மலை உச்சியிலிருந்த கோயிலுக்குப் போயிருந்தார் நண்பர். நல்ல தரிசனம். அர்ச்சகர் பூஜை செய்த பிரசாதத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். பிரசாதம் ஒன்றும் பிரமாதமில்லை. ஒரு முழத்தில் பூச்சரம், இரண்டு வாழைப்பழம். சின்னதாய் விபூதி குங்குமப் பொட்டலம். ஒரு அரைத் தேங்காய் மூடி.
சந்நிதியை விட்டு வெளியே வந்து பிராகாரத்தில் இறங்கினார் நண்பர். மண்டபம் ஏதுமில்லாமல் திறந்த வெளியில் அமைந்த பிரகாரம். நண்பர் பிரகாரத்திற்கு வந்ததுதான் தாமதம், எங்கிருந்தோ குரங்குகள் வந்து சூழ்ந்து கொண்டன. ;உஸ்ஸு, உஸ்ஸுனு அவற்றை விரட்ட முயற்சித்தார் நண்பர், அப்போது அவர் சற்றும் எதிர்பாராதது ஒன்று நடந்தது. எங்கிருந்தோ தாவி வந்த பெரிய குரங்கு ஒன்று அவர் கையிலிருந்த அரைத் தேங்காய் மூடியை வெடுக்கென்று பறித்துக் கொண்டு ஓடிவிட்டது.நண்பருக்கு கைக் கெட்டியது வாய்க்கு எட்டவில்லை.
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு என மத்திய அரசு கொடுத்த இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்குக் கிடைக்காததைப் போல.
மத்திய அரசு அளித்துள்ள இந்த இடஒதுக்கீட்டைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அதைக் குறித்து முடிவெடுக்கவில்லை என்று அது சொல்லி வருகிறது. மாநில அரசு வேண்டுமானால் முடிவெடுக்காமல் இருக்கலாம். ஆனால் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் வேலைகளிலும் இந்த இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் தாசில்தாரிடமிருந்து வருமானம் மற்றும் சொத்து விவரங்களைக் குறித்த சான்றிதழைப் பெற வேண்டும். அந்தச் சான்றிதழ்களையும் வழங்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்குத் தமிழக அரசு தானாகவும் உதவ முன்வரவில்லை. மத்திய அரசு உதவியை அவர்கள் பெறுவதையும் மறித்து நிற்கிறது. இதனால் இந்தக் கல்வியாண்டு பல ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அரசியல் ஆதாயங்களைக் கருத்தில் கொண்டு.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பவர்கள் யார்?
- குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. எட்டு லட்சத்திற்குள் இருப்பவர்கள்
- ஐந்து ஏக்ருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்திருப்பவர்கள்
- ஆயிரம் சதுர அடிக்குட்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள்
- நகராட்சிப் பகுதிகளில் 109 சதுரகஜம், நகராட்சிகளாக இல்லாத பகுதிகள் எனில் 209 சதுரகஜம் அளவில் வீட்டு மனை கொண்டவர்கள்
இவர்கள் வேறு வகையான இட ஒதுக்கீடுகளுக்குத் (பட்டியலினத்தவர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இப்போது இருந்து வரும் இடஒதுக்கீடுகளுக்கு) தகுதி பெறாதவர்களாக இருந்தால் இந்த ஒதுக்கீட்டிற்குத் தகுதி பெற்றவர்களாக ஆவார்கள்
ஆண்டு வருமானம் எட்டு லட்சம் என்பது என்ன கணக்கு? அதிகமாக இருப்பது போலத் தோன்றுகிறதே?
இது ஏதோ கண்மூடித்தனமாக அல்லது உத்தேசமாகத் தீர்மானிக்கப்பட்டது அல்ல. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் வசதியானவர்களை (க்ரீமீ லேயர்) விலக்கி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியபோது, வசதியற்றவர்கள் யார் என்பதை 2017ஆம் ஆண்டு மத்திய அரசு தீர்மானித்தது. அப்போது ஆண்டு வருமானம் ரூ 8 லட்சத்திற்குள் இருப்பவர்கள் வசதியற்றவர்கள், அதற்கு மேலிருப்பவர்கள் க்ரீமீ லேயர் என்று வரையறுத்தது. இப்படி வரையறுக்கவில்லை என்றால் பலர் இட ஒதுக்கீட்டின் பலன்களை இழந்திருப்பார்கள்.
க்ரீமீ லேயருக்கான இந்த வரையறை திடீரென்று தீர்மானிக்கப்படவில்லை. 1993ஆம் ஆண்டு, க்ரீமீ லேயர் அறிமுகப்படுத்தப்பட்டபோது அது ஆண்டொன்றுக்குக் குடும்ப வருமானம் ரூ 1 லட்சம் என்று தீர்மானிக்கப்பட்டது. பின் அது 2004ல் ரூ2.5 லட்சம், 2008ல் 4.5 லட்சம், 2013ல் ரூ 6 லட்சம் என்று மறுவரையறை செய்யப்பட்டது. இவையனைத்தும் காங்கிரஸ் அரசால் செய்யப்பட்ட மறுவரையறைகள் என்பது கவனிக்கத்தக்கது
இதர பிற்பட்ட வகுப்பினருக்கு எது க்ரீமி லேயருக்குக் கீழ் உள்ள வருமானம் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறதோ, அதே அளவுகோல்தான் இந்தப் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களைத் தீர்மானிக்கவும் பின்பற்றப்பட்டுள்ளது
இந்தப் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது பிராமணர்களுக்கான இட ஒதுக்கீடு என்று கூறப்படுகிறதே?
அபத்தம். அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திராவிட இயக்கங்களும், அவற்றை நோக்கிச் சாய்ந்துள்ள தொலைக்காட்சிகளும் முயற்சிக்கின்றன. ஆனால் அதில் உண்மை இல்லை. ஏனெனில் தமிழ்நாட்டில் இந்த இடஒதுக்கீடு நடைமுறையில் இல்லை. அதனால் இங்கு பிராமணர்கள் இதன் மூலம் பலன் கிடையாது. மத்திய அரசுப் பணிகளைப் பொறுத்தவரை இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் சீக்கியர்களும் கூடப் பலனடைவார்கள் என்பதுதான் உண்மை. இதை மக்களவையில் சமூக நீதிக்கான அமைச்சர் தாவர்சந்த் கெலோட் ஜனவரி 8ஆம் தேதி பேசும் போது தெரிவித்திருக்கிறார். இப்போது அகில இந்திய அளவில் நடைமுறையில் இருக்கும் இதர பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு முறையில், இந்து மதத்தின் பல்வேறு ஜாதியினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு இருக்கிறது. முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் முஸ்லீம்கள் கூடப் பலன் பெற முடியும். எந்த அரசு முஸ்லீம்களுக்கு எதிராக இருப்பது போலச் சித்தரிக்கப்படுகிறதோ அந்த அரசுதான் முஸ்லீம்களுக்கு கல்வியிலும் வேலையிலும் இட ஒதுக்கீடு அளித்திருக்கிறது!.
இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் பலன் பெறும் இந்து மதத்தில் உள்ள ஜாதிகளின் பட்டியல் நீளமானது. பனியாக்கள், ராஜபுத்திரர்கள் (தாக்கூர்கள்), ஜாட்கள், மராத்தாக்கள், குஜ்ஜர்கள், பூமிகர்கள், கப்பூகள், கம்மாக்கள் இவர்களும் பலனடைவார்கள். பிராமணர்கள் மட்டுமல்ல. 2018ஆம் ஆண்டு டிசம்பரில் கேரள அரசு முற்பட்ட ஜாதியினரின் பட்டியல் ஒன்றை உருவாக்கியது. 83 ஹிந்து ஜாதிகளைக் கொண்ட அதில் 13 மட்டுமே பிராமணர்களின் கிளை ஜாதிகள்.(subcaste) 24 கிளை ஜாதிகள் நாயர் சமூகத்தைச் சார்ந்தவை. மற்றவர்கள் க்ஷத்திரியர்கள் (தி ஹிண்டு கொச்சிப் பதிப்பு டிசம்பர் 31 2018)
இந்த ஜாதியினராகவே இருந்தாலும் அவர்களுடைய ஆண்டு வருமானம் ரூ.எட்டு லட்சத்திற்கு மேல் இருந்தால் அவர்கள் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் பலன் பெற முடியாது. சில மாநிலங்களில் சில பிராமண சமூகங்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளன. உதாரணமாக தமிழ்நாட்டில் செளராஷ்டிரா பிராமணர்கள். கர்நாடகத்தில் கொங்கணி மொழி பேசும் தைவந்திய பிராமணர்கள்.
இது பாஜக தனது வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று கூறப்படுகிறதே?
அதுவும் தவறு. இந்த மசோதாவிற்கு எதிராக மக்களவையில் பதிவான வாக்குகள் மூன்று. மாநிலங்களவையில் பாஜகவிற்குப் பெரும்பான்மை இல்லை அங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு- கவனிக்க பாஜகவிற்கு அல்ல- இருந்த பலம் 96. மசோதா நிறைவேற குறைந்த பட்சம் 163 பேரின் ஆதரவு தேவை. 165 உறுப்பினர்களின், அதாவது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. எதிராகப் பதிவான வாக்குகள் ஏழு மட்டுமே. நாடாளுமன்றத்தில் இதற்கு ஆதரவாக காங்கிரஸ். சிபிஎம், சமாஜ்வாதி கட்சிகள் வாக்களித்தன. பாஜகவிற்குப் பலன் தரக்கூடிய நடவடிக்கைக்கு இந்தக் கட்சிகள் ஆதரவளிக்குமா?. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒரு முயற்சி நடந்தது. ஆனால் வழக்கம் போலக் காங்கிரஸ் சொதப்பியது. இது போன்ற இட ஒதுக்கீடு குறித்து லாலு பிரசாத் பேசி வந்திருக்கிறார்.
என்ன செய்ய வேண்டும்?
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு சாவகாசமாக முடிவெடுக்கட்டும். ஆனால் அந்தப் பிரிவினர் மத்திய அரசின் கல்வி நிலையங்களிலும் வேலைகளிலும் சேருவதைத் தடை செய்யாமல் வருமான, சொத்து சான்றிதழ்களை அளிக்க வேண்டும். அதை காங்கிரஸ், சிபிஎம், முஸ்லீம் கட்சிகள் உடபட அனைவரும் வற்புறுத்த வேண்டும்
1.7.2020