ஹாங்காங்கும் கஷ்மீரும்

maalan_tamil_writer

எப்போதுமே அந்த மனிதருக்குத் தன்னைப் பற்றிய பெருமை அதிகம். காரணம் இருந்தது. அவர் அநேகமாக உலகில் உள்ள நாடுகளைப் பார்த்து வந்திருந்தார். ஆழ்ந்து யோசித்தால் அதில் பெருமை கொள்வதற்கு ஏதும் இல்லை. ஒரு தபால் கார்டு கூட சரியான மதிப்பிற்குத் தபால் தலை  ஒட்டினால் அயல் நாடு போய்விடும். (சரியான மதிப்பில்லை என்றால் சமயத்தில் உலகம் சுற்றிவிட்டு நம்மிடமே திரும்பி விடும்)

ஆனாலும் அவருக்குப் பெருமை. அம்பாசமுத்திரம் அல்வாவில் பேச்சைத் தொடங்கினாலும் அது எப்படியோ அயர்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து எனச் சுற்றி விட்டுத்தான் திருவல்லிக்கேணி முட்டுச் சந்திற்குத் திரும்பி வரும்.

அப்படித்தான் ஒருநாள் அவர் பயணித்த தேசங்கள் பற்றி யாரிடமோ விவரித்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் ஒரு குறும்புக்காரச் சிறுவன் கன்னத்தில் கையூன்றி கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“அங்கிள் நீங்க இந்த இடங்களையெல்லாம் பார்த்திருக்கிறீர்களா?”

“நான் பார்க்காத இடமே உலகத்தில் இல்லடா” என்றார் அவர் பெருமிதம் பொங்க

“நிஜமாவா?”

“நிஜம்தான். வேணா உங்க அப்பாவைக் கேட்டுப் பாரு!”

“இல்ல நீங்க பொய் சொல்றீங்க! நீங்க பார்க்காத இடம் ஒன்று இருக்கு”

“ அது எதுடா, நான் பார்க்காத இடம்?”

“அது உங்க முதுகு!”

பல நேரங்களில் நாம் நம்மால் முடியாததை மட்டுமல்ல, நமக்கு விருப்பமில்லாததையும் கண்ணெடுத்துப் பார்க்காமல் இருந்து விடுகிறோம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகஸ்ட் 29ஆம் தேதி ஸ்ரீநகர் சென்று, உடல் நலம் குன்றியிருப்பதாகச் சொல்லப்படும் அவரது தோழரும், ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான யூசப் தாரிகாமியைச் சந்தித்துத்  திரும்பியிருக்கிறார் தனது பயணம் குறித்து செப்டம்பர் இரண்டாம் தேதி உச்ச நீதி மன்றத்தில் ஒரு சான்றாவணத்தை (அஃப்டவிட்) தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த அஃப்டவிட்டில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அவர் ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் அவருக்கு நெருக்கமான தி ஹிண்டு ஆங்கில நாளிதழ், அதில் தாரிகாமியின் உடல் நிலை பற்றி மட்டுமின்றி அங்கு நிலவும் ‘அடக்குமுறை’கள் குறித்தும் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது என்கிறது. ஏராளமான பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டிருப்பதாகவும் கடைகள் நீண்ட நாள்களாக மூடப்பட்டிருப்பதாகவும் அதில்  கூறியிருக்கிறார் என்கிறது ஹிண்டு செய்தி.

பாதுகாப்புப் படையினர் அங்கு நிறுத்தப்பட்டிருப்பது குறித்தும், அவர்களின் எண்ணிக்கை குறித்தும் கடைகள் அடைக்கப்பட்டிருப்பது பற்றியும் அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனும் செய்திகள் சொல்லிவருகின்றன. எனவே அதில் ஒன்றும் ஒளிவு மறைவு இல்லை.

யெச்சூரி ஸ்ரீநகரில் இருந்த  ஆகஸ்ட் 29 அன்று அங்கு தனது மளிகைக் கடையை திறந்த குலாம் முகமது என்ற 65 வயது முதியவரை, மோட்டர் சைக்கிள்  வந்த ஹிஜ்ப்புல் முஜாஹைதீன் அமைப்பைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொன்றார்கள் என்ற செய்தியும் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. எனவே கடைகள் மூடப்பட்டிருப்பதற்கான காரணம் அரசின் ‘அடக்குமுறை’ மட்டும்தானா என்ற கேள்வி எழுகிறது. அது ஒரு புறம் இருக்கட்டும்

கஷ்மீரில் நிலவும் ‘அடக்குமுறை’, கட்டுப்பாடுகள் குறித்துக் கவலைப்படும் சர்வதேசப் பார்வை கொண்ட கம்யூனிஸ்ட்கள், ஹாங்காங்கில் நடப்பவை குறித்துக் கருத்துக்கள் ஏதும் தெரிவிக்காதது ஏன்?

கஷ்மீரையும் ஹாங்காங்கையும் ஒப்பிடலாமா?

இரண்டிற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. ஒருகாலத்தில்  சீனாவின் ஒரு பகுதியாக இருந்தது ஹாங்காங். ஹாங்காங் என்ற சீன (கான்டனீஸ்) மொழிச் சொல்லுக்கு நறுமணத் துறைமுகம் என்று பொருள். ஊதுபத்தி செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்ட நறுமணப் பொருட்கள் அங்கு சேமித்து வைக்கப்பட்டதால் அந்தப் பெயர். பெயரே காட்டுவது போல அது சீனத்தின் ஒரு பகுதி. 1898ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு குத்தகை முடிவுக்கு வந்ததால் அது மீண்டும் சீனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதாவது ஹாங்காங் தனி இறையாண்மை கொண்ட நாடல்ல, அது கம்யூனிச சீனத்தின் ஒரு பகுதியாக மாறியது. இந்த இடைப்பட்ட காலத்தில்  பலர் மெயின்லாண்ட் சைனா என்று அழைக்கப்படும் கம்யூனிச சீனத்திலிருந்து ஹாங்காங் தீவிற்குக் குடி பெயர்ந்திருந்தார்கள்.அதற்குப் பல காரணங்கள். அவற்றில் ஒன்று கம்யூனிசம்

ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு பிரிட்டன் பாணி  ஜனநாயகத்திற்குப் பழகிவிட்ட ஹாங்காங்கிற்கு கம்யூனிஸ்ட் சீனாவின் ஒருகட்சி ‘ஜனநாயகத்தை’ ஏற்பது கடினமாக இருந்தது. (ஹாங்காங்கில் 22 அரசியல் கட்சிகள் இருக்கின்றன) அதனால் ஹாங்காங் கைமாறும் போது ‘ஒரு நாடு, இரு அரசுகள்’ என்ற நிபந்தனைக்கு சீனம் இணங்கியது. அதாவது ஹாங்காங் சீனத்தின் ஒரு பகுதிதான், ஆனால் கரன்சி, சட்டம் நிர்வாகம் இதெல்லாம் வேறு 1990ஆம் ஆண்டு ஹாங்காங்கிற்கு என்று கம்யூனிசச் சீனம் ஒரு சட்டம் இயற்றியது.’அடிப்படைச் சட்டம்’ என்றழைக்கப்படும் அந்தச் சட்டம் 1997ல் ஹாங்காங் சீனத்துடன் இணைந்த பின் நடைமுறைக்கு வந்தது

ஹாங்காங்கிற்கு ஒரு சட்டமன்றம் இருக்கிறது. மொத்தம் 70 உறுப்பினர்கள். 35 பேர் பல்வேறு தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதி 35 பேர் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள். அவர்களைச் சீன அரசு நியமிக்கும். தலைமைச் செயல் அதிகாரி ஒருவரைச் சீன அரசு நியமிக்கும். அவர்தான் அரசின் தலைவர்.

அங்கு22 அரசியல் கட்சிகள் இருந்தாலும், அவை 2016 தேர்தலின் போது மூன்று அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டன.ஒன்று சீனத்திற்கு ஆதரவான அணி இவர்கள் இடதுசாரிகள் (அதுதான் இப்போது ஆட்சியில் இருக்கிறது) இன்னொன்று ஜனநாயகத்திற்கு ஆதரவான அணி இவர்களை ‘எதிர் முகாம்’ என்று பத்திரிகைகள் வர்ணிக்கின்றன மூன்றாவது கம்யூனிசமும் வேண்டாம், காலனி ஆதிக்கமும் வேண்டாம், நாம் தனி என்னும் உள்ளூர் குழுக்கள்.

அரசியல் இப்படி இருந்து கொண்டிருக்க முற்றிலும் எதிர்பாராத ஒரு பிரச்சினை முளைத்தது. சான் டாங் என்கிற ஒரு இளைஞன், தன்னுடைய கேர்ள் பிரண்ட் பூன் ஹு என்பவரை தைவானுக்கு அழைத்துச் சென்று அங்கு கொலை செய்துவிட்டு அங்கேயே தங்கிவிட்டான்.

வழக்கு நடத்தி தண்டிக்க அவனை ஹாங்காங்கிறகுக் கொண்டு வரமுடியவில்லை. காரணம் ஹாங்காங் தனி நாடல்ல. சீனத்தின் ஒருபகுதி. தைவான் என்ற நாட்டை சீனம் அங்கீகரிக்கவில்லை. அதனால் அவர்களுடன் குற்றவாளிகளை ஒப்ப்டைக்கும் ஒப்பந்தம் (extradition treaty) போட்ட்டிருக்கவில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க ஹாங்காங் அரசு தனது சட்டத்தில் சில திருத்தங்களை முன் மொழிந்தது. இந்தச் சட்டத் திருத்தம் ஹாங்காங்கும் ஹாங்காங்கிற்கு வெளியில் உள்ள இடங்களில் இருப்பவர்களும் குற்றச் செயல் புரிந்தவர்களைப் பரிமாறிக் கொள்ள வகை செய்கிறது. இதில் ஹாங்காங்கிற்கு வெளியில் உள்ள இடங்களில் ஒன்று கம்யூனிச சீனம்

இதை அங்குள்ள சுதந்திரப் பிரியர்கள் எதிர்க்கிறார்கள். ஹாங்காங்கில் அரசுக்கு எதிராகக் கலகம் செய்பவர்களை ஹாங்காங் அரசு பிடித்துக் கம்யூனிச சீனத்திடம் ஒப்படைத்து விடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இது ஒரு நாடு இரு அரசு என்ற வாக்குறுதிக்கு முரணானது என்பது அவர்கள் வாதம்

மார்ச் மாதம் தொடங்கிய போராட்டங்கள் மெல்ல மெல்லத் தீவிரமடைந்து ஆகஸ்ட் மாதம் உச்சத்தை அடைந்தன. ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடத்தப்பட்ட வேலை நிறுத்தத்தில் மூன்றரை லட்சம் பேர் பங்கேற்றார்கள். (ஹாங்காங்கின் மொத்த ஜனத்தொகையே 74 லட்சம்தான்) ஆகஸ்ட் 11-12  இருநாட்கள் விமான நிலையத்தை மறித்ததால் விமானங்கள் ரத்தாயின. ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஒன்றரை லட்சம் மக்கள் பங்கேற்ற பெரும் ஊர்வலம் நடைபெற்றது.

ஆரம்பத்தில் அமைதி காத்த போலீஸ் போகப் போகக் கடுமை காட்ட ஆரம்பித்தது. ரப்பர் புல்லட், தண்ணீர் பீரங்கி, மிளகு ஸ்பிரே கண்ணீர்ப் புகை என்று எல்லாவற்றையும் பயன்படுத்த ஆரம்பித்தது. சயனட் புகையைப் பயன்படுத்தியதாக போராட்டக்காரர்கள் சொல்கிறார்கள்  போலீஸ் சுட்டதில் சிலருக்குக் கண் போயிற்று. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக வலது கண்ணைக் கட்டிக் கொண்டு 50 கீமி நீளத்திற்கு மனிதச் சங்கலி நடத்தினார்கள் “காவல்துறையே! கண்ணைத் திருப்பிக் கொடு” என்று முழங்கினார்கள். பலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்கள். ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து அவர்களைக் கைது செய்தது அதை “வெள்ளை கைது” என்ற புதிய வார்த்தையால் வர்ணித்தார்கள்

இவ்வளவு நடந்திருக்கிறது. ஆனால் இதைக் குறித்து யெச்சூரியோ, கம்யூனிஸ்ட் தோழர்களோ  ஒரு வார்த்தை பேசவில்லை. ஏன்? அது கம்யூனிஸ்ட் சீனத்திற்கு சொந்தமான பகுதியில் நடக்கிறது என்பதாலா? .     

19.9.2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.