அந்தச் சிறுவன் பள்ளியில் சேர்ந்து சில மாதங்களே ஆகியிருந்தன.ஆனால் அதற்குள்ளாகவே அவனுக்குப் படிப்பு ஏறாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அவனது அம்மாவைக் கூப்பிட்டு பையனை நீங்கள் இனி பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டாம். அவனுக்குப் படிப்பு வராது என்று சொல்லிவிட்டார். அம்மாவிற்கு வேறு வழியில்லை, அந்தச் சிறுவனை வீட்டிலேயே வைத்துக் கொண்டு அவருக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்
அந்தச் சிறுவன் வளர்ந்து 84 வயதில் மரணமடையும் போது அவர் காப்புரிமை (பேடண்ட்) பெற்றிருந்த கண்டுபிடிப்புக்கள் 1093. அவரது பெயரில் நிறுவப்பட்ட விருது பொறியியல் துறையில் உலகின் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படுகிறது. அவரது நிறுவனத்தில் பல அறிவியலாளர்கள் பணியாற்றினார்கள். அவர்களில் ஒருவரான ஹென்றி ஃபோர்ட், (ஆமாம், காரை உருவாக்கியவர்) அவரது கடைசி மூச்சை ஒரு சோதனைக்குழாயில் பிடித்து சீல் வைத்துப் பாதுகாத்தார்.அவரது கைகளை பிளாஸ்டர் ஆஃப் பாரிசைக் கொண்டு மோல்ட் செய்து எடுத்து வைத்துக் கொண்டார். அவரது கண்டுபிடிப்பை நாம் இன்றும் தினமும் பயன்படுத்துகிறோம். அது இருளைத் துரத்துகிறது. அது மின் விளக்கு. இன்னொரு கண்டுபிடிப்பைப் பயன்படுத்தும் போது இருளில் ஆழ்கிறோம். அது சினிமா.
மக்கு என்று தன்னை நிராகரித்தவர்களுக்கு இதைவிடச் சரியான பதிலடியை ஒருவர் கொடுத்திருக்க முடியாது. அந்த மனிதர் தாமஸ் ஆல்வா எடிசன்.
பிரதமர் மோதி அமெரிக்காவில் பங்கேற்ற நலமா மோதி என்ற நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கு எடிசன் நினைவுக்கு வந்தார். 2005ஆம் ஆண்டு மோதி அமெரிக்காவிற்குப் பயணம் செய்யவிருந்தார். முதல்வர் என்பதால் அவர் A2 என்ற வகை டிப்ளமேட்டிக் விசாவிற்குத் தகுதியுடையவர். ஆனால் மோதிக்கு விசா அளிக்க மறுத்தது அமெரிக்க அரசு. அது மட்டுமல்ல, அவருக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த B1/B2 வகை விசாவையும் ரத்து செய்தது. அன்று அவரை அமெரிக்காவில் நுழையவிடுவதில்லை என்பதில் அது தீர்மானமாக இருந்தது. அன்று International Religious Freedom Act என்ற சட்டத்தின் கீழ் அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட ஒரே நபர் மோதிதான் .அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் அந்த முடிவை 95சதவீத இந்தியர்கள் ஆதரிக்கிறார்கள் என்று சிபிஐ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அமெரிக்க தூதர் தன் நாட்டிற்குத் தெரிவித்ததாக விக்கி லீக்ஸ் கேபிள் ஒன்று கூறுகிறது.
இன்று அமெரிக்கா மோதிக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறது. அந்தக் கம்பளத்தில் கம்பீரமாக நடந்து ஒரு பெரிய அரங்கத்தில் நுழைகிறார். அங்கே கூடியிருக்கும் 50ஆயிரம் பேரும் ஒரு சேர எழுந்து நின்று கரவொலி எழுப்புகிறார்கள் அவர்களில் அமெரிக்கர்களும் இருக்கிறார்கள். மேடைக்கு வந்த மோடி இந்திய முறைப்படி கைகளைக் குவித்துக் கொண்டு குனிந்து வணங்குகிறார். அவர் பேச மைக் முன் வந்து நிற்கிறார். இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை.மறுபடி கரகோஷம்.
அங்கு சிறிது நேரத்தில் இன்னொருவர் வந்து சேர்ந்து கொள்கிறார். அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப். ஆம் எந்த அமெரிக்கா, மோதி தங்கள் நாட்டில் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று இருந்த விசாவையும் ரத்து செய்து அனுமதி மறுத்ததோ அந்த நாட்டின் ஜனாதிபதி
இது மோதி என்ற தனிமனிதனின் வெற்றி மட்டுமல்ல, இந்தியாவின் வெற்றி. இன்று உலகில் எந்த நாடும் இந்தியாவை அலட்சியப்படுத்த முடியாது, புறக்கணிக்க முடியாது என்று கம்பீரமாக எழுந்து நிற்கிறது. அதனுடன் நட்பு கொள்ள வேண்டும், நட்பு கிட்டாவிட்டாலும் முறைத்துக் கொள்ளக் கூடாது என்று உலக நாடுகள் மரியாதை கலந்து இந்தியாவை அணுகுகின்றன. கஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தான் தனிமைப்பட்டு நிற்பது- ஒரு முறையல்ல, இரு முறை- இதற்கு அசைக்க முடியாத சாட்சி. அதை நம்ப மறுப்பவர்கள் 70கள் 80களில் அயல்நாடுகளுக்குப் பயணம் செய்தவர்களைக் கேட்டுப் பாருங்கள். இமிகிரேஷன் கவுணடரில் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களைப் புழுப் போல பார்ப்பார்கள். ஏன் இங்கு வந்தாய் எனக் கேட்பார்கள். அறிவுலகின் அழைப்பின் பேரில் நாம் போயிருப்போம், ஆனாலும் அவர்களுக்கு இளக்காரம்தான். இன்றைக்கு எந்த இமிகிரேஷன் கவுண்டரிலும் இந்தியர்கள் தலை நிமிர்ந்து நடக்கலாம். ஆண்டுக்கு மூன்றுமுறை அயல்நாடு செல்கிறவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன்.
தனது உரையில் மோடித் தெளிவாக இந்தியாவின் நிலையை எடுத்து வைத்தார். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலை நடத்தியவர்களும் இந்தியப் பாராளுமன்றத்தைத் தாக்கியவர்களும் எங்கிருந்தார்கள் என்பதை உலகறியும் என்று பாகிஸ்தானை பெயர் சொல்லாமலே நினைவூட்டினார்.
மோதியைப் போல டிரம்ப் மறைமுகமாக அல்லாமல் நேரடியாகவே இஸ்லாமிய பயங்கரவாதம் என்று குறிப்பிட்டுப் பேசினார். பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான போரை நடத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்றார்.
ஒருகாலத்தில் இதே அமெரிக்கா, வங்கதேசப் போரின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் தனது கப்பல் படையை வங்கக் கடலில் கொண்டு வந்து நிறுத்தியது. அது ஊரறிந்த செய்தி. ஆனால் அதிகம் பேர் அறியாத விஷயம் நிக்ஸன் ஜனாதிபதியாக இருந்த போது அவர் இந்தியா மீதும் இந்தியத் தலைவர்கள் மீதும் இந்தியர்கள் மீதும் என்ன மாதிரியான வசைகளைப் பொழிந்தார் என்பது. ‘தெற்காசியா குறித்த ஆவணங்கள் 1969-72’ (Documents on South Asia, 1969-1972) என்ற ரகசிய ஆவணங்கள் 2005ஆம் ஆண்டு, அவற்றின் ரகசியத் தன்மை விலக்கிக் கொள்ளப்பட்டதால் வெளியாயின. அதில் நிக்சன் இந்திராவை பெட்டை நாய், சூன்யக்காரி என்ற வார்த்தைகளாலும், கிஸ்சிங்கர் இந்தியர்களை வேசி மகன்கள் என்றும் திட்டுகிறார்கள். அந்த கால கட்டத்தைப் பற்றிய இன்னொரு புத்தகமான கேரி ஜெ. பாஸ் எழுதிய Blood Telegram என்ற நூலில் “நான் இந்தியர்களை வெறுக்கிறேன்” என்று வெளிப்படையாகவே சொல்கிறார் நிக்சன்.
இன்று வரலாறு தலைகீழாகத் திரும்பியிருக்கிறது. டிரம்ப் மோதியின் கையைக் கோர்த்துக் கொண்டு நடக்கிறார். நம்பிக்கைக்குரிய நண்பன் என்று இந்தியாவை விமர்சிக்கிறார். கஷ்மீர் உட்பட இந்தியாவின் பிரசினைகளைப் புரிந்து கொண்டு துணை நிற்கிறார் (“ இரு நாடுகளும் தங்கள் மக்களைப் பாதுகாக்க எல்லையில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது”)
மோதி – டிரம்ப் உரைகளில் சின்னச் சின்ன நட்புக் கொஞ்சல்கள் இருந்தன. அமெரிக்காவின் புகழ் பெற்ற விளையாட்டுப் போட்டியான NBA- கூடைப்பந்து போட்டி மும்பையில் நடக்கவிருக்கிறது. “அதைக் காண என்னை அழைப்பீர்களா மோதி?” என்று கேட்ட டிரம்ப் சிறிய இடைவெளிவிட்டு “என்னை அழைத்தால் வந்துவிடுவேன்” என்று ஜாலியாக மிரட்டுகிறார்.
விழாவிற்கு டிரம்ப் மட்டுமல்ல, அவரது எதிர்கட்சியினரான ஜனநாயகக் கட்சியினரும் வந்திருந்தனர். அவர்களையும் வைத்துக் கொண்டுதான் மோதி, 2014ல் தனக்கு வெற்றி தேடித்தந்த முழக்கமான ஆப் கி பார் மோதி சர்க்கார் என்பதைச் சற்று மாற்றி ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார் என்று முழங்கினார். அதைக் குறித்து இந்திய ஊடகங்கள் சர்ச்சையில் இறங்கியுள்ளன.
ஆனால் இந்தியாவில் இருந்த சில சர்ச்சைகளுக்கு இந்தக் கூட்டத்தில் மோதி முற்றுப்புள்ளி வைத்தார், உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இந்தி இருக்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்தால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பிரதமர் தன் இதமான வார்த்தைகளால் மருந்திட்டார். “நம்முடைய பல மொழிகள் நம்முடைய முற்போக்கான ஜனநாயகத்தின் அடையாளமாகத் திகழ்கின்றன. டஜன் கணக்கான மொழிகள், நூற்றுக்கணக்கான வட்டார வழக்குகள் இவற்றுடன் பல நூறாண்டுகளாக இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. பன்முகத் தன்மைதான் துடிப்பான ஜனநாயகத்தின் அடிப்படை” என்று பேசிய மோதி, தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் ஓரிரு வரிகள் பேசினார். தமிழில் பேசும் போது “எல்லாம் செளக்கியமா?” என்று கேட்டார்.
மோதியின் இந்தக் கூட்டம் வெறும் விளம்பர வெறி என்று மறுநாளே தமிழ் ஊடகங்கள் விவாதிக்க ஆரம்பித்து விட்டன. ஆனால் நான் இந்தக் கூட்டம் டிரம்ப் நிர்வாகத்திற்கும் இந்தியாவிற்குமிடையே உள்ள நேசப் பிணைப்பை வலுப்படுத்தியுள்ளது. நேருக்கு நேர் மோதத் திராணியற்ற பாகிஸ்தான், தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பி வைக்க முனைந்திருக்கும் இன்றைய சூழ்நிலையில் இது இந்தியாவிற்குத் தேவைப்படும் ஒன்று என்று கருதுகிறேன்.
அதைவிட முக்கியமாக நான் கருதுவது, அமெரிக்காவில் வாழும் பல லட்சக்கணக்கான இந்தியர்களிடம் தாய்நாட்டைக் குறித்து ஏற்பட்டிருக்கும் மன எழுட்சி. இந்த உரையினால் கிடைத்த பணப் பலன் என்ன என்று மாத்திரம் பார்ப்பது முதிர்ச்சியற்ற பார்வைஎல்லாப் பயன்களும் எல்லா நேரமும் பணப் பலன் கொடுக்க வேண்டும் என்று நினைப்பது அபத்தம்.