”யார் வந்திருக்கிறார்கள் பாருங்கள்!”
கஸ்தூரிபாவின் குரல் கேட்டு எழுதிக் கொண்டிருந்த காந்தி தலை நிமிர்ந்தார். எதிரே அவரது மகன் ஹரிலால், மருமகள் குலாப் முக்காடை இழுத்து விட்டுக் கொண்டு காந்தியின் காலைத் தொட்டு வணங்கினாள். எல்லோரையும் போல காந்தி “எப்போது வந்தாய்?” என்று கேட்கவில்லை. எதற்காக வந்தாய் என்று கேட்டார்.
”இது என்ன கேள்வி? நம்மைப் பார்க்கத்தான் வந்திருக்கான். கல்யாணம் செய்து கொண்டு பொண்டாட்டியை அழைத்துக் கொண்டு நம்மைப் பார்க்க தென்னாப்ரிக்கா வரை வந்திருக்கிறான் ஆசிர்வாதம் வாங்க!”
காந்தி நிமிர்ந்து கஸ்தூரியைப் பார்த்தார். ’அவனுக்கு நீ வக்காலத்தா?’ என ஆழ ஊடுருவும் தீர்க்கமான பார்வை.
“இப்ப இவன் கல்யாணத்திற்கு என்ன அவசரம்? அப்படி என்ன வயதாகிவிட்டது அவனுக்கு?”
கஸ்தூரி புன்னகைத்தார். “மறந்து விட்டீர்களா? நம் கல்யாணத்தின் போது உங்களுக்கு என்ன வயது?”
காந்தி பதில் பேசவில்லை. அவர் மறக்கவில்லை. அவரால் என்றும் மறக்க முடியாத விஷயம் அது. கல்யாணத்தின் போது அவருக்கு வயது 13. கஸ்தூரிக்கும் அதே 13 வயதுதான். இன்னும் சொல்லப்போனால் கஸ்தூரி காந்தியை விடச் சில மாதங்கள் மூத்தவர். அவர்கள் இருவருக்கும் ஏழு வயதாக இருக்கும் போது நிச்சயம் ஆன கல்யாணம் அது.
அந்தக் கால குஜராத்தில் குழந்தைகளாக இருக்கும் போதே திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டுவிடும். காந்திக்கு அது போல இரண்டு முறை திருமணம் நிச்சயமாயிற்று. ஆனால் திருமணம் நடப்பதற்குள் அந்தக் குழந்தைகள் இறந்து போயின. மூன்றாவதாக சொந்தத்திலேயே ஒரு குழந்தையை நிச்சயம் செய்தார்கள். அவர்தான் கஸ்தூரிபா.
பதின்மூன்று வயது காந்தி எல்லா விஷயங்களிலும் குழந்தைதான். ஆனால் கணவன் என்ற நினைப்பு வரும் போது அதிகாரம் தலை தூக்கிவிடும். தன்னைக் கேட்காமல் மனைவி எங்கும் போகக்கூடாது என்று கட்டுப்பாடுகள் வித்தித்தார் கணவர் காந்தி. பதின்மூன்று வயது மனைவி கஸ்தூரி வெளியே சென்று விளையாட ஆசைப்படுவார். ஆனால் 13 வயதுக் கணவன் காந்தி பெரும்பாலும் ‘கூடாது’ என்று மறுத்துவிடுவார். ஆனால் மறுக்க மறுக்க கஸ்தூரி தான் விருப்பப்பட்ட இடத்திற்கு விருப்பப்பட்ட நேரத்தில் போய் வந்து கொண்டிருந்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே சண்டை. பல நாட்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருந்ததுண்டு.
முதல் கர்ப்பம் தரித்தபோது கஸ்தூரிக்கு வயது 15.அந்தக் குழந்தை பிறந்த மூன்று நாள்களுக்குள் இறந்துவிட்டது. அடுத்துப் பிறந்த குழந்தை ஹரிலால். அதனால் அது கடவுள் கொடுத்த வரம் எனக் கருதினார் கஸ்தூரி. தவமிருந்து பெற்ற பிள்ளை என்பதைப் போல தாயின் மனம் அந்தக் குழந்தை மீது கனிந்திருந்தது.
ஆனால் ஹரிலாலுக்கும் காந்திக்கும் இறுதிவரை ஒத்துப் போகவில்லை. ஏதோ ஒரு குற்ற உணர்வு காந்தியை உறுத்திக் கொண்டே இருந்தது. ”என் தந்தைக்கு ஒவ்வொரு நாள் இரவும் நான் கால் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கும் போது என் மனமெல்லாம் மனைவியின் படுக்கை அறையிலேயே சுற்றிக் கொண்டிருக்கும்.அதுவும் மதம், மருத்துவம், பகுத்தறிவு எல்லாம் கலவியை ஆட்சேபிக்கும் போது இப்படி என் மனம் திரியும்” என்றெழுதுகிறார் காந்தி. ஒரு நாள் இரவு மணி பத்துக்குமேல் பதினொன்றுக்குள் இருக்கும். அப்பா தூங்கி விட்டார் என்று நினைத்து காந்தி எழுந்து தன் படுக்கை அறைக்குப் போனார். மனைவியை எழுப்பினார். உறவு கலந்து எழுந்த நேரம் அறைக்கதவைத் தட்டி சேதி சொன்னார்கள்: அப்பா இறந்து விட்டார்.
அப்பாவின் கடைசி நிமிடத்தில் அவரோடு இருக்கமுடியாமல் போனதற்குக் காரணம் தன் செக்ஸ் ஆசைதான் என்ற குற்ற உணர்வு கடைசி வரை காந்திக்கு இருந்தது. “அப்பாவின் மரண காலத்தில், மிகவும் நெருக்கடியான கட்டத்தில், தேக இச்சையால் எனக்கு ஏற்பட்ட இந்தக் களங்கத்தை என்னால் ஒரு போதும் அழிக்கவே முடியவில்லை; மறக்கவும் முடியவில்லை’ இது தனது அறுபது வயதில் காந்தி எழுதியது. அந்த ’தேக இச்சை’யில் பிறந்த குழந்தை ஹரிலால்.
காந்தி என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க ஆவலாக இருந்தார், அந்தப் பிரமுகர். தென்னாப்பிரிக்காவின் பெரிய வியாபாரிகளில் அவரும் ஒருவர். தென்னாப்ரிக்காவிலிருந்து இரண்டு இந்திய இளைஞர்கள் இங்கிலாந்து சென்று பாரீஸ்டர் படிப்பு படிக்க நிதி உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும்படி காந்தியிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தார் அவர்.
”நமது இளைஞர்கள் இங்கிலாந்து போய் படிக்கத்தான் வேண்டுமா? என்றுதான் யோசிக்கிறேன்” என்றார் காந்தி
“ஏன்?”
‘அதன் காரணமாக அவர்களுக்கு இங்கிலாந்து மீதான மோகம் அதிகரிக்கலாமே தவிர, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வு ஏற்படாது”
“நீங்கள் அங்கேதானே போய் படித்தீர்கள்?”
காந்தி கடகடவென்று சிரித்தார். ”அதனால்தான் சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!”
“நம் இந்திய சமூகத்திற்கு வழக்காட இங்கே நல்ல வழக்கறிஞர்கள் தேவை”
“நமக்கு இங்கு இப்போது தேவை நிறவெறிக்கு எதிரான போராளிகள். வக்கீல்கள் அல்ல” என்றார் காந்தி.
வந்திருந்த வியாபாரி தயங்கினார். “இந்தியாவிலிருந்து வந்திருக்கும் உங்கள் மகன் இங்கிலாந்திற்குப் போய் படிக்க விரும்புகிறார் போலிருக்கிறது. இந்த் உதவியை நீங்கள் அதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். எனக்கு ஆட்சேபம் இல்லை” என்றார்.
காந்தியின் முகம் இறுகியது.” உங்கள் உதவிக்கு நன்றி.” என்றார் உறுதியான குரலில். ‘என் மகனை மேலே படிக்க வைக்கும் எண்ணம் ஏதும் இப்போதைக்கு இல்லை” என்றார் தொடர்ந்து. வந்தவர் எழுந்து கொண்டார்.
”நீங்கள் செய்வது உங்களுக்கே நன்றாக இருக்கிறதா?” கஸ்தூரியின் குரலில் கடுமை இருந்தது.
எ
ன்ன என்பது போல் பார்த்தார் காந்தி
“ஹரி மேலே படிக்க விரும்புகிறான். உங்களைப் போல இங்கிலாந்து சென்று படிக்க விரும்புகிறான். அதைப்பற்றிப் பேசத்தான் இங்கு வந்திருக்கிறான். ஆனால் நீங்கள் அவன் சொல்வதைக் காதிலேயே வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டீர்களாமே?”
“அவன் இதற்காகத்தான் வந்திருக்கிறானா? நான் அவன் என்னோடு தங்கி நம் பண்ணையில் வேலை செய்ய வந்திருக்கிறான் என்றல்லவா நினைத்தேன்?”
”அவன் இங்கே தங்குவதற்காக வரவில்லை. கல்லூரி போய் படித்துப் பட்டம் வாங்க வேண்டும் என்று நினைக்கிறான்?’
“எதற்காகப் பட்டம்?”
”படித்துப் பட்டம் பெற்றால்தானே வேலைக்குப் போக முடியும்?”
“பட்டமும் வேணாம். வேலையும் வேணாம்.” கஸ்தூரிக்கு அருகில் அமர்ந்திருந்த ஹரிலாலைப் பார்த்துச் சொன்னார் காந்தி. நம்ம கையால உழைத்துப் பிழைக்கணும். இந்தப் பண்ணையில இருக்கிற எல்லோரும் மற்றவர்களுக்கும் தங்களுக்கும் பிரயோசனமாக இருக்கிறார்கள்.நீயும் அப்படி இருக்கலாமே?”
ஹரிலால் ஒரு கணம் மெளனமாக இருந்தார். பின் “நான் மேலே படிக்க விரும்புகிறேன்” என்றார் உறுதியாக.
“நீ மேலே படிக்க என்னால செலவு செய்ய முடியாது. நான் ஒரு ஏழை!” என்றார் காந்தியும் உறுதியாக.
“நீங்களா ஏழை?. வெடித்தார் ஹரி. “நீ வேடதாரி. கற்பனையாக ஏதேதோ அர்த்தமில்லாத லட்சியங்களை வைத்துக் கொண்டு வாழ்கிறீர்கள். உங்கள் குழந்தைகளையும் அப்படி வாழ வேண்டும் என நிர்பந்திக்கிறீர்கள்”
காந்தி புன்னகைத்தார். இது போன்ற விமர்சனத்தைக் கேட்பது அவருக்கு இது முதல் முறை அல்ல. ஆனால் கஸ்தூரிதான் பதறினார்.
”அப்பாவை அப்படியெல்லாம் பேசாதே ஹரி. அவர் உன் நல்லதற்காகத்தான் சொல்கிறார்” என்றார்.
“ நீ எப்படிமா இந்த ஆளோட வாழ்ந்திட்டிருக்க? இப்ப சொல்லு.! இந்தியாவிற்கு வரியா? நான் கிளம்பிக்கிட்டு இருக்கேன். கூட்டிட்டுப் போறேன்!”
விழிகளின் விளிம்பில் கண்ணீர் திரள, கஸ்தூரி இடமும் வலமுமாகத் தலை அசைத்தார். “ மாட்டேன். இறுதி மூச்சு வரை இவரோடுதான். இவருக்கு முன்னாலே என் மூச்சுப் போய்விட வேண்டும். அது ஒன்றுதான் என் ஆசை”
ச
மையலறையில் ஏதோ வேலையாக இருந்தார் கஸ்தூரி. “ உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் காந்தி. “ம். சொல்லுங்கள்” என்றார் கஸ்தூரி வேலை மும்முரத்தில் நிமிர்ந்து பார்க்காமலேயே. “ நீ நான் கல்யாணம் செய்து கொண்ட மனைவி அல்ல!”
திடுக்கிட்டார் கஸ்தூரி. “ என்ன?” என்றார்.
“‘இந்த நாட்டில் வாழும் கிறிஸ்துவர்களைப் போல, நாம் அரசு அலுவலகத்திற்குச் சென்று பதிவுத் திருமணம் செய்து கொள்ளவில்லை. பதிவு செய்து கொள்ளாத திருமணங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல. ஆதலால் நீ முறைப்படித் திருமணம் செய்து கொண்ட மனைவி அல்ல என்று ஜெனரல் ஸ்மட்ஸ் சொல்கிறார் ” என்று கடகடவென்று சிரித்தார் காந்தி.
“அவர் ஏதோ உளறுகிறார். நீங்கள் கிடந்து சிரிக்கிறீர்களாக்கும்?”
“பின்னே என்ன செய்ய வேண்டும்?”
“எதற்கெல்லாமோ போராட்டம் நடத்துகிற நீங்கள் இதற்கு ஒரு போராட்டம் நடத்த வேண்டும். நீங்கள் நடத்தவில்லை என்றால் நான் நடத்துவேன்”
“போராடப் போகிறாயா?போராடினால் என்ன செய்வார்கள் தெரியுமா?”
“ அது கூடவா தெரியாது, சிறைக்கு அனுப்புவார்கள்”
” உன்னால் சிறைவாசம் அனுபவிக்க முடியும் என்றா நினைக்கிறாய்?”
“ஏன் முடியாது? நான் உங்கள் மனைவி!”
“சிறையில் நீ விரும்பும் உணவு கிடைக்காது”
“பழங்கள் கிடைக்கும் இல்லையா? அதைச் சாப்பிடுவேன்”
“அதுவும் கிடைக்கவில்லை என்றால்?”
“அதுவும் கிடைக்கவில்லை என்றால், இருக்கவே இருக்கிறது உங்கள் வழி”
“அது என்ன என் வழி?”
“உண்ணாவிரதம்!”
இப்போது கஸ்தூரி விழுந்து விழுந்து சிரித்தார். அந்தப் போராட்டத்தில் இரண்டு பேரும் சிறை சென்றார்கள். விடுதலையானபோது கஸ்தூரிபாவிற்கு ஒரு பரிசு கிடைத்திருந்தது. அது ‘பிராங்க்கைடீஸ்’ என்ற சுவாசக் குழாய் நோய்.
க
டுஞ் சினத்தோடு கிளம்பிப்போன ஹரிலால் காந்தி என்னவெல்லாம் செய்தாரோ அதற்கு நேர் மாறாக நடந்து கொண்டார். அந்நியத் துணிகளை வாங்கி விற்றார். மதுப்பழக்கத்தில் வீழ்ந்தார். புலால் உணவை வழக்கமாக்கிக் கொண்டார்.மதம் மாறினார். அப்துல்லா என்ற புனை பெயரில் காந்தியைச் சாடிப் பத்திரிகைகளில் கடிதங்கள் எழுதினார். காந்தியைப் பழிவாங்குவதாக நினைத்தாரோ என்னவோ?
பண நெருக்கடியில் தத்தளித்தபோது அம்மா கஸ்தூரிக்கு கடிதம் எழுதினார். கடிதத்தைப் படித்த கஸ்தூரியின் மனம் கசிந்தது. “பாவம்டா!” என்றார் தனது மற்றொரு மகனான மணிலாலிடம். மணிலால் அப்போது காந்தி தென்னாப்ரிக்காவில் நடத்தி வந்த ஆசிரமத்தின் கணக்கு வழக்குகளை கவனித்து வந்தார். அப்பாவிற்குத் தெரியாமல் அண்ணனுக்குப் பணம் அனுப்பி வைத்தார். விஷயம் தெரிய வந்தபோது காந்தி மணிலாலுக்குக் கொடுத்த தண்டனை: நாடுகடத்தல்! மணிலாலை சென்னையில் ஜி.ஏ.நடேசனிடம் அனுப்பி வைத்தார். “ அவனை கண்காணித்து வாருங்கள். பணம் கொடுக்காதீர்கள். அவனுடைய துணியை அவனே துவைத்துக் கொள்ள வேண்டும். அவனுடைய உணவை அவனே சமைத்துக் கொள்ளவேண்டும்” என்ற கடிதத்தோடு.
கடுமையான அப்பாவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போகும் போதெல்லாம் மகன்கள் அம்மாவிடம் ஓடினார்கள். கணவனையும் விட்டுக் கொடுக்க முடியாமல், மகன்களையும் கைவிட்டுவிடமுடியாமல் வாழ்நாள் முழுக்க உணர்ச்சிகளின் நெருக்கடியில் வாழ்ந்தார் கஸ்தூரி. இன்னமும் இந்தியப் பெண்களின் சரித்திரம் இதுதானே?
ம
ருத்துவரின் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் மணிலால். ”எப்படி இருக்காங்க டாக்டர்?”. டாக்டர் உதட்டைப் பிதுக்கினார்.
“ரொம்ப பலகீனமா இருக்காங்க. இரண்டு ஹார்ட் அட்டாக். ரொம்ப நாளாகவே பிரான்ங்கைடீஸ் இருந்திருக்கு. தொடர்ந்து உடலை அலட்சியப்படுத்திக் கொண்டே வந்திருக்கிறார்கள்…”
பக்கத்தில் இருந்து பார்த்ததுபோல் டாக்டர் சொல்கிறார். ஆனால் அவர் சொல்வது அனைத்தும் உண்மை. தென்னாப்ரிக்காவில் ஒருமுறை அதிக ரத்தப் போக்கால் அவதிப்பட்டபோது, சாப்பாட்டில் உப்பையும் பருப்பையும் விட்டு விடும்படி சொன்னார். “உப்பும் பருப்பும் இல்லாமல் எதைச் சாப்பிடுவது? எப்படிச் சாப்பிடுவது?” என்றார் கஸ்தூரி. ”நீ மட்டேன்னு சொன்னா நானும் இனி உப்பும் பருப்பும் சாப்பிடுவதை விட்டுவிடுகிறேன் என்றார் காந்தி.அன்றிலிருந்து உப்பையும் பருப்பையும் விட்டுவிட்டார் கஸ்தூரி. மாமிசம் சாப்பிடமாட்டார், முட்டை சாப்பிட மாட்டார், பருப்பும் சாப்பிடமாட்டார் என்றால் உடம்பிற்குப் எங்கிருந்து புரோட்டீன் கிடைக்கும்? புரோட்டீன் இல்லை என்றால் எதிர்ப்புச் சக்தி எப்படிக் கிடைக்கும்?
“ஒரே ஒரு வழி இருக்கிறது, முயற்சித்துப் பார்க்கலாம்” என்றார் டாக்டர்.
“என்ன?”
“பென்சிலின் என்று ஒரு ஆண்டிபயாடிக் இருக்கிறது. நாலுமணி நேரத்திற்கு ஒருமுறை ஊசி மூலம் ஏற்றினால் பலன் கிடைக்கலாம்”
மணிலால் காந்தியிடம் வந்தார். “அப்பா, டாக்டர்…”
“சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். அவள் இத்தனை காலம் நிறைய கஷ்டப்பட்டுவிட்டாள். என்னாலும் உன்னாலும். இன்னும் ஏன் அவளைக் கஷ்டப்படுத்தவிரும்புகிறாய்?”
“இல்லை. பென்சிலின் போட்டால் ஒரு வேளை பிழைச்சுக்கலாம்னு டாக்டர் சொல்கிறார்”
“ இனிமேல் அவளைக் காப்பாற்ற முடியாது. நீ என்னதான் அற்புத மருந்தைக் கொண்டு வந்தாலும்..” காந்தியின் குரல் உடைந்தது. “விட்டுடு அவளை”
சில மணி நேரங்களில் கஸ்தூரிபா மூச்சு விடுவதை நிறுத்திக் கொண்டார். காந்தியின் முன்னாலேயே. அவர் கைகளில் சரிந்தபடியே.
கஸ்தூரியின் கடைசி விருப்பமான, தனது கையால் நெய்த புடவையை அவரது உடல் மீது விசிறிப் போர்த்திய காந்தி குலுங்கிக் குலுங்கி அழுதார்.
க
ஸ்தூரி கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் காந்தியோடு வாழ்ந்தார். சோதனை நிறைந்த 62 ஆண்டுகள்.சத்திய சோதனை. லட்சியங்களும், பிடிவாதங்களும் நிறைந்த கணவன். திடீர் திடீர் என்று அவர் எடுத்த கடுமையான முடிவுகள். (”இனி பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பது என்று முடிவு செய்துவிட்டேன். இனி நமக்குள் தாம்பத்திய உறவு கிடையாது”) ஒப்பற்ற தலைவனின் மனைவி. ஆனால் கக்கூஸ் கழுவவும் தயாராக இருக்க வேண்டும். கணவனின் லட்சியங்களுக்கும் குழந்தைகளின் ஆசைகளுக்குமிடையே அவ்வப்போது எழும் மோதல்களின் சுமைதாங்கி. குடும்பம் என்னும் ஆலமரத்தின் வேர். யாரும் அறியாமல் மண்ணுள் புதையுண்டு கிடக்கும் வேர். வேர்கள் இல்லாமல் விருட்சங்கள் இல்லை
ஆனால் நம் அம்மாக்களின் கதைகளை எப்போதேனும் எண்ணிப் பார்த்திருக்கிறோமா? பூக்களையும் கனிகளையும் போற்றுகிற தேசத்தில் வேர்களின் வரலாற்றை நினைப்பவர்கள் யார்?