1
அன்புள்ள தமிழன்,
பொங்கல் வாழ்த்துக்கள்!
நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கலையும், நீர் சுரக்க வைக்கும் கரும்புத் துண்டங்களையும் நினைத்தாலே இனிக்கிறது.
ஆனாலும், வாழ்க்கை என்னவோ அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் போலத்தான் இருக்கிறது.
சவால் நிறைந்ததாய், சண்டைக்கு அழைப்பதாய், சறுக்கி விழுந்து காயம்பட்டுக் கொள்வதாய், ஆரத்தழுவி ஆளுமை கொள்ள முயற்சிக்கிறவனின் அடிவயிற்றில் குத்தி தூக்கி எறிவதாய், எப்போதோ ஒருமுறை, எவரோ ஒருவர், சரிகை உருமாலை சம்பாதித்துக் களிப்பதாய் –
வாழ்க்கை என்னவோ ஜல்லிக்கட்டைப் போலத்தான் இருக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, இங்கேயும்தான்.
அமெரிக்காவைப் பற்றி இரண்டு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் – அவரைப் பந்தல்.
ஆடிமாதம் ஊன்றிய அவரைக்கு அம்மா போடுகிற பந்தலைப் பார்த்திருக்கிறாயா? மொட்டை மாடியில் இருந்து பார்த்தால், பந்தலின் மேற்புறத்தில் செழுசெழுவென்று பசுமை அடர்ந்து மண்டி இருக்கும் : அரிவாளைத் திருப்பிப் பிடித்த மாதிரியான இளம் நீலப் பூக்களில் தேன் குடிக்கப் பட்டாம்பூச்சிகள் முட்டி மோதும் ; பட்டுத் துணியை வெட்டிச் செய்த மாதிரி மெத்து மெத்தென்றிருக்கும் பச்சை மரகதக் காய்களுக்கு சூரியக் கதிர்கள் முலாம் பூசும் ; பதினைந்து வயதுப் பையனுக்கு அரும்பிய மீசையைப் போல அந்தக் காய்களின் மேனியில் மெலிதாய் ஒரு மினுமினுப்புக் காணும்.
ஆனால், அந்தப் பந்தலின் கீழே சென்று நிமிர்ந்து பார்த்தால் –
உளுத்துப் போன கட்டைகள், என்றைக்கு இற்றுப் போய், இடுப்பொடிந்து விழுமோ என்று அச்சுறுத்துகிற கட்டமைப்பு, வெளிச்சம் கிடைக்காததால் வெம்பிப் போன இலைகள் ; சின்னச் சின்ன புழுக்கள், ஆங்காங்கே அசுவினிப் பூச்சித் திட்டுக்கள்.
அமெரிக்கா இப்படித்தான் இருக்கிறது. ஒரு புறம் பசுமையாய் ; உட்புறம் உளுத்துப் போனதாய்.
இது ஏதோ என்னுடைய – வேடிக்கை பார்க்க வந்த வெளிநாட்டுக் காரனுடைய – கருத்து அல்ல.
சில நாட்களுக்கு முன்பு பேராசிரியர் நாம்சாம்ஸ்கி, இங்கே பல்கலைக் கழகத்திற்கு வந்திருந்தார். அவரும் இதையேதான் சொன்னார்.நாம்சாம்ஸ்கி, எம்.ஐ.டி என்று அழைக்கப்படும் மாசேசூஸட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் பேராசிரியர். ஐம்பதிற்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியவர். நோபல் பரிசுக்கு நிகராகக் கருதப்படும் கியோத்தோ பரிசு வாங்கியவர். ரிலேட்டிவிட்டி தியரியைக் கண்டுபிடித்து பௌதிகத்தில் ஐன்ஸ்டீன் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியதைப் போல மொழியியலில் (Linguistics) திருப்பு முனையை ஏற்படுத்தியவர். சுருக்கமாகச் சொன்னால், அறிவுஜீவி ; அரசியல் விமர்சகர்.
சுமார் ஒரு மணி நேரம் அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார் : “அமெரிக்கா வெகுவேகமாக ஒரு மூன்றாம் உலக நாடு மாதிரி ஆகிக் கொண்டிருக்கிறது”.
மூன்றாம் உலகம் என்றால் என்ன என்று மூளையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம். சோவியத் யூனியன் சிதைந்துபோன பிறகு அந்த வார்த்தைக்கு அர்த்தம் எதுவும் இல்லை. முதலாளித்துவ நாடுகளை முதலாம் உலகம், சோஷலிச நாடுகளை இரண்டாம் உலகம், இரண்டும் இல்லாத நாடுகளை மூன்றாம் உலகம் என்று அறிவுஜீவிகள் சொல்வதுண்டு. ஆசியா, ஆப்பிரிக்கா எல்லாம் மூன்றாம் உலகம். இந்தியா மூன்றாம் உலகில் இருக்கிறது.
உன்னை மாதிரித்தான் நானும் கேட்டேன். “மூன்றாம் உலக நாடு மாதிரி என்றால் என்ன அர்த்தம்?”
அவர் சொன்னார். “துன்பக் கடல் நடுவே செல்வத் திட்டுக்கள்” (Islands of great wealth and privilege in the sea of misery”).
ஏதோ சிகப்புச் சட்டைக்காரர்கள் பார்வை மாதிரி இருக்கிறதோ? (எனக்கு பாரதியார் ஒரு இடத்தில் துன்பக் கேணி என்றொரு வார்த்தையைப் பயன் படுத்தியிருந்தது நினைவுக்கு வந்தது. பாரதியாரும் சிகப்புச் சட்டை ஆசாமி தானோ?)
சரி, சாம்ஸ்கி சொன்னதைச் சட்டை செய்ய வேண்டாம். அது ஏதோ அறிவுஜீவிகளின் பூச்சாண்டி என்று ஒதுக்கிவிடலாம். நிஜம் என்ன?
அமெரிக்காவை இன்று அச்சுறுத்துகிற பிரச்சினை வேலை இல்லாத் திண்டாட்டம். ஆம், அமெரிக்காவில் வேலை கிடைப்பது குதிரை கொம்பாக ஆகிவருகிறது. அமெரிக்காவின் முக்கியத் தொழில் நகரங்களில் ஒன்று டெட்ராய்ட். அங்கே போஸ்ட் ஆபீசில் ஆள் எடுப்பதாக அறிவிப்பு. 400 காலியிடங்களை நிரப்புவதாக உத்தேசம். அப்ளிகேஷன் மனுவை வாங்க எத்தனை பேர் வந்தார்கள் தெரியுமா? 20 ஆயிரம் பேர். 400 இடங்களுக்கு 20 ஆயிரம் பேர் போட்டி.போட்டி என்றால் அது சாதாரண வார்த்தை. அடிதடி.
இன்னொரு உதாரணம் பார்க்கிறாயா? இதே டெட்ராய்ட் நகரில், சூதாட்ட கிளப் துவங்க இருக்கிறார்கள். அதற்குக் காலை ஏழு மணிக்கே ‘க்யூ’ வில் ஆயிரம் பேர் வந்து நிற்கிறார்கள். ( சூதாட அல்ல. வேலைக்கு மனுபோட ) ஆனால் ஒரு பெரிய அபத்தம் என்னவென்றால், அந்த சூதாட்ட கிளப் துவக்கப்படுமா என்பதே நிச்சயமில்லை. ஏனெனில் அதை ஆரம்பிக்கக்கூடாது என்று அந்த ஊர் மேயர் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்.
“பி.ஏ. படித்தவன் பெஞ்சு துடைக்கிறான். எம்.ஏ. படித்தவன் காப்பி ஆத்தறான்” என்று பழைய காலத்து சினிமாப்பாட்டு ஒன்று உண்டு. அதை இங்கே நேரிலேயே பார்க்கலாம். பல்கலைக் கழகங்களில் படிக்கும்போது மாணவர்கள் பணத்திற்காக ஹோட்டல்களில் பணிபுரிவது என்பது பழைய நியதி. இப்போது படித்து முடித்து பட்டம் வாங்கிய பி.ஏ க்கள் ஹோட்டல்களில் பெட்டியைத் தூக்கிவரும் பெல்பாய்களாக பணிபுரிந்து வருகிறார்கள். ஜி.பி.ஏ.3.5 வாங்கியவர்கள் – இது கிடைப்பதற்கு 3 பாடங்களிலாவது 90 மார்க் வாங்க வேண்டும் – இந்த வேலை கிடைக்காமல் திணறுகிறார்கள். பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்று வருகிறவர்களில் 30 சதவீதம் பேருக்கு, 2005 வரை வேலை கிடைக்காது என்று பத்திரிகை சொல்கிறது.
ஸ்கல்லி விஷயத்தில் அது உண்மையாகவே ஆகிவிட்டது. ரண்டல்ப் ஸ்கல்லி, மாசேசூஸட்சில் வில்லியம்ஸ் கல்லூரியில் (அமெரிக்காவில் புகழ் பெற்ற கல்லூரிகளில் ஒன்று) வரலாற்றுப் பாடத்தில் 92 –ல் எம்.ஏ பட்டம் வாங்கினார். ஒரு வருடம் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. மறுபடியும் கல்லூரிக்கு வந்துவிட்டார். எதற்கு? பி.எச்.டி. படிக்க.
எனக்கு இந்தியாவில் இந்த மாதிரி பல பேரைத் தெரியும் இன்று நீ முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது. நீ முணுமுணுக்கிறாய், சாம்ஸ்கி வாய் விட்டுச் சொல்கிறார். அவ்வளவுதான்.
வரலாறு, தமிழ், லாஜிக் எல்லாம் படித்தால் வேலை கிடைப்பது கஷ்டம்தான் என்று சொல்லலாம். ஜான் க்ளாக், வர்ஜீனியாவில் அக்கௌண்டிங் கில் பட்டம் வாங்கினான். எங்கெல்லாமோ முட்டிப் பார்த்தான். வேலை கிடைக்க வில்லை. தவித்துப் போய், படிக்கும்போது வேலை செய்த ஹோட்டலிலேயே போய் வேலை கேட்டான். அவர்களும் கையை விரித்துவிட்டார்கள். அவர்கள் சொன்ன காரணம் : உன்னுடைய தகுதிகள் அதிகம். ( “ You are over qualified ” )
வேலை கிடைப்பது ஒருபுறம் கஷ்டமாகிக் கொண்டிருக்க, இன்னொருபுறம், இருப்பவர்கள் வேலை இழந்து கொண்டிருக்கிறார்கள். கோடாக், ஐ.பி.எம். ஜெனரல் மோட்டார்ஸ், மெக்டோனல் டக்ளஸ் போன்ற பெரிய பெரிய கம்பெனிகள் தினம் தினம் பலரை வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன. 1990-ல் வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சம். 1993- ல் அது ஆறு லட்சம்.
வீட்டுக்கு அனுப்புவதைத் தவிர்க்கவும், அதே நேரத்தில் செலவைக் குறைக்கவும், அமெரிக்காவின் மிகப்பெரிய விமானக் கம்பெனிகளில் ஒன்றான யுனைட்டட் ஏல்லைன்ஸ் ஒரு ‘ புரட்சிகரமான ’ திட்டத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறது. கம்பெனியின் முதலீட்டில் ஒரு பகுதியைத் தொழிலாளர் களுக்குக் கொடுக்க முன் வந்திருக்கிறது. அதற்குப் பதிலாக தொழிலாளர்கள் தங்கள் சம்பளத்தில் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். அதாவது தொழிலாளர்களே எஜமானர்கள். எஜமானர்களே தொழிலாளிகள். இதற்குப் பெயர் கம்யூனிசம் இல்லையோ? சோவியத் யூனியனில் சோஷலிசம் புதைக்கப்பட்டு விட்டது. அமெரிக்காவில் அது அரும்பத் தொடங்கியிருக்கிறதோ?
வேலை வாய்ப்பு குறைவதற்கு என்ன காரணம்? பொருளாதாரத்தில் தேக்கம் ( நவம்பர் 16, 1993 நிலவரப்படி அமெரிக்கா பட்டுள்ள கடன் 49 ஆயிரம் கோடி டாலர். அதாவது ஒவ்வொரு அமெரிக்கனின் தலையிலும் உள்ள சுமை 17 ஆயிரத்து 370 டாலர். பொறுமை இருந்தால் 31- ஆல் பெருக்கி ரூபாயாக மாற்றிக் கொள் ) மற்ற உலக நாடுகளுடன் போட்டி போட முடியாமை. அப்புறம் தொழில் நுட்பம்.
சில நிறுவனங்களில் வேலையில் 20 சதவீதத்தை, வேலையில் ஆட்களை மிச்சப்படுத்துவது எப்படி என்ற ஆராய்ச்சியில் செலவிட்டாக வேண்டும். அதாவது உன்னுடைய வேலையைப் போக்கிக் கொள்ள நீயே வழி கண்டாக வேண்டும்.
குரூரமாக இல்லை ?
இப்படி ஒரு நெருக்கடியில் தேசம் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, கிளிண்டன் நாஃப்டா – NAFTA – என்ற ஒரு சட்டத்தை வேறு நிறைவேற்றி இருக்கிறார். வட அமெரிக்க கண்டத்தில் மூன்று நாடுகள் இருக்கின்றன. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ. இந்த மூன்று நாடுகளுக்குமிடையே வர்த்தகம், பெரிய தொழில் தொடங்க எந்தவித கடடுப்பாடும் இருக்கக்கூடாது என்கிறது நாஃப்டா. கனடாவில் வந்து தொழில் துவங்கலாம். அமெரிக்காவில் இருப்பவர்கள் மெக்சிகோவில் போய் தொழிற்சாலை ஆரம்பிக்கலாம் இப்படி.
இந்த மூன்று நாடுகளில் மெக்சிகோ ஏழை தேசம். கூலி மலிவு. சுற்றுச்சூழல் அது இது என்று கூச்சல் போடுபவர்கள் அதிகம் இல்லை. வரிகள் குறைவு. அதனால் பல அமெரிக்கத் தொழில் அதிபர்கள் மெக்சிகோவிற்குத் தங்களது தொழிற்சாலைகளை எடுத்துச் சொன்றுவிடுவார்கள். அப்படிப் போகு மானால் வேலை வாய்ப்புகள் மெக்சிகோவிற்குப் போய்விடும் என்று அமெரிக்கா மத்தியதர வர்க்கம் பயப்படுகிறது.
ஐரோப்பா ஒன்றுபட்டு வருகின்றது. ஜப்பான் வலிமை அடைந்து வருகிறது. அதையெல்லாம் சமாளிக்க இந்த நாஃப்டா தேவை என்று கிளிண்டன் கோஷ்டி வாதிடுகிறது.
எப்படி இருந்தாலும், இதற்கு கிளிண்டனது ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு. கிளிண்டனுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தாலும், கட்சிக்குள் எதிர்ப்பு இருப்பதால், இது பாராளுமன்றத்தில் நிறை வேறாது, தோற்றுப்போகும் என்ற நிலை இருந்தது. ஆனால், கிளிண்டன் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் துணையுடன், ஆதரவு 234, எதிர்ப்பு என்ற ஓட்டு வாங்கி, ஜெயித்துவிட்டார் போனமாதம்.
காங்கிரசுடன் கூட்டு வைத்துக்கொள்ள கருணாநிதி முயற்சி செய்தார். ராணிப்பேட்டையில் அதற்கு ஒத்திகை பார்த்தார்கள் என்று கோபால்சாமி குற்றம் சாட்டுகிறார். கருவின் குற்றம் எனக் கவிதை பாடிய மனோகரன் மறுபடியும் தி.மு.க. வில் சேர்ந்துவிட்டார். அவர் கவிதைக்கு மறுப்புக் கவிதை எழுதிய மதுராந்தகம் ஆறுமுகம் வை.கோ. பக்கம் நிற்கிறார் ஜெயலலிதாவை எதிர்த்த பி.எச்.பாண்டியனும், மூப்பனாரை எதிர்த்த வலம்புரி ஜானும் அவர்களிடமே சரணடைந்துவிட்டார்கள். இந்த அரசியல்வாதிகளுக்கு ஆதாயமே பெரிதாய் போய் விட்டது. விவஸ்தை விடைபெற்றுக் கொண்டு விட்டது என்றெல்லாம் அங்கலாய்க்கிறோம். ஆனால் –
உலகம் எங்கும் அரசியல்வாதிகள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். அதனால் மக்களும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் !
மற்றவை பின்னர்.