இரண்டு வாரங்களாக ஒரு கேள்வி மனதைக் குடைந்து கொண்டிருக்கிறது.இந்த நாட்டில் நமக்குக் கிடைக்கிற நம்பிக்கைகள் எல்லாம் வந்து மறைகிற வானவில்தானா? நெருங்கிப் போனால் விலகிப் போகும் கானல்நீரா? இந்த தேசத்து இளைஞர்களின் மகிழ்ச்சிகள் எல்லாம் இடைக்கால இளைப்பாறல்கள்தாமா?
இந்தக் கேள்விகளுக்குப் பின்னுள்ளவை வெறும் ஆதங்கம் அல்ல. ஆழமான வேதனை. நம் கண்ணெதிரேயே நம் நம்பிக்கைகள் முறிவதை விட நரக வேதனை வேறொன்றுண்டா?
நீங்கள் தமிழ்நாடு தேர்வாணையத் தலைவராகப் பொறுப்பேற்றபோது, மண்ணைக் கீறித் தலையைத் தூக்குகிற விதையைப் போல அடி மனதில் ஓர் நம்பிக்கைக் கீற்று முளைத்தெழுந்தது. நீங்கள் ஓர் நேர்மையான காவல்துறை அதிகாரி என்பதை நாடறியும். நேர்மையானவர் மட்டுமல்ல, திறமையானவரும் கூட. நேர்மையும் திறமையும் கை கோர்த்துக் கொள்கிறவர்கள் கையில் அதிகாரங்கள் வந்தமர்கிற அதியசங்கள் அபூர்வமாகி வரும் நாட்களில், நீங்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற இடத்தில் வந்தமர்ந்தது ஓர் ஆறுதலைத் தந்தது. தேர்வுகளை எதிர் கொண்டு அவற்றில் தேர்ச்சி கண்டால் அரசு வேலை நிச்சியம் என்ற எழுட்சி இளைஞர்களிடையே எழுந்ததை நானறிவேன்
நீங்கள் நியமிக்கப்பட்ட காலத்தில் நிலவிய சூழலை நினைத்துப் பார்க்கிறேன். தேர்வு மதிப்பெண்களை மாற்றுவதற்கு லஞ்சம், நேர்காணல் பட்டியலில் இடம்பெற லஞ்சம், பணிநியமன உத்தரவு பெற லஞ்சம் எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் லஞ்சத்தின் தலைமைச் செயலகமாகத் திகழ்ந்து கொண்டிருந்தது. ஆணையத்தின் உறுப்பினர்களது வீடுகளில் நடந்த திடீர் சோதனைகளும் அப்போது அகப்பட்ட ஆவணங்களும், அந்தப் புகார்கள் எல்லாம் அப்படியொன்றும் கற்பனை அல்ல எனக் காட்டின.
அந்த நேரத்தில் நீங்கள் வந்து சேர்ந்தீர்கள். வெளிப்படையாக வேலைகள் நடக்கும் என்று உறுதி தந்தீர்கள். அதற்கு உறு துணையாகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தலைப்பட்டீர்கள். கணினி மூலம் விண்ணப்பம் என்பதை அறிமுகப்படுத்தினீர்கள் .எந்தத் தேர்வு எப்போது, எப்போது முடிவு வெளியாகும் என்பதையெல்லாம் உங்கள் இணையதளம் ஒளிவு மறைவின்றிச் சொல்லத் துவங்கியது. தேர்வு முடிந்த பிறகு விடைக்களைக் கூட வெளியிட்டீர்கள். ஆனால்-
உங்கள் முதுகுக்குப் பின்னாலேயே ஒரு கும்பல், கேள்வித்தாள்களைக் கசியச் செய்து அத்தனையையும் கேலிக் கூத்தாக்கிவிட்டது. அரசு வேலை என்ற கனவு கைக்கெட்டும் என்ற நம்பிக்கையில், திறமை என்பதையே துணையாகக் கொண்டு ஓய்வின்றி உழைத்து மாதக்கணக்காக தயார் செய்த இளைஞர்கள் எண்ணத்தில் மண் விழுந்து விட்டதே! உங்கள் நேர்மையும் திறமையும் அவர்களது கனவுகளைக் காப்பாற்றவில்லையே? அத்தனை உழைப்பும் விழலுக்கு இறைத்த நீராய் வீணாய்ப் போயிற்றே!
என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை இளைய சமுதாயம் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காவல்துறையில் நீங்கள் பெற்ற பயிற்சியையும் அனுபவத்தையும் கொண்டு கறுப்பு ஆடுகளை நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள். கடினமான காரியம் என்றாலும் கூட அதைச் செய்து விடுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. காட்டுக்குள் ஒளிந்து கொண்டிருந்த வீரப்பனையே கண்டுபிடித்த குழுவில் இருந்த உங்களால் இந்த சைபர் வெளியில் சுற்றிக் கொண்டிருப்பவர்களைக் கண்டுபிடிக்க முடியும். ஆயிரக்கணக்கான இளைஞர்களை அல்லலுறச் செய்த அவர்களுக்குத் தக்க தண்டனையையும் கூட உங்களால் வாங்கித் தந்துவிட முடியும்.
ஆனால் அதுமட்டுமல்ல நாங்கள் எதிர்பார்ப்பது. யாரோ ஒரு சிலர், தவறுக்கேயானாலும், தண்டனை அடைவதில் எங்களுக்கு என்ன மகிழ்ச்சி?
இனி இது போன்ற சம்பவங்கள் நிகழாதிருக்க என்ன செய்யப் போகிறீர்கள் என்பதுதான் எங்கள் கேள்வி?படகில் விழுந்த ஓட்டையை எப்படிப் பழுது பார்க்கப் போகிறீர்கள் ? இடறி விழாமல் இனி வரும் தேர்வுகளை எப்படி நடத்தப் போகிறீர்கள்?
விடை சொல்ல வேண்டாம். விளக்கங்கள் தர வேண்டாம். செய்து காட்டுங்கள் போதும்.
விவரிக்க முடியாத வேதனையில்,
இளந்தமிழன்