இளஞ்செழியன் ஆரம்பித்த மெஸ்

maalan_tamil_writer

“ யோசியுங்கள். இந்த அமைப்பில் எல்லாம் தலைகீழ். இங்கு சன்னியாசிகள் ஆயுதம் விற்கிறார்கள். ஆயுதம் ஏந்தியவர்கள் ஆலயங்களை நிர்வகிக்கிறார்கள். அரசியல்வாதிகள் சினிமா எடுக்கிறார்கள். சினிமாக்காரர்கள் அரசியல் நடத்துகிறார்கள். நடிகைகள்  கதை  எழுதுகிறார்கள்.  எழுத்தாளர்கள்  விபசாரம்  செய்கிறார்கள். ”

படபடவென்று  கை  தட்டல்  அதிர்ந்தது.  முகத்தில்  கர்வம்  பொங்க நாற்காலியில் வந்து உட்கார்ந்தான் இளஞ்செழியன். இளஞ்செழியனை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். முகம் முழுவதும் மண்டிய முரட்டுத் தாடியும், கோணிபோல் கனக்கும் குர்தாவும் அணிந்து, தோள் பையுடன் இலக்கியக் கூட்டங்களுக்கு வருகிற இலக்கியவாதி. பஸ் ஸ்டாப்பில் உரத்த குரலில் அரசியல் பேசும் விமரிசகன். அடிக்கடி வேலை  மாற்றும்  இளைஞன்.

இவனுடைய சூத்திரங்கள் சுலபமானவை. கல்யாணம் செய்து கொள்கிறவர்கள் எல்லாம் கோழைகள். பணம் சம்பாதிக்கிறவர்கள் எல்லாம் அயோக்கியர்கள். வாரப் பத்திரிகை  படிக்கிறவர்கள் மூடப் பிறவிகள். இந்த சூத்திரங்களைத் தர்க்க நியாயங்களோடு தளுக்கான வார்த்தைகளில் எடுத்துச் சொல்லி நிறுவுவதில் சூரன். அவனை  அறிவுஜீவி  என்று  பலர்  சொன்னார்கள்,  ரோகினியைத்  தவிர.

நீ  ஒப்புக்  கொள்ளாவிட்டால்  என்ன கெட்டுப் போயிற்று என்று அவள் விஷயத்தில் இளஞ்செழியனால் இருக்க முடியவில்லை. அதற்கு நிறையக் காரணங்கள். அதிலொன்று அவள் பெண் என்பது. அவளுடைய புகழ்ச்சிக்கோ கண்டனத்திற்கோ பின்னால்  சுயநலம்  ஏதும்  கிடையாது  என்பது  அடுத்தது.

கூட்டம்  முடிந்து  வெளியேறிய போது, “ கிரேட் ! ”   என்று  கூவியபடி  யாரோ  ஓடி வந்து கை குலுக்கினார்கள். நாணமும் கூச்சமுமாக ஒரு சிறு பெண் கையெழுத்து நோட்டை  நீட்டியது.

“ இப்போ  திருப்திதானே ? ”  என்றாள்  ரோகினி.  பார்வையில்  ஏளனம்  ததும்பிற்று.

“ என்ன  சொல்றே  ரோகிணி ? ”

“ இந்தக்  கை  குலுக்கல்,  பாராட்டு,  ஆட்டோகிராஃபிற்குச் சூழ்ந்து கொள்ளும் நாலு பேர், உனக்கென்று பிரத்தியேகமாகச் சில விசிறிகள்,  இதற்குத்தானே  நீ  இப்படித் தடாலடியாகப்  பேசுகிறாய் ? ”

“ ரோகினி ! ”  இளஞ்செழியன்  பாம்பாய்  சீறினான்.

“ குதிக்காதே.  உண்மை  இப்படித்தான்  கசக்கும்.  உடைத்துப்  பார்த்தால்  சுடும். ”

“உண்மை என்று நீ நினைத்துக் கொள்வதெல்லாம் உண்மையாகி விட முடியாது!”

“ அதற்கு ஏன் இப்படிக் கத்தறே !  ஐம்பது பேரும் நூறு பேரும் கூடுகிற இந்தக் கூட்டங்களில் அதிரடியாகப் பேசுவதன் மூலம் புரட்சியைக் கொண்டுவந்து விட முடியும் என்று நீ நினைத்தால் ஒன்று முட்டாளாக இருக்க வேண்டும். அல்லது கனவு காண்கிற சிறுவனாக  இருக்க  வேண்டும். ”

“ அவர்கள் ஐம்பது பேராக இருக்கலாம். ஆனால் அறிவு ஜீவிகள். என்னுடைய ஒவ்வொரு வார்த்தையையும் யோசிக்கிறவர்கள். ”

“ யோசித்து ? ’‘

“ இன்னும் நாலு பேரை யோசிக்க வைப்பார்கள். இந்த வேகத்தில் போனால் நீ நினைக்கிற மாறுதல் நிகழ இருநூறு வருஷம் ஆகும். ”

“ அதற்காக, அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு கையை கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டுமா ? ”

“ கையைக் கட்டிக் கொண்டு ஏன் உட்கார்ந்திருக்க வேண்டும் ?  செய் ; எதையாவது செய். நீ எதை எதையோ விமரிசித்திருக்கிறாய். எதையாவது உருவாக்கியிருக்கிறாயா ? சூரியனை எழுப்புவது பற்றிப் பேசுகிற நீ, ஒரு மெழுகுவர்த்தியையேனும் ஏற்றுவதற்கு முயற்சி  செய்திருக்கிறாயா ? ”

“ என்ன  செய்ய  வேண்டும்  என்கிறாய் ? ”

“ எதையாவது செய் ; குண்டூசியில் இருந்து விமானம் வரைக்கும் செடியில் காய்த்துக் தரையில் உதிர்ந்துவிடவில்லை. யாரோ எங்கேயோ செய்துதான் உனக்கு வருகிறது. ”

“ நான் படித்திருப்பது எஞ்ஜினியரிங் இல்லை. இலக்கியம். இந்த தேசத்துச்  சரித்திரம். ”

“ பலசரக்குக் கடை நடத்த என்ன படிப்பு வேண்டும் ?  சர்க்குலேட்டிங்  லைப்ரரி நடத்துகிறவர்கள் பி.எச்.டி.க்கள் இல்லை. ஜெராக்ஸ் காப்பி எடுக்கக் கற்றுக் கொள்ள ஜப்பானுக்கா  போக  வேண்டும் ? ”

“ இதற்கெல்லாம்  பிறந்தவன்  நான்  இல்லை. ”

“ நீ சாம்ராஜ்யங்களை ஸ்தாபிப்பது இருக்கட்டும். முதலில் ஒரு ஸ்தாபனத்தை வெற்றிகரமாக நடத்திக் காண்பி பார்ப்போம். ”

“ வியாபாரம் செய்து வெற்றி பெறுவது ஒன்றும் பிரமாதமான காரியம் இல்லை. அதை விடப் பெரிய … ”

“ அந்த அற்பமான காரியத்தைத்தான் செய்து காண்பியேன். ”

மூர்க்கத்தனமாக உசுப்பிவிட்டாள் ரோகிணி. நீ கையாலாகாதவன் எனத் திரும்பத் திரும்பச் சொல்லி அடிவயிற்றில் வீசிய குத்து, இளஞ்செழியனின் ஈகோ, அடி வாங்கி அரை நிமிடம் துடிதுடித்தது. வாழ்க்கையைத் தலைகீழாய்ப் புரட்டிய அரை நிமிடம். மறுகணம் முன்னைவிடப் பல மடங்காய்ப் பொங்கி எழுந்தது.  தான்  ஒன்றுக்கும்  உதவாத  சப்பாணி  அல்ல  என்று  நிரூபிக்கத்  தவித்தது.

ஜெராக்ஸ் கடை வைக்கலாமா என்று கணக்குப் பார்த்ததில், ஐம்பதாயிரம் ரூபாய் வரை வேண்டியிருந்தது. அச்சாபீஸ் வைக்கலாம் என்று யாரோ சொன்னார்கள். அதற்கு கரண்ட்  கனெக்ஷன்  கிடைப்பது  கடினம்  என்று  சிலர்  பயமுறுத்தினார்கள்.

யோசித்து யோசித்து ஒரு மெஸ் நடத்தலாம் என்று முடிவு செய்தான் இளஞ்செழியன், காலை எட்டு மணியில் இருந்து பத்து மணிவரை முதல் வேளை ; மறுபடியும் மாலை ஏழு மணிக்கு ஆரம்பித்தால், பத்தரை மணிக்கு எல்லாவற்றையும் அலம்பி மூடி விடலாம். பகல் முழுக்க ஓய்வு. எழுதலாம். படிக்கலாம். இலக்கியம் பேசலாம். சிக்கல் இல்லாத தொழில். என்றைக்கும் டிமாண்ட் இருக்கிற பொருள்.

பெசன்ட்  நகர்  பக்கம் சரியான சாப்பாட்டுக் கடை கிடையாது. அங்கே ஆரம்பித்தால் அள்ளிக் கொண்டு விழும் என்று ஒரு யோசனை. இலங்கைத் தமிழர்கள் எல்லாம் கோடம்பாக்கத்தில் குடியேறுகிறார்கள். அதுதான் சரியான இடம் என்றொரு திட்டம். பெசன்ட் நகர், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் என்ற சொகுசுப் பேட்டைகளில் இந்த வியாபாரம் எடுபடாது என்று தெரிய இரண்டு வாரம் ஆயிற்று. பெரியதெரு, பைகிராஃப்ட்ஸ் சாலை, ஐஸ் ஹவுஸ் என்று போட்டால்தான்  பிழைப்பு நடக்கும் என்று புரிந்தது. ஆனால் இடம்தான் லேசில் கிடைக்கவில்லை. தரகர் பின்னாலேயே பதினைந்து நாள் அலைந்த பிறகு ஒரே சமயத்தில் பத்துப்பேர் உட்கார்ந்து சாப்பிடுகிற கூடமும், சமையல் கட்டுமாகத் திருவல்லிக்கேணியில் இடம் கிடைத்தது.

ஐந்நூறு ரூபாய் வாடகை. அதிகமோ ?  சரி, போனால் போகட்டும் என்று அரைமனதாகத்  தலையாட்டினபோது  பத்து  மாத  அட்வான்ஸ்  என்று அடுத்த குண்டைப் போட்டார் வீட்டுக்காரர். வேண்டவே வேண்டாம்  என்று  தீர்மானித்தபோது இதை விட்டால் வேறே இடம் கிடைக்காது என்று தரகர் பயமுறுத்தினார். ராசியான இடம் என்று வீட்டுக்காரர் ஆசை காட்டினார். அழமாட்டாக் குறையாகப் பேசி, அட்வான்ஸை எட்டு மாதமாக்கி வாசலில் போர்டை மாட்டியபோது பாதிப் பந்தயம் முடிந்துவிட்டதாகத் தெம்பு பிறந்தது.

பாத்திரங்கள் வாங்கியது போகப் பாக்கி இருந்த பணம் நாற்காலி வாங்கப் போதாமல் இடித்தது.

ஆரம்ப விழாவுக்கு ரோகிணி வரவில்லை. “ உன்னுடைய முயற்சி குறித்துச் சந்தோஷம். ஆனால் முயற்சியே வெற்றியாகிவிடாது. இதை நீ நிறுத்திவிடாமல் நடத்தி, இரண்டு காசு லாபம் சம்பாதித்தேன் என்று என்றைக்கு வந்து சொல்கிறாயோ அன்றுதான் நீ ஆண் பிள்ளை. முழு மனிதன் அந்தத் தகவலைச் சொல், விருந்து சாப்பிட வருகிறேன் ”  என்று கடிதம் வந்தது.

நண்பர்கள் வந்து இலவசமாகச் சாப்பிட்டுவிட்டுப் போனர்கள். பாரதிதாசன் கவிதைகள் போல சாம்பாரில் சற்றுக் காரம் அதிகம் என்று சொன்னார் ஒரு விமரிசகர். அதெல்லாம் ஒன்றுமில்லை. எளிமையாகவும் அதே சமயம் நிறைவாகவும், கண்ணதாசன் எழுத்துப் போல ஹோம்லியாக இருக்கிறது என்று மறுத்தார் ரசிகர். காஃப்கா, லோர்க்கா, நெருடா போல் வித்தியாசமாக, சுக்கு காப்பி, மிளகு ரசம், மணத்தக்காளி வற்றல், மாகாளிக் கிழங்கு ஊறுகாய் என்று சாப்பாடு போட்டால் அற்புதமாக இருக்கும் என்று சொன்னார் ஒரு புதுமை விரும்பி. மண வாசனை கமழ்ந்தால்தான் இலக்கியமானாலும் சரி, சாப்பாடு ஆனாலும் சரி எடுபடும் என்று ஓர் ஆராய்ச்சியாளர் எடுத்துச் சொன்னார். எனவே செட்டி நாட்டுச் சமையல், திருநெல்வேலி மண்பானைச் சமையல் என்று ஏற்பாடு செய்ய கேட்டுக் கொண்டார்.

ஆனால் இலக்கியம் வேறு, வியாபாரம் வேறு, என்று வாழ்க்கை தீர்மானமாக அறிவித்தது. வெறும் அறிவிப்பாக இல்லாமல் அடிக்கடி கையைச் சுட்டு எச்சரித்தது. வேளைக்கு ஐம்பது பேர் சாப்பிட்டால் போதும். வரவும் செலவும் சரிக் கட்டிக் கொள்ளும் என்று போட்ட காகிதக் கணக்குகள் காலை வாரிவிட்டன. ரெகுலராக சாப்பிட வருகிறவர்கள் கடன் கேட்டார்கள் ; காசை வைத்தால்தான் காய்கறி என்று வியாபாரிகள் மிரட்டினார்கள். சமையல்கார விதவைப் பெண், சாப்பிட வந்தவனோடு ஓடிப் போனாள். சரக்கு வாங்கப் போகும் பையன், கள்ளக் கணக்கு சொல்லி காசைச் சுருட்டினான். ஆபீஸ் போகிற அவசரத்தில் சாப்பிட வருகிற வெள்ளைச் சட்டைகள் தரையில் உட்கார தயக்கம் காட்டின. நாற்காலி வாங்கக் கடன் வாங்கினான். கடனை அடைக்க வேண்டி மெஸ் தொடர்ந்து நடந்தது.

எந்தப் பக்கம்  திரும்பினாலும்  பிரச்சினை.  தினமும்  யாருக்காவது  பதில் சொல்ல வேண்டிய கட்டாயம். முன்னே பின்னே பழக்கமில்லாதவர்களிடம் கெஞ்சல். எங்கேயாவது ஓரிடத்தில் தலைக்குனிவு. இழுத்து மூடிவிட்டு இரவோடு இரவாக ஓடிப் போய்விடலாம் என்று தோன்றும் போதெல்லாம்  ‘ அன்று தான் நீ ஆண் பிள்ளை ’ மனத்தைக் கொட்டிக் கொண்டே இருந்தது. அவளை அழைத்து ஒரு வேளைச் சாப்பாடு போடாமல் கடையை மூடக் கூடாது என்று தீர்மானித்தான்.

அன்று கடைசிப் பந்தி முடிந்து, சமையல்காரர் கூடச் சாப்பிட்டு எழுந்துவிட்டார். பாத்திரம் தேய்க்கிற சிப்பந்தி தரையைக் தேய்த்து கழுவ ஆரம்பித்தான். ஈரம் மேலே தெளிக்காமல் இருப்பதற்காக இளஞ்செழியன் வெளியே வந்து போக்குவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான். இளைஞர்களாக நாலைந்து பேர் அவனை நோக்கி வந்தார்கள்.

“ நீங்கள்தானே  மெஸ்  நடத்துகிறீர்கள் ? ”

“  ஆமாம்.  இன்று  சாப்பாடு  எல்லாம்  முடிந்து  விட்டதே. ”

“ பரவாயில்லை பரவாயில்லை. நாங்கள் பக்கத்து லாட்ஜில் புதிதாகக் குடியேறியிருக்கிறோம்.  ஒரே ஆபீஸ்காரர்களாக இருபது பேர். மொத்தமாகக் கொடுப்பதால் எங்களுக்கு லாட்ஜில் வாடகையில் சலுகை தருகிறார்கள். பக்கத்து டிரை கிளீனிங் கடையில் தள்ளுபடி தர ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆபீஸில் இருந்து தனி பஸ் அனுப்புகிறார்கள். நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா ? ”

“ உள்ளே வாங்களேன், உட்கார்ந்து பேசுவோம். ”

காலையில் இருபது சாப்பாடு. மதியம் ஆபீஸிற்குக் காரியரில் இருபது சாப்பாடு. ராத்திரி நிச்சயமில்லை. சாப்பாட்டிற்கு ஐம்பது பைசா குறைத்துக் கொள்வது என்று முடிவாயிற்று.  திடுமென்று  ஒரு  நாளைக்கு ஐம்பது சாப்பாடு அதிகரித்தது. மெல்ல மெல்ல  அந்த  லாட்ஜில்  மற்ற  பிரம்மசாரிகளும்  இங்கே  சாப்பிட  வந்தார்கள்.

வியாபாரம் முனை திரும்பியது. இரண்டு வருட அனுபவத்தில் வியாபார நுணுக்கங்கள் புரிந்தது. பல்லைக் கடித்துக்கொண்டு காப்பாற்றி வந்த நாணயம் காரணமாக கடனுக்குச் சரக்கு கிடைத்தது.

இரண்டு நாள் முன்னால் ரோகிணி சாப்பிட வந்திருந்தாள்.  “ இளஞ்செழியன். யூ ஆர்  ரியலி கிரேட் !  உன் சாம்ராஜ்யங்கள் இப்போது எழட்டும். அதற்கு என் ஓட்டு நிச்சயம். ’‘

ஆனால் இப்போது இளஞ்செழியனுக்கு அரசாங்கங்களை மாற்றுகிற அபிப்ராயம் இல்லை. “ புத்திசாலித்தனமாக இருப்பது மட்டுமல்ல, வெற்றிகரமாகவும் இருப்பதுதான் வாழ்க்கை ”  என்பது அவனின் புதிய சூத்திரம். ஆனால் கையில் காசு சேர்ந்ததும் அவன் குட்டி பூர்ஷ்வா ஆகிவிட்டான் என்று நண்பர்கள் சொல்கிறார்கள்.

( குமுதம் )

இந்தக் கதையைக் கேட்க: 

இந்தக் கதையக் கேட்க: https://www.youtube.com/watch?v=BfumGWKCAJg&list=FL-uu0onUE8BxSnVc4wzuJGw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.