வீழ்வேன் என்று நினைத்தாயோ-7
அம்….மா!
குடிசைகள் நிறைந்த கம்பங்களில் வீட்டுக்குள்ளே இட நெருக்கடி இருந்தது. தண்ணீர் வசதியோ, கழிவறை வசதியோ திருப்தியாக இல்லை. சில இடங்களில் மட்டுமே மின்சாரம் இருந்தது என்பதெல்லாம் உண்மைதான்.
ஆனால் வீட்டுக்குள்தான் இட நெருக்கடியே தவிர, வீடுகளுக்கு வெளியே ஏராளமான திறந்த வெளி இருந்தது. கிராமப்புறங்களைப் போலே ஆங்காங்கே மரங்கள் இருந்தன. சில வீடுகளில், அனேகமாக வீட்டுக்கு வீடு, பழமரங்கள் வளர்ந்து நின்றன. சிங்கப்பூருக்கே உரிய ரெம்புட்டான் பழங்கள் அவற்றில் கனிந்து தொங்கின. பலாப் பழத்தைப் போன்று வெளித்தோற்றம் கொண்ட ஆனால் அதை விட மிக இனிப்பான ட்டுரியன் பழங்களும் காய்த்துக் கிடந்தன. இந்த மரங்களில் ஏறிக் குதித்து விளையாடுவது என்றால் குழந்தைகளுக்கு குஷி. அதிலும் அடுத்த வீட்டில் காய்த்துத் தொங்கும் ரம்புட்டான் பழங்களை ஓசைப்படாமல் பறித்துக் கொண்டு ஓடுவதில் அலாதி மகிழ்ச்சி. அகப்பட்டுக் கொண்டு அடிபட்டாலும் கவலை இல்லை. திருட்டுக் கனிகளின் தித்திப்பே தனி அல்லவா?
கம்பங்களில் தமிழர்கள் பசுக்கள் வளர்த்து வந்தார்கள். சிலர் கோழிகளும், வாத்துக்களும் வளர்த்து வந்தார்கள். சீனர்கள் பன்றிகள் வளர்த்து வந்தார்கள்.பசுக்கள் பால் தந்தன என்பதோடு உபரி வருமானத்திற்கும் வழி செய்தன.ஆனால் அதைத் தாண்டி உணர்வு ரீதியான ஒரு பாசப் பிணைப்பு அவற்றின் மேல் வளர்த்து வந்தவர்களுக்கு இருந்தது.
அடுக்கு மாடி வீடுகளுக்கு இடம் பெயர்ந்தால் மரங்களுக்கு எங்கு போவது? மாடுகளை எங்கு கட்டுவது? பனிரெண்டாம் மாடியில் வாசல் வராண்டாவில் அவற்றைக் கட்டி வைக்க முடியுமா? அவை அத்தனை படி ஏறி வருமா?
கம்பங்களிலிருந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு இடம் பெயரும் போது எற்படும் மன உணர்வுகளை சிறந்ததொரு சொற்சித்திரமாகத் தீட்டியிருக்கிறார் சிங்கப்பூரின் முன்னணி எழுத்தாளரான சிங்கை மா.இளங்கண்ணன். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களில் முதன் முதல் ஆசியான் விருது பெற்ற எழுத்தாளர் இவர்தான். இவரை சிங்கப்பூரின் ஜெயகாந்தன் என்றுதான் சொல்ல வேண்டும். அங்கு வாழ்ந்த அடித்தள மக்களின் வாழ்க்கையைப் பல கதைகளில் பதிவு செய்தவர்.. கம்பங்களிலிருந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு மாறிய சூழலைப் பின்னணியாகக் கொண்டு நினைவுகளின் கோலங்கள் என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். குடிபெயர்வின் காரணமாக மாடுகளை விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. வாங்கியவர்கள் மாடுகளை அழைத்துப் போகும் காட்சியை அவர் விவரித்திருக்கும் விதத்தை வாசித்த போது என் மனது கலங்கி விட்டது.
“சிறிது பள்ளமாக இருந்த இடத்தில் சுமையுந்து வந்து நின்றது.அதில் இருந்த பலகைகளை எடுத்துச் சரிந்த வாட்டத்தில் போட்டனர்.முதலில் பெரிய மாடுகள் கொண்டுவரப்பட்டன
மூக்கணாங் கயிற்றைப் பிடித்துச் சுமையுந்தில் இருந்தவர்கள் இழுத்தனர்.மாடு பலகையில் நடந்து செல்ல அஞ்சிப் பின்னுக்கு இழுத்தது.பின்னால் இருந்து ஒருவர் வாலைப் பிடித்து முறுக்கினார். மாடு தட்டுத்தடுமாறி ஏறிச் சென்றது. வண்டிக்குள் சென்றதும் முதலில் சென்ற அந்த மாட்டுக்கு ஒரே நடுக்கம். சாணத்தைக் கழிந்தது. பலகைத் தடுப்புக்கு மேலே எட்டிப் பார்த்து,..ம்மா! என அடி வயிறு ஒட்டக் கத்தியது.
பார்த்துக் கொண்டே நின்ற மரகதத்தின் கண்களிலும் கண்ணீர் அரும்பியது. பணத்தை எண்ணிப் பெட்டிக்குள் வைத்து விட்டு வரும்போது இருந்த மகிழ்ச்சி மறைந்து விட்டது. தன்னையே அம்மா என்று அழைப்பதாக எண்ணிக் கொண்டு பார்வையை வேறு பக்கம் திருப்பினாள் கருப்புப் புள்ளிப் பசு மீது அவள் பார்வை விழுந்தது. அது தொத்தப் பசு
“அந்தப் பசுவால்தான் நாம் முன்னேறியிருக்கிறோம். ராசியான மாடு. அதை விற்கவே கூடாது. நம்ம வீட்டிலேயே நின்னு சாகட்டும்.!’ என்று அவள் கணவர் முருகையா பலதடவை பலரிடம் சொல்லியதும் அவள் நினைவுக்கு வந்தது. அழுகையும் பொங்கிக் கொண்டு வந்தது”
மாடுகளை மனிதர்கள் பிரிந்த துயரத்தை விட மனிதர்கள் மனிதர்களைப் பிரிந்த துயரம். மிகப் பெரியது. கமபங்களில் தமிழர்கள் அடுத்தடுத்த குடிசைகளில் வசித்தார்கள். பலர் ஒன்றாய்க் கூடி ஒரே வீட்டில் வசித்ததும் உண்டு. தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும் அப்படித்தான். அதுதான் மனித இயல்பு. இன்றும் கூட அமெரிக்காவிற்குப் போனாலும், முன்பைக்குப் போனாலும் அப்படித்தான் வாழ்கிறார்கள். கனடாவின் டொராண்டோ நகரின் பார்லிமெண்ட் தெரு, இங்கிலாந்தின் ஈஸ்ட் ஹாம் பகுதி, தில்லியின் ஆர்.கே.புரம், மும்பையின் தாராவி, மாட்டுங்கா எல்லாம் தமிழ் மணம் கமழும் பகுதிகள்தான். அம்மாவின் புடவையைக் கைக்குள் சுருட்டிக் கொண்டு தூங்குகிற குழந்தைக்குக் கிடைப்பதைப் போல ஒரு பாதுகாப்பு உணர்வை அவர்களுக்குக் கொடுக்கிறது போலும்! பாதுகாப்பு உணர்வு மட்டுமல்ல, கலாசாரக் காரணங்களும் அதற்குப் பின் இருக்கின்றன. பக்கத்து வீட்டுக்காரனோடு தாய்மொழியில் எதிர் வீட்டுக்காரனைப் பற்றி வம்பளக்க முடியாமல் போனால் அது என்ன வாழ்க்கை.?
ஆனால் இடப்பெயர்வின் போது அது சிதைந்து போனது. காரணம் சிங்கப்பூரில் நடைபெற்ற இனக்கலவரங்களை மனதில் கொண்டு, அடுக்கு மாடி வீடுகளை ஒதுக்குவதில் லீ ஒரு கொள்கையைக் கடைப் பிடித்தார். மொத்த மக்கள் தொகையில் இனங்கள் என்ன விகிதத்தில் இருக்கின்றனவோ அந்த விகிதத்தில்தான் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படும். மக்கள் தொகையில் எழுபது சதவீதம் சீனர்கள், இருபது சதவீதம் மலாய் மொழிக்காரர்கள், 10 சதவீத்ம் இந்தியர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தளத்தில் 10 வீடுகள் இருக்கின்றன என்றால் 7 வீடுகள் சீனர்களுக்கு, 2 வீடுகள் மலாய்க்காரர்களுக்கு, ஒரு வீடு இந்தியருக்கு என்று ஒதுக்கப்படும்.என்பதுதான் அந்தக் கொள்கை. அதாவது உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் உங்கள் மொழி பேசுபவராக இருப்பார் என்பது உறுதியில்லை. உங்கள் மதத்தை, உங்கள் கலாசாரத்தைப் பின்பற்றுபவராக இருப்பார் என்று சொல்வதற்கில்லை!
காலம் காலமாக ஒரு குடும்பம் போல் நெருங்கிப் பழகியவர்களைத் திடீரென விடைபெற்றுக் கொண்டு முற்றிலுமாகப் பிரிந்து போவது என்பது பலருக்குத் துன்பம் தரும் அனுபவமாக இருந்தது
இது போன்ற சூழல் தந்த மன உளைச்சல்களை நன்கு அறியப்பட்ட சிங்கப்பூர் எழுத்தாளரான லதா தனது வீடு என்ற சிறுகதையில் (நான் கொலை செய்ய விரும்பும் பெண்கள் தொகுதி) குறிப்பிடுகிறார்:
“நகர சீரமைப்பில் அந்த கூட்டு வாழ்க்கை சிதறிப் போச்சு. அந்தக் கம்பம் சிதைஞ்ச கத இருக்கே . . அது ஒரு தனிக் கதை. ஒண்ணுக்குள்ள ஒண்ணா அக்கா தங்க்கச்சியா பழகின எல்லோரும் மூலைக்கு ஒரு பக்கமா சிதறிப் போயிட்டாங்க…
…மண்ணோடயும் மரங்களோடயும் வாழ்ந்து பழகின என்னால ஆரம்பத்தில மாடி வீட்டை ஏத்துக்க முடியல. ஜெயிலுக்குள்ள அடைச்சு வைச்ச மாதிரி மூச்ச அடைச்சுக்கிட்டு இருந்தது.. . .”
மாடி வீடுகளுக்குப் போவதில் சிலருக்கு வேறு சில சிக்கல்களும் இருந்தன. அறுபதுகளில் “லிஃப்ட்” என்றழைக்கப்படும் மின் தூக்கிகள் இப்போது இருப்பது போல பரவலாகப் பயன்பாட்டில் இல்லை. தமிழ்ச் சமுகம் அதில் அதிகம் புழங்கியது இல்லை. எனவே லிஃப்ட்டில் செல்வதற்கு பயந்து கொண்டு 10வது மாடி, பனிரெண்டாவது மாடியில் இருப்பவர்கள் கூட அத்தனை படிகளையும் ஏறிச் சென்றார்கள் என்கிறது அரசு வெளியிட்டுள்ள ஒரு நூல்
இந்தப் பிரச்சினைகள் எல்லாம் சிறு சிறு பிரச்சினைகள் போலத் தோன்றலாம். உற்று நோக்கினால் இவை யாவும் உளவியல் ரீதியான பிரச்சினைகள் என்பதை உணரலாம். இவற்றைத் தீர்க்காமல் போனால் லீயின் கனவு முளையிலேயே கருகிப் போகிற ஆபத்து இருந்தது.