இனிக்கத் தவறிய பாயாசம்

maalan_tamil_writer

இன்று போல் அன்று டிவிட்டரோ வாட்ஸ்அப்போ இல்லை. தொலைக்காட்சிகள் இல்லை. ஊகங்களையும் கிசுகிசுக்களையும் வெளியிடும் ‘செய்தி’ப் பத்திரிகைகளும் இல்லை. ஆனால் அரசியல் களம் பரபரப்பாகவே இருந்தது. சூடான செய்திக்குக் காத்திருந்த பத்திரிகைகளை மதியம் ஒரு மணி வாக்கில் அந்தத் தகவல் எட்டியதும் அவை சுறுசுறுப்பாகின. ராமாவரத்தில் எம்.ஜி.ஆர் வீட்டில் இருந்த தொலைபேசிகள் இடைவிடாமல் ஒலிக்கத் தொடங்கின.

ஆனால் எம்.ஜி.ஆர் அன்று வீட்டில் இல்லை. நேற்று இன்று நாளைத் திரைப்படத்திற்கான படப்பிடிப்புக்கள் முனைப்பாக நடந்து கொண்டிருந்தன. அதில் பங்கேற்க அதிகாலை ஆறு மணிக்கே அவர் கிளம்பிப் போய் விட்டார்.

தொலைபேசியை எடுத்த எம்.ஜி.ஆரின் உதவியாளர் மகாலிங்கம் செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனார். செய்தியாளர்கள் அவரிடம் சொன்ன செய்தி: எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

“இதற்கு அவரது எதிர் வினை என்ன?” என்று பத்திரிகையாளர்கள் மகாலிங்கத்தைத் துளைத்தார்கள். “சற்றுப் பொறுங்கள் கேட்டுச் சொல்கிறேன்” என்ற அவர் எம்.ஜி.ஆரை தொடர்பு கொள்ள ஸ்டுடியோவை அழைத்தார். அது செல்போன் இல்லாத காலம்.

இரண்டு ஷாட்களுக்கிடையே ஆன இடைவெளியில் எம்.ஜி.ஆரிடம் செயலர் அவசரமாகப் பேச வேண்டும் என அழைத்ததைச் சொல்லி போனைக் கொடுத்தார்கள். எம்.ஜி.ஆர் “என்னப்பா அவசரம்?” என்று மகாலிங்கத்திடம் கேட்டார். மகாலிங்கம் தயங்கித் தயங்கி “உங்களைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாகத் தகவல் வந்துள்ளதாகப் பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள்” என்றார். செய்தியைக் கேட்ட எம்.ஜி.ஆர் கடகடவென்று  சிரித்தார். “இதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்கிறார்கள்” என்றார் உதவியாளர். சிறிதும் பதற்றமே இல்லாமல் எம்ஜிஆர் சொன்னார்” நான் பாயாசம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்” மகாலிங்கம் மறுபடி தயங்கி. “உங்கள் பதில்?” என்றார். அதான் சொன்னேனே, “ நான் பாயாசம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். அதையே என் பதிலாகச் சொல்லிவிடு”

இதெல்லாம் நடந்தது 1972ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் தேதி. அதற்குப் பிறகு  ஒருவாரம் கழித்து அக்டோபர் 17ஆம் தேதி அதிமுக உருவாகிறது

தான் வெளியேற்றப்படுவோம் என்பதை எம்.ஜி.ஆர் எதிர்பார்த்திருந்தாரா, அல்லது அந்த அளவிற்குப் போகமாட்டார்கள் என்று கருதினாரா என இன்றும் ஊகிக்க முடியவில்லை. ஏனெனில் திமுகவில் ஒருபுறம் கொந்தளிப்பும் ஒருபுறம் சமரசப் பேச்சுக்களும் நடந்து கொண்டிருந்தன

கொந்தளிப்புக்குக் காரணம், “ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால் அது ஆட்சிக்கு வந்தபிறகு வந்ததா? அதற்கு முன்னால் வந்ததா? இதைக் கேட்கக் கூடாதா? என் மனைவி மீது, உறவினர்கள் மீது, உறவினர்கள் மீது பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது? மாவட்ட, வட்ட, கிளைக்கழகச் செயலாளர்களுக்கு எப்படி வந்தது? ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான். சம்பாதிக்கிறான், நீ சம்பாதித்தால் அதற்குக் கணக்குக் காட்டு! மாவட்டச் செயலாளர்கள்,கிளைக் கழகச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள்  பதவிகளில் இருப்பவர்கள் குடும்பத்திற்கு வாங்கியிருக்கிற  சொத்துக்கள் இருந்தால் கணக்குக் காட்ட வேண்டும். அவைகள் எப்படி வந்தது என்று விளக்கம் சொல்ல வேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காக ஒரு குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன்னால் நிரூபிக்கலாம். நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னால் நிறுத்தி  அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களைத் தூக்கி எறிவோம்” என்று எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதிஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதுதான் (நெஞ்சுக்கு நீதி, இரண்டாம் பாகம், பக்கம் 362)

எம்.ஜி.ஆர் வைத்தது ஒரு எளிமையான கோரிக்கை. கட்சிக்குள் ஒரு கமிட்டி, அதன் முன் கட்சி நிர்வாகிகள் சொத்துக் கணக்குக் காட்ட வேண்டும். இதை சாதகமான உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டியைப் போட்டுக் கண்துடைப்பு நாடகம் நடத்தி சமாளித்திருக்கலாம். அப்படி சாதகமான உறுப்பினர்களை நியமிக்குமளவு கருணாநிதிக்குச் செயற்குழுவில் பலம் இருந்தது. இன்னும் சொல்லப் போனால் கிட்டத்தட்ட மொத்த செயற்குழுவும் அவர் பக்கம் இருந்தது.

ஆனால் கட்சிக்காரர்கள் பதற்றமடைந்தார்கள். எம்ஜிஆர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 31 உறுப்பினர்களைக் கொண்டசெயற்குழுவில் 26 உறுப்பினர்கள் தலைமையிடம் முறையிட்டார்கள்.

தனக்குப் பொதுக்குழு செயற்குழுவில் ஆதரவில்லை என்பது எம்.ஜி.ஆருக்கு நன்கு தெரிந்தே இருந்தது. அது அதிமுக தொடங்கிய போது வெளிப்படையாகத் தெரிந்தது. கடசியின் மூத்த தலைவர்கள் யாரும் அவர் புதுக் கடசித் தொடங்கிய போது அவருடன் போகவில்லை. மதியழகன் மாத்திரம் மதில் மேல் பூனையாக இருந்தார்.

ஆனால் கருணாநிதியின் ஆட்சிக் கலைக்கப்பட்டதும் எல்லாம் மாறியது. நெடுஞ்செழியன், ராசாராம், மாதவன், ஆதித்தனார், சத்தியவாணி முத்து, நாஞ்சில் மனோகரன், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற பலரும் பின்னாளில் அதிமுகவில் இணைந்தனர். மதியழகன் மட்டுமல்ல, அவரிடம் கருணாநிதியால் தூதராக அனுப்பி வைக்கப்பட்ட எஸ்.டி.சோமசுந்தரமும் அதிமுகவில் சேர்ந்தார்.

இந்த 47 ஆண்டுகளில் அதிமுகவின் பயணம் எப்படி இருந்திருக்கிறது ? தனிமனித வசீகரத்தை, விசுவாசத்தை, துதியை அடிப்படையாகக் கொண்டே இத்தனை காலமும் இயங்கி வந்த போதிலும், தமிழக அரசியல் களத்தில் எளிதில் புறந்தள்ள முடியாத ஒரு சக்தியாக அது  நிலைபெற்றிருக்கிறது. இத்தனைக்கும் சில தேர்தல்களில் படுமோசமான தோல்விகளை எதிர்கொண்டிருக்கிறது. ஆட்சியை இழந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் காலத்திலேயே அது பிளவைச் சந்தித்து இருக்கிறது. ஆரம்பத்தில் அவருடன் வந்த தலைவர்கள் மீண்டும் திமுகவிற்குத் திரும்பியிருக்கிறார்கள்.கடசியில் கோஷ்டிகள் இருந்திருக்கின்றன, இருக்கின்றன. இத்தனைக்கும் அப்பால் தமிழகத்தின் முக்கியமான அரசியல் கட்சியாக அது நிற்கிறது. இந்தச் சாதனையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அதிமுகவிற்குப் பிறகு தோன்றிய கட்சிகளில் ஒன்று கூட, சினிமா நடிகர்களால் தொடங்கப்பட்ட கட்சிகள் உட்பட, அதிமுக பெற்ற வெற்றிகளில் 10 சதவீதம் அளவிற்குக் கூட வெற்றி காணவில்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.இன்னும் சொல்லப் போனால், அதிமுக தொடங்கிய போது தமிழகத்தில் வலுவான அரசியல் சக்திகளாக இருந்த காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று கரைந்து காணமல் போய்க் கொண்டிருக்கின்றன

தமிழகத்தில் அதிக காலம் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுகதான் (28ஆண்டுகள்) வாக்கு அரசியலில் இலவசங்களைத் தவிர்க்க முடியாதவையாக ஆக்கியதும் அதிமுகதான். ஆனால் இலவசங்கள் வரமா சாபமா என்பதைத் தெளிவாகத் தீர்மானிக்க முடியவில்லை. சத்துணவுத் திட்டம், இலவச அரிசி, தொட்டில் குழந்தைத் திட்டம், இலவசக் கல்வி, கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்திற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் நல்ல பலன்களைத் தந்திருக்கின்றன. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகம் சில விஷயங்களில் முன்னணியில் இருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது

ஆனால் அதிமுக  தமிழகக் கலாசாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் விபரீதமானவை. வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாமல் குடிப்பழக்கம் தமிழகம் நெடுகப் பரவிக் கிடக்கிறது மட்டுமல்ல, ஆழமாக வேர் கொண்டும் விட்டது. கூச்சம் இல்லாத தனிமனித வழிபாடு. எந்தவிதத் தகுதியும் இல்லாதவர்களும் எதையும் அடைந்துவிட முடியும், பதவிகளை விலைக்கு வாங்க முடியும் என்ற நிலை, அன்றாட நடைமுறையாகிவிட்ட லஞ்சம் எனக் கலாசாரம் இருண்டு கிடக்கிறது

ஊழலுக்கு எதிராகக் குரலெழுப்பித் தொடங்கிய கட்சியின் முதல்வர்தான் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டார் என்பது வரலாற்றின் நகை முரண்

கடசியால் நியமிக்கப்பட்டக் குழுவின் முன் கட்சி நிர்வாகிகள் சொத்துக் கணக்குக் காட்ட வேண்டும் என்று அன்று .1972ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி –  பொதுக்கூட்டத்தின் மூலமாக திமுக தலைமையிடம் எம்.ஜி.ஆர் வைத்த கோரிக்கையை இன்று அதிமுக  தனது கட்சியில் நடைமுறைப்படுத்துமா?

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.