வரது உள்ளிருந்து எட்டிப் பார்த்தான் ; இவன் வழக்கமான முறுவலோடு, இன்னும் வெளியில்தான் நின்று கொண்டிருந்தான். இந்த முறுவல் ஒரு தனி சோபை. கண்களில் ஒரு சுடர் மாதிரி அது ஒளிர்ந்து கொண்டிருக்கும் ; உள்ளே ஒரு சந்தோஷமான மனம் இருக்கிறது என்று சொல்வது போல. ஆனால் அது இல்லை உண்மை. உள்ளே இருப்பது ஈகோவில் கொழுத்து ஊதிப்போன மனம். வாயைத் திறந்தால் இந்த arrogance தான் வார்த்தையாய் விழும். எதையாவது எற்றி தூக்கி எறிந்து கொண்டு இவனின் வேலை கிடைக்கா வருடங்களில் தீனி போட்ட லைப்ரரிகள். இவனுடைய பிம்பத்தை இவனுள் பிரம்மாண்டமாய் நிறுத்தியிருக்க வேண்டும்.
என்ஜின் ஒரு நிதானமான கதியில் உறுமத் தொடங்கியது. “ ஏறிக்கோயேன் ” என்று வரது கூப்பிட்டதில் பஸ்ஸில் இருந்தவர்கள் எல்லாம் திரும்பி இவனைப் பார்த்தார்கள். இவன் இப்போதும் நிதானமாய் முறுவலித்தபடி, இரு இரு என்று சைகை செய்தான்.
இவன் வரமாட்டான். உங்களிலிருந்து விலகியவன் நான் என்று வெளிப்படுத்திக் கொள்ளும் அடையாளங்கள் இதெல்லாம். தன்னுடைய கல்லூரி நாட்களில் வரதுவும் இப்படி இருந்தவன்தான். எதிரே பேசிக்கொண்டு வருபவர்களின் வார்த்தையைக் கொண்டு, அவன் முகத்திலேயே அறையும் சாமர்த்தியம். எதையும் கூர்மையாக உள்வாங்கிக் கொண்டு, அடுத்தவனைக் காயப்படுத்தி ஒவ்வொரு வார்த்தையிலும் தன் கூர்மையை நிரூபிக்கும் புத்திசாலித்தனம். ஆனால் இப்போது இதெல்லாம் முடிவதில்லை. அறியாமையைக் கண்டால் இரக்கம்தான் வருகிறது. எல்லோரையும் வாரிக் கட்டிக் கொண்டு, இதமாய் தோள் தட்டிக் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது. தன்னை எதிர்கொள்ளும் எல்லாவற்றிலும் தன்னைத் தேடிக் கொண்டிராமல், அதன் மட்டங்களோடும் இயல்புகளோடும் அங்கீகரித்துவிட முடிகிறது.
சக்கரங்கள் உருளத் தொடங்கிய ஒரு மெதுவான ஓட்டத்தில் ஏறி புட்ஃபோர்டில் தொற்றிக் கொண்டான். இதுதான் இவன் வழக்கம்.
“ இரண்டு ஜெமினி. ”
பஸ்ஸின் ஜன்னல் சதுரங்களில் காட்சிகள் தோன்றி விலகிக் கொடிருந்தது. ஒரு இளம் ஜோடி பளிச்சென்று கண்ணில் பட்டது. அவள் மெலிதாய், நீலத்தில் உடுத்தியிருந்தாள். அவனின் வயதை, அனுமானிக்க முடிந்த இளமை, அவர்களுக்குக் கல்யாணம் ஆகியிருக்காது என்று சொல்லியது. தன்னை மாதிரி, யாருக்கும் இவ்வளவு விரைவில், இப்போதெல்லாம் திருமணங்கள் நடப்பது இல்லை. ஆனால் இதில் எனக்கு அவமானம் ஒன்றும் இல்லை என்று வரது தன்னுள் தீர்மானமாய்ச் சொல்லிக் கொண்டான். அவள் அந்தக் கூண்டுக்குள் எத்தனை வருடம்தான் சிறகடித்துக் கொண்டிருப்பாள் ?
பக்கத்திலிருந்தவர் மெல்ல தோளைக் தட்டினார். இதென்ன, அடுத்தவனைத் தொட்டுப் பேசும் பண்பாடற்ற தன்மை ? வரது எரிச்சலுடன் திரும்பினான். கிராமத்துப் பெரியவர். தொட்டுப் பேசுவது பண்பாடல்ல என்று தெரியாமல் இருக்கக்கூடும் ; அல்லது கீழ் கவிந்த மீசையும், நீள முடியுமாய் இருக்கும் தன்னை எப்படிக் கூப்பிடுவது – சார் அல்லது தம்பி – என்ற அதீத மரியாதையாய் இருக்கக்கூடும். வரது முறுவலித்தான்.
“ மியூசிக் அகாடமி வந்தா சொல்லுங்க கொஞ்சம் … ”
வெளியூர்க்காரர்தான். உச்சரிப்பு சொல்கிறது. இந்த ஜன்னல் சதுரத்தினூடே, கட்டடங்களும், பெரிய போஸ்டர்களும், புடவைகளும் ஓடி விலகுவது இவருக்கு சுவையாய் இருக்கக் கூடும். தன்னுடைய ஸீட்டை இவருக்குத் தரலாம். வேண்டாம், இந்த நகரத்தின் வேகம் பார்த்து மிரண்டு போவார் …
இவன் ஜெமினியில் இறங்கிக் காத்திருந்தான். பஸ்ஸின் முன்புறக் கும்பலைப் பிளந்து கொண்டே வரது இறங்கினான்.
“ என்ன, பத்திரமாய் வந்தியா ? ”
இவன் முகத்தில் ஏளனம் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
“ என்னால அந்தரத்தில தொத்திக் கொண்டு வரமுடியாது, எனக்கு உறுதியான பிடிப்பு வேணும். ”
“ அது ஒரு அட்வென்சர், அசுர வேகத்தில் உனக்குப் பின்னால ரோடு வழுக்கிக்கொண்டு போறது ஒரு சுவையான அனுபவம். நீ வாழ்க்கையில பலதை மிஸ் பண்ற. ”
“ ஐ காண்ட் அஃபெர்ட் ஆன் அட்வென்சர். என்னை நம்பி இன்னும் இரண்டு உயிர்கள் இருக்கு … ” இவன் சிறியதாய் சிரித்தான்.
வரது பேசாமல், உள்ளே தள்ளி வானோக்கி கூம்பிய Syond ஐப் பார்த்துக் கொண்டே நகர்ந்தான். விலகிப் போனாலும் பசுமை வரண்டு விடாமல் தளதளவென்று இருந்தது.
“ என்னால இப்ப லைப்ரரிக்கு நிறைய வர முடியறதில்லை ” என்றான் வரது ஏக்கத்துடன்.
“ நான் தினமும் வரேன். ” இவன் மெல்லச் சிரித்தான்.
“ இப்பெல்லாம், சாயங்காலம் நிறைய அழகான பெண்கள் வரா. ”
இருவரும் பிளாட்பாரத்தின் முனைக்கு வந்து நின்றார்கள். இவன் தெருவில் இறங்கினான்.
‘ ஜே வாக்கிங் வேண்டாம். ஃப்ளை ஓவர்க்கு அடியில் லேன் இருக்கு. போயிடுவோம். ”
“ ஹாஹ. ” இவன் உரக்க சிரித்தான். “ என்ன, செக்யூரிட்டி கான்ஷியஸ் ! இருபத்தி மூணு வயசுல கல்யாணம் பண்ணிண்டு, இருபத்தி நாலுல கிழவனாயிட எப்படி உனக்கு முடியறது ? ”
இது கிழத்தனமா … வரது ஏதோ சொல்ல வாயெடுத்தான். சுவர் மாதிரிப் பெரியதாய் ஒரு பஸ் இவர்களைக் கடந்து போயிற்று. தொடர்ந்து பின்னால் ஒரு பியட். முன் சீட்டில் உட்கார்ந்திருந்த ஒரு பதினாறு, உள்ளிருந்து எட்டி திரும்பிப் பார்த்தது. இவன் கண்ணைச் சிமிட்டினான்.
“ இன்னிக்கு நமது டிக்கெட் கிடைக்காது. ” வரது, தீர்மானமாய்ச் சொன்னான்.
“ என்ன, ஏதாவது இன்ஸ்டிங்க்ட்டா ? ”
“ இன்னிக்கு ஹாலிடே. நாம கொஞ்சம் லேட். இந்தப் படத்தில ஜீனத் சட்டையெல்லாம குளிக்கறா. ”
எதிர்பார்த்தபடியே க்யூ நீளமாய் இருந்தது.
“ ஸோ, என்ன செய்யலாம் ? ”
வரது, பெண்கள் க்யூவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ யாராவது தெரிஞ்ச கேர்ள்ஸ் இருந்தா அப்ரோச் பண்ணலாம். ”
“ கேர்ள்ஸை வேற விஷயங்களுக்கு அப்ரோச் பண்றதுதான் புத்திசாலித்தனம். ”
வரது எரிச்சலுடன் இவன் கண்களைப் பார்த்தான். வழக்கம் போல் சிரித்துக் கொண்டிருந்தன.
“ ப்ளாக்ல ட்ரை பண்ணுவோமா ? ”
“ உனக்கு வேண்டியதை எப்படியாவது பிடிச்சிடணும், குறுக்கு வழியிலோ, அதிக விலை கொடுத்தோ. சரியான மிடில் க்ளாஸ் குடும்பஸ்தன். ”
“ ஸ்டாப் இட். ” வரது திகைத்துப் போனான். காதோரங்களும் முகமும் சிவந்தன. குரல் அடிவயிற்றிலிருந்து வந்தது. இருவரும் தியேட்டரின் பரபரப்பிலிருந்து விலகி நடந்தனர்.
இது எத்தனையாவது குதறல் ; தன் கல்யாணத்தில் இவன் நிறைய சலனப் பட்டிருக்க வேண்டும். தான் நிரந்தரமாய் ஒருத்தி கைப்பற்றிக் கொள்ள முடியாத குற்ற உணர்ச்சியில் இவன் ஈகோ உடைந்திருக்க வேண்டும். ஏன் தன்னை அவித்துக் கொண்டு தன் பிம்பங்களுக்காய் வாழ்ந்து தொலைக்கிறான் ?
“ ஹள எபெட் ய டீ ? ” வரது சமனப்பட்டிருந்தான். மெலிதாய் ஒரு சீட்டி அடித்தான்.
“ ஐ டோன்ட் மைன்ட் ? ”
இருவரும் ரெஸ்ட்டாரண்டிற்குள் நுழைந்து ஒரு மூலை மேஜையைப் பற்றிக் கொண்டனர்.
“ இரண்டு டீ. ”
“ சம்ஸா இருக்கா ? ”
வரது சிறிது நேரம் மௌனமாய் மெனுகார்டின் பிளாஸ்டிக் உறை மீது விரலால், அவள் பேரை எழுதி எழுதி அழித்தான். நிமிர்ந்து இவனைப் பார்த்தான்.
“ நான் ஏன் இவ்வளவு சீக்கிரமே கல்யாணம் பண்ணிண்டேன் தெரியுமா ? ”
முகம் இறுகிக் கடினமாய்த் தோன்றியது. தன்னைப் பெரிதும் பாதித்த ஒரு விஷயம் குறித்து நீளமாய்ப் பேசப்போவது மாதிரி இருந்தது. குரல் உணர்ச்சியில் அடைத்துக் கொண்டு பிசிறிப் போயிருந்தது.
“ சாதனைன்னு ஏதாவது பண்ணனும்னு நினைச்சிருப்ப. இல்லை என்னால் ஒருத்திக்கு சோறு போட முடியும்கிற ஈகோவாய் இருக்கும். ”
“ லெட் மீ டாக். இட் வாஸ் ய பிராமிஸ். அவளுக்குப் பண்ணிக் கொடுத்திருந்த பிராமிஸ். என்னால் கால் ஊன்றிக்க முடிந்த பின் அதை நிறைவேத்திட்டேன். ”
“ ஸோ, யூ ஆர் ய ஐடியலிஸ்ட் ? ஹா ஹா ? ”
“ இல்லை. அது நான் கொடுத்த ப்ராமிஸ். ஐ ரெஸ்பெக்ட் மீ மச். ஐ லவ் மீ மச். ”
தண்ணீர்த் தம்ப்ளர் மீது பூத்திருந்த மெல்லிய பனித் துளிகளை அழித்து நீளமாய் கோடுகள் போட்டவாறு இவன் சிரித்தான்.
“ நான் பெண்ணாய் இருந்தால் உன்னைக் கல்யாணம் பண்ணிண்டிருந்திருப்பேன். உங்களை மாதிரி ஆசாமிகள் கையில் நசுங்காமல், அழுக்குப் படாமல் இருக்கலாம். ”
மீண்டும் இன்ஸல்ட். நையாண்டி இழைய இழைய கெக்கலிக்கும் சிரிப்பு. எப்படி முடிகிறது ? இவன் எப்போது தான் மிருதுவாகப் போகிறான் ?
“ நீ எப்ப பாரதியைக் கல்யாணம் பண்ணிக்கப் போற ? ”
நிச்சயம் இவன் எதிர்பார்க்கவில்லை. விழிகளில் ஒரு நொடிப் பிளவிற்கு அதிர்ச்சி கடந்து போயிற்று.
“ இன்னும் நாங்க பார்க்க வேண்டிய சினிமாக்களும், போக வேண்டிய ரெஸ்ட்டாரண்ட்களும் நிறைய இருக்கு. ”
வாட் டூ யூ மீன் ? ”
“ உண்மையிலே உனக்கு புரியலை ? கல்யாணமானதிலே மழுங்கிப் போயிட்டியா ? ”
“ அப்ப அவளை என்ன பண்ணப் போறே ? ”
“ மத்த எல்லோரையும் என்ன பண்ணினேனோ அதையேதான். ”
“ படுத்துண்டாச்சா ? ”
“ சில விஷயங்களை நான் தாமதிப்பதில்லை … ” இவன் டீக் கோப்பையைத் தணித்துக் கொண்டே சொன்னான். “ இந்த பார், மிஸ்டர் ஐடியலிஸ்ட், நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லை. இன்ஃபாக்ட் நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லை … ”
“ ஏன் கிழவனாயிடுவோம்னு பயமா ? ”
“ திருப்பிக்கிறயா. ஹஹ. அதில்லை வரது. கல்யாணத்திற்கு ஒரு பெண் மட்டும் போறாது இப்போ. அரிசி, புளி, பிரஷர் குக்கர், நூத்தியிருபது ரூபாய்க்கு ஒரு எட்டுக்குப் பத்தடி … ராத்திரி படுக்கையில நீதான் ரொம்ப அழகுன்னு சொல்ற பொய் … என்னால ஆயுசு பூரா ஒருத்தியோடயே காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியும்னு தோணல. ஒரு கப் பாலுக்காக ஒரு மாடு வாங்கிக் கட்ட முடியாது, என்னால ஹஹா. மைதிலி, ஜெயராதா, சாந்த லெஷ்மி … இதுவரைக்கும் எல்லாம் பிராமணப் பசுக்கள்தான் … ”
“ ஏன் இப்படி இன்ஹுயூமனா ?”
“ ஏதோ போதையில் சத்தியம் பண்ணிட்டு தூக்க முடியாத சுமையைத் தலையில தூக்கிண்டு நொறுங்கிப் போறது இன்ஹுயூமனா இல்லையா ? என்னால என்னையே எரிச்சுக்க முடியாது. இதோ பார், ஐ ஆல் ஸோ லவ் மீ மச்.என்னைத் தவிர வேற யாரையும் அதிகமா நேசிக்க என்னால் முடியாது..”.
பேரர், பில்லைக் கொண்டு வந்து வைத்தான். இவன் இரண்டு விரலால் ஜீரகத்தை எடுத்து வாயில் உதிர்த்துக் கொண்டான்.
“ இப்ப நம்ப ரெண்டு பேரும் வேற எதுவும் சுமுகமா பேசிக்கலாம்னு தோணறது. நேத்தி பர்வின் சுல்தானா கச்சேரியில … ”
“ ஹேய் டேண்ட் ட்ரை டூ எவேட்… உனக்குப் பேசிக்க ஒண்ணுமில்லேனா நான் தி.நகர் போறேன். மாயவரத்திலிருந்து எங்கம்மாவிற்கு அத்தை பொண்ணு மாத்தலாகி வந்திருக்கா. 23; ஸ்டில் ஷி இஸ் எ வர்ஜின். என்னால முடிஞ்ச சேவை பண்ணப் போறேன். ” இவன் கண்ணைச் சிமிட்டிக் கொண்டு சிரித்தான்.
இருவரும் எழுந்து வெளியே நடந்தார்கள். ஒரு லாரி நச்சுப் புகையை அழகிய சின்ன மேகமாகக் கக்கிவிட்டு நகர்ந்து கொண்டிருந்தது…
கணையாழி