ஆடு மாடு வளர்ப்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். கோழி புறா வளர்க்கிறவர்கள் உண்டு. நாய், பூனை வளர்ப்பவர்கள் ஏராளம். கிளி வளர்க்கிறவர்கள், அணிலுக்குத் தீனி வைத்து ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள்.அலங்காரத்திற்காகவோ வாஸ்து காரணமாகவோ சிலர் தொட்டியில் மீன் வளர்க்கிறார்கள் ஆராய்ச்சிக்காக பாளையங்கோட்டையில் ஒரு பேராசிரியர் வீட்டில் பாம்புகள் வளர்த்தார். வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்பிய என் அமெரிக்க நண்பர் ஒருவர் ஓணான் வளர்த்தார். ஆனால் வீட்டில் சிங்கம் வளர்த்தவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஐரோப்பாவில் உள்ள செக் குடியரசில் ஸ்டிசோவ் என்ற கிராமத்தில் வசித்து வந்தார் மைக்கேல் பிராசெக். அவர் தன்னுடைய வீட்டில் ஒன்பது வயதான சிங்கம் ஒன்றை வளர்த்து வந்தார்.கூண்டெல்லாம் அமைத்து பத்திரமாகத்தான் வளர்த்து வந்தார். சிறிது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஆண் சிங்கத்தின் உடலியல் தேவைக்காக இரண்டு வயதான பெண் சிங்கத்தையும் வாங்கி வந்து அதையும் வளர்க்க ஆரம்பித்தார். சிங்கங்களைக் கையில் பிடித்தபடி அவர் பெருமை பொங்க கிராமத்திற்குள் வாக்கிங் போவதுண்டு.
ஒருநாள் உணவு வைப்பதற்காக ஆண் சிங்கத்தின் கூண்டுக்குள் போனார். அதற்குப் பசியோ அல்லது வேறு என்ன கோபமோ தெரியவில்லை, அவரை அது அடித்துக் கொன்றுவிட்டது. அக்கம் பக்கத்தார் காவல்துறைக்குத் தகவல் சொல்ல அவர்கள் வந்து சிங்கங்களைச் சுட்டுக் கொன்றார்கள் இது இந்தாண்டு மார்ச் மாதம் ஐரோப்பிய நாளிதழ்களில் வெளியான செய்தி.
நம்மூரிலும் இது போன்று நடப்பதுண்டு. ஆனால் அது சிங்கமாக இருக்காது. அசிங்கமான ஆடாகக் கூட இருக்கலாம். வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது என்று கூட ஒரு பழமொழி உண்டே. அனுபவத்திலிருந்துதானே இது போன்ற சொலவங்கள் பிறக்கின்றன.
அனுபவத்திற்குச் சான்று தேடி அதிக தூரம் போக வேண்டாம். அண்மையில் உள்ள கேரளத்தை எட்டிப் பார்த்தால் போதும்
அமித்ஷாவின் வழியில் நடக்கிறார் பினராயி விஜயன் என்று அங்கு காங்கிரஸ்காரர்கள் கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பினராயி விஜயனை பாஜக ஆதரிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சிக்கிறது.
என்ன நடக்கிறது?
ஆலன் சுஹாய்ப், தாஹா ஃபைசல் என்று இரண்டு மாணவர்கள். ஆலன் சட்ட மாணவர். ஃபைசல் இதழியல் மாணவர். இருவரும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள். அதன் மாணபவர் அமைப்பின் உறுப்பினர்கள். அவர்கள் இருவரையும் கடந்த வாரம் பினராயி விஜயனின் அரசு சட்ட விரோத தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities Preventiion Act –UAPA) கீழ் கைது செய்தது. இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விசாரணை இல்லாமல் 180 நாட்கள் சிறையில் வைக்கலாம். ஆம். மார்க்சிஸ்ட் மாணவர்களை மார்க்சிஸ்ட்கள் தலைமையேற்று நடத்தும் அரசு “கொடூரமான” சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டது. எதற்காக?
பினராயி விஜயன் கேரளச் சட்டமன்றத்தில் பேசும் போது,” ஆலனும் பைசலும் நான்கு மாவோயிஸ்ட்கள் மீது நடந்த என்கவுண்டரை விமர்சித்து துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகத்தார்கள்’ என்று இது குறித்து விளக்கமளித்திருக்கிறார். அதாவது மார்க்சிஸ்ட் கட்சியினர்.மாவோயிஸ்ட்களை ஆதரிக்கும் பிரசுரங்களை விநியோகித்தார்கள் என்று கம்யூனிஸ்ட் முதலமைச்சர் சட்டமன்றத்திலேயே தெரிவிக்கிறார். எந்த மாவோயிஸ்ட்கள்?
அக்டோபர் இறுதி வாரத்தில் பாலக்காட்டிற்கு அருகில் உள்ள மஞ்சகண்டி என்ற வனப்பகுதியில் கூடாரம் அடித்து ஏழு மாவோயிஸ்ட்கள் ஆயுதப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். சத்தீஸ்கரிலிருந்து வந்திருந்த தீபக் என்ற மாவோயிஸ்ட்களிடம் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். இந்தத் தகவல் கிடைத்ததும் ‘தண்டர் போல்ட்’ என்று அழைக்கப்படும் கேரள அதிரடிப் படைக் காட்டுக்குள் நுழைந்து கைது செய்ய முயன்றது.சண்டை வலுத்தது. நாலு மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் கேரளத்தினர் அல்ல. மணிவாசகம், கார்த்திக், சுரேஷ், அஜிதா என்ற அந்த நால்வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த மோதலைத்தான் போலி என்கவுண்டர் என்று விமர்சிக்கும் பிரசுரங்களை மார்க்சிஸ்ட் மாணவர்கள் விநியோகித்தார்கள். அவர்கள் மார்க்சிஸ்ட்கள் மட்டுமல்ல மாவோயிஸ்ட்கள் மீது அனுதாபம் கொண்டவர்கள் மட்டுமல்ல, அவர்கள் மாவோயிஸ்ட்களுக்காகக் களப்பணி செய்பவர்களும் கூட என்று அவர்கள் வசிப்பிடத்தில் கைப்பற்றப்பட்ட தடைசெய்யப்பட்ட மாவோஸ்ட் பிரசுரங்களை ஆதாரமாகக் கொண்டு காவல் துறை சொல்கிறது. அவர்களது ஜாமீன் மனுவை கோழிக்கோடு செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது
அவர்களை UAPA வின் கீழ் கைது செய்ததற்கு பினராயி விஜயனுக்கு அவரது கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்திருக்கிறது. பிரகாஷ் காரத்தே விஜயனின் நடவடிக்கையை விமர்சித்திருக்கிறார்: “ அந்த மாணவர்கள் மீது UAPAவின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது தவறு. அவர்களை அதிலிருந்து விடுவிக்க சட்ட ரீதியாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும்.UAPAவைப் பயன்படுத்தியது தவறு என்கிறார் பிரகாஷ் காரத்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் கிளையும் UAPAவைப் பயன்படுத்தியதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்கிறது. வளர்த்த சிங்கம் மார்பில் பாய்கிறது!
மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டு வைத்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்கவுண்டரே போலியானது என்கிறது. அது குறித்த அறிக்கை ஒன்றை விஜயனிடம் அளித்துள்ளது.
எதிர்கட்சிகள் இன்னும் ஒரு படி மேலே போய் விஜயனின் ராஜினாமாவைக் கோருகின்றன. அர்பன் நக்சல்களை ஒழித்துக் கட்டுவது என்று இறங்கியிருக்கும் அமித் ஷாவின் திட்டத்தை பினராயி விஜயன் நடைமுறைப்படுத்துகிறார் என்று அவை முழங்குகின்றன. பாஜக முதல்வரின் நடவடிக்கையை ஆதரிக்கிறது. இதன் காரணமாக பாஜக கம்யூனிஸ்ட்களை ஆதரிப்பதும், கம்யூனிஸ்ட்களே கம்யூனிஸ்ட்களை எதிர்ப்பதுமான விசித்திரமான சூழல் கேரளத்தில் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதன் மூலம் கேரளக் கட்சிகள் அறிந்தோ அறியாமலோ, ஒன்றை மறைமுகமாக உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அது:
நக்சல்களை ஒழிப்பதில் அமித்ஷா உறுதியாக இருக்கிறார்! அவர்களைக் காப்பாற்றுவதில் கம்யூனிஸ்ட்கள் ஆர்வத்தோடு இருக்கிறார்கள்