எந்தையும் தாயும்
மாலன்
”எல்லாச் செல்வங்களுக்கும் அடிப்படை உழைப்பு.ஆனால்….” என்ற மார்க்சின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார் லட்விக பான் வெஸ்ட்பாலன். மார்க்சின் பக்கத்து வீட்டுக்காரர். அரசாங்கத்தில் பெரிய அதிகாரி. மார்க்ஸ் வசித்து வந்த ரைன்லாந்த் பகுதியின் தலைமை அதிகாரி. அவருக்கு மார்க்சின் அப்பா வயதிருக்கும். ஆனால் மார்க்சின் மீது ஒரு தனிப் பிரியம். அவருக்கு மார்க்ஸ் பக்கத்து வீட்டில் வசிக்கும் கல்லூரி மாணவன் அல்ல.சரிக்குச் சரியாகப் பேசி வாயைக் கிளறி வாதிடும் தோழன். வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த புல்வெளியில் உலவியபடியே பேசிக் கொண்டிருந்தார்கள்
“ம்.சரிதான். பின் ஏன் ‘ஆனால்’ போடுகிறாய்?”
”ஆனால் உழைப்பாளிகளோ ஒன்றுமில்லாதவர்களாக இருக்கிறார்கள். பணக்காரர்களாக இருப்பவர்களோ உழைக்காதவராக இருக்கிறார்கள்”
“விசித்திர முரண்பாடு?”
“இருவருடைய நலன்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்டவையாக இருக்கின்றன. ஒருவர் வென்றால் மற்றவர் தோற்கிறார்.அதனால் இருவரும் எப்போதும் போராடிக் கொண்டே இருக்கிறார்கள்” என்றார் மார்க்ஸ்
“ஸான்ஸீமன் பூர்யே படிக்கிறாயா?” என்றார் லட்விக்
பூர்யே சமத்துவம் பற்றியக் கருத்துக்களை எழுதிய பிரன்ச் அறிஞர்.
“ம் படிக்கிறோம். விவாதிக்கிறோம்”
“ஆக பல்கலைக்கழகத்தில் அரசியல் பேச்சுத்தான் நடக்கிறது. இலக்கியம் பக்கமெல்லாம் இளைஞர்கள் போவதே இல்லை. அப்படித்தானே?” என்றார் லட்விக். அவருக்கு அரசியல் அவ்வளவாகப் பிடிக்காது. ஆனால் இலக்கியத்தின் மீது ஈர்ப்பு. ஷேக்ஸ்பியர் நாடகங்களை மனப்பாடமாக ஒப்புவிக்கும் அளவு ஈடுபாடு.
“அதுவும்தான் நடக்கிறது. பலகலைக்கழகத்தில் படிக்கும் இளைஞர்கள் நாங்கள் சிலர் சேர்ந்து கவிஞர்கள் மன்றம் ஒன்று கூட அமைத்திருக்கிறோம்”
“அட! பரவாயில்லையே! கவிதைகள் எல்லாம் எழுதுகிறாயா? என்னிடம் காட்டவே இலலையே!”
மார்கஸ் சற்றே நாணம் மேவிட புன்னகைத்தர். அந்தக் கவிதைகளை எப்படி இவரிடம் காட்ட முடியும்? அவை ஜென்னிக்காக எழுதப்பட்ட கவிதைகள்.ஜென்னியை வைத்து எழுதப்பட்ட கவிதைகள். ஜென்னி அவருடைய மகள். மார்க்சினுடைய காதலி!
ஜென்னி, மார்க்ஸைவிட நான்கு வயது மூத்தவர். ஆனால் வயதிற்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்? குணத்திற்குக் கூட சம்பந்தம் இருக்கிறதா என்ன? மார்க்சின் இளமைப் பருவம் பற்றி எழுதியிருப்பவர்கள் எல்லோரும் அநேகமாக அவரை ‘முரடன்’ என்பதைப் போல எழுதியிருக்கிறார்கள். அவரது நெருங்கிய நண்பரான எங்கல்ஸ் அவரைச் செல்லமாக, “மூர்” என்று குறிப்பிடுகிறார்.”மார்க்ஸ் ஒரு சுழன்று சுழன்று அடிக்கிற சூறைக் காற்று” என்று சிலர் எழுதியிருக்கிறார்கள்.
ஜென்னி எல்லாவற்றிலும் நேர் எதிர்.
ஜென்னியின் குடும்பம் செல்வச் செழிப்பான பிரபுக்கள் குடும்பம். மார்க்சின் அப்பா ஒரு வக்கீல், நடுத்தரக் குடும்பம். ஜென்னி பேரழகி.”இவளைக் கல்யாணம் செய்து கொள்ள எவன் கொடுத்து வைத்திருக்கிறானோ?’” என்று ஊர் பேசியது. மார்க்ஸ் அப்படியொன்றும் அழகில்லை.”சூரிய வெளிச்சம் பரவுகிற பூமியில் இப்படி ஒரு விகாரமான மனித உருவம் இருக்க முடியுமா?” என்பதுதான் மார்க்ஸைப் பற்றி ஊர் வைத்திருந்த விமர்சனம். ஜென்னி மீது அவரது குடும்பம் ஏராளமான நம்பிக்கை வைத்திருந்தது. மார்க்ஸ் குறித்து அவரது குடும்பத்திற்கு நிறையக் கவலை.ஜென்னி மார்க்சைவிட மூத்தவர். வயது, பணம், அந்தஸ்து, தோற்றம் எல்லாவற்றையும் கடந்தது மார்க்ஸ் ஜென்னி காதல்.
அந்தக் காதல் எப்போது அரும்பத் துவங்கியது என்று அவர்களுக்கே தெரியாது. இருவரும் பக்கத்துப் பக்கத்து வீட்டில் வசித்த சின்னக் குழந்தைகளாக சேர்ந்து விளையாடியதுண்டு. மார்க்ஸ்க்குப் பிடித்த விளையாட்டு, குதிரையேற்றம். ஏதாவது ஒரு குழந்தையின் முதுகில் ஏறிக் கொண்டு அதன் கூந்தலைப் பிடித்துச் சொடுக்கினால் “குதிரை” வேகமாக ஓடும். அநேகமாக மார்க்ஸைச் சுமக்கிற குதிரை ஜென்னியாகத்தானிருக்கும்.
மார்க்சின் மன உறுதி, அடக்கியாளும் தன்மை, ஒழுக்கம்,பெருந்தன்மை இவையெல்லாமாகச் சேர்ந்து ஜென்னியை ஈர்த்திருக்கும் என வரலாற்றாசிரியர்கள் ஊகிக்கிறார்கள்.
மார்க்சை முதலில் பக்கத்திலிருந்த பான் பல்கலைக்கழகத்திற்குத்தான் படிக்க அனுப்பினார் அவரது அப்பா. ஆனால் அங்கு மாணவர்களிடையே ’குடியும் கூத்தும்’ அதிகமாக இருக்கிறது என்று கேள்விப்பட்டதும் ஒன்றரை வருஷத்தில் அவரைப் பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்த்தார்.
பெர்லின் போவதற்கு முன் ஊருக்கு வந்த மார்க்ஸும் ஜென்னியும் ரகசியமாக ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ஓரிரு வருடங்கள் கழித்து மணந்து கொள்வது என்பதுதான் ஒப்பந்தம்.
சில நாட்களுக்குள்ளாகவே ஜென்னி – மார்க்ஸ் காதல் மார்க்சின் அப்பாவிற்குத் தெரிய வந்தது. அவர் கவலைப்பட்டார்.பெண் பெரிய குடும்பத்துப் பெண். அதே நேரம் தனது பையனின் பிடிவாதம் பற்றியும் அவருக்கு நன்றாகவே தெரியும். மிகுந்த தயக்கத்தோடு மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
“ஜென்னியிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன்.அவள் மனம் நிம்மதி அடையக்கூடிய மாதிரி நான் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்னால் முடிந்தவரையில் பேசினேன்.ஆனால் எல்லா விஷ்யங்களையும் நான் அவளிடத்தில் முகத்திற்கு நேரே சொல்ல முடியாதல்லவா? அவளுடைய பெற்றோர்கள் இந்தக் கல்யாணத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று தெரியாது. உற்றாரும் உறவினரும் சொல்வதை எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது. ஒன்று மட்டும் சொல்வேன். ஜென்னி உன்னைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் மகத்தான தியாகத்தைச் செய்கிறாள்.இதை நீ மறந்து விடுவாயானால் வாழ்வில் உனக்குப் பல சங்கடங்கள் உண்டாகும். உன் மனதை நீயே சோதனை செய்து பார்.
இன்று ஓர் இளைஞனாக இருந்தாலும், நீ உலகத்தினால் மதிக்கப்படக்கூடிய ஒரு மனிதனாக வேண்டுமானால் அது நீ நடந்து கொள்வதிலும், உன்னுடைய முயற்சியிலுமே இருக்கிறது. – அன்புடன் அப்பா”
அப்பாவின் கடிதம் மார்க்ஸை அப்படியே புரட்டிப் போட்டது. அவர் பெரிதும் மரியாதையும் அன்பும் வைத்திருந்த ஒரு மனிதர் அவரது அப்பா. மார்க்ஸ் 65 வயதில் மரணமடையும் வரை அவரது சட்டைப் பையில் எப்போதும் வைத்துக் கொண்டிருந்த படம் அவரது அப்பாவினுடையது.
அப்பாவின் கடிதத்தில் இருந்த அந்தக் கடைசிவரியை-’உலகம் மதிக்கக் கூடிய மனிதனாக வேண்டுமானால்’ என்ற வரியை எப்படிப் புரிந்து கொண்டாரோ, படித்து முடித்து ஒரு வேலையில் போய் உட்காராமல் திருமணம் செய்து கொள்வதில்லை என்று முடிவெடுத்தார் மார்க்ஸ். அதன் காரணமாக ஜென்னி திருமணத்திற்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. ஓராண்டல்ல, ஈராண்டல்ல, ஏழாண்டுகள்!
மார்க்ஸ் படிப்பில் முழு மூச்சாக இறங்கினார். அவருக்குப் பிடித்தது. ஆனால் அவர் அப்பாவிற்குப் பிடிக்கவில்லை. அவர் தன் மகன் தன்னைப் போல் ஒரு வக்கீலாக வர வேண்டும் என ஆசைப்பட்டார். ”கவிதைகள் இயற்றுவது,சட்ட நூல்களைப் படிப்பது, தத்துவ இயலில் பயிற்சி பெறுவது ஆகிய இவற்றில் நான் அதிகமாகக் கவனம் செலுத்திக் கொண்டு வந்தேன். ஆனால் இந்தப் படிப்புகளினால் உலக வாழ்க்கை எப்படி நடைபெறுகிறது என்பதற்கும், எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கும் போராட்டம் ஏற்பட்டது.அதாவது இப்போது இருப்பதற்கும் இனி இருக்க வேண்டியதற்கும் போராட்டம்.” என்று தன் அப்பாவிற்குக் கடிதம் எழுதினார் மார்க்ஸ். இந்தப் போராட்டம் அவர் சிந்தனையை உசுப்பியது. உடலை வருத்திக் கொண்டு படித்தார். பல இரவுகள், உறங்காமல். படிப்பதிலும், குறிப்பெடுப்பதிலும் யோசிப்பதிலும் கழிந்தன, உள்ளம் பூத்தது. உடல் நலிந்தது. உடல் நலம் நலிந்து படுக்கையில் கிடந்தபோது ஹெகல் என்பவரின் கோட்பாடுகள் பற்றி முழுமையாக அறிந்து கொண்டார்.
உலகில் ஒன்று இருக்கிறதென்றால் அது இருப்பதற்கான அவசியம் இருப்பதால் அது இருக்கிறது. அதனால் அது நியாயமானது என்று மூத்த ஹெகலியவாதிகள் வாதிட்டார்கள். அவர்கள் அரசாட்சியை ஆதரிப்பவர்கள். அரசாட்சி இருக்கிறதென்றால் அது இருப்பதற்கான அவசியம் இருக்கிறது, எனவே அது நியாயமானது என்பது அவர்கள் வாதம். எது நியாயமானதோ அதுவே அவசியமானது, எனவே அதுதான் இருக்க வேண்டும் என்பது மார்க்ஸ் போன்ற இளம் ஹெகலியர்களின் வாதம். சுருக்கமாகச் சொன்னால் நியாயம் தவறிய அரசாட்சிகள் இருக்க வேண்டியதில்லை என்பது அவர் கருத்து.
இது அவருக்கு வேலை கிடைப்பதற்கு இடைஞ்சலாக இருந்தது.படித்து முடித்ததும் பல்கலைக்கழகத்தில் வேலைக்கு முயற்சித்தார் மார்க்ஸ் இளைஞர்களைக் ‘கெடுத்துவிடுவதால்’ அரசுக்கெதிரானவர்களைப் ஆசிரியப் பணிகளில் நியமிப்பதிலை எனப் பல்கலைக்கழகங்கள் தீர்மானித்திருந்தன. சுதந்திரமாகவும், அதே நேரம் ஓரளவு வருமானம் ஈட்டக்கூடியதுமான பணி எது என்று யோசித்த மார்க்ஸ் தேர்ந்தெடுத்த தொழில்: பத்திரிகை!
மார்க்ஸ் பிறந்த ரைன்லாந்த் பகுதி ஜெர்மனியிலேயே செழிப்பான பகுதி. தொழில் ந்கரமும் கூட. அங்கேயிருந்து வெளிவந்து கொண்டிருந்த ரைன்லாந்த் கெசட் என்ற பத்திரிகையில் அவ்வப்போது எழுதி வந்தார் மார்க்ஸ். தர்க்க ரீதியாகப் புள்ளிவிவரங்களோடு அவர் எழுதுகிற முறையும், நடையும் வாசகர்களிடம் அவருக்குத் தனியிடத்தைப் பெற்றுத் தந்தது. அவர் எழுத ஆரம்பித்த சில காலத்திற்குள்ளாகவே- 10 மாதத்தில்- அந்தப் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்க வருமாறு அவரை அழைத்தது பத்திரிகை நிர்வாகம்.
வேலை கிடைத்துவிட்டது. ஆனால் திருமணம் நடக்கவில்லை. “கல்யாணம் ஆகாத வாழாவெட்டி” என அக்கம் பக்கத்தின் ஏச்சுப் பேச்சுக்களைப் பொருட்படுத்தாமல் பொறுமையோடு காத்திருந்தாள் ஜென்னி.அவள் வயது 28ஐ நெருங்கிக் கொண்டிருந்தது.
மார்க்ஸின் மனம் முழுவதும் புது வேலையில் இருந்தது. ஆசிரியப் பொறுப்பேற்றதும் பத்திரிகையில் அநதப் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். அவற்றில் சில பத்திரிகைத்துறைக்கே புதிதாக இருந்தன. தேடித் தேடி விஷயங்களைச் சேகரித்துக் கொண்டு வந்தார். பத்திரிகையின் ஒவ்வொரு வரியையும் படித்துப் படித்துச் செதுக்கினார். அந்தப் பத்திரிகை முன் வைத்த முக்கியமான மாற்றம், மக்கள் அரசாங்கத்திற்காக அல்ல, மக்களுக்காகத்தான் அரசாங்கம் என்ற கருத்தை வலியுறுத்தி மார்கஸ் எழுதிய கட்டுரைகள். மக்களிடையே பத்திரிகையின் செல்வாக்குப் பெருகியது. அரசாங்கத்திடம் ஆத்திரம் பொங்கியது. ரஷ்யாவில் நடைபெற்று வந்த யதேச்சாதிகார ஆட்சி பற்றி எழுதப்பட்ட கட்டுரையைக் காரணம் காட்டிப் பத்திரிகைக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மார்க்ஸ் நிபந்தனைகளை ஏற்க மறுத்து ஆசிரியர் பதவியிலிருந்து வெளியேறினார்.
“ரைன்லாந்த் கெசட் நின்றுவிட்டது இதன் அர்த்தமென்ன? ஜெர்மனியில் சுயமாகச் சிந்திப்போருக்கு இடமில்லை என்பதுதான். இனி ஜெர்மனியில் ஒருவன் இருக்க வேண்டுமானால் அவன் தனக்குத் தானே பொய்யனாக நடந்து கொள்ள வேண்டும்.” என்று நண்பர் ஒருவருக்குக் கடிதம் எழுதிவிட்டு ஜெர்மனியை விட்டு வெளியேறி பாரிசில் குடி புகுந்தார். அங்கு ஒரு புதுப் பத்திரிகையில் வேலை கிடைத்தது. மாதா மாதம் சம்பளம் என்று அந்த நிர்வாகம் அளித்த உறுதிமொழியின் பேரில் 1843ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி ஜென்னியை மணம் செய்து கொண்டார். ஏழாண்டு தவத்திற்குப் பின் பெர்த்தா ஜூலியா ஜென்னி டாக்டர் கார்ல்மார்க்ஸின் மனைவியானார். அப்போது அவருக்கு வயது 29. மார்க்ஸின் வயது 25.
அந்தப் புதுப்பத்திரிகையின் முதல் இதழே கடைசி இதழாகவும் ஆயிற்று. அதாவது ஒரே ஒரு இதழ்தான் வந்தது. அதுவும் ஜெர்மானிய, ஆஸ்திரிய அரசுகளால் தடை செய்யப்பட்டது. இதழ் வந்ததே ஒழிய சம்பளம் வரவில்லை. நிர்வாகம் பத்திரிகையின் 100 பிரதிகளைக் கொடுத்து இதை விற்று உன் சம்பளத்தை எடுத்துக் கொள்” என்று சொல்லிவிட்டது.!
வேறு ஒரு பத்திரிகையில் எழுதிய கட்டுரைக்காக 24 மணி நேரத்திற்குள் பிரான்ஸை விட்டு வெளியேறுமாறு அரசு அவருக்கு ஆணையிட்டது.பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்சிற்குப் புறப்பட்டார் மார்க்ஸ். ஜெர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட்ட பலர் அங்கே ஏற்கனவே வசித்துக் கொண்டிருந்தனர்.
சில நாட்களில் பாரீசில் ஒரு புரட்சி ஏற்பட்டு மன்னராட்சிக்குப் பதில் ஒரு குடியரசு மலர்ந்தது. அது மற்ற ஐரோப்பிய நாடுகளின் அரசர்களுக்கு கிலி ஏற்படுத்தியது. ’பிரச்சனைக்குரியவர்களை’ வெளியேற்றிவிட வேண்டுமென பெல்ஜியம் அரசு முடிவு செய்தது. 24 மணி நேரத்திற்குள் மார்கஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென ஆணையிடப்பட்டார். அவர் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த போது பெல்ஜியத்தில் வசிப்பதற்குப் போதுமான ஆவணங்கள் இல்லை எனச் சொல்லி மார்க்ஸ் கைது செய்யப்பட்டார். இது குறித்து நியாயம் கேட்க போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன ஜென்னியும் கைது செய்யப்பட்டு ஓர் இரவு முழுவதும் விபசாரிகள் தங்கும் விடுதியில் சிறை வைக்கப்பட்டார்.
மறுநாள் விசாரணைக்குப் பிறகு ( விசாரணையின் போது ஜென்னியோடு குழந்தைகளையும் சேர்த்துக் கைது செய்த போலிசாரின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினார் நீதிபதி!) மார்க்ஸும் ஜென்னியும் குழந்தைகளும் நாட்டின் எல்லைக்கு வெளியே கொண்டு போய் விடப்பட்டனர். அவர்கள் தங்களது துணிமணிகளைக் கூட எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
மார்க்சின் எழுத்துக்கள் அவரை நாடு நாடாகத் துரத்தின. கடைசியில் லண்டன் வந்து சேர்ந்தார். இந்த இடைக்காலத்தில் குடும்பம் பெருகியது. வருமானம் குறைந்தது. லண்டன் வாழ்க்கை பற்றி ஜென்னி எழுதுகிறார்:
“ என் குழந்தைக்குப் பால் கொடுக்க ஒரு தாதியை அமர்த்திக் கொள்வோமென்றால் அதற்கு அபார செலவாகும். அதனால் பொறுக்கமுடியாத என் மார்பு நோவையும், முதுகு வலியையும் பொறுத்துக் கொண்டு குழந்தைக்கு நானே பால் கொடுத்து வந்தேன். ஆனால் அழகும் துரதிருஷ்டமும் நிறைந்த அந்தக் குழந்தை என்னிடத்திலிருந்து எவ்வளவு பால் குடித்ததோ அந்த அளவு என்னுடைய துக்கத்தையும் சேர்த்துக் குடித்தது. சமீபத்தில் ஒரு நாள் அதற்கு ஒரு வலிப்பு ஏற்பட்டது.அது முதற்கொண்டு அது தன் உயிரோடு மன்றாடிக் கொண்டிருக்கிறது. இப்படி வலிப்பு ஏற்பட்ட சமயத்தில் அது பால் குடித்துக் கொண்டிருந்தது. அதனால் என் மார்பு புண்ணாகி ரத்தம் கசிய ஆரம்பித்தது. அடிக்கடி இந்த ரத்தமும் பாலுடன் சேர்ந்து அதன் சிறிய வாய்க்குள் போய்விடும்.
ஒரு நாள் அப்படி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கையில் வீட்டின் சொந்தக்காரி வந்தாள். அவளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஐந்து பவுனை உடனே கொடுக்க வேண்டும் என்றாள். ஏற்கனவே அவளுக்கு 250 பவுன் முன் பணமாகக் கொடுத்திருந்தோம். ‘உடனே கொடுக்க வேண்டுமென்றால் எப்படிக் கொடுக்க முடியும்?” என்றதும், இரண்டு பேர் வீட்டிற்குள் நுழைந்தார்கள். எங்கள் துணிமணிகளையெல்லாம் சேகரித்தார்கள். கைக்குழந்தையின் தொட்டில், பெண் குழந்தைகளின் விளையாட்டுச் சாமன்களைக் கூட விடவில்லை. அதைப்பார்த்துக் குழந்தைகள் அழத் துவங்கின. இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் பணம் கொடுக்காவிட்டால், அத்தனையும் அள்ளிக் கொண்டு போய்விடுவோம் என்று அச்சுறுத்தினார்கள். அப்படிச் செய்து விட்டால் இந்தத் தாங்க முடியாத மார்பு வலியோடு ஈரத் தரையில், நடுங்குகிற குளிரில், குழந்தைகளோடு எப்படிப் படுத்திருப்பது என்று எனக்குக் கவலை எழுந்தது. குடும்ப நண்பர் ஷ்ராம் வெளியே போய் ஏதாவது உதவி பெற்று வருகிறேன் என்று சொல்லி ஒரு குதிரை வண்டியில் ஏறினார். குதிரை அவிழ்த்துக் கொண்டு ஓட வண்டி குடைசாய, ரத்தக்காயங்களோடு வீடு திரும்பினார். அன்று இரவு முழுவதும் வலியோடும் குளிரொடும் அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்தோம்”
அதன் பின் பல வீடுகள் மாறினார்கள். கடைசியில் இரைச்சலும், அழுக்கும், துர்நாற்றமும், நோயும் நிறைந்த ஒரு சேரியில் இரண்டு அறைகள் கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு ஆறு வருடங்கள் வசித்தார்கள். அந்த ஆறு வருடத்தில் மூன்று குழந்தைகள் இறந்து போயின.
தன்னுடைய ஒரு வயதுப் பெண் குழந்தை இறந்தபோது ஜென்னி எழுதிய வரிகளை இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு படிக்கும் போது மனது கிழிந்து போகிறது:
“எங்களுடைய சிறு குழந்தை பிரான்சிஸ்கா, கடுமையான மார்ச்சளியினால் படுத்துக் கொண்டு விட்டது. பாவம் மூன்றுநாள் சாவோடு போராடியது. அதன் அவஸ்தை சொல்லி முடியாது. கடைசியில் சாவுதான் ஜெயித்தது. அதைப் பின்னறையில் வைத்து விட்டு முன்னறையில் வெறுந்தரையில் படுத்துக் கொண்டோம். அடக்கம் செய்ய, சவப்பெட்டி வாங்கக் காசில்லை. எங்களது ஜெர்மன் நண்பர்களும் உதவி செய்கிற நிலையில் இல்லை. எங்களைப் போல நாடு கடத்தப்பட்ட ஒரு பிரஞ்சுக்காரரிடம் போய் உதவி கேட்டேன். அவர் இரண்டு பவுண்டு பணம் கொடுத்தார். அதைக் கொண்டு சவப் பெட்டி வாங்கினேன்.
அவள் பிறந்த போது அதற்கு தொட்டில் இல்லை, அவள் இறந்த போது சவப் பெட்டி வாங்கக் காசில்லை”
செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் ஒரு பிரபுவின் மகளாக பிறந்த பெண் எழுதிய வரிகள் இவை.
முப்பத்தி எட்டு ஆண்டுகள் மார்க்ஸோடு வாழ்ந்து முடிந்தாள் ஜென்னி. அவள் மறைவிற்குப் பின் மார்க்ஸ் 15 மாதங்கள் மட்டுமே உயிரோடு இருந்தார். இருந்தார், வாழ்ந்தார் எனச் சொல்லமுடியாது. ஜென்னி இறந்தபோதே அவரும் மனதளவில் செத்துப் போனார். “அவளோடு ’மூரு’ம் செத்துப் போய்விட்டான்” என்று எழுதுகிறார் எங்கல்ஸ்
ஜென்னியும் மார்க்ஸும் செத்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் காதல் வாழ்கிறது