நீருக்கும் நெருப்பிற்கும் சண்டை. காற்றின் துணை கொண்டு விரைந்து வருகிறது நெருப்பு. துரத்திக் கொண்டு ஓடுகிறது நீர். அதன் எதிர்ப்பைத் தாக்குப் பிடிக்க முடியாமல் மலை மேல் சென்று ஏறிக் கொள்கிறது நெருப்பு. ’பள்ளத்தை நோக்கி நீ பாய்வாய், உயரத்தை எப்படி எட்டுவாய்?’ என்று எக்காளமிட்டுச் சிரிக்கிறது. நீர் முகிலாய் மாறி சிகரம் தொடுகிறது. மழையாய் மாறி சளைக்காமல் பொழிகிறது. எதிர்ப்பைத் தாக்குப் பிடிக்க முடியாமல் நெருப்பு பாறைக்குள் ஒளிந்து கொள்கிறது.அதனால்தான் பாறையோடு எது உரசினாலும் இன்னொரு கல்லோ, இல்லை வாளோ எது உரசினாலும் அது நெருப்பைக் கக்குகிறது
நாமும் அன்றாடம் நீரைப் பார்க்கிறோம், நெருப்பைப் பார்க்கிறோம், கல்லைப் பார்க்கிறோம் அதற்குள் ஒளிந்திருக்கும் கற்பனையை பார்த்திருக்கிறோமா?.
இந்தக் கற்பனை ஓரு பழங்குடிப் பாடல். எழுதப்படாத இந்திய இலக்கியத்தின் ஓரு சிறு துளி
இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எத்தனையிருக்கும்? பதினெட்டு? இருபத்தியிரண்டு? இல்லை நண்பர்களே, கேட்டால் திகைத்துப் போவீர்கள், 1365! அடுத்த அதிர்ச்சிக்குத் தயாராகுங்கள், இவற்றில் அறுநூற்றுச் சொச்ச மொழிகளுக்கு வரி வடிவம் கிடையாது! ஒலி வடிவம்தான். அதாவது பேச்சு மொழிதான்.
அதனால் என்ன? எழுத்தா இலக்கியத்தின் அடிப்படை? எண்ணம் அல்லவா? எழுதப்படாத மொழிகளிலும் கற்பனைகள் உண்டு, கவிதைகள் உண்டு, கதைகள் உண்டு, தொன்மங்கள் உண்டு.
எழுதப்படாத மொழிகள் பெரும்பாலும் இந்தியாவின் பழங்குடி மக்களின் மொழிகள்.பழங்குடி இலக்கியத்தில் தொன்மங்களுக்கு (Myth) மிக முக்கிய இடம் உண்டு. இப்போது இளந்தலைமுறையினர் புதிய தொன்மங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அது என்ன புதிய தொன்மம்? பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதற்கு ஒரு புதிய கோணம் கொடுப்பது. இதோ ஒன்று:
துரோணர் தன் சீடர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். மரத்தில் ஊசலாடிக் கொண்டிருந்த கிளி பொம்மையின் கண்ணைக் குறிபார்த்து அம்பெய்த வேண்டும். எவரும் தேறவில்லை. அர்ஜுனன் கணை செலுத்த வில்லுயர்த்தினான். குறி பார்த்தான்.
நாணிலிருந்து அவன் கணையை விடுவிக்கப் போகும் நேரம், அவனது அம்பை முந்திக்கொண்டு வேறொரு அம்பு கிளியின் கண்ணைத் தைத்தது. திடுக்கிட்டுத் திரும்பினார்கள் துரோணரும் அர்ஜுனனும்.
ஏகலைவன்!
”யாரிடம் கற்றாய் இந்த வித்தையை?” என்றார் துரோணர்.
“உங்களிடம்தான் குருவே!” எனப் பணிந்தான் ஏகலைவன்
“அப்படியா? குருதட்சிணை எங்கே?”
”என்ன கொடுக்கட்டும்,குருவே?”
”உன் வலது கைக் கட்டை விரல்!”
வாளெடுத்தான்.வெட்டினான்,புன்னகையோடு இலையில் வைத்து நீட்டினான். அந்தப் புன்னகையின் வசீகரம் கண்டு பாண்டவர்கள் அசந்து போனார்கள்
துரோணரும் சீடர்களும் திருப்தியோடு திரும்பி நடந்தார்கள். சில அடிகள் கடந்ததும் திடுக்கிட்டு நின்றார்கள். எதிரே பாம்பொன்று படமெடுத்துச் சீறிக் கொண்டிருந்தது. என்ன செய்வதென்று அவர்கள் மருண்டிருந்த அந்தக் கணத்தில் அம்பொன்று சீறிக் கொண்டு வந்து அந்தப் பாம்பின் படத்தைக் கிழித்தது.
யார் என்று திரும்பிப் பார்த்தார்கள். ஏகலைவன்! திடுக்கிட்ட துரோணர் கேட்டார், “உனக்குத்தான் வலதுகைக் கட்டை விரல் இல்லையே, நீ எப்படி?”
ஏகலைவன் சிரித்துக் கொண்டே சொன்னான்: “ குருவே நான் இடக்கை ஆட்டக்காரன்!”