காற்று சுகமாகத்தானிருந்தது.ஆனால் காலை வீசி நடக்க முடியாமல் எண்ணங்கள் இடறச் செய்தன.தஞ்சாவூரில் அடி வாங்கிய அந்த புத்தத் துறவி நெஞ்சில் வந்து போய்க் கொண்டிருந்தார்.
அடிவாங்கிய நிமிடம் அவர் மனம் என்ன நினைத்திருக்கும்? புத்தரைப் போல நினைத்திருப்பாரா? பித்தன் ஒருவன் ஒருநாள் புத்தர் மீது துப்பிவிட்டான். பித்தன் என்றால் ஆடையைக் கிழித்துக் கொண்டு அலைகிற பைத்தியம் அல்ல. வெறுப்பு வருகிற போது,வெறி கொள்கிற மனம் எல்லாம் தன் நிலையைத் தவற விட்ட பைத்தியங்கள்தானே? .ஏதோ ஒரு தருணத்தில், என்றேனும் ஓர் நாள், எதன் மீதாவது, வெறுப்பும் சினமும் கொள்ளாத மனமும் வாழ்க்கையும் வாய்த்துவிட்டதா நமக்கெல்லாம்? வெறுப்பை வென்றவர், சினத்தை ஜெயித்தவர் இங்கு யார்?
புத்தர் மீது வெறுப்புக் கொண்ட ஒருவன் அவர் முகத்தில்உமிழ்ந்து விட்டான்.புத்தர் புன்னகைத்தார்.,”வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா நண்பா?” என்றார். அருகில் இருந்த அவரது சீடருக்கு கோபம் குமிழியிட்டுப் பொங்கியது. ”அவனுக்கு நான் பதிலடி கொடுக்கிறேன்,”என்று கோபத்தில் கொதித்தார் ஆனந்தர் என்ற அந்தச் சீடர். புத்தர்சிரித்தார். ஆறுதலாக அவர் கையைப் பற்றிக் கொண்டு சொன்னார்.”ஆனந்தா, இவருடைய கோபமான முகத்தைப்பார்.அவர் உடல்நடுங்குகிறது. அவர் தன கோபத்தினால் பைத்தியமாகநிற்கிறார்.இதைக் காட்டிலும் கொடிய தண்டனை வேறு யார் அவருக்குக் கொடுக்கமுடியும்?எனக்கு என்ன நேர்ந்து விட்டது?.நீ கோபப்படாதே.சினம் என்னும் நோய் உன்னைத் தொற்றிக் கொண்டால் அவருக்குநேர்ந்த துன்பங்கள் அனைத்தும் உனக்கும் நேரும்.உன்னை நீயேஏன் தண்டித்துக்கொள்ள வேண்டும்?இவர் மீது கோபப்படாதே.மாறாக இரக்கப்படு.”
இந்தத் துறவியும் இப்படி நினைத்திருப்பாரா? துப்பப்பட்ட எச்சிலைத் துடைத்தெறிந்துவிட்டு நடக்கிற பக்குவம் இந்த பிக்குவிற்கும் ஏற்பட்டிருக்குமா? இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். காந்தி தேசத்தில் பிறந்த எல்லாருமா காந்தி?
அவரை அடித்துத் துரத்த விரட்டி வந்தவர்களின் எண்ணம் எதுவாக இருக்கும்? அகப்பட்டுக் கொண்டாயா எனக் கொக்கரித்துக் குதூகலித்திருக்குமா அவர்கள் மனது? அன்று விதைத்ததை இன்று அறுக்கிறீர்கள் என்று நியாயம் பேசியிருக்குமா நெஞ்சு? இந்த அடி உனக்கல்ல. உன் ஊருக்கு. உன் நாட்டிற்கு. இதற்குள் இருப்பது சினம் அல்ல,செய்தி. வாங்கிய அடிகள் எல்லாம் வட்டியும் முதலுமாக வாய்ப்புக் கிடைக்கும் போது திருப்பிக் கொடுக்கப்படும் என்ற வன்மமா?
கொசுவைப் போல கேள்விகள் மொய்த்தன. அடித்துத் துரத்தவும் முடியவில்லை. அவற்றின் ரீங்காரத்தை ரசித்துத் தொலைக்கவும் முடியவில்லை.
இரண்டு நாள் போனது.எதேச்சையாக என் வீட்டில் கண்ணாடிப் பேழைக்குள் தக்கைகளைக் கொண்டு கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் கண்ணில் பட்டது. கல் கொண்டு ராஜராஜனால் அன்றைக்குக் கவிதை செய்ய முடிந்தது. நமக்கு முடிந்ததெல்லாம் தக்கைகளைக் கொண்டு நகல் செய்வதுதான்.
பெரிய கோயில் பிரகாரத்தில் நடந்த இந்தப் பூசலைப் போர் பல கண்ட அந்தப் பேரரசன் எப்படிப் பார்த்திருப்பான்? எளியவர்களை விரட்டுகிற இன்றைய ’வீரத்’ தமிழர்களை எண்ணி விலா நோகச் சிரித்திருப்பானோ? (புத்த) விகாரை கட்ட வேண்டும் என்று வேண்டி வந்த சுமத்ரா மன்னனுக்கு ஆனைமங்கலம் என்ற கிராமத்தையே சும்மா கொடுத்து, சூளாமணியும் கட்டிக் கொடுத்த காட்சி அவன் கருத்தில் வந்து போயிருக்குமோ? கடல் கடந்து படை நடத்தி ஸ்ரீவிஜயத்தை வென்ற பிறகு, அதைத் தன் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்ளாமல், அடிமைப்பட்ட அரசனையே அழைத்து இந்தா, நீயே ஆண்டுகொள் எனக் கொடுத்து வந்த பெருந்தன்மை நெஞ்சின் நிழலிட்டிருக்குமோ?
சும்மா இரு எனச் சோழனை அதட்டினேன். கண்ணைச் சிமிட்டிக் கொண்டு அவன் காலக் கோட்டிற்குள் காணாமல் போனான்.அவன் போன இடத்திற்கு அவ்வை வந்து சேர்ந்தாள். என்ன தோழி இந்த நேரம் என்றேன். அவள் எனக்குத் தோழி பாட்டியல்ல. என் கேள்வியைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்,நித்தம் நடையும் நடைப்பழக்கம் என முணுமுணுத்துக் கொண்டு நடந்தவள் சற்றுத் தொலைவு சென்று சத்தமாக, நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்என்று கத்தி விட்டுப் போனாள்.
வீரத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிற மன அரங்கில் இவள் என்ன நட்பு தயை கொடை எனப் பிறவிக் குணத்தைப் பற்றிப் பிதற்றிவிட்டுப் போகிறாள் என எழுந்த போது வள்ளுவர் என் தோளைத் தட்டினார். எது வீரம் என்பதா உன் கேள்வி? என்றார். காட்டிலே பயந்து ஓடுகிற முயலைக் கொல்லுவதுஅல்லவீரம். பலமுள்ளயானையைத் தாக்க முயற்சித்து அது தப்பிப் போனாலும்கூட அந்த முயற்சி இருக்கிறதே அதுதான் வீரம் என்றார். விளக்கமாகச் சொல்லுங்கள் என்று வேண்டியபோது, 772வது குறளை எடுத்துப்பார். விளக்கம் எதற்கு அதான் ஆளுக்கு ஆள் உரை எழுதித் திறம் காண்பித்திருக்கிறார்களே எனச் சொல்லிப் புறப்பட்டார். அவருக்கு மயிலாப்பூரிலிருந்து நுங்கம்பாக்கம் போகிற அவசரம் போலும்.
எனக்குத்தெளிந்தாற்போல்இருந்தது தஞ்சை சம்பவம் நெஞ்சில் சேர்த்த கனமெல்லாம் பஞ்சாக மாறியதைப் போல் இதமாகஇருந்தது. இலக்கியவாதிகளோடு அரசியல் பேசினால் கிடைக்கும் இன்பமே இதுதான் என்றெண்ணி எழுந்துகொண்டேன்.
நூலில் இருந்து பஞ்சா?என இன்னொரு கேள்வி எழுந்தது. சீ சும்மா இரு என மனதை அடக்கிவிட்டு, புத்தகங்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் புறப்பட்டேன்.
புதிய தலைமுறை மார்ச் 28 2013