எழுத்தாளர் கு.அழகிரிசாமி உடல் நலம் குன்றிப் படுக்கையில் இருந்தார். பத்திரிகை ஆசிரியராக இருந்த அவரது நண்பர் அவரை நலம் விசாரிக்கப் போனார். பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பும் போது ” ஒரு நிமிஷம்” என்று அவரை நிறுத்தினார் அழகிரிசாமி. தலையணைக்குக் கீழ் இருந்து உறை ஒன்றை எடுத்து நீட்டினார். ” இதை வைத்துக் கொள்ளுங்கள்” என்றார். “என்னது இது? கதையா?” என்றார் பத்திரிகை ஆசிரியர். ” இல்லை, இல்லை, என்னைப் பற்றிய குறிப்பு. நானே எழுதியது” என்றார் அழகிரிசாமி. ‘புரியவில்லையே’ என்பது போல அவரைப் பார்த்தார் ஆசிரியர். “ஒருவர் மறைந்துவிட்டால் அவரைப் பற்றி பத்திரிகைகளில் வரும் இரங்கல் குறிப்புக்களைப் பார்க்கிறேன். தப்பும் தவறுமாக எழுதுகிறார்கள். எனக்கு அந்த துர்பாக்கியம் ஏற்பட வேண்டாம். எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார் அழகிரிசாமி.
எழுத்தாளனின் மோசமான கதை ஒன்று பிரசுரமாவதைவிடத் துயரமானது அவன் இறந்து போவது. அதைவிடத் துயரமானது அவனைப் பற்றி பிறர் எழுதும் இரங்கல் குறிப்புகள்
அண்மையில் அசோகமித்ரன் மறைவை ஒட்டி, அவருக்கு ஆஸ்திரேலிய வானொலியில் எழுத்தாளர் ஜெயமோகன் நிகழ்த்திய அஞ்சலியைக் கேட்க நேர்ந்த போது இது போன்ற ஒரு துயரத்திற்கு நான் உள்ளானேன். முழு நேர எழுத்தாளராக தன் வாழ்வைத் தேர்ந்து கொண்ட அசோகமித்ரன் வறுமையில் வாடினார் என்ற ஒரு தோற்றத்தை எழுப்ப முயன்றது அந்த அஞ்சலிக் குறிப்பு.
நான் அசோகமித்ரனை ஏறத்தாழ 40 ஆண்டு காலமாக அறிவேன். அவர் பெரும் பணக்காரர் அல்ல என்பது உண்மைதான். ஆனால் பரம ஏழையும் அல்ல. தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஓர் எளிமையான வாழ்க்கையை அவர் வாழ்ந்தார். அயல்நாட்டு தூதரகங்களிலிருந்து வரும் செய்தி மடல்களின் பின்புறம் உள்ள அச்சிடப்படாத வெள்ளைப் பகுதியை எழுதப் பயன்படுத்திக் கொள்வார். வெகுகாலத்திற்கு சென்னைக்குள் செல்ல சைக்கிளைப் பயன்படுத்தி வந்தார். 70களில் ‘சுவேகா’ என்ற நிறுவனம் சிறிய எஞ்சின் மூலம் விசையூட்டப்பட்ட சைக்கிள் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதனைச் சிலகாலம் பயன்படுத்தி வந்தார். அதனோடு மல்லுக்கட்டிய அனுபவங்களை அவர், தனது சன்னமான குரலில் விவரிக்கும் போது நாம் சிரித்துக் குலுங்குவதைத் தவிர்க்க முடியாது.
பின்னாட்களில் அவரது மகன்கள் படித்து நல்ல வேலைகளுக்கு வந்தார்கள். பெரிய குறைகள் இல்லாமல் அவரைக் கவனித்துக் கொண்டார்கள். தமிழில் அவர் எழுதிய கதைகள் வழியே பெரிய வருமானம் வந்திருக்காது என்பது உண்மைதான். ஆனால் அவரது எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், ஹாப்பர் -காலின்ஸ், பெங்குவின் போன்ற சர்வதேச பதிப்பகங்கள் வெளியிடப்பட்டன.
அவை உரிய ராயல்டியை அளித்திருக்கும்.
இது போன்ற துயரங்கள் தனக்கு நேர்ந்துவிடக் கூடாது என்பதால்தானோ என்னவோ, சுந்தர ராமசாமி ஒரு சுய இரங்கல் குறிப்பை கவிதையாக எழுதி வைத்து விட்டுப் போயிருந்தார்.
“நான் விடை பெற்றுக் கொண்டுவிட்ட செய்தி
உன்னை வந்து எட்டியதும்,
நண்ப,
பதறாதே.
ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் எதுவும் அதில் இல்லை.
இரங்கற் கூட்டம் போட ஆட் பிடிக்க
அலையாதே
நம் கலாச்சாரத் தூண்களின்
தடித்தனங்களை எண்ணி
மன்ச்சோர்வில் ஆழ்ந்து கலங்காதே.
நண்ப
சிறிது யோசித்துப் பார்
உலகெங்கும் கணந்தோறும்
இழப்பின் துக்கங்களில்
ஒரு கோடிக் கண்கள் கலங்குகின்றன.
ஒரு கோடி நெஞ்சங்கள் குமுறி வெடிக்கின்றன
நண்ப
நீ அறிவாயா
உன் அடிச்சுவடு ஒவ்வொன்றிலும்
அழிகின்றன ஒரு கோடி உயிர்கள்.
1987ம் ஆண்டு, கொல்லிப்பாவை என்ற சிற்றிதழில் சுந்தர ராமசாமி எழுதிய ‘என் நினைவுச் சின்னம்’ என்ற கவிதையின் சில வரிகள் இவை.
அசோகமித்ரனின் பலம் இதழ் பிரியாமல் முறுவலிக்கச் செய்யும் அங்கதம். சுந்தர ராமசாமியின் பலம் அவருடைய தெளிவு. அவரது எல்லா எழுத்துக்களிலும் அந்தத் தெளிவு நிழல் பரப்பி நிற்கிறது என அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாதுதான். ஆனால் கட்டுரைகளைப் போல் வார்த்தைகளின் பலத்தில் அல்லது வாதங்களின் பலத்தில் அல்லாமல், ஆன்ம பலத்தில் பிறப்பது கவிதை என்பதால் அந்தத் தெளிவைக் கவிதைகளில் தூலமாகக் காணலாம்.
மற்ற எவரையும் விட ராமசாமிக்கு இலக்கிய உலகில் தான் வகிக்கும் பாத்திரம் என்ன, ஆற்ற வேண்டிய கடமை, அளிக்க வேண்டிய பங்கு என்ன என்பதைப் பற்றிய தெளிவு இருந்தது. தன் மறைவுக்குப் பின், தன்னை ஒரு கவிஞனாக அல்ல, தன் கவிதைகள் மூலம் கவிதையை உயிர்ப்பித்தவர்களில் ஒருவனாகத்தான் நினைக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். மேலே சுட்டியுள்ள என் நினைவுச் சின்னம் கவிதையின் எஞ்சிய வரிகள் இவை:
நண்ப
ஒன்று மட்டும் செய்.
என்னை அறியாத உன் நண்பனிடம்
ஓடோடிச் சென்று
கவிதையை எழுப்ப முயன்று கொண்டிருந்தவன்
மறைந்துவிட்டான் என்று மட்டும் சொல்.
இவ்வார்த்தைகளை நீ கூறும் போது
உன் கண்ணீர்
ஒரு சொட்டு
இந்த மண்ணில் உதிரும் என்றால்
போதும் எனக்கு.
சு.ராவின் இந்த சுய இரங்கல், புதுமைப் பித்தனின் கவிதை ஒன்றின் உந்தலில் பிறந்திருக்க வேண்டும் என நான் நினைப்பதுண்டு. இருவரது கவிதைக்கும் உள்ள ஒரே உறவு ‘நினைவுச் சின்னம்’ என்ற சொல் மட்டும்தான்.
1944-ம் ஆண்டு, கு.ப.ராஜகோபாலன் மறைந்த சில மாதங்களுக்குப் பின் கிராம ஊழியன்’ ஆண்டு மலரில் வேளுர் வே. கந்தசாமிப் பிள்ளை என்ற புனைபெயரில் புதுமைப்பித்தன்’ ஒரு பாடல் எழுதினார். வேளூர் கந்தசாமிப் பிள்ளை என்ற புனைப் பெயரில் அவர் எழுதிய முதல் பாட்டு இது. அவரது முத்திரையான
எள்ளலும் பொருமலும் இந்தப் பாடலில் இரங்கலை விடத் தூக்கலாக வெளிப்படுகிறது
ஒகோ, உலகத்தீர்,
ஓடாதீர்!
சாகா வரம் பெற்ற,
சரஸ்வதியார் அருள் பெற்ற
வன்னக் கவிராயன்
நானல்ல.
உன்னிப்பாய்க் கேளுங்கள்,
ஓடாதீர்!
வானக் கனவுகளை
வக்கணையாச் சொல்லும்
உண்மைக் கவிராயன்
நானல்ல.
சத்தியமாய்ச் சொல்லுகிறேன்;
சரஸ்வதியார் நாவினிலே
வந்து நடம்புரியும்
வளமை கிடையாது!
உம்மைப்போல் நானும்
ஒருவன் காண்;
உம்மைப்போல் நானும்
ஊக்கம் குறையாமல்
பொய்கள் புனைந்திடுவேன்
புளுகுகளைக் கொண்டும்மை
கட்டிவைத்துக்காசை,
ஏமாந்தால்,-
கறந்திடுவேன்.
ஊருக்கு மேற்கே
ஊருணியில் கண்டவளை
ஆருக்கும் வாய்க்கா
அரம்பை என்று,
கனவென்று,
சொல்லில் வனைந்திடுவேன்
சோற்றுக்கு அலைக்காதீர்,
“கன்னி எழில் வேண்டாம் ;
காதல் கதை வேண்டாம் ;
சொன்னபடி, தேச
பக்தி எழுப்பிடுவாய்,”
என்றக்கால்,
“அப்படியே, ஆஹா
அடியேன் இதோ” என்று
கல்லும் உயிர் பெற்று
காலன் போல் நடமாட
“வெல்லு, வெல்லு” என்று குத்தும்
வீறாப்புத் தார்க்குச்சி
எத்தனை வேணும் ?-செய்து
இணையளயில் வைத்திடுவேன்.
சற்று, பொறும் ஐயா
சங்கதியைச் சொல்லுகிறேன்;
இன்றைக்குக் காசு
இருக்கிறது; இனிமேலே
என்றைக்கோ, எப்போதோ
எதிரில் எனைக்கண்டக்கால்
ஒடி ஒளியாதீர்!
உம்மிடம் நாம் கேட்கவில்லை.
இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று : ஐயா, நான்
செத்ததற்குப் பின்னல்
நிதிகள் திரட்டாதீர்! ?
நினைவை விளிம்புகட்டி,
கல்லில் வடித்து
வையாதீர்
“வானத்து அமரன்
வந்தான் காண் வந்ததுபோல்
போனான்காண்” என்று
புலம்பாதீர்
அத்தனையும் வேண்டாம்.
அடியேனை விட்டு விடும்.
‘நினைவை விளிம்புகட்டி, கல்லில் வடித்து’ என்று சரளமாக எழுதி வந்து ‘வையாதீர்’ என்று சிலேடையில் முத்திரை வைத்தார் பாருங்கள் அதுதான் புதுமைப் பித்தன்.
புதுமைப் பித்தனின் முத்திரை எள்ளல். கண்ணதாசனின் முத்திரை என்ன? அவரை ஆழப்படித்தறியாதவர்களுக்கு அவர் மதுவோடும் மாதோடும் சுகித்த ஒரு சினிமாக் கவிஞர். படித்தும் மனதைப் புரிந்து கொள்ள விரும்பாத அரசியல் விலங்குகளுக்கு அவர் விசுவாசமற்ற சுய நலமி. இன்னும் சிலருக்கு அவரது செயல்களுக்காக அவரை ஏளனம் செய்தவர்களையும் கூடத் தன் சொல்லில் கிறங்கச் செய்த சொல்லின் செல்வர்.
‘இருந்து பாடிய இரங்கற்பா’ என்று கண்ணதாசன் தனக்குத் தானே ஓர் இரங்கற்பா எழுதிக் கொண்டார். அவர் மறைவுக்குப் பின் எத்தனையோ கவிஞர்கள் அவர் பேரில் எழுதிய இரங்கற் பாக்களைவிட அவரது சுய இரங்கலில் உண்மையும் தமிழும் பொலிகின்றன
பாரியொடும் கொடைபோகப் பார்த்தனொடும்
கணைபோகப் படர்ந்த வல்வில்
ஓரியொடும் அறம்போக உலகமறை
வள்ளுவனோ டுரையும் போக
வாரிநறுங் குழல்சூடும் மனைவியொடும்
சுவைபோக, மன்னன் செந்தீ
மாரியொடுந் தமிழ்போன வல்வினையை
என்சொல்லி வருந்து வேனே!
தேனார்செந் தமிழமுதைத் திகட்டாமல்
செய்தவன்மெய் தீயில் வேக,
போனாற்போ கட்டுமெனப் பொழிந்ததிரு
வாய்தீயிற் புகைந்து போக,
மானார்தம் முத்தமொடும் மதுக்கோப்பை
மாந்தியவன் மறைந்து போக,
தானேஎந் தமிழினிமேல் தடம்பார்த்துப்
போகுமிடம் தனிமை தானே!
பாட்டெழுதிப் பொருள்செய்தான் பரிதாபத்
தாலதனைப் பாழுஞ் செய்தான்;
கேட்டழுத பிள்ளைக்கோர் சிறுகோடும்
கீறாமற் கிளைமு றித்தான்;
நாட்டழுகை கேளாமல் நந்துயரும்
காணாமல் நமனெனும்பேய்
சீட்டெழுதி அவன் ஆவி திருடியதை
எம்மொழி யாற்செப்பு வேனே!
பொய்யரையும் இசைபாடிப் புல்லரையும்
சீர்பாடிப் புகழ்ந்த வாயால்,
மெய்யரையும் வசைபாடி வேசையையும்
இசைபாடி விரித்த பாவி,
கையரையும் காசின்றிக் கடைநாளில்
கட்டையிலே கவிழ்ந்த தெல்லாம்
பொய்யுரையாய்ப் போகாதோ புத்தாவி
கொண்டவன் தான் புறப்ப டானோ!
வாக்குரிமை கொண்டானை வழக்குரிமை
கொண்டானை வாத மன்றில்
தாக்குரிமை கொண்டானைத் தமிழுரிமை
கொண்டானைத் தமிழ் விளைத்த
நாக்குரிமை கொண்டானை நமதுரிமை
என்றந்த நமனும் வாங்கிப்
போக்குரிமை கொண்டானே! போயுரிமை
நாம்கேட்டால் பொருள்செய் யானோ!
கட்டியதோர் திருவாயிற் காற்பணமும்
பச்சரிசி களைந்தும் போட்டு
வெட்டியதோர் கட்டையினில் களிமண்ணால்
வீடொன்றும் விரைந்து கட்டி
முட்டியுடைத் தொருபிள்ளை முன்செல்லத்
தீக்காம்பு முனைந்து நிற்கக்
கொட்டியசெந் தமிழந்தக் கொழுந்தினிலும்
பூப்பூத்த கோல மென்னே!
போற்றியதன் தலைவனிடம் போகின்றேன்
என்றவன்வாய் புகன்ற தில்லை;
சாற்றியதன் தமிழிடமும் சாகின்றேன்
என்றவன்வாய் சாற்ற வில்லை;
கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன்
படுத்தவனைக் குவித்துப் போட்டு
ஏற்றியசெந் தீயேநீ எரிவதிலும்
அவன்பாட்டை எழுந்து பாடு!
சுய இரங்கல் பாடல்களில் எனக்குப் பிடித்த அம்சம் இதுதான் . மொழி என்னவாக இருந்தாலும், நடையும் வடிவமும் என்னவாக இருந்தாலும் அது உண்மையை , அதாவது ஒரு படைப்பாளி தன்னைப் பற்றி என்ன எண்ணம் கொண்டிருந்தான் என்பதை உரக்கச் சொல்லிவிடும். அது பொதுபுத்தியில் உறைந்திருக்கும் பிம்பத்திற்கு மிகையாகவோ, முரணாகவோ கூட இருக்கலாம். அதனால் என்ன? ஓவியர்கள் வரைந்து கொள்ளும் சுய சித்திரங்கள் மட்டும் உள்ளதை உள்படி சொல்வனதானா?
டாவின்சியின் சுய சித்திரம் என்று உலகம் முழுக்கப் பரவிக் கிடக்கும் ஒரு கிழவனின் முகம் (Portrait of a Man in Red Chalk) டாவின்சியின் சுய சித்திரம் அல்ல என ராபர்ட் பெய்ன், மார்டின் கெம்ப் போன்றவர்கள் சூடம் அடித்து சத்தியம் செய்கிறார்கள். அவர்கள் எழுப்பும் கேள்வியில் ஒரு லாஜிக் இருக்கிறது. லியனார்டோ டாவின்சி 67 வயதில் செத்துப் போனார். அந்த ஓவியத்தை அவர் தனது 58லிருந்து 60 வயதிற்குள் வரைந்திருக்க வேண்டும். அந்தப் படத்தில் இருப்பவரைப் பார்த்தால் 58 வயது இளம் கிழவன் போலவா தெரிகிறது? என்று கேள்வி எழுப்பும் அவர்கள் அது டாவின்சியின் அப்பா அல்லது பெரியப்பா என்கிறார்கள். அவர்கள் இருவரும் 80 வயது வரை வாழ்ந்து தீர்த்தார்கள்.
எழுத்தாளர்களின் சுய சித்திரத்தில் -அதாவது சுய இரங்கலில்- இந்தக் குழப்பங்கள் இல்லை. சுந்தர ராமசாமி, கண்ணதாசன் கவிதைகள் சான்று. இந்த கோஷ்டியில் நான் கீட்ஸைக் கூட சேர்த்துக் கொள்வேன் (வாய்ப்பிருப்போர் வாசிக்க : அவரது When I have Fears That I May Cease to Be)
கேத்தரின் லிம் என்று ஒரு சிங்கப்பூர் எழுத்தாளர். ஆங்கிலத்தில் எழுதும் சீனப் பெண்மணி. அண்மையில் (மார்ச் இறுதியில்) நடந்த அவரது ‘ஓர் இணையான மகிழ்ச்சி’ ( An equal joy) என்ற புத்தக வெளியீட்டு விழாவிற்கு நான் போயிருந்தேன். அவர் தன் மரணம் குறித்து அந்த நூலில் ஒரு சுய இரங்கல் குறிப்பு எழுதியிருக்கிறார். ” என் வாழ்வை நான் செழுமையுடன் வாழ்ந்தேன். ஆழமாக காதலித்தேன். அதற்கு இணையான மகிழ்ச்சியுடன் வாழ்வின் முடிவைத் தழுவிக் கொள்கிறேன்”
வாழ்வை நேசிக்கும் எந்த எழுத்தாளனும் மரணத்தையும் அதே மகிழ்ச்சியோடு நேசிப்பான்
மரணத்தை நேசிக்கத் தெரியாதவன் வாழ்க்கையை காதலித்து அறியாதவன்
அம்ருதா மே 2017