இரவு இல்லை. ஆனால் இருள் கவிந்து கொண்டிருக்கிறது. வானம் இருண்டு கொண்டு வருகிறது. மழை வரப் போகிறது சீறிக் கொண்டு வீசுகிறது காற்று அந்த நேரத்தில் நீங்கள் நகரச் சாலையொன்றில் கார் ஓட்டிக் கொண்டு வருகிறீர்கள். சிறிய கார். உங்களைத் தவிர இன்னொருவர் மட்டும்தான் பயணிக்கலாம்
பஸ்ஸ்டாண்டில் மூன்று பேர் நிற்கிறார்கள். இப்போதோ அப்போதோ என இழுத்துப் பறித்துக் கொண்டிருக்கும் ஓர் மூதாட்டி. உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்த்தால் பிழைத்துக் கொள்வார்.இன்னொருவர் உங்கள் நண்பர். ஒரு முறை உங்களது உயிரைக் காப்பாற்றியவர். மூன்றாவது நபர் உங்கள் காதலி.
நீங்கள் யாருக்கு இடம் கொடுப்பீர்கள்?
இனி இருந்து என்ன செய்யப் போகிறாள்,செத்தால் சாகட்டும் என்று கிழவியை அங்கேயே விட்டுவிட்டு காதலியை ஏற்றிக் கொள்வீர்களா? உயிர் காத்த நண்பருக்கு நன்றிக் கடன் செலுத்தும் நேரம் இது எனக் காதலியை விட்டுவிட்டு அவரை ஏற்றிக் கொள்வீர்களா? அல்லது இக்கட்டான இந்தத் தருணத்தில் காதலிக்கு உதவவில்லை என்றால் அவள் முகத்திலேயே இனி விழிக்க முடியாமல் போய்விடும் என்பதால் அவளை ஏற்றிக் கொள்வீர்களா? அல்லது யாரையுமே கண்டு கொள்ளாமல் காரைச் செலுத்திக் கொண்டு போய்விடுவீர்களா?
உங்களது இயல்பை சோதிக்க சில நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்வி இது.கிடைத்த பதில்களிலேயே கெட்டிக்காரத்தனமான பதில்: நண்பனிடம் கார்ச் சாவியைக் கொடுத்து கிழவியை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சேர்க்கும்படி சொல்லிவிட்டு காதலியோடு கொஞ்சிக் கொண்டிருந்துவிட்டு பஸ் வந்ததும் அவளோடு ஏறிப் போவேன். இது கெட்டிக்காரத்தனமான பதில். ஆனால் வேலை தேடித் தந்த பதில் இதுவல்ல. நண்பனின் உதவியோடு கிழவியைக் காரில் ஏற்றுவேன். அதைக் காணும் காதலி, மனிதாபிமானமும், அவசரத்திற்கு உதவுகிற மனமும் கொண்டவன் நான் என்பதை அறிந்து கொள்வாளாதலால் அவளுக்கு என் மீது நன்மதிப்பும் அன்பும் பெருகும். கிழவியைக் காப்பாற்றுவேன் என்பதுதான் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவு
வேலை செய்ய கெட்டிக்காரத்தனம் வேண்டும். ஆனால் எல்லா வேலைகளையும் அறிவினால் மாத்திரம் செய்துவிட முடியாது. உணர்ச்சிகளைச் சரியாகக் கையாளுவதன் மூலம் அறிவினால் செய்ய முடியாததைக் கூடச் செய்துவிட முடியும் என்பதற்கு உதாரணமாகச் சொல்லப்படுவது இந்தக் கதை.
மொழி என்பது அறிவு சார்ந்தது மட்டும் அல்ல. உணர்வு சார்ந்ததும் கூட. எழுத்து, சொல், அதன் பொருள், இலக்கணம், இவை ஏதும் தெரியாத வயதிலேயே நாம் மொழிகளின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தத் தொடங்கிவிடுகிறோம். வளர்ந்த பிறகும் கூட, தமிழின் தொன்மை, இலக்கியச் செறிவு, இலக்கணச் சிறப்பு இவை தெரியாவிட்டாலும் பலர் தமிழில்தான் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம் மொழி அறிவல்ல, மொழி உணர்வு.
ஒருவரது தாய்மொழி என்ன என்று அறிந்து கொள்ள வேண்டுமானால் அவருக்கு ஓங்கி ஒரு அறை கொடுத்தால் போதும். அவர்கள் தங்கள் தாய்மொழியில்தான் அலறுவார் என்கிறார்கள். அதற்குக் காரணம் தாய் மொழி தரும் பாதுகாப்பு உணர்வு என்கிறார்கள் உளவியலாளர்கள்
பன்முகச் சூழலில் அது நமக்கு அடையாளமாகவும் ஆகிறது. சென்னைக்கு வந்த புதிதில் ஒரு முறை காய்கறி வாங்கப் போனேன். வெள்ளைப் பூசணியைப் பார்த்து “தடியங்காய் விலை எப்படி?” என்றேன். கடைக்காரர் என்னையே உற்றுப் பார்த்தார். “கீத்துப் போட்டுக் கொடுப்பீர்களா?” என்றேன். அவர் பதிலேதும் சொல்லாமல் “சாருக்கு திருநெல்வேலிப் பக்கமா?” என்றார். என்னை அவருக்கு என் மொழி அறிமுகப்படுத்திவிட்டது. சென்னைவாசிகள் சாம்பல் பூசணியை பூசணிக்காய் என்பார்கள். அவர்கள் கீற்றுப் போடுவதில்லை. துண்டுதான்.
தாயிடமிருந்து வருவது, அடையாளம் தருவது, பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவது என்பதால் மொழி விஷயத்தை உணர்வு பூர்வமாகத்தான் கையாள வேண்டும் கெட்டிக்காரத்தனமாக அல்ல
ஹிந்தி தின விழாவில் உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா ஹிந்தியின் முக்கியத்துவம் குறித்துப் பேசியது ஒரு சடங்கு. சபை நாகரீகம்.யார் அமைச்சராக இருந்தாலும் ஹிந்தியை முக்கியத்துவப்படுத்தி பேசியிருப்பார்கள். முன்பு ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போதும் பேசியிருக்கிறார்.
ஆனல் அதில் என்னை அதிர்ச்சி அடையச் செய்த சில வாக்கியங்கள் இருந்தன, “நாடு முழுவதும் ஒரு பொதுவான மொழி இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.அந்த மொழி இந்தியாவின் அடையாளமாக உலக அரங்கில் இருக்கும்.”
ஹிந்தி மத்திய அரசின் அலுவல் மொழிகளில் ஒன்று. அங்கு கூட அதுமட்டுமே அலுவல் மொழி அல்ல. இந்தியாவின் தேசிய மொழி என்று எதையும் அரசமைப்புச் சட்டம் வரையறுக்கவில்லை 2010ஆம் ஆண்டு அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முகோபத்தியாய தலைமையிலான அமர்வு, ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல, அலுவல் மொழிகளில் ஒன்று என்று தெளிவாகக் கூறியிருக்கிறது அப்படியிருக்க ஹிந்தி மட்டும் எப்படி உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இருக்க முடியும்? பன்முகத் தன்மை கொண்ட நாட்டை எப்படி ஒரு மொழி மாத்திரம் பிரதிநித்துவப்படுத்த முடியும்?
இந்தியாவின் சிறப்பு என்பதே பன்முகத்தன்மைதான். எத்தனை சிந்தனை மரபுகள், எத்தனை மதங்கள், ஒரு மதத்திற்குள்ளேயே எத்தனைவிதமான வழிபாட்டு முறைகள், எத்தனை வகைக் கலைகள், எத்தனை வகை இலக்கியங்கள், எத்தனை வகை இசைகள், எத்தனை வகை உடைகள், (எட்டு முழ வேஷ்டியே எத்தனை விதங்களில் அணியப்படுகிறது!) எத்தனை வகை நில அமைப்புக்கள்! (மழை கொட்டும் சிரபுஞ்சியும் இங்குதான், வறண்ட தார் பாலைவனமும் இங்குதான். பனிமூடிய இமயமும் இங்குதான், அலைபுரளும் குமரியும் இங்குதான்)
உலகில் பல நாடுகளுக்கு வாய்க்காத பெருமை நமக்கு வாய்த்துள்ளது அது நம் பன்முகத்தன்மை.எல்லாத் தனித் தனி அடையாளங்களும் உருகி அழிந்து போகும் உலைக்களமாக (Melting Pot) இல்லாமல் அவை சிறப்புற்றுத் துலங்கும் வண்ணக்கோலமாக (Mosaic) ஆக இருப்பதுதான் பெருமைக்குரியது
வட இந்தியர்களில் ஒரு பகுதியினர் ஆங்கிலத்தை அன்னிய மொழி என்ற நோக்கில், அது நம்மை அடிமைப்படுத்தியவர்கள் விட்டுச் சென்ற மொழி என்ற எண்ணத்தில் பார்க்கிறார்கள். எனவே ஆங்கிலத்தை இந்தியைக் கொண்டு அகற்றிவிட வேண்டும் என்ற எண்ணுகிறார்கள்.
ஆங்கிலம் அன்னிய மொழி என்ற எண்ணமே தவறு. அது என்றோ இந்திய மொழிகளில் ஒன்றாகி விட்டது.நம் மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின் அலுவல் மொழி ஆங்கிலம் அவ்வளவு ஏன், ஆங்கிலம் இந்திய அரசின் அலுவல் மொழிகளில் ஒன்று. நாடாளுமன்றத்தின் அலுவல் மொழிகளில் ஒன்று. சட்டங்கள் ஆங்கிலத்தில் இயற்றப்படுகின்றன. நீதித்துறை ஆங்கிலத்தில் செயல்படுகிறது .உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றங்களிலும் ஆங்கிலம்தான் அலுவல் மொழி என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. வங்கித்துறை, வருமானவரித்துறை ஆங்கிலத்தில் இயங்குகின்றன. நம் கணக்கு வழக்குகளை ஆங்கிலத்தில் பராமரிக்கிறோம். சாகித்ய அகாதெமி ஒவ்வொரு ஆண்டும் மற்ற இந்திய மொழிப் படைப்புக்களுக்குப் பரிசளிப்பதைப் போல இந்தியர்கள் ஆங்கிலத்தில் எழுதும் படைப்புக்களுக்கும் பரிசளிக்கிறது.. பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு, இந்தியாவிற்குள்ளேயே வேலை வாங்கிக் கொடுத்து சோறு போடும் மொழி ஆங்கிலம். நம் குழந்தைகளுக்கு அன்னிய நாடுகளில் வாழ்வாதாரம் அமைத்துக் கொடுத்த மொழி ஆங்கிலம். உலக அரங்கில் ஆங்கிலத்தின் துணையால்தான் நாம் கஷ்மீருக்கு ஆதரவு திரட்டினோம்.
“நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரிடத்திலும் இந்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும். வரும் 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறும் போது ஹிந்தி மொழி நாட்டில் மிகச் சிறப்பான அந்தஸ்தைப் பெற்றிருக்க வேண்டும்” என்று திரு ஷா தன்னுடைய உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருப்பது இந்தி பேசாத மக்களிடையே,குறிப்பாகத் தமிழர்களிடையே, அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இது பாஜகவிற்கு எதிராக மற்ற கட்சிகளை ஒரு புள்ளியில் திரள வாய்ப்பளித்திருக்கிறது.தேர்தல் களத்தில் திமுக போன்ற கட்சிகள் வலுப்பெறவே இது உதவும். தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாததை அதன் தேசியத் தலைமை ஒரு பொருட்டாகக் கருதாமல் இருக்கலாம். ஆனால் அரசை நடத்தும் கட்சி என்ற முறையில் தமிழகத்தில் விரும்பத்தாகத, பிரிவினை சக்திகள் தலையெடுக்க நேரிடும் என்பதை எண்ணி அது கவலை கொள்ளத்தான் வேண்டும்.
***
2.10.2019