்பதைக் கைவிட்டுவிட்டேன்” என்று விளக்கினார் அந்த ஆசிரியர்.
நாம் செய்யாத ஒன்றை, நம்மால்செய்ய முடியாத ஒன்றை, அடுத்தவர்களைச் செய்யுமாறு சொல்ல நமக்கு தார்மீக உரிமையோ, தகுதியோ இல்லை என்று எண்ணுபவர்கள் மிக அபூர்வம். திமுக போன்ற அரசியல் கட்சிகளிடம் அதை எதிர்பார்க்க முடியாது.
இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை அளிக்கக் கோரி திமுக போராட்டம் நடத்தியிருக்கிறது. ஆனால் அதன் வசம் அதிகாரம் இருந்த போது அது இந்த விஷயத்தை எப்படிக் கையாண்டது?
2009லிருந்து 2014 வரை திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தது. தான் கூறுகிற நபர்களுக்கு அமைச்சரவையில் தான் கூறுகிற இலாகாக்களை ஒதுக்க வேண்டும் என்று தனக்கு வேண்டியதைக் கேட்டுப் பெறுகிற அளவிற்கு அது அந்த அரசில் வலிமையோடு திகழ்ந்தது. கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருவர் அமைச்சரவையில் காபினட் அமைச்சர்களாக இருந்தார்கள்,
ஆனால் இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து வந்து இங்கு வசித்துக் கொண்டிருந்த தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தர திமுக அரசில் தனக்கிருந்த வலிமையைப் பயன்படுத்தவில்லை.
பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட 2009 போரை நிறுத்த திமுக போதுமான அளவு முயற்சி செய்யவில்லை என்றெழுந்த கொந்தளிப்பை சமனப்படுத்த, அந்த ஆண்டு நடந்த திமுகவின் முப்பெரும் விழாவில் இலங்கையிலிருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை அது நிறைவேற்றியது. ஆனால் அது நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைக்குக் கொண்டுவர, அது ஆட்சியில் இருந்த போதும், எந்த முயற்சியும் மேற்கொள்ளவிலை. தீர்மானம் காகித்தில் மட்டுமே இருந்தது. கட்சித் தலைமையின் மனதில் அந்த உறுதி இல்லை
அகதிகளாக இங்கு வந்தவர்களை, அந்தக் கட்சி மாநிலத்தில் ஆட்சியில் இருந்த போது எப்படி நடத்தியது? இலங்கைத் தமிழர்களுக்கான ‘சிறப்பு முகாம்’ 1990 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது, வேலூர் கோட்டையில் உள்ள திப்பு மகாலில் தொடங்கப்பட்டது அதைக் கொடுமைப்படுத்தப்பட்ட முகாம் என்று சொல்லி இலங்கைத் தமிழர்கள் போராட்டம் நடத்திய போது காவல்துறை அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் இருவர் இறந்து போனார்கள்.130 பேர் மீது, பிணையில் வெளிவர முடியாத தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் போடப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்
2009 போர் முடிந்த பிறகு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்த அகதிகள் தங்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரி 2011ஆம் ஆண்டு சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்போதும் இங்கு திமுக ஆட்சிதான் நடைபெற்றது. நீதிமன்றம் தலையிட்டு அவர்களை விடுதலைச் செய்யச் சொல்லுகிற அளவிற்கு நிலைமை முற்றியது.
அகதிகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை குறித்து ஐக்கிய நாடுகள் சபை 1951ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தை வரையறுத்தது. அதன் பின் 1967 ஆம் ஆண்டு ஒரு செயல்திட்டத்தைத் தயாரித்தது. இன்றுவரை இந்தியா அதில் கையெழுத்திடவில்லை. இந்தக் காலங்களில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியிலிருந்தது. மத்தியில் பல்வேறு அரசுகளில் திமுக அங்கம் வகித்த போதும், அதில் கையெழுத்திட வேண்டும் என்று கோரியதில்லை.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில், ஆரம்பம் முதலே அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவரும் பழ நெடுமாறன் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியிரிமை வழங்குவது என்பது இலங்கை அரசின் நோக்கங்களுக்கு உதவுவதாகிவிடும் என்று கூறியுள்ளது சிந்திக்கத் தகுந்தது. தமிழர்கள் இந்தியக் குடியுரிமை பெற்ற பிறகு அவர்களை சிங்கள அரசு மீண்டும் இலங்கை திரும்ப ஒருபோதும் அனுமதிக்காது. தமிழர்களை இலங்கையிலிருந்து விரட்டியடிக்கவேண்டும் என்பதே சிங்கள அரசின் திட்டமாகும். அதற்கு நாம் ஒருபோதும் துணை போகக் கூடாது என்று அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இலங்கைத் தமிழர்கள் நாங்கள் இலங்கையின் பூர்வீக குடிகள், இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள் அல்ல என்ற நிலைப்பாட்டில்தான் தங்கள் போராட்டங்களையும் போரையும் நடத்தினார்கள்.இந்தியாவிலிருந்து வந்தவர்களை அவர்கள் மலையகத் தமிழர்கள் என்றே தனித்த அடையாளத்துடன் குறித்து வந்தார்கள். இந்தியா அவர்களுக்குக் குடியுரிமை வழங்குமானல் அவர்களின் இந்த நிலைப்பாடு பலவீனமடையும்
இராமதாஸ், நெடுமாறன் போன்றவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் எனக் கூறி வருகிறார்கள். இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கச் சட்டத்தில் இடமில்லை. 2003ல் இந்தியாவில் பிறந்து அயலகத்திற்குச் சென்று அங்கு குடியுரிமை பெற்றவர்களுக்கு ‘அயலக இந்தியக் குடிமகன்’ (Overseas Citizenship of India) என்ற ஒன்றை அளித்து வருகிறது. அதற்கு அந்த அயலக நாடு அனுமதி அளிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் இலங்கை அத்தகைய அனுமதியை அளிக்காது. எனவே அது சாத்தியமில்லை.
எது சாத்தியமில்லையோ, எதை அது செய்யத் தவறியதோ அதை வலியுறுத்தி, திமுக போராட்டம் நடத்துகிறது. இது வாக்கு வங்கியைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியலே அன்றி வேறு உன்னத நோக்கங்கள் அதற்கு இல்லை
இலங்கையிலிருந்து ஆவணங்கள் ஏதுமின்றி இங்கே இடம் பெயர்ந்து வந்து குடியேறியவர்களுக்கு இந்திய அரசு செய்யக் கூடியவை என்ன?
1. அவர்களுக்கு மூன்று அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளக் கூடிய, நிபந்தனைகளுடன் கூடிய நீண்டகால விசா வழங்குவது
2. அயல்நாட்டில் வசிக்கும் முதியோர்கள், நோயுற்ற உறவினர்கள் இவர்களைச் சென்று பார்க்க ஏதுவாக அவர்களுக்குத் தற்காலிகமாக பயணப் பெர்மிட்கள் (Refugee Passport) வழங்குவது.
இவை சாத்தியமானவை. இவற்றைச் செய்ய பாஜக அரசு முன்வந்தால் அது அவர்களுக்குத் தமிழர்களிடம் நன்மதிப்பைப் பெற்றுத்தரும். .