பொன்னியும் ராணியும் நெருங்கிய சினேகிதிகள். ஒரே வயது. ஒரே வருடத்தில் பிறந்தவர்கள் மட்டுமல்ல, ஒரே மாதத்தில் பிறந்தவர்களும் கூட. தேதிதான் வேறு வேறு.ஒரே பள்ளிக் கூடத்திற்குப் போனார்கள். அதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் அந்த கிராமத்தில் இருந்ததே ஒரே ஒரு பள்ளிதான். ஒரே வகுப்பில் படித்தார்கள். அதிலும் ஆச்சரியமில்லை. அந்தப் பள்ளியில் ஒரு வகுப்புக்கு ஒரு பிரிவுதான். ஏ செக் ஷன் பி செக் ஷன் என்றெல்லாம் கிடையாது. இருவரும் ஒருநாள் முன் பின்னாக வயதுக்கு வந்தார்கள். இருவருக்கும் ஓராண்டு வித்தியாசத்தில் திருமணம் நடந்தது. ராணிதான் முதலில் கருவுற்றார்.
மருத்துவர்கள் குறித்திருந்த நாளுக்குச் சில நாள்கள் முன்னதாகவே ராணிக்கு பிரசவ வலி எடுத்தது.இரட்டை மாட்டு வண்டியில் அவரை அருகிலிருந்த நகரிலுள்ள பிரசவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள். பொன்னியும் தன் உயிர்த் தோழியுடன் வண்டியில் ஏறிக் கொண்டார். போகிற வழியில் ராணிக்கு ஜன்னி கண்டது. பொன்னி பயந்து போனார். நாளை நாம் கருவுற்றால் நமக்கும் இப்படித்தானே நடக்கும் என்ற கவலை அவரைப் பற்றிக் கொண்டது. ஒரே ஊரில் பிறந்து, ஒரே பள்ளியில் படித்து ஒன்றாகவே வளர்ந்தவர்களுக்கு இப்படியோர் பயம் ஏற்படுவது இயற்கைதானே?
அன்று பொன்னி முடிவு செய்தார். தன் கிராமத்திற்கு ஒரு மருத்துவமனை கொண்டு வருவதென்று. அடுத்து வந்த பஞ்சாயத்துத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்று அதை நிறைவேற்றவும் செய்தார். ஆனால் அதை நிறைவேற்ற அவர் எதிர்கொண்ட சிரமங்கள் ஏராள்ம். சவால்கள் அனந்தம். ஆனாலும் சளைக்காமல் போராடி வென்றார்.
இது இருபது வருடத்திற்கு முன் நடந்த கதை. பொன்னி போன்று செயலூக்கமும், விடாமுயற்சியும் கொண்ட ஏராளமான தலைவர்கள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சந்தித்திருக்கிறேன். வறண்ட பகுதியான ராமநாதபுரம் அருகில் உள்ள மைக்கேல் பட்டினம் என்ற தனது கிராமத்திற்குக் குடி தண்ணீர் கொண்டு வந்ததற்காக உலக வங்கியால் வாஷிங்டனுக்கு அழைத்துப் பாராட்டப்பட்ட ஜேசு மேரி, தனது கிராமத்தில் பிளாஸ்டிக்கை ஒழித்த ராணி சாத்தப்பன், கள்ளச்சாரயத்தை ஒழித்துத் தன் கிராமத்தில் வீட்டுக்கொருவருக்கு வேலை கொடுத்த குத்தம்பாக்கம் இளங்கோ, தனது கிராமத்தில் 850 வீடுகளைக் கட்டிக் கொடுத்து சொந்த வீடு இல்லாதவர்களே இந்த கிராமத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்கிய ஓடந்துறை சண்முகம், இப்படிப் பலரை சந்தித்திருக்கிறேன். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அசாமிலிருந்து கேரளம் வரை இந்தியா முழுவதும் 2004-2006 ஆண்டுகளில் பயணம் செய்து சந்தித்திருக்கிறேன். நாட்டின் அடித்தளத்தில் ஒசைப்படாமல் மாற்றங்களை ஏற்படுத்தித் தந்த தலைவர்கள் உருவாகக் காரணமாக இருந்தது பஞ்சாயத் ராஜ் எனப்படும் ஊராட்சி அமைப்புக்கள்.
பஞ்சாயத்து ராஜ் சட்டம் உன்னதமான நோக்கங்களைக் கொண்டது. ஜனநாயகத்தை அடித்தளம்வரை பரவச் செய்வது, அதுவரை அதிகாரம் மறுக்கப்பட்டிருந்த பெண்களும், தலித்துகளும் அதிகாரம் பெறுவதை இட ஒதுக்கீட்டின் மூலம் உறுதி செய்வது, அதிகாரங்களை கிராமங்கள் அளவிற்குக் கொண்டு செல்வது, தங்கள் கிராமத்திற்கான தேவைகளை கூடி நிறைவேற்றும் குடிமை உணர்வை (Civic sense) வளர்த்தெடுப்பது என்ற நோக்கங்களை அது கொண்டிருந்தது. அந்த நோக்கங்களால் வசீகரிக்கப்பட்ட நான் சில ஆண்டுகளை அதன் பொருட்டுச் செலவிட்டேன். அப்போதுதான் நான் இந்த நட்சத்திரங்களைச் சந்தித்தேன்.
கடந்த 23 ஆண்டுகளில் ஊராட்சி அமைப்புக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடசத்திரங்களை உருவாக்கியிருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அது மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சமூக இயக்கமாக வளர்ந்திருக்கிறதா?
இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.உன்னத நோக்கங்களோடு தொடங்கப்பட்ட ஒரு முயற்சி எதிர்பார்த்த பலனைக் கொடுக்காமல் போனதற்கான காரணங்கள் பல. அதில் முக்கியமானது அரசியல்.
கிராமம் என்ற சிறிய சமூக அமைப்பில், தினம் தினம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள நேரிடும் அமைப்பில், கட்சி சார்ந்த அரசியல் வேண்டாம், அது பிணக்குகளையும், கசப்புணர்வையும், பிளவுகளையும் மக்களிடையே ஏற்படுத்தும்; அப்படி ஏற்படுமானால் அது வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதற்கு பதில் பின்னோக்கி இழுத்துச் செல்லும் எனவே கிராமப் பஞ்சாயத்துக்களுக்கான தேர்தலில் கட்சிச் சின்னங்களின் அடிப்படையில் போட்டி கூடாது என்று பஞ்சாயத்து ராஜ் சட்டம் இயற்றப்பட்ட போது தீர்மானிக்கப்பட்டது. இப்போதும் கிராம ஊராட்சிகளுக்கான தேர்தல் கட்சிச் சின்னங்கள் இல்லாமல்தான் நடைபெறுகிறது. சின்னங்கள் இல்லையே தவிர கட்சிகள் மறைமுகமாக அந்தத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
அரசியல்கட்சிகள் தங்கள் பலத்திற்கு விடப்படும் சவாலாக பஞ்சாயத்துத் தேர்தலைப் பார்க்கின்றன. எனவே அவற்றை கெளரவப் பிரச்சினையாக அணுகுகின்றன. 2016ல் நடைபெற்றிருக்க வேண்டிய ஊராட்சித் தேர்தல் அற்பக் காராணங்களாலும் நொண்டிச் சாக்குகளாலும் மூன்றாண்டு காலத்திற்குத் தள்ளிப்போடப்பட்டதே இதனை உறுதி செய்யும். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் இதில் பங்குண்டு.
தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகள் தொடக்கத்திலிருந்தே பஞ்சாயத்து அமைப்புகள் வலுப்பெறுவதை விரும்பவில்லை. சட்டரீதியாகப் பஞ்சாயத்து அமைப்புகளை உருவாக்க வகை செய்யும் 73வது சட்டத்திருத்தம் 1993 ஆகஸ்ட்டில் வாக்கெடுப்பிற்காக நாடளுமன்றத்தில் வைக்கப்பட்ட போது அதை எதிர்த்த கட்சிகள் இரண்டுதான். இரண்டும் நம் அருமை திராவிடக் கட்சிகள். அப்போது மக்களவையில் திமுகவிற்கு உறுப்பினர்கள் இல்லை. ஆனால் மாநிலங்களவையில் இருந்த ஐந்து உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர். அதிமுக இரு அவைகளிலும் வாக்கெடுப்பின் போது வாக்களிக்காமல் வெளியேறியது.
அதன் பின்னரும் அவை பெரிய அளவில் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரங்களைப் பிரித்துக் கொடுப்பதில் தயக்கம் காட்டின. மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொண்டுவிட்டது என்று மேடைகளில் முழங்கி வரும் திராவிடக் கட்சிகள் தங்களுக்குக் கீழ் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளிடம் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்பது ஒரு நகை முரண். அவை பஞ்சாயத்துக்களை மத்திய மாநில அரசுகளின் திட்டங்களைக் கொண்டு சேர்க்கும் தபால்காரர்களாகவே வைத்திருந்தனவே தவிர நல்ல தலைவர்களை உருவாக்கும் நாற்றங்கால்களாக மாற்றத் தவறின. திட்டங்கள் தில்லியிலிருந்தோ, சென்னையிலிருந்தோ திணிக்கப்படாமல், கிராமங்களின் தேவைக்கேற்ப கிராமங்களால் வகுக்கப்பட்டு, கீழிருந்து வர வேண்டும் என்ற நோக்கம் சாமர்த்தியமாக முறியடிக்கப்பட்டது.
ஊழல் அடிமட்டம்வரை பரவப் பஞ்சாயத்துக்கள் ஒரு காரணமாகிவிட்டன என்று சிலர் வாதிடுகிறார்கள். அது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதற்குத் தீர்வு ஊழலைக் கட்டுப்படுத்தும் வகையில் வெளிப்படையான முறையில் மின்னாளுகை (e-governance) முறைக்கு மாறுவதுதானே தவிர, பஞ்சாயத்துக்களை ஒழித்துக் கட்டுவதல்ல.தலைவலிக்குத் தீர்வு சிகிச்சைதானே தவிர தலையை வெட்டிக் கொள்வதல்ல.
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் ஊராட்சித் தேர்தல் அரசியலை சுத்தம் செய்ய வேண்டும், மாற்று அரசியல் மலர வேண்டும் என விரும்புவோருக்கு ஒரு நல்ல வாய்ப்பு. ஜனநாயகத்திலும் கிராம வளர்ச்சியிலும் ஆர்வம் கொண்ட இளைஞர்கள், குறிப்பாக இளம் பெண்கள், அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு என்பது உண்மையிலேயே பெரும் வாய்ப்பு. ஊராட்சித் தேர்தல் என்பது மிகச் சிறிய அளவிலேயே நடைபெறக் கூடிய ஒன்று என்பதால் பணத்தை வாரி இறைக்க வேண்டியிராது.ஒரு வார்டில் அதிகம் போனால் நானுறு, ஐநூறு வாக்குகள் இருக்கலாம்.ஒரு வாரம் தீவிரமாக உழைத்தால் ஒவ்வொருவரையும் தனிப்பட சந்தித்து ஆதரவு கோர முடியும்.
சவால்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் ஊருக்கு நான்கு நல்லவர்கள் அதிகாரம் பெற்றால், அவர்கள் இன்னும் நூறு நல்லவர்களைத் திரட்டுவார்கள்.ஊருக்கு நூறு திறமை கொண்ட நல்லவர்கள் திரண்டால் நாடு மாற்றம் காணும்
சிறிய விதைகளிலிருந்துதான் பெரிய விருட்சங்கள் கிளம்புகின்றன