அண்மைக்காலமாக இலக்கியச் சந்திப்புக்களில் நான் கேட்கிற பெருமூச்சு: “அழுத்தமா ஒரு நல்ல சிறுகதை படிச்சு எவ்வளவு நாளாச்சு!” பல இலக்கிய உரையாடல்களில் நான் எதிர் கொள்கிற கேள்வி: “ சமீப காலங்களில் நல்ல காத்திரமான எழுத்தாளர் வரிசை ஏன் உருவாகவில்லை?”
இந்தக் கேள்வியை நான் எதிர்கொள்ளும் போதெல்லாம் நான் பதிலாக ஒரு கேள்வியை முன் வைப்பது வழக்கம். “நீங்கள் படித்த நல்ல கதை எது?” கல்கியின் கேதாரியின் தாயார், புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம், லாசராவின் பாற்கடல், , தி.ஜானகிராமனின் பாயசம், கி.ராஜநாராயணனின் கதவு, சூடாமணியின் நான்காம் ஆசிரமம், ஜெயகாந்தனின் அக்னிப் பிரவேசம், சுந்தர ராமசாமியின் விகாசம் , சிவசங்கரியின் பொழுது, சுஜாதாவின் அம்மோனியம் பாஸ்பேட், அசோகமித்ரனின் புலிக்கலைஞன், அம்பையின் அம்மா ஒரு கொலை செய்தாள், பாலகுமாரனின் சின்னச் சின்ன வட்டங்கள், பிரபஞ்சனின் அப்பாவின் வேட்டி, என்று வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் வேறு வேறு பதில்களைத் தருவது வழக்கம்
நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை உங்கள் பதிலுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது என்று சொல்ல எண்ணிப் பேசாமல் புன்னகைத்துக் கொள்வேன். ஒளிந்திருக்கும் அந்த பதில் என்ன?
மேலே குறிப்பிட்ட கதைகள் எல்லாம் யதார்த்தவாதக் கதைகள். தமிழின், ஏன் உலகின், ஆகச் சிறந்த கதைகள் எல்லாம், யதார்த்தவாதக் கதைகள்தான். அதாவது வாழ்வின் யதார்த்தத்தைத் தொட்டு புனைவில் கலந்து எழுதிய கதைகள். நனவிலி ஓடை, பின் நவீனத்துவம், மாய யதார்த்தம், என்று இலக்கியச் சிற்றேடுகளில் படித்த கதைகள் வாசிக்க வித்தியாசமாக, ஏன் சுவாரஸ்யமாகக் கூட, இருந்தன. ஆனால் மனதில் தங்கவில்லை.
இலக்கிய உலகில் வாசகனின் மேலாகத் தன்னை நிறுத்திக் கொள்ளும் சுயதாபங்களும் , பத்திரிகை உலகில் உணவை விடச் சிறுதீனியை விரும்புகிற வணிக நிர்பந்தங்களும் யதார்த்த வாதக் கதைகளைப் பின் தள்ளின.
நல்ல எழுத்தை மீட்டெடுக்க வேண்டுமானல் நாம் யதார்த்தவாதக் கதைகளுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் ஏனெனில் என்றைக்குமே வாழ்க்கையைப் படித்து எழுதுகிற கதைகள், புத்தகத்தைப் படித்து எழுதுகிற புனைவுகளை விட அழுத்தமாகவே இருந்திருக்கின்றன
அண்மையில் கல்கி குறுநாவல் போட்டிக்கு வந்த கதைகளை நடுவராக நான் வாசிக்க நேர்ந்த போது இந்த எண்ணம் மீண்டும் துளிர்த்தது. காரணம் அந்தக் கதைகள் பலவும் நம்மைச் சுற்றிப் படர்ந்து கிடக்கும் வாழ்க்கையைப் பற்றியதாகவே அமைந்திருந்தன. அறச்சீற்றத்தோடும், ஆழ்ந்த கவலையோடும், இன்னும் சில உதடு பிரிந்துவிடாத புன்னகையோடும் அவை சமகால வாழ்க்கையைப் பேசின. நகரம் தன் அசுரக் கரங்களை நீட்டி விரிக்கும் போது இடம் பெயரும் நெருக்கடிக்குள்ளாகும் விளிம்பு நிலை மாந்தர்கள், சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள், ஆணவக் கொலை, நவீன யுகத்துப் பெண்களுக்கு திருமணம் விடுக்கும் சவால்கள், மனவளர்ச்சி குன்றிய தாய் கலங்கித் தெளிவது எனப் பரிசுக்குத் தகுதி பெற்ற அனைத்தின் அடிநாதமாய் வாழ்க்கையும் அதைக் குறித்த கரிசனமும் இருந்தது.
பல புதிய பெயர்களைச் சந்தித்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. கல்கி புதிய கைகளைப் படைப்புலகிற்குப் பரிசளிக்கிறது என்ற மகிழ்ச்சி. எழுதுவதற்கான கனல் காலங்கள் தாண்டியும் கடந்து பரவுகிறது என்ற மகிழ்ச்சி.
புதிய நண்பர்களுக்கு ஒரு வார்த்தை. ஆர்வம் மாத்திரம் அழுத்தமான எழுத்தைத் தந்துவிட முடியாது. அதோடு திறனும் செய்நேர்த்தியும் சேர்ந்து கொள்ள வேண்டும். எத்தனை உயர்ந்த நெய்யாக இருந்தாலும் அதை மாத்திரம் கொண்டு விளக்கேற்றிவிட முடியாது. அதற்கு நெய்யில் தோய்ந்த திரி வேண்டும். ஆர்வம் நெய். திறன் திரி.
இந்தத் திறனைப் பெறுவது எப்படி?
வாசியுங்கள். ஒரு நல்ல வாசகனிலிருந்துதான் நல்ல எழுத்தாளன் தோன்றுகிறான்