இலங்கையில் தன்னோடு போரிட்டு மடிநத ஒரு தமிழ் அரசனுக்கு அவனைக் கொன்ற சிங்கள அரசனே நினைவுச் சின்னம் அமைத்த கதையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அந்த சிங்கள அரசன் பெயர் துடு கெமுனு. தமிழில் துட்ட கைமுனு, துட்ட காமினி என்று எழுதுவார்கள். அவனால் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்ட அரசன் பெயர் எல்லாளன். சோழ வம்சத்தைச் சேர்ந்த அந்தத் தமிழ் அரசன் “ஆக்கிரமித்திருந்த” பகுதிகளை மீட்டவன் துட்ட கைமுனு என்கிறது பெளத்தர்களின் வரலாற்று நூலான மகாவம்சம். .
தென்கிழக்கு இலங்கையில் கவன்திஸ்ஸ என்ற சிற்றரசினின் மகனாகப் பிறந்த துட்ட கைமுனு இன்று வரை சிங்கள பெளத்தர்களால் வீரத்தின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறான். அதற்கு முக்கிய காரணம் அவன் அனுராதபுரத்தை ஆண்டு வந்த எல்லாளனுடன் நடத்திய போர். ரதங்கள், படை வீரர்கள், பாய்ந்து தாக்கக் கூடிய ‘பிசாசு’ போன்ற யானைகள், பெளத்த பிக்குகள் (அரசனுக்கு ஆலோசனை கூற) பத்துப் பெரும் தளபதிகள் (அவர்களைப் பத்து மணிகள்- Ten Gems- என்று கொண்டாடுகிறது மகாவம்சம்) ஆகியோரை அழைத்துக் கொண்டு படை எடுத்தான் துட்டகைமுனு. நான்கு மாதம் முற்றுகைப் போர் நடந்தது. யானைகள் உள்ளே நுழைந்து விடாதபடி குழி வெட்டி அதில் கண கணவென்று அனல் வீசும் நெருப்புத் துண்டுகளை நிரப்பித் தமிழர்கள் தங்களைத் தற்காத்துக் கொண்டார்கள் இறுதியில் நமக்கிடையே நடக்கும் அதிகாரப் போட்டியில் மக்கள் ஏன் சாக வேண்டும்? நாம் இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்வோம் வா என்ற அழைப்பை எல்லாளன் ஏற்றான். துட்ட கைமுனுவோடு ஒப்பிடும் போது எல்லாளன் வயதில் முதியவன். அனுராதபுரத்தின் தெற்கு வாசலில் இருவருக்கும் இடையே தனிச் சமர் நடந்தது. எல்லாளன் துட்ட கைமுனுவை நோக்கித் தனது ஈட்டியை எறிந்தான். துட்டகைமுனு அதிலிருந்து தப்பித்துக் கொண்டு எல்லாளனின் யானையை, தந்தங்களினால் துளைக்கத் தனது யானையை ஏவினான். எல்லளனை நோக்கி தனது ஈட்டியை எறிந்தான். யானையுடன் சரிந்த எல்லாளன் கொல்லப்பட்டான். சதி செய்து கொல்லப்பட்டான் என்று தமிழர்களும் வீரத்தினால் வெல்லப்பட்டான் என்று சிங்களவர்களும் சொல்லி வருகிறார்கள்.
தன்னால் கொல்லப்பட்ட எல்லாளன் நீதி தவறாத அரசனாகவும், வீரனாகவும் இருந்ததால் அவன் மீது பெரும் மதிப்புக் கொண்ட துட்டகைமுனு எல்லாளனுக்கு ஒரு நினைவுச் சின்னம் கட்டினான்.அங்கு ஒரு கல்வெட்டும் வைக்கப்பட்டது: “அக் கல்வெட்டு “அரசனாயிருந்தால் என்ன, குடியானவனாகவிருந்தால் என்ன ஒருவருமே இவ்வழியால் பல்லக்கிலோ. சிவிகையிலோ முரசு கொட்டி எதிர்காலத்தில் செல்லலாகாது”. இது எல்லாளனுக்கு மெளன அஞ்சலி செலுத்த, மரியாதை காட்ட, துட்டகைமுனு செய்த ஏற்பாடு.
எந்த அனுராதபுரத்தில் தமிழர்களின் அரசனான எல்லாளன் தோற்கடிக்கப்பட்டானோ அதே அனுதாரபுரத்தில் இலங்கையின் புதிய அதிபராகப் பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார் கோத்தபய ராஜபக்க்ஷ. எல்லாளனுடன் பத்துப் பெரும் தளபதிகள் சென்றார்கள் என்று சொன்னேனில்லையா? அந்தப் பத்து மணிகளில் ஒருவரின் பெயர் கோத்தபய.!
இலங்கையில் துட்ட கைமுனு இரு விதமாகப் பார்க்கப்படுகிறார். சிங்களர்களில் சிலர் அவரை தமிழர்களை வீழ்த்திய வீரராகப் பார்க்கிறார்கள். இன்னும் சிலர் வீழ்த்தப்பட்ட எதிரிக்கும் உரிய மரியாதை கொடுத்து கெளரவித்த பெருந்தன்மையாளராகப் பார்க்கிறார்கள். புதிய அதிபர் எந்த விதமான துட்ட கைமுனுவாக இருக்கப் போகிறார்?
அவர் எப்படி இருக்கப் போகிறார் என்பது முற்றிலும் அவர் கையில் இல்லை என்பதும், அதைத் தீர்மானிப்பதில் அங்குள்ள தமிழ்க் கட்சிகளுக்கும் பொறுப்பிருக்கிறது என்பதயும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் .
அங்குள்ள தமிழ் அரசியல்கட்சிகள் பலவாறாகப் பிரிந்து கிடந்தாலும், கோத்தபய, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட் சஜீத் பிரேமதாஸா இருவரையும் ஆதரித்துப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டாலும், தமிழ் மக்கள் பெரும்பாலும் ஒரே நோக்கில் வாக்களித்திருக்கிறார்கள். வேண்டாம் கோத்தபய என்பதுதான் அவர்களது முடிவு
இலங்கைத் தேர்தல் முடிவுகள் இன்னொன்றையும் காட்டுகின்றன. பெரும்பான்மைச் சமூகம் ஒரு திரளாகத் திரண்டால் சிறுபான்மையரின் வாக்குகள் எவ்விதமாக இருந்தாலும் பெரும்பான்மையினர் ஆட்சி அதிகாரம் பெறுவதை அது பாதிக்காது.
.
இந்தப் பின்னணியில் சிறுபான்மையினர் சூழ்நிலைகளை எவ்விதம் எதிர்கொள்ளவேண்டும்?
அவர்கள் முன் இரு அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று மோதல் (Confrontation) இன்னொன்று அனுசரித்தல் (Conciliation)உரிமைகளை முதன்மையாகக் கருதும் சமூகங்கள் ஒரு போக்கையும், வளர்ச்சியை முக்கியமாகக் கருதும் மனோபாவம் மற்றொரு போக்கையும் தெரிவு செய்து கொள்கின்றன.
இலங்கைத் தமிழர்கள் மோதல் போக்கையும், சிங்கப்பூர் தமிழ்ச் சமூகம் அனுசரித்தல் போக்கையும் மேற்கொண்டனர். விளைவுகளை உலகம் கண்கூடாகப் பார்க்கிறது
இந்தியாவில் தமிழர்களுக்கு என்னென்ன சிவில் உரிமைகள் இருக்கின்றனவோ அந்த உரிமைகள் இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திற்கு முன்னரும் இருந்தன. இப்போதும் இருக்கின்றன. வாக்களிக்கும் உரிமை, அரசியல் கட்சிகள்/அமைப்புகளைத் தொடங்கி நடத்தும் உரிமை, அவற்றிற்காக வன்முறை தவிர்த்துப் பிரசாரம் செய்யும் உரிமை. பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை அனுப்பவும், அந்தப் பிரதிநிதிகள் மூலம் சட்டம் இயற்றலில் பங்கு பெரும் உரிமை (அமிர்தலிங்கம் போன்றவர்கள் அங்கு எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். கதிர்காமர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்திருக்கிறார்) மாநில அரசைத் தேர்ந்து கொள்ளும் உரிமை, கல்வி கற்கும் உரிமை/வாய்ப்பு (14வயதுவரை கட்டாயக் கல்வி), மொழி உரிமை (இலங்கை அரசின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இருப்பதால் அரசு அறிவிப்புகள் உட்பட பலவும் அங்கு தமிழிலும் வெளியாகின்றன) நீதி பரிபாலனத்தில் பங்கேற்கும் வாய்ப்பு (விக்னேஸ்வரன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்) வழிபாட்டு உரிமை (பெளத்தம் அரசமதமாக இருந்தாலும் இந்துக் கோவில்களில் வழிபாடுகளும் திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன) கருத்துரிமை (ஊடகங்களையும், பத்திரிகைகளையும் தமிழர்கள் நடத்தி வருகிறார்கள். தமிழரது நூல்கள் வெளியாகின்றன, பரிசுகள் பெறுகின்றன) வணிகம் செய்யும் உரிமை என எல்லாவித உரிமைகளையும் இலங்கைத் தமிழர்கள் பெற்றிருக்கிறார்கள். தனிநாடு என்ற கோரிக்கையும், அதற்கான ஆயுதம் தாங்கிய போராட்டமும்தான் அவர்கள் வாழ்வைக் குலைத்துப் போட்டன. மாநில அரசுகளுக்கு பல விஷயங்களில் கூடுதலான அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் நியாயம் உள்ளது. ஆனால் அது வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்கு மட்டுமே உரிய பிரச்சினை அல்ல. அதை அரசியல் பேச்சு வார்த்தைகள் மூலம் அடைய முடியும்
சுருக்கமாகச் சொன்னால் இன, மத, மொழி அடையாளங்களுக்கு அப்பால் இலங்கையர் என்ற ஒற்றை அடையாளத்தை அங்குள்ள மக்கள் ஏற்பார்களானால் அந்த நாடு முன்னேற முடியும்.
இந்த வெற்றி இந்தியாவிற்கும் சில சவால்களை முன்னிறுத்துகிறது. கோத்தபய சீன ஆதரவாளராக அறியப்பட்டவர். இலங்கையில் சீனத்தின் முதலீடுகள், இலங்கைக்குச் சீனா அளித்துள்ள கடன், இலங்கையின் இறக்குமதியில் சீனப் பொருட்கல் பெரும்பங்கு வகிக்கிறது என்ற யதார்த்தம் ஆகியவை இலங்கை சீனத்தின் பிடியிலிருந்து எளிதில் விடுபட முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளன. இந்த நிலையில் இந்தியா தனது உறவையும் பங்களிப்பையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். கோத்தபய தனது தேர்தல் அறிக்கையில் இரு நாடுகளையும் சமதூரத்தில் வைப்பேன் என்று சொல்லியிருப்பதும், மோதியின் அழைப்பை ஏற்று கோத்தபய, பதவி ஏற்றதும் முதல்நாடாக இந்தியாவிற்கு வர இருப்பதும், எந்த நாட்டவரையும் இந்தியாவை நேச நாடாக ஏற்றுக் கொள்ளச் செய்யும் மோதியின் சாமர்த்தியமும் இலங்கையை ‘இந்தியாவிற்கு முதலிடம்’ (India First) என்ற நிலைக்குத் திருப்பிவிட முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
ஆனால் இதற்கான முட்டுக் கட்டைகள், இடையூறுகள் இந்தியப் பெருங்கடலின் இரு புறத்தும் இருக்கிற தமிழர்களிடமிருந்து வரக் கூடும். அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதுதான் நிஜமான, கடினமான சவால். தங்களது தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காகத் தமிழர்களை உசுப்பேத்தி, உணர்ச்சி வயப்படுத்தும் அரசியல் கட்சிகளிடமிருந்து அவர்களை மீட்டு நாட்டின் பொதுநன்மையை உணர்த்தி ஏற்கச் செய்கிற பொறுப்பு தமிழ் அறிவு ஜீவிகளுக்கும், ஊடகங்களுக்கும் இருக்கிறது. இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியர்களுக்கும் தேவை India First என்ற அணுகுமுறை.
இனி இந்தியா இலங்கையில் கவனம் செலுத்த வேண்டியது அரசியலில் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும்தான்.