தானியம் தேடிப் பறந்து கொண்டிருந்த சிட்டுக் குருவி வீதியில் விழுந்து கிடந்த வெள்ளிக் காசைக் கண்டது.வெயிலில் ஒளிர்ந்து கொண்டிருந்த அதை அலகால் கொத்தி எடுத்துத் தன் கூட்டுக்குள் கொண்டு வந்து வைத்துக் கொண்டது. அந்தக் காசால் அதற்குப் பயன் ஏதும் இல்லை. ஆனால் பளபளக்கும் பொருள் ஒன்று தன் வசம் இருப்பது குறித்து அதற்கு ஏகப்பெருமை. “என்னிடம் வெள்ளிக் காசு இருக்கிறது” என்று ஓயாமல் அது கூச்சலிட்டுக் கொண்டு அந்த மாளிக்கைக்குள் சுற்றிச் சுற்றி வந்தது.
வீட்டில் இருந்த செல்வந்தர் ஆரம்பத்தில் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.ஆரம்பத்தில் அதன் உற்சாகம் அவருக்கும் கூட மகிழ்ச்சியாகத்தானிருந்தது. ஆனால் குருவி ஓயாமல் கூச்சலிட்டுக் கொண்டிருப்பது அவருக்குத் தலைவேதனையாக இருந்தது. ஒருநாள் அவர் பொறுக்கமாட்டாமல், அந்தக் காசைப் பிடுங்கிக் கொண்டு வாடா என்று தன் வேலையாளுக்கு உத்தரவிட்டார்.
குருவியிடமிருந்து காசு பறிக்க்கப்பட்டது. ஆனால் குருவியின் கூச்சல் நிறகவில்லை. அது இப்போது, வருவோர் போவோரைப் பார்த்து அது கீச் கீச் சென்று ஐயோ என் காசை ஜமீன்ந்தார் பிடுங்கிவிட்டார் என்று கூச்சலிட ஆரம்பித்தது. செல்வந்தவருக்குப் பெரிய அவமானமாகப் போய்விட்டது. அவர் மறுபடியும் வேலையாளைக் கூப்பிட்டார். அந்தக் காசைக் கொண்டு போய் அதன் முகத்திலேயே விட்டெறி என்று உத்தரவிட்டார். வெள்ளிக் காசு மீண்டும் குருவியிடம் போயிற்று.
குருவி மீண்டும் கூச்சலிட ஆரம்பித்தது. ஆனால் இந்த முறை குஷியாக..ஜமீந்தார் என்னைக் கண்டு பயந்துட்டார், ஜமீந்தார் என்னைக் கண்டு பயந்துட்டார், என்று குஷியாகக் கூச்சலிட்டுக் கொண்டு மாளிகையச் சுற்றி வர ஆரம்பித்தது
தமிழக அரசியல் கட்சிகளிடம் சிக்கிக் கொண்டிருக்கும் வெள்ளிக்காசு விடுதலைப் புலிகள் பிரசினை. தேர்தலில் அதைக் கொண்டு அவர்கள் எந்த லாபமும் அடைந்ததில்லை. இலங்கைப் பிரசினையை முன்னிறுத்தித் வாக்குக் கேட்ட தேர்தல்களில், மதிமுக, பாமக, விசிக போன்ற கட்சிகள் பெரும் வெற்றிகளைப் பெற்றதில்லை. இங்கே இலை மலர்ந்தால் அங்கே ஈழம் மலரும் என 2009 மக்களவைத் தேர்தலில் பிரசாரம் செய்த ஜெயலலிதாவே 9 இடங்களைத்தான் பெற்றார். அப்போது இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்குமான போர் உச்ச கட்டத்தில் இருந்தது. அந்தத் தேர்தலில் ‘இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாக’ குற்றம் சாட்டப்பட்ட திமுக, அதிமுகவைப் போல இரு மடங்கு இடங்களைப் பெற்றது.
தமிழகத் தேர்தல் அரசியலில் இலங்கைப் பிரசினை என்பது குருவிக்குக் கிடைத்த வெள்ளிக் காசு போல. அதனால் அதற்குப் பலனில்லை. ஆனால் கூச்சலிட அது உதவும்
இந்தப் பட்டியலில் கடைசியாகச் சேர்ந்திருப்பவர் சீமான். விடுதலைப் புலிகளின் சின்னத்தை நினவுபடுத்துவதைப் போன்ற சின்னத்தைத் தனது கட்சியின் கொடியில் பொறித்துள்ள அவர் விடுதலைப் புலிகளுக்கும் அவருக்கும் உள்ள நெருக்கத்தைப் பற்றி பல முறை மேடைகளில் பேசியிருக்கிறார். அவர் பிரபாகரனோடு ஆமைக் கறி உண்டதாகச் சொன்ன செய்தி சமூக இணைய தளங்களில் பேச்சுக்கும் கேலிக்கும் உள்ளாயிற்று.
இதைக் குறித்து அப்போது ஊடகங்களிடம் பேசிய வைகோ பிரபாகரனுடன் அவர் ஆமைக்கறி உண்டதாகச் சீமான் சொல்வது பொய் என்றும், பிரபாகரன் மொத்தம் எட்டு நிமிடங்கள்தான் அவரைச் சந்தித்ததாகவும் கூறினார். பிரபாகரனோடு சீமான் புகைப்படம் எடுக்கவில்லையென்றும் கிராபிக்ஸில் அதுபோல புகைப்படம் உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார் அப்போது மேலும் சீமான் உலக நாடுகள் முழுவதிலும் புலிகளின் பிரதிநிதி என்றுகூறி பணம் வசூலிப்பதாகவும் வைகோ குற்றம்சாட்டினார்.
பிரபாகரனுக்கும் சீமானுக்கும் இடையில் எப்படிப்பட்ட உறவு இருந்ததோ தெரியவில்லை, ஆனால் சீமானுக்கும் சர்ச்சைகளுக்குமிடையிலான உறவு நகமும் சதையும் போன்றது
ஆனால் அண்மையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசியபோது அவர் தமிழ்நாட்டில் 18 லட்சம் பேர்தான் தனது கட்சிக்கு வாக்களித்தார்கள் என்றும் அவர்கள்தான் தமிழர்கள் என்றும், மற்றவர்கள் தமிங்கிலர்கள் என்றும் அவர்களை மரத்தில் கட்டி வைத்து முதுகுத் தோல் உரிய பச்சைப் பனைமட்டையால் முதுகுத்தோல் உரியும் அளவிற்கு அடிக்க வேண்டும் என்றும் அப்படி அடித்து தோலை உரித்த பின் அந்த இடத்தில் உப்புத் தடவி விட்டு, உடம்பு எரியும் போது கைகளைக் கட்டிக் கொண்டு பார்க்க வேண்டும் என்று தன் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்கள் மீது பேரன்பு கொண்ட அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் அவரது பேச்சிற்கு எதிர்ப்போ கண்டனமோ தெரிவிக்கவில்லை.
பிரபாகரனின் சீடர் என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் சீமான் அண்மையில் வெளியிட்டுள்ள தகவல் ஒன்று அதிர்ச்சி அளிக்கிறது. “அமைதிப்படை எனும் அநியாயப் படையை இலங்கைக்கு அனுப்பி, எம் தமிழ் மக்களைக் கொன்றொழித்த ராஜீவ் காந்தி என்கிற என் இனத்தின் எதிரியை, தமிழர் தாய் நிலத்திலேயே கொன்று புதைத்தோம்” என்று விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தின் போது பேசியிருக்கிறார்.
ராஜீவ் காந்தியைக் கொன்றதை விடுதலைப் புலிகள் மறுத்து வந்தாலும், அதை ‘ஒரு துன்பியல் சம்பவம்’ என்று அலட்சியமாக ஒதுக்கிவிட்டாலும் அந்தக் கொலைக்குப் பின் இருந்தது அவர்கள்தான் என்று ஒன்றுக்கு மேற்பட்ட நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து விட்டன. அந்தக் கொலையாளிக்கு உதவியவர்கள் இப்போதும் சிறையில் இருக்கிறார்கள். எனவே தமிழர்கள்தான் கொன்றோம் என்ற அவரது வாக்கு மூலத்தில் அதிர்ச்சி அடைய ஒன்றுமில்லை.
ஆனால் ராஜீவின் கொலையை அவர் நியாயப்படுத்தியிருப்பது திகைப்பளிக்கிறது. ராஜீவின் அரசியலை ஏற்காதவர்கள் கூட அவரது கொலை, அதிலும் அவர் கொலை செய்யப்பட்டவிதம் குரூரமானது என்பதைக் குறித்து மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.
ராஜீவ் கொலைக்குப்பின் சர்வதேச சதி இருக்கிறது, அவர் கொலைக்குக் காரணம் விடுதலைப் புலிகள் அல்ல என்று இதுநாள் வரை சொல்லிக் கொண்டிருந்தவர்கள் சீமானின் இந்தக் கருத்துக்கு என்ன பதில் சொல்கிறார்கள்?
ராஜீவின் படுகொலை காங்கிரஸ்காரர்கள் மட்டும் வருந்தி நிற்க வேண்டிய விஷயமல்ல. அயல்நாட்டு சக்திகள் நம் மண்ணிற்குள் நுழைந்து நம் நாட்டின் அரசியல் தலைவர் ஒருவரைக் கொன்ற பயங்கரவாதச் செயல் என்பதால் அது இந்தியர்கள் அனைவருமே கவலை கொள்ள வேண்டிய சம்பவம்
இந்தியா கவலையுடன் கவனிக்க வேண்டிய விஷயம் இப்போதும் இருக்கிறது.
விடுதலைப் புலிகள் மீண்டும் மலேசியாவில் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்களோ என்ற சந்தேகம் மலேசிய அரசிற்கு எழுந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு நிதி உதவி உள்ளிட்ட ஆதரவு அளித்ததற்காக மலேசியாவில் இரு சட்ட மன்ற உறுப்பினர்கள் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட சிறப்புச் சட்டங்கள் பாயக் கூடும் என்று அங்கிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன.
“கைது நடவடிக்கையின் பின்னணி குறித்து காவல்துறை என்னிடம் விவரித்துள்ளது. இதன் பின்னணியில் உரிய காரணங்கள், போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நம்புகிறேன்,” என்று பிரதமர் மகாதீர் கூறியுள்ளார். மகாதீரை அடுத்து மலேசியப் பிரதமராக பொறுப்பேற்பார் என்று கருதப்படும் அன்வார் இப்ராகிமும், மலேசிய போலீஸார் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்றுள்ளார்
இவையெல்லாம் விடுதலைப்புலிகள் மலேசியா மண்ணில் தலையெடுக்காமல் முளையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் மலேசிய அரசு உறுதியாக உள்ளது என்பதைக் காட்டுகின்றன. சீமான் மலேசியாவுக்கு ஏராளமான பயணங்களை மேற்கொண்டதாகவும், உள்ளூர் அரசியல்வாதிகளுடன் சந்திப்புகளை நடத்தியதாகவும் காவல் துறையினருக்குத் தெரியும் என்று மலேசியக் காவல்துறை அதிகாரி தெரிவிக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக சீமான் மலேசியாவிற்குள் நுழைய தடைவிதிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்தியா என்ன செய்யப் போகிறது?