’சிகரெட் என்பது புகை, சீக்ரெட் என்பது புகைச்சல்’. இந்தப் ’பொன்மொழி’ 1999ல் வெளியான ஒரு மாணவர் பத்திரிகையில் வெளியானது. மாணவர் பத்திரிகை என்பது கல்லூரிகளில் ஆண்டு இறுதியில் வெளியாகும் ‘மலர்கள்’ அல்ல. அந்தக் கல்லூரி மலர்கள், கஞ்சி போட்ட கதர்ச் சட்டை மாதிரி கொஞ்சம் விறைப்பாக, இருக்கும்.ஆனால் இந்த மாணவர் பத்திரிகைகள் கடி ஜோக்கும் கலாய்ப்புமாக கிழித்து விடப்பட்டுக் கொண்ட ஜீன்ஸ் போல விதிமுறைகளை வீசிக் கலைத்துவிட்டுக் கலகலவென்று இருக்கும். சங்கேத மொழிகளில் சமாச்சாரங்கள் பரிமாறப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரியும். சம்பந்தமில்லாதவர்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும். மேலே உள்ள பொன்மொழி அந்த ரகம்தான். அதில் சீக்ரெட் என்பதை கிசுகிசு என்று மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள். பளிச் என்று மூளையில் பல்ப் எரியும்
இதுமாதிரியான மாணவர் பத்திரிகைகள் 90 களில் வளாகம் தோறும் வலம் வந்து கொண்டிருந்தன. கிண்டி பொறியியற் கல்லூரி மாணவர்கள் கிண்டி டைம்ஸ் என்ற ஒன்றை வெளியிட்டு வந்தார்கள். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் அந்திமழை தரமாகவும் சுவையாகவும் வந்து கொண்டிருந்தது. கோவை தொழிற்நுட்பக் கல்லூரி மாணவர்களின் பத்திரிகை இளம் பறவை. மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களின் இதழ் மரத்தடி மகாராஜாக்கள். சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் வெளியீடு பல்ஸ். கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இதழின் பெயர் நிஷாந். சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்கள் இலக்கியச் சிற்றேடு போல கனமான கவிதைகள் தாங்கி (நன்றி பேராசிரியர் பாரதி புத்திரன்) ஓரிதழ் வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள் 90களுக்கு முன்பே, 70களிலிருந்தே, இது போன்ற இதழ்கள் வந்து கொண்டிருந்தன. லயலோ கல்லூரியிலிருந்து தேன் மழை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் முன்னெடுப்பில் மாநிலம் தழுவிய பூச்செண்டு, சட்டக் கல்லூரியிலிருந்து மாணவரிசம்
கமெண்ட் அடிக்காமல் இருக்க முடியாத வயது காலேஜ் வயது. நாலு வார்த்தை ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி விட்டால் நையாண்டி செய்தே கவிழ்த்து விடுவார்கள். கோவை மருத்துவக் கல்லூரி இதழில் கண்ட ஒர் கமெண்ட். “ ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்றும், ஆபிரகாம் லிங்கனின் பேரன் என்றும் கூறிக்கொள்ளும் சிவலிங்கம் (எ) Jamesலிங்கம் பேசும் ஆங்கிலம் காது கேளாதோர்க்கு மட்டுமே புரியும்”
கோ எஜுகேஷன் கல்லூரிகளில், பெண்கள் ஒரு சுவாரஸ்யம். அவர்களைக் கலாய்ப்பதில் ஒரு தனி ஆனந்தம். காணமலே காதலை அடித்தளமாக வைத்துக் கட்டப்பட்ட காதல் கோட்டை படம் வெளியான நேரம். கல்லூரிப் பத்திரிகை ஒன்றில் காணப்பட்ட கமெண்ட்: “ மாணவியர் விடுதி என்பது ஒரு காதல் கோட்டை. அங்கிருப்பவர்களைப் பார்க்காமல் இருந்தால் மட்டுமே காதல் வரும்!”
இந்தக் கலாய்ப்புக்களுக்கு ஆண்களும் விலக்கல்ல. “பெயரென்னெவோ புலி என்று இருந்தாலும் பெண்மான்கள் இவரைச் சுற்றிச் சுற்றி வருவது யாவருக்கும் ஆச்சரியம். இவர் காப்பதோ பிரம்மச்சரியம்”
கடி ஜோக்குகளை காலத்தில் அழியாத கல்வெட்டுக்களாக்கிய பெருமை மாணவர் இதழ்களுக்கே உண்டு. ”நீண்ட நாள் உயிரோடு இருப்பதற்கு என்ன வழி? வேறென்ன, சாகாமல் இருப்பதுதான்” இது இன்று மொக்கை என்று முத்திரையிடப்படலாம் ஆனால் இப்போது நீங்கள் படிக்கப்போவது செமகடி ஜோக்
“நாய்கடி , தேள்கடிக்கெல்லாம் மருத்து கொடுக்கும் வைத்தியர் ஒருவர் இங்கே இருந்தாரே, எங்கே காணோம்?”
“கொசு கடிச்சது. இறந்து போயிட்டார்!”
இப்போதும் மாணவர் இதழ்கள் வருகின்றனவா இல்லை இணையத்தில் கலந்து அடையாளமின்றிக் கரைந்து போயினவா என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை என்றாலும்-
மாணவப் பருவத்து இதழ்களின் மனநிலை வாய்க்கப் பெற்றுவிட்டால், எந்த வயதிலும் வாலிபனாகவே வாழ்ந்து மறைந்து விடமுடியும். ஆனால் இணையம் நம்மிடம் களவாடி விட்ட எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்றோ? !