தொலைபேசியைக் கண்டுபிடித்த கிராஹாம் பெல்லின் மனைவிக்குக் காது கேளாது என்பது வரலாற்றின் விசித்த்ரங்களில் ஒன்று. செவித்திறன் இழந்த தனது மனைவிக்கு ஒலிகளைக் கேட்கும் கருவி செய்யத்தான் முனைந்தார் கிராஹாம் பெல். அது தொலைபேசியில் வந்து முடிந்தது. ஒரு தனிமனிதனின் துயரம் பொது நன்மையாக பரிணமித்தது
எண்பதுகளில் இலங்கையில் நடந்த இனக்கலவரம் ஓர் ஆறாத் துயரம். ஆயிரக்கணக்கான மக்கள் ஈன்ற தாயை, கட்டிய மனைவியை, பெற்ற பிள்ளைகளை, பாரம்பரிய வீட்டை, உழைத்துச் சேமித்த செல்வங்களை, வாழ்ந்த ஊரை. வளர்த்த உறவை விட்டு மொழிதெரியாத, நிலம் அறியாத, நாடுகளில் அகதிகளாகக் குடியேறினார்கள். பனங்காட்டிலிருந்து பனிப் பிரதேசங்களுக்குப் பெயர்ந்தார்கள். மரணமும் துயரமும் நிறைந்த நிகழ்காலத்திலிருந்து நிச்சயமற்ற எதிர்காலத்திற்குப் பயணித்த்தார்கள். அப்போது அவர்கள் தங்களோடு எடுத்துச் சென்ற ஒரு பெருஞ்செல்வம், ஒரே ஒரு பாரம்பரியச் சொத்து தமிழ்!
துப்பாக்கிகள் தமிழரை முடக்க முயன்றன. ஆனால் அவர்களோ தமிழுக்குக் சிறகுகள் செய்தார்கள்
முள்ளுக்கு நடுவில் பூக்கிற ரோஜா போல அன்று அவர்களுக்கு நேர்ந்த துயரம் தமிழை உலக மொழியாக ஆக்கியது. இன்று உலகில் ஏறத்தாழ 80 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். தாங்கள் வாழும் பகுதிகளில் தமிழை நிறுவவும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும் தங்களால் இயன்ற வகைகளில் முயற்சிக்கிறார்கள் ஆஸ்திரேலிய நியூசவுத்வேல்ஸ் சட்டமன்றத்தில், தமிழை தேசியப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் எனக் குரல் எழுப்ப வைப்பதிலிருந்து, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை நிறுவுவதுவரை கல்விப் புலத்தில் பல முயற்சிகள் அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன
எங்கிருந்தோ எடுத்து வந்து பதியம் போட்ட செடியின் நாற்று முதலில் வாடிப் பின் வேர் விட்டு, துளிர்த்துத் தழைத்துப் பூப்பதைப் போல, புலம் பெயர்ந்தவர்கள் எடுத்துச் சென்ற தமிழ் இன்று ஆங்காங்கே மொட்டுக் கட்டியிருக்கிறது. நாளை நிச்சயம் பூக்கும்
பூமிக் கோளத்தின் வடகோடியில் இருக்கிறது கனடா. அதன் நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் எழுந்து பேச ஆரம்பித்தார். இளம் பெண். 26 வயது. மரியாதைக்குரிய இந்த அவையில் என் தாய் மொழியில் பேசுவதைப் பெருமையாகக் கருதுகிறேன் என்று தமிழில் ஆரம்பித்தார். யாருக்கும் எதுவும் புரியவில்லை.என்றாலும் அவர் தொடர்ந்து சில வாக்கியங்களைப் பேசினார். பின் அவரே தான் பேசிய கருத்துக்களை ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். என் தாய் மொழியில் பேசுவதில் பெருமை கொள்கிறேன், என் தாய் மொழியின் பெயர் தமிழ்! என்றதும் அவையில் படபடவென்று கைதட்டல் எழுந்தது.
அவர் பெயர் ராதிகா சிற்சபேசன். இலங்கையிலிருந்து ஐந்து வயதில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர். கனடாவில் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் டொராண்டோ அருகில் உள்ள ஸ்கார்ப்ரோ ரூச் ரிவர் என்ற தொகுதியில் இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவருக்கு அடுத்து வந்த தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பளிக்கவில்லை.
ஆனால் அவரை அடுத்து அந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவரும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்தான். அவர் சத்தியசங்கரி ஆனந்தசங்கரி. (இவ்வளவு நீளப் பெயர் வெள்ளைக்காரர்கள் வாயில் நுழையாது என்பதால் அவர்களுக்கு கேரி (Gary)) இந்தப் பெயரை எங்கேயோ கேட்டமாதிரி இருக்கிறதே என யோசிக்க வேண்டாம். ஆம் முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழகத்தில் பலருக்கும் நன்கு அறிமுகமான இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான ஆனந்த சங்கரியின் மகன். ஆனால் இளம் வயதிலேயே தந்தையைப் பிரிந்து வந்துவிட்டார் கனடாவில், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தை தமிழ்க் கலாச்சார மாதமாகக் கொண்டாடப் போவதாக நாடாளுமன்றம் அறிவித்தது. அந்தத் தீர்மானத்தை முன் மொழிந்தவர் இவர்தான்
அரசியல்வாதிகள் மட்டுமல்ல, இலக்கியவாதிகளும் வட அமெரிக்கக் கண்டத்தில் தமிழை நிலைபெறச் செய்வது என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் என் கண்ணுக்கு முதன்மையாகத் தென்படுபவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம். அவரது கதைகளை உலகறியும். ஆனால் அதிகம் வெளியே தெரியாத செய்தி அவர் ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைய எடுத்த முன்னெடுப்பு.
2015 ஜூலை என்று ஞாபகம்.”டியர் மாலன், There is some great news” என்று ஆரம்பிக்கும் கடிதம் ஒன்றில் ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை ஒன்றைத் தொடங்க கொள்கை அளவில் சம்மதித்திருப்பதை முத்துலிங்கம் எனக்குத் தெரிவித்தார். அவர் கடிதம் எனக்கு மகிழ்ச்சியையும் மலைப்பைபும் தந்தது. மலைப்புக்குக் காரணம் இந்த இருக்கையை அமைக்க ஆறு மில்லியன் டாலர்களை அவர்களுக்குச் செலுத்த வேண்டும் எனப் பலகலைக்கழகம் விதித்திருந்த நிபந்தனை. ஆறு மில்லியன் டாலரை இந்திய ரூபாயில் மாற்றிப் பார்த்தால் ரூ 30 அல்லது ரூ 35 கோடி! இந்தத் தொகையை இரண்டாண்டு காலத்திற்குள் சேகரித்துச் செலுத்த வேண்டும். டாக்டர் ஜானகிராமன், டாக்டர் சம்பந்தம் என்ற இரு மருத்துவர்கள் தங்களது கொடையாக இதில் ஆறு கோடி வரை கொடுக்க முன்வந்திருந்தார்கள்.
முத்துலிங்கம் என்னிடம் இந்தச் செய்தியைச் சொன்னபோது நான் அமெரிக்காவில்தான் இருந்தேன். அந்த இரண்டு மருத்துவர்களையும் தொடர்பு கொண்டு வாழ்த்திய கையோடு பத்திரிகைக்கும் எழுதினேன்.(இநத்ச் செய்தியை முதலில் ‘பிரேக்’ செய்தவன் அடியேன்தான்)
இன்று ஹார்வேர்ட் கனவு நிறைவேறிவிட்டது. ஆனால் அது இன்னும் சில கனவுகளுக்கு வித்திட்டிருக்கிறது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கையைத் தொடர்ந்து நியூயார்க், ஹூஸ்டன், ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன
ஹார்வேர்ட்டில் தமிழ் இருக்கை என்ற பெருங்கனவிற்கு விதை போட்டவர் வைதேகி ஹெர்பர்ட் என்ற தமிழ்ப் பெண்மணி. தூத்துக்குடியில் நூற்பாலை நடத்திய கணேச நாடாரின் மகள். இப்போது ஹவாயில் வசிக்கிறார். சங்கத் தமிழ் இலக்கியம் அனைத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இளைய தலைமுறைக்கு சங்கத் தமிழை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே பயிலரங்குகள் (அதாங்க ஒர்க் ஷாப்!) நடத்திவருகிறார்
பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை நிறுவி விடலாம். ஆனால் படிக்க தமிழ் இளைஞர்கள் முன்வர வேண்டுமே! அமெரிக்காவில் பள்ளிகளில் தமிழ்ப் படிக்க அதிகம் வாய்ப்பில்லை. நண்பர்களோடு உரையாட, சந்தையில் பொருள் வாங்குமிடத்தில் பேசத் தமிழ் பயன்படுவதில்லை. அது பெரும்பாலும் தமிழர்களின் வீட்டு மொழியாகவே இருக்கிறது. ஆனால் எல்லாப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளிடம் தமிழில் பேசுவதில்லை.
இந்தச் சூழ்நிலையில், தமிழை அமெரிக்காவில் வாழும் தமிழ் இளைஞர்கள், குழந்தைகளிடம் எடுத்துச் செல்லும் கடினமான முயற்சியைத் தளராது மேற்கொண்டு வெற்றியும் கண்டிருப்பவர் வெற்றிச் செல்வி ராஜமாணிக்கம். முன்னாள் அமைச்சர் செ.மாதவன் அவர்களின் மகள். 1999ல் வெறும் 13 மாணவர்களோடு கலிபோர்னியாத் தமிழ்க் கல்விக் கழகத்தைத் தொடங்கினார். இன்று நூற்றுக் கணக்கில் மாணவர்களைக் கொண்ட இயக்கமாக அமெரிக்கா நெடுகிலும் பரவி, இப்போது மற்ற நாடுகளுக்கும் விர்ந்து உலகத் தமிழ்க் கல்விக் கழகமாக வளார்ச்சி கண்டிருக்கிறது. வார இறுதி நாள்களில் மட்டும் வகுப்புக்கள் நடக்கின்றன. தன்னார்வத் தொண்டர்கள் வகுப்புகளை நடத்துகிறார்கள்.
அமெரிக்க பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர்நிலைப்பள்ளியில் தேர்ச்சி பெற, உலக மொழிப் பாடமொன்றை, ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் படிக்கவேண்டும்.பல்கலைக்கழகங்களில் சேர வேண்டுமானால் உலக மொழி பாடத்தில் இரண்டு அல்லது மூன்று வருடம் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதுநாள் வரை பள்ளிகளில் பிரஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மென் போன்ற உலகமொழி பாடங்களை மட்டுமே படிக்கும் வாய்ப்பு இருந்து வந்தது.
இப்போது சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் படிக்கும் மாணவர்கள் உலக மொழியாக தமிழையும் கற்கும் வாய்ப்பை உலகத்தமிழ்க் கல்விக்கழகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பினால் தமிழ் படிக்கும் மாணவர்கள் தங்கள் தாய் மொழியை படிப்பதோடு, உயர்நிலை பள்ளியின் தேவையையும் பூர்த்தி செய்யும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர். இந்த உயர்நிலைப் பள்ளிக்கான வகுப்புகள், சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியிலுள்ள சில பள்ளி நிர்வாகங்களில் அங்கீகாரத்துடன் நடந்துவருகிறது
ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கல்வியை முன்னெடுப்பவர் திரு..அன்புஜெயா. அவர் மருந்துகள் தயாரிப்பதில் புகழ் பெற்ற சர்வதேச நிறுவனமான Wyeth-Pfizerல் அறிவியல் துறை இயக்குநராகப் பணியாற்றியவர். அங்கு எழுபதுகளிலிருந்து நடந்து வரும் பாலர் மலர் பள்ளிப் பணிகளில் தொடக்கத்திலிருந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். “ஆயிரத்துத் தொள்ளாயிரத்தி எழுபதாம் ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து சிட்னி நகரில் குடியேறிய தமிழர்கள் தங்கள் பிள்ளைகள் தமிழில் உரையாடுவதை சிறிது சிறிதாக மறக்கத் தொடங்கி மிகுதியாக ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடுகிறார்கள் என்பதைக் கண்டார்கள். தாய் மொழியைத் தம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தருவதற்கு என்ன செய்யலாமென்று சில நண்பர்கள் கூடி சிந்திக்க ஆரம்பித்தனர்.
அந்தச் சிந்தனையின் விளைவாக, ஆஸ்திரேலியாவின் முதல் தமிழ்ப் பள்ளியாக 1977-ஆம் ஆண்டு ‘பாலர் மலர் தமிழ் பள்ளி’ சிட்னி மாநகரில் தொடங்கப்பட்டது. அப்போது வார இறுதி நாட்களில் நண்பர்கள் மகிழ்விற்காக ஒன்று கூடும்போது அவர்களது பிள்ளைகளுக்குத் தமிழ் வகுப்புகளும் நடத்தப்பட்டன. இவ்வாறு ஒவ்வொரு வாரம் ஒவ்வொருவர் வீட்டில் வகுப்புகள் நடந்தன. அதன் பிறகு நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசிடம் ஒப்புதல் பெற்று சிட்னியின் புறநகர்களில் ஒன்றான ஆஷ்பீல்டில் உள்ள அரசுப் பள்ளியில் வகுப்புகள் நடைபெறத் தொடங்கின. இப்படித் தொடங்கப் பட்ட பாலர் மலர் இன்று சிட்னியின் மற்றப் புறநகர்களுக்கும் 6 கிளைகளாக விரிவடைந்திருக்கிறது. இன்று ஆஸ்திரேலியாவில் ஆறு மாநிலங்களிலும் சுமார் 3200 மாணவர்கள் தமிழ்ப் படிக்கிறார்கள்” என்கிறார் அன்பு ஜெயா
தமிழர்கள் தமிழ்க் கற்பதை விடவும் ஆச்சரியமான விஷயம் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத சீனர்கள் தமிழ்க் கற்பதும், தமிழ் கற்றுக் கொடுப்பதும். பெய்ஜிங்கில் உள்ள பெய்ஜிங் அயலகக் கல்விப் பல்கலைகழகம் அங்குள்ள சீனர்கள் தமிழ் கற்கத் தமிழ் வகுப்புக்கள் நடத்துகிறது. அங்கு கற்பிப்பவர் zhou xin என்ற இளம் சீனப் பெண். ஈஸ்வரி எனற பெயரில் தமிழில் கவிதைகள் எழுதுபவர். அவரது கவிதைகள் காலச்சுவடு போன்ற இலக்கிய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன ஈஸ்வரி பல்கலைக்கழகத்தில் கற்பிக்க வருவதற்கு முன் சீன வானொலியில் தமிழ்ப் பிரிவில் பணியாற்றியவர்
சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் நுழைந்தால், கலைமகள், வாணி, வான்மதி, சரஸ்வதி, தேன்மொழி, நிறைமதி, இலக்கியா, ஓவியா, ஜெயா, சிவகாமி, மதியழகன், கலைமணி என்று நிறையத் தமிழ்ப் பெயர்களைக் கேட்கலாம். இவர்கள் அனைவரும் சீனர்கள்! தடங்கலின்றி பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் உரையாடக் கூடியவர்கள். சீன வானொலியின் தமிழ்ப் பிரிவிற்குத் தலைமையேற்று நடத்தி வரும் கலைமகள், சீன தமிழ் மொழி அகராதி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அவர்கள் சென்னை வந்து சில காலம் என்னிடம் தமிழ்க் கற்றவர்கள் என்பதில் எனக்கு ஓர் அலாதியான மகிழ்ச்சி .
காற்றின் அலைகள் வழியே தமிழ்க் குரல்கள் உலகம் முழுக்க வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் சிட்னியில் மாத்திரம் 24 மணி நேரமும் தமிழில் ஒலிபரப்பும் வானொலிகள் மூன்று இருக்கின்றன. இவை மூன்றும் தனியார் மேற்கொண்ட முன்னெடுப்புகள். இவை அன்றி அரசு உதவி பெற்ற SBS வாரத்திற்கு மூன்று நாள்கள் ஒரு மணி நேரம் தமிழில் ஒலிபரப்புகிறது. மெல்பேர்ன் நகரில் மாத்திரம் கேட்கக் கூடிய நான்கு தமிழ் வானொலிகளுக்கும் அரசு நிதியளிக்கிறது.
மேற்கே நகர்ந்தால், அமீரகத்தில், இரண்டு பண்பலை வானொலிகள் 24 மணி நேரமும் தமிழில் ஒலிபரப்பி வருகின்றன. இவை போக ஆசியா நெட் வானொலியில் தினமும் முக்கால் மணி நேரம் தமிழ் ஒலிபரப்பாகிறது
ஐரோப்பாவில் ஜெர்மனியிலிருந்து ஐரோப்பிய தமிழ் வானொலி 24 மணி நேரம் தமிழில் ஒலிபரப்புகிறது. லண்டனில் சூர்யோதயம் நார்வேயில் தமிழ் முரசம், பிரான்சில் தமிழ் அலை என்று நாட்டுக்கு நாடு தமிழ் வானொலிகள் இருந்தாலும் வீட்டுக்கு வீடு பிரபலமாக இருப்பது ஐபிசி தொலைக்காட்சி. லண்டனிலிருந்து இயங்கி வரும் இது முதலில் ஒரு வானொலியாகத்தான் தொடங்கியது. 2015ல் தொலைக்காட்சியாக விரிவடைந்து இன்று HD தரத்தில் நிகழ்ச்சிகள் வழங்குகிறது. இதன் தமிழ்ச் செய்திகள் மிகவும் கவனத்திற்குள்ளானவை
தமிழர்களின் தாயகமான தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் இங்கெல்லாம் தமிழ் வளர்ந்து வலுப்பெற்ற வரலாற்றை ங்கு எழுத முற்படவில்லை. ஒவ்வொன்றும் தனிப் புத்தகமாக எழுதும் அளவிற்கு விரிவும் சுவையும் கொண்டது.
உலகெங்கும் இன்று தமிழ். இலக்கியம், கல்வி, ஊடகம், அமைப்புக்கள் என்ற நான்கு கால்களில் எழுந்து நிற்கிறது. தாயகம் கடந்த தமிழ் இலக்கியம் பற்றி எழுத இன்னொரு மலர் வேண்டும். அத்தனை விரிவும் செறிவும் கொண்டது அது. சங்கங்கள்? அவை நூற்றுக்கு மேல்!
தமிழ் அழிந்து வருகிறது, தமிழை அழிக்க சதி நடக்கிறது என்று எங்காவது குரல் கேட்டால் இந்தக் கவிதையை மனதில் நினைத்துக் கொண்டு உரக்க சிரியுங்கள்.
வலசை போகும்
கூடற்ற பறவைகள்
வானம் அளக்கின்றன
சளைக்காமல் சர்ச்சிக்கின்றன
கேணியில் பாதுகாப்பாய்
பதுங்கியிருக்கும் தவளைகள்
***