கடந்த ஆண்டின் கடைசித் தாளைக் கிழிக்கிற போது என்னவென்று தெரியாமல் ஏதோ ஒரு சோகம் ஒரு கணம் என்னைக் கடந்து போனது. மாதங்களில் எனக்கு மிகவும் பிடித்த டிசம்பர் முடிந்துவிட்டதாலா?
எனக்கு ஏன் டிசம்பர் பிடிக்கும்? அந்தக் கடைசி மாதம் கவிஞர்களின் மாதம். அவர்களில் பலர் கவிஞர்களாக மட்டுமல்ல, மாற்றம் விரும்பிய புரட்சியாளர்களாகவும் இருந்தார்கள் ஊரறிந்த உதாரணம் பாரதி. ஆனால் ராஜாஜி, மாசேதுங், வாஜ்பாய் என்ற பட்டியலில் மண்டேலாவையும் என் மனம் சேர்த்துக் கொள்ளும். மண்டேலா பிறந்த மாதம் டிசம்பர் அல்ல. அது அவர் மறைந்த மாதம். அவர் கவிஞரும் அல்ல. அப்புறம் ஏன் அவரை இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும்?
சொல்கிறேன், சொல்கிறேன், காரணம் இருக்கிறது. ராப்பென் தீவில் இருந்த சிறையில் அவர் வந்து இறங்கியபோது அவரிடம் சொல்லப்பட்ட முதல் வாக்கியம்: “இதுதான் ராப்பென் தீவு. இங்குதான் நீங்கள் இறக்கப் போகிறீர்கள்”
ஆனால் மண்டேலா இறக்கவில்லை. ஆனால் அவர் கண்ணீர் ‘மறைந்து’ போனது அதற்கு ஆனந்தம் பிறந்தது என்று அர்த்தமல்ல. ஆரம்பத்தில்அங்கு அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை, சுண்ணாம்புக்கல் குவாரியில் கல்வெட்டுவது. வெள்ளை வெளேர் என்ற அந்தக் கற்களில் பட்டுப் பிரதிபலித்த கதிரொளிகள் முதலில் கண்ணைக் கூசச் செய்தன. பின்னர் அவரது கண்ணீர் பை வற்றிப் போகக் காரணமாயின. அதனால் மண்டேலாவால் ‘அழ’ முடியாது.
“கண்ணுக்குத் தெரியாத காயங்கள், ஆற்றக் கூடிய ரணங்களை விட ஆழமானவை. என் அம்மா இறந்த போதும், என் மகன் விபத்தில் பலியானான் என்ற செய்தி வந்த போதும் என்னால் அழ முடியவில்லை” என்று எழுதுகிறார் மண்டேலா.
ஆறாத காயங்களுக்கும், அழமுடியாத கண்களுக்கும் எப்போதும் துணை எழுத்துத்தான். இருபத்தியேழு வருடச் சிறைவாசத்தில் அவர் இலக்கியத்தில் புரண்டு எழுந்தார். ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் அவருக்கு சிநேகமானார். அதன் ஒவ்வொரு வரியையும் உறக்கத்தில் எழுப்பினாலும் ஒப்பிப்பார் மண்டேலா.
வீரனின் வரலாற்றை விரல்கள் புரட்டும் போது உள்ளே ஒரு வெளிச்சம் விரவி நிற்கும் என்பது உண்மைதான். ஆனால். எப்போதாவது சில தருணங்களில் மனம் சோர்ந்து போகும் போது அந்த இரவல் வெளிச்சம் விடைபெற்றுக் கொள்ள இதயம் இருட்டுக்குள் விழும்.
அந்த நேரங்களில் எல்லாம் அவருக்கு தைரியம் தந்தது ஒரு கவிதை. வில்லியம் ஏர்னஸ்ட் ஹென்லி என்பவரின் கவிதை.
என்னைச் சூழ்நிலைகள்
இறுக்கிப் பிடித்தபோதும்
அழவில்லை
உடல் ஒடுங்கவில்லை
குருதி கொட்டும் தலை கூடக்
குனிந்து வணங்கவில்லை…
….என் விதியின் எஜமான்,
என் ஆன்மாவின் தலைவன்,
நானே.
என்ற வரிகள் கொண்ட அந்தக் கவிதை எவரையும் எழுந்து நிற்கச் செய்யும்.
நம் விதியைத் தீர்மானிப்பது நாமே என்று நம்புகிறவர்களுக்கு வரும் நாளெல்லாம் திருநாளே. நம்பாதோருக்கு நாளை மற்றும் ஒரு நாளே
எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!