23

maalan_tamil_writer

விழிப்பு வந்துவிட்டது. ஆனால் போர்வையின் கதகதப்பிலிருந்து விடுபட்டு எழத்தான்  மனம்  வரவில்லை.  ‘ ஆமாம்,  இப்பவே  எழுந்து  என்ன கிழிக்கப் போகிறோம் ? ”  முனகியவாறே,  விலகிக்  கிடந்த  வேஷ்டியை  இழுத்துக்  காலிடையில் சொருகிக் கொண்டே புரண்டான். அப்பா லெக்ஷ்மி சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிருப்பது  எங்கோ, தொலைவில், தொடுவானத்திற்கு அருகே இருந்து ஒலிப்பது போல் கேட்டது. இந்த ஆயிரம் பெயரைச் சொல்லும் புண்ணியத்திற்காக அப்பா, சமஸ்கிருதத்தை  இப்படிக்   கடித்து  துப்ப  வேண்டாம். இவருக்கு சமஸ்கிருதம் தெரியாது.  தமிழ்  லிபியில்  அச்சான  புத்தகத்தை வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார். தமிழும் இல்லாத சம்ஸ்கிருதமும் இல்லாத புதிய பாஷை லெக்ஷ்மிக்கும் புரியவில்லையோ என்னவோ? இல்லாவிட்டால் இப்படித் தினமும் மழையோ, பனியோ, ஐந்து மணிக்கே எழுந்து தலையில் தண்ணீரைக் கொட்டிக் கொள்ளும் சின்ஸியாரிட்டிக்காகவேனும் அவர் கேட்பதைக் கொடுத்திருக்கலாம். அப்பாவின்  டார்கெட்  ஒரு  லட்ச  ரூபாய்  என்று  இவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு சமயம் நாலு லட்ச ரூபாய் முதல் பரிசு தரக் கூடிய ஒரு லாட்டரிச்  சீட்டை வாங்கிக் கொண்டு வந்து  “ நமக்கு  நாலு  லட்சம்  எதுக்குடா,  ஒரு லட்சம் போதும் ” னு  சொல்லிக்  கொண்டிருந்தார்.  அப்பாவும்  35  வருஷமாக,  தனது  20 வயசிலிருந்து  இந்த  டார்கெட்டை  குறி  வைத்துக்  கொண்டிருக்கிறார்.  அவர்  பார்த்த சில  ஆயிரங்களும்  தம்  பெண்களின்  கழுத்தில் முடிச்சுகளாயும், பிள்ளைகளின் பெயருக்குப்பின் இரண்டு எழுத்துக்களாயும் கரைந்துவிட்டன.

நிச்சயமாய் இனி படுத்துக் கொண்டிருக்க முடியாது என்று போர்வையை விலக்கியபோது,  கண்ணாடி  எதிரில் அண்ணா நின்று கொண்டிருப்பது தெரிந்தது. டையின் முடிச்சை சரிசெய்து கொண்டிருந்தான். ஏதோ இன்னதென்று தெரியாத அருவருப்பு  நெஞ்சுக்  குழியில்  திரண்டு  கசந்தது ;  இவன் ஒரு மருந்துக் கம்பெனியின் பிரதிநிதியாய்  இருக்கிறான்.  இவனது  டார்கெட்  அப்பா  மாதிரியில்லை.  ஸ்கை  இஸ் த லிமிட்,  ஏரியா  மானேஜர்,  ரீஜினல்  மானேஜர்,  சேல்ஸ் மேனேஜர் என்று காரட்டுகளை வரிசையாய்க் காட்டி இவனைச் சுழற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த காரட்டுகளே  இலக்குகளாய்,  நினைவில்  ஆட,  மாசம்  கொண்டு  வந்து தரும் முன்னூறு ரூபாய் சலுகையில் குடும்பம் என்ற விலங்கை எளிதாக அவனால் உதற முடிந்தது. இப்போது கிளம்பினால் எப்போது திரும்புவானோ? இடையில் எத்தனை ஹலோக்கள், பொய் முறுவல்கள்,  tall chlaim – கள் !

இந்த  எலிகளின்  பந்தயத்தில்  தனக்கு  எத்தனாவது  இடம் ?

கைகளை  உயர்த்திப்  பின்னி, மெல்ல எழுந்து கால்களை சற்றே மடக்கி தூக்கத்தை முறித்தான். அப்பா சமஸ்கிருதத்தைப் பலியிட்ட வாயும், நெற்றி துலங்க நீறுமாய்  பூஜையிலிருந்து  வந்தார்.  இது  என்ன  வேஷம் அப்பா, சகிக்கலை. இவர்களால்  சுலபமாக  ஒரு  லட்சியத்தை  வரித்துக் கொள்ள முடிகிறது. அதற்கு வேஷம் கட்டிக் கொள்ள முடிகிறது ; பணமே உலகமாய்ப் பொதி சுமந்து, கடைசியில் கங்கையில், காவிரியில், கன்னியாகுமரியில் சாம்பலாய்க் கரைந்து போக முடிகிறது. அப்பா, ஜே.கே. சொல்லும் அந்தச் சுடர் உங்களுள் எங்கே ?

“ வெள்ளிக்கிழமையும் அதுவுமா ஏழு மணிக்கு எழுந்திருந்து, இப்படி நெளிச்சுண்டு இரு. லெக்ஷ்மி தானே தேடிண்டு வந்துடுவா. உந்தலையும்… நீயும்… போ போ. காலங்கார்த்தாலே எதுத்தாப்போல்  நிற்காதே . ”

இவனுக்கு  எரிச்சல்  பொங்கிப் பொங்கி வந்தது. இதை தான் ஒரு வரியில் திருப்பிக் கேட்க முடியாதா? வேண்டாம், அப்பா. ப்ளீஸ். முரண்பாடுகளைத் தவிர்க்க இயலாத  நல்ல  நண்பர்களாக  நாம்  இருப்போம்.  ப்ளீஸ் .

“ என்னடா முணுமுணுக்கிறே ? ”  இதோ, அப்பா முதல் அம்பு விட்டுத் துவக்கி விட்டார்.  இதை  நிறுத்தியே  ஆகணும்.

“ ஒங்க  லெக்ஷ்மி  லட்ச  ரூபாயை  எடுத்துண்டு  வந்து  கதவைத்  தட்றப்போ நான் போய்  திறக்கலை.  நீங்களே  போங்கோ . ”

அப்பாவின்  கண்களில்  கனல்  ஜொலித்தது.  அவரது  சென்ஸிட்டிப் ஆன பகுதியை  இவன்  குதறிவிட்டது  அதில்  தெரிந்தது. “ என்னடா  சொன்னே ? ”

கையில்  காபி  டம்ளருடன்  அம்மா  வந்தாள்.  “ என்ன சண்டை ? ”

“ இன்னிக்கு  கார்த்தாலேயே  என்னோட  மல்லுக்கு  ஆரம்பிச்சிட்டீங்களா ? ”

“ உன் மாதிரி, எனக்கும் வேலை வெட்டி இல்லேன்னு நினைச்சுண்டியா. காலங்கார்த்தாலே ஒங்கூட மல்லுக்கு நிக்க . ”  அப்பா  திரும்பி இவனைக் குதறி விட்டார்.  இந்த  வலியில்  மௌனம் தான் பேச முடியும். அப்பா உங்களுடன் முட்ட எனக்கு  அடிப்படைத்  தகுதி- அதுதான் வேலை – இல்லை.   இந்த முறை நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள்.

அம்மா பார்வையால் இவன் தோல்வியை உறிஞ்சி, கருணை கசிய மெல்லச் சிரித்தாள்.  அவளுக்கு  இந்த  வலி  மரத்துப்போய் விட்டிருக்க வேண்டும். இவள், இத்தனை வருடங்களில், இந்த அப்பாவுடன் எவ்வளவு காம்ப்ரமைஸ்களை செய்து கொள்ள நேர்ந்திருக்கும் !  எத்தனைவிதங்களில் !  தன்  கிழிந்து  போன  ஈகோவை தினம்  தைத்துக்  தைத்துக் காப்பாற்றிக்கொண்டு …  அம்மா, இவற்றிற்குப் பின்னும் உன்னால்  எப்படி  சிரிக்க முடிகிறது !  இவன் தனிமையைப் புத்தகங்களிலும், தூக்கத்திலும் தவிர்த்துக் கொள்ளாத மத்தியானங்களில் அம்மா ஒரு நல்ல பேச்சுத் துணையாக – அநேகமாக இவன்தான் பேசிக் கொண்டிருப்பான். கேட்கும் துணையாக . இருந்திருக்கறாள்.  தமிழ்  சினிமாக்களும், நாவல்களும், தனக்குக் காண்பித்த ட்ரெடிஷனல்  அம்மாவிலிருந்து  பிசகிய  துணையாக.

“ நடராஜு,  இப்படி  சித்த  வாயேன் ”  என்று உள்ளே கூப்பிட்டுக் கொண்டுபோய், ஒரு பாட்டிலைக் கையில் கொடுத்தாள். “ காலங்காத்தாலே அவரோட என்னடா ?  அவர் குணந்தான் தெரியுமே.  போ. போய்  நாடார் கடையிலிருந்து அரை லிட்டர் கடலெண்ணெய்  வாங்கிண்டு  வாயேன்.  துளிக்கூட  இல்லை . ”

இவனுக்கும் எங்கேயாவது, போய்த் தொலைந்தால் தேவலை என்றுதான் பட்டது. ஆனால் நாடார் கடைக்கா !  நாடாருக்குக் கொடுக்க வேண்டியது ‘ கொஞ்சம் ’  இருந்தது. அந்தக்  கொஞ்சம், அப்பாவின் மரியாதையை மெல்ல மெல்ல அரித்துக் கொண்டிருக்கிறது. விடுமுறையில் விருந்தினர்கள்;  அப்புறம் காலேஜ் பீஸ்;  திருமணங்கள், பண்டிகைகள், அவன் கேட்க ஆரம்பித்து இரண்டு மூன்று மாதங்களாகிவிட்டது. கடைப்பையன் மத்தியானம் கதவைத் தட்டுகையில் இவன்தான் போய்  சமாளிக்க  வேண்டியிருக்கிறது. நாடார் இப்போது போனால் ஒரு ராக மாலிகையை  ஆரம்பித்துவிடுவார் .

கடையில்  விடிகாலைக்  கூட்டம்,  மொய்த்துக்  கொண்டிருந்தது.

அஞ்சு  காசு  காபித்தூள்,  அஞ்சு  காசு  வெல்லம்… ஏய், எவன் கொடுப்பான் ரெண்டு காசக்கும், அஞ்சு காசுக்கும் காபித்தூளு.  பத்துக்  காசுக்கு  கம்மி  இல்லே… நாடார்  நூறு  கிராம்  ஜவ்வரிசி  கொடுப்பா. துவரம்  பருப்பு  என்ன  வெலைங்க ? …

இங்கே ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை சுலபமாய் அஞ்சு பைசா காபித்தூளில், துவரம்  பருப்பில்  விடிந்து விடுகிறது. இந்த இரைச்சல்களின் நடுவே, தான் அன்னியமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.

இவனைப் பார்த்ததும் நாடார், “ என்ன சார், நமக்குப் பணம் கொண்டாந்திருக்கீங்களா ? ”  என்று  குனிந்து  பேரடை  எடுத்தார். இவன் என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் தடுமாறினான்.  “ எப்ப சார் கொடுக்கப் போறீங்க ?  நமக்கும்  கேட்டு வாய் அலுத்துப் போச்சு ” .   இப்போது  அந்தக்  கூச்சல்கள்  எல்லாம்  நிசப்தமாகி,  எல்லா விழிகளும் இவனையே மொய்ப்பது போல் தோன்றியது. அப்பா தேடிவைத்திருக்கும்  இந்த  அவமானத்தை  மூட்டைச் சுமையாய் யாரோ தலையில் தூக்கி  வைப்பது  போல்  இருந்தது.  அம்மா  எண்ணெய்  வாங்க,  உனக்கும்  இந்தக் காலை  அவசரம்தானா ?

“ நாடார் , அது …  வந்து …  அப்பாகிட்டே  சொல்லியிருக்கேன்.  இன்னும்  ஒரு வாரம் பத்து நாள்லே … ” இவனுக்குள்ளிருந்து இன்னொரு மனுஷன் பேசுவதுபோல் இந்தக்குரல்  இவனுக்கே  அன்னியமாய்  ஒலித்தது. இந்தப் பொய், தற்காப்புக்காக எத்தனை சுலபமாய் பீறி வருகிறது. நடுத்தரக் குடும்பங்கள் பாரம்பரியமாய் விட்டுச் செல்வது,  இந்தப்  போலிக்  கௌரவமும்,  தற்காப்புப்  பொய்களும்தானோ ?

“ எத்தனை ஒரு வாரமோ, பத்து நாளோ… என்னமோ, உங்களுக்கே நல்லா இருந்தாச்  சர்தான் ”  இவன்  வெறும்  பாட்டிலுடன்  திரும்பிவிட்டான்.

காலையில் எட்டு மணி அவசரத்தில் கார்கள், ஸ்கூட்டர்கள், பஸ்கள், அலறிக்கொண்டு  விரைந்தன. வெள்ளைக் காலர்கள், நைலக்ஸ் புடவைகள், ப்ரீப்கேஸ்கள், வீக்லியைத் தழுவிய உடம்புகள், பஸ் ஸ்டாப்பில் பரபரப்புடன் நின்று கொண்டிருந்தன.  இந்த  உலகத்தில் எல்லோருக்கும் ஏதோ வேலை இருக்கிறது, தன்னைத்  தவிர.

இவன்  நடையில்  செருப்பை உதறும்போது, மொட்டை மாடியிலிருந்து கால்குலஸ் புத்தகத்தை அணைத்தவாறே, இவன் தங்கை இறங்கி வந்து கொண்டிருந்தாள். இவளது உலகம் எவ்வளவு சின்னது !  பாடப் புத்தகங்கள், விவிதபாரதி, வாரப் பத்திரிகைகள், சினிமா நடிகைகள்,  ( ஜெயபாதுரிக்கு ஆண் குழந்தைதான் பொறக்கும், பந்தயம் ! )  உடைகள்.  இவள்,  இரவில் தவளைக் குரலில் இறைக்கும்,  ‘ delta x tending to zero ’  எதற்கு உதவும் ?  தன்னை மாதிரி ஒரு நாள் வித் ரெப்ரன்ஸ் டு யுவர் அட்வர்டைஸ்மெண்ட் … க்கு ?

மெல்லப்  பசி  வயிற்றுள்  வெம்மையாய்ப் படர்ந்தது. வெற்று பாட்டில், அம்மாவிடம் கிளம்பிய கேள்விகளையும், முணுமுணுப்புகளையும் களைந்துவிட்டு குளிக்கச் சித்தமானான். இவன் தங்கை தோளில் துணிகளைச் சுமந்து கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.

“ சசி,  ஒரு  நிமிஷம்,  இரண்டு  சொம்பு  ஊத்திண்டு  வந்துடறேன்,  ப்ளீஸ். ”

“ எனக்குத்தான்  காலேஜுக்கு  நாழியாச்சு ;  நீ இங்கே தானே இருக்கப்போறே, நான் இப்ப வந்துடுவேன் ”  படாரென்று கதவை அறைந்து தாழிட்டாள். தன்னைத் தவிர எல்லோருக்கும் பிடரியை நெட்டிக் தள்ளும் அவசரங்கள் நிறைந்த உலகம் ஒன்று இருக்கிறது.  அதைப் பொடியாக்க எட்டாத தொலைவில் நிரந்தரமாய் தன்னை நிறுத்தி, கை தட்டிச் சிரிக்கும் உலகம் ! ஹெல் !

சமையலறையில் அப்பா பரக்கப் பரக்க சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இப்போது அவரது  வேஷமே  மாறிப்  போயிருந்தது.  நிலையில்  இவன்  நிழலாடியபோது  ஒரு கணம்  சாப்பிடுவதை நிறுத்தி, இவனை நிமிர்ந்து பார்த்துவிட்டுத் தொடர்ந்தார். காலையில்  அவர்  சொன்ன  வார்த்தைகள் நெஞ்சில் முட்டிக் கொண்டு, இன்னும் நெருடிக் கொண்டிருந்தன. வேலை இல்லாமல் இருப்பது, இந்திய இளைஞனின் வாழ்க்கைப் பருவங்களில் ஒன்றாகி விட்டது என்பது, அப்பா உங்களுக்கு ஏன் புரியவில்லை ?  உங்கள்  இருபத்தி  மூன்றில்  நிகழாதவை என் இருபத்தி மூன்றில் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது ஒரு ஐந்து வயதுப் பையனுக்கு நிரோத்தின் உபயோகம்  தெரிந்திருக்கிறது.  அப்பா  உங்கள்  வரம்புகள்  விலகிய ஒரு தலைமுறையை  எப்போது  ரீகன்ஸைல்  பண்ணிக்  கொள்ளப்போகிறீர்கள் ?

“ நடராஜு, கொஞ்சம் இரு. அவசரமா போறவாளை அனுப்பிச்சிட்டு வந்துடறேன் ” என்றாள்  அம்மா,  அம்மா  நீயுமா ?

நிமிஷங்களைத்  துரத்தும்  இவர்களின்  அவசரம்  மெல்ல  மெல்ல  உதிர்ந்து இவனைத்  தனிமை  சூழ்ந்தது. இந்தப் பகல் பொழுதின் குரூரத்தைத் துரத்த லைப்ரரிகளும், டீக்கடைகளும், மேட்னி சினிமாக்களும், சிகரெட் பாக்கெட்களும் சாதனமாய்த்  துணை நின்றிருக்கின்றன. இன்றைக்கு காலை அப்பா தெறித்த வார்த்தைகள்  இன்னும்   இம்சை  பண்ணிக்கொண்டிருந்தன.  இதை  ஏன்  நம்மால்‘ இக்னோர் ’ பண்ண முடியவில்லை ?

என்ன செய்வது என்றே தெரியாமல் அன்றைய பேப்பரை மடியில் விரித்துக் கொண்டான். கண்கள் தாமாகவே ஸிச்சுவேஷன்ஸ் வேகண்ட்டைத்  தேடின. பேப்பரில் அவற்றைத்  தவிர  அவனுக்குப்  படிக்க  ஏதுமில்லாமல் போய்விட்டது. அவைகளுடன் அப்படி ஒரு பந்தம், மூன்று வருடங்களாக.

இவன்  எந்த  வேலையையும் ஏற்றுக் கொள்ளத் தயாராகத்தான் இருந்தான். ஆனால் அவனது படிப்பே ஒரு அரணாய் இருந்தது. சில வேலைகள் தகுதிக்கு மேல்பட்டதாகயும்,  சில  வேலைகள்  தகுதிக்கு கீழேயும் இருக்கிறதாம். இதைத் தகுதியாய்  அறிவித்த  இடங்களில்  அனுபவம்  கேட்டார்கள் . மூன்று வருடங்கள் தன்னை எதற்குமே தகுதியாக்காத ஒரு கல்வியிலும், மூன்று வருடங்கள் அதற்குப் பின்னும் கலைந்து போய்விட்டதை நினைக்கும்போது இவன் நெஞ்சு கனத்தது. தன் வாழ்க்கை முழுவதுமே இப்படி லைப்ரரியிலும், டீக்கடைகளிலும், புகையிலுமே கழிந்துவிடுமோ என்ற பயம் அரிக்கத் துவங்கியது.

கடிகாரம்,  நிதானமாக  பத்துமணிகளைக்  காறித் துப்பியது. பேப்பரை எறிந்து விட்டு எழுந்தான். கால்கள் தாமாகவே வாசல் நிலைக்குத்  தள்ளிற்று. இந்தத் தெரு பார்க்க பார்க்க அலுக்காத தெரு என்று இவன் நண்பன் ஒரு முறை சொன்னது ஞாபகம் வந்தது.  நிதானமாய்ப்  புகையிலையை அரைத்துக்கொண்டு ஒரு கிழவி, தெருப் புழுதியில் பொன்னைத் தேடி அலைந்து கொண்டிருந்தாள். என்ன நம்பிக்கை!

இவளின்  வாழ்வாதாரம் இந்த நம்பிக்கையின் அச்சிலேதான் சுழன்று கொண்டிருப்பதை நினைக்கும்போது பிரமிப்பாய் இருந்தது. தண்ணீர் தளும்ப ஒரு அரை ட்ரவுசர் பையன், வாளிளை ஏந்தியிருந்த கையும், உடம்பும் விறைத்து, கால்களை இழுத்து நடந்து கொண்டிருந்தான். அப்பா நீங்களும் இப்படித்தான். தனக்குப் பளுவான லட்சியங்களை மனம் விரைக்கச் சுமந்து கொண்டு…

இன்ஸ்டிடியூட்டிற்குப் போகும் ஒரு பெண், இவனை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்துவிட்டு,  இவன் பார்க்கும்போது சடக்கென தலையைக் கவிழ்ந்து கொண்டு போனாள்.  இந்தப்  பார்வையும், தலை  கவிழ்ப்பும், இந்தப் போஸ்ட்மேனுக்கு காத்திருக்கும் நேரத்தில், நிதம் நிகழ்வாகி அவர்களுக்கிடையே ஒரு மௌன பரிச்சயம் கிளைத்திருந்தது. ‘ தான் பார்த்தவற்றிலேயே ’ மிகவும் சோகம் கவிந்த முகம் அவளுடையதுதான்.  அவளை அவன் மூன்றே விதமான புடைவைகளிலேயே மாறி மாறிப் பார்த்திருக்கிறான். பாவம், இவளின்  asdfgf – ல் எத்தனை வயிறுகளோ?

தொலைவில், போஸ்ட்மேன் வருவது புலப்பட்டது. எத்தனையோ பேர்களின் நம்பிக்கையையும்,  ஆசைகளையும்,  துக்கங்களையும்  சுமந்துகொண்டு  நிதானமாக வந்து  கொண்டிருந்தான்.  அவரவருக்குரியதைக் கொடுத்து விட்டு நகர்ந்து கொண்டிருக்கும் காலத்தின் ‘சிம்பல்’ மாதிரி அவன் தோன்றினான்.

மூன்று வீடுகள் முன்னால் வந்து கொண்டிருக்கும்போதே படியிலிருந்து போய் எதிர் கொண்டான். “ உங்களுக்கு ஒண்ணும் இல்லியே சார் ”  என்று சொல்லிச் சிரித்தான். இந்தச் சிரிப்பு கசப்பாய்  இவனுக்குள்  இறங்கியது.  என்ன  நம்பிக்கையில்  இவனை  எதிர் கொண்டோம் ?  இவனுக்கு அயற்சியாய் இருந்தது ;  ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும் போல் தோன்றியது. உள்ளே போய் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினான்.

( கணையாழி )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.