வாரிசு அல்லது வன்முறை
தமிழ்நாட்டுக்காரர்களும், கர்நாடகத்தவர்களும் ‘விவரமானவர்கள்‘ என்று தில்லியில் இருப்பவர்களுக்கு ஒரு அபிப்பிராயம் உண்டு. அதற்குக் காரணம் பெரும்பாலும் அவர்கள் சந்திக்கிற தமிழர்களும், கன்னடர்களும், குமாஸ்தா பணிக்காகவோ, அல்லது மத்திய அரசு அதிகாரிகளாகவோ, அல்லது கணினிப் பொறியாளர்களாகவோ, வெள்ளைச் சட்டை வேலை காரணமாக தில்லிக்கு வந்தவர்களாக இருப்பதுதான். பிகார், ஹரியானா, உ.பி, போன்ற மாநிலங்களிலிருந்து உடல் உழைப்புச் சார்ந்த வேலைகளைத் தேடியோ, பஞ்சாபியரைப் போல வணிகம் நிமித்தமோ வந்தவர்கள் அல்ல. வீட்டு வேலை செய்து பிழைக்கும் தமிழர்களும் தில்லியில் இருக்கிறார்கள் என்றாலும், பொதுவான அபிப்பிராயம் இதுதான்.
‘மதறாசிக்கு உடம்பு பூரா மூளை‘ என்பது போன்ற வார்த்தைகளை பாராட்டாகவோ, வசையாகவோ, எச்சரிக்கையாகவோ எதிர்கொள்ள நேரிடுவது வழக்கம்தான். ஆனால் வட இந்தியர்களுக்கு இருக்கும் விளங்காத புதிர்களில் ஒன்று, இத்தனை ‘விவரமான‘ ஆட்களின் மாநிலங்களில் நடக்கும் அரசியல் மட்டும் ஏன் இப்படிக் கோமாளித்தனமாக இருக்கிறது என்பது.
கர்நாடக அரசைக் கவிழ்த்த கவுடாவின் செய்கையும், கருணாநிதி தயாநிதி மாறனை மத்திய அமைச்சரவையிலிருந்து விலக்கிக் கொண்ட போதும் இந்தக் கேள்வியை அதிகம் எதிர்கொள்ள நேர்ந்தது. கவுடாவின் கயமைக்கும், கருணாநிதியின் சினத்திற்கும், குடுமப நலனகளை மட்டுமே அவர்கள் கருதினார்கள் என்ற உண்மைதான் அடிப்படை என்பது, இந்தக் கேள்விகளைக் கூர்மையாக்கியது.
2004ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடகச் சட்ட மன்றத் தேர்தல் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் விதத்தில் தீர்ப்பளிக்கவில்லையெனினும், பாரதிய ஜனதா அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக விளங்கியது. 79 இடங்களைப் பிடித்திருந்த போதிலும் அது ஆட்சி அமைக்க இயலாது போனதற்கு தேவகவுடாவின் அரசியல்தான் காரணம். ‘மதச்சார்பற்ற‘ ஜனதாதளம் என்ற பெயர் கொண்ட தனது கட்சி எப்படி பாரதிய ஜனதாவுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைக்க முடியும் என்ற கேள்வியெழுப்பிய அவர், காங்கிரசிற்கு ஆதரவளிக்க முடிவு செய்தார். 2004க்கு முன்பு காங்கிரஸ்தான் அந்த மாநிலத்தை ஆண்டது. அதற்குப் பெரும்பான்மை கிட்டாதவாறு மக்கள் வாக்களித்திருந்தது, அதன் ஆட்சிக்கு எதிராக எழுதப்பட்ட தீர்ப்பாகத்தான் கருதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி ஆட்சியமைக்கக் காரணமானார் தேவகவுடா. இது ஜனநாயகத்தின் மீது அவர் ஏற்படுத்திய முதல் புண்.
எந்தக் கட்சி 2004ல் தீண்டத்தகாததாகக் கருதப்பட்டதோ அதே கட்சி 2006ல் உறவு வைத்துக் கொள்ள மட்டுமல்ல, ஆட்சியைப் பகிர்ந்து கொள்ளத்தக்கதாகவும் மாறிவிட்டது.காரணம் மகன் குமாரசாமியின் பதவி ஆசை. தரம்சிங் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை (தந்தைக்குத் தெரிந்தோ தெரியாமலோ) அவர் விலக்கிக் கொள்ள காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.
மீதமுள்ள பதவிக்காலத்தைச் ஆளுக்குச் சரிபாதியாகப் பகிர்ந்து கொள்வது என்ற எழுதப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் குமாரசாமி முதல்வர் ஆனார். அதன்படி 20 மாதங்கள் முடிந்த நிலையில், இந்த ஆண்டு அவர் முதல்வர் பதவியை பாஜகவிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் ஏதேதோ சாக்குச் சொல்லித் தட்டிக் கழிக்கப் பார்த்த அவரை பாஜக நெருக்கியதும், “எங்கே இருக்கிறது ஒப்பந்தம், காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்?” என்று எழுதப்படாத ஒப்பந்தத்தைக் கேட்டுச் சீறினார். பா.ஜ.க ஆதரவை விலக்கிக் கொள்ள அரசு கவிழ்ந்தது.
ம.ஜனதாதள எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியுமா என்ற நப்பாசையில் சட்டமன்றத்தைக் கலைக்காமல் முடக்கி வைத்தது காங்கிரஸ் தலைமையில் ஆன மத்திய அரசு. குதிரைப் பேர அபாயத்தைக் கண்டதும் கட்சி கலைந்துவிடக் கூடும் என்ற அச்சத்தில் மீண்டும் பாஜகவுடன் சரசத்தைத் துவக்கினார் கவுடா. இந்தப் பேரங்களைக் கேள்விப்பட்ட ஆளுநர் பாஜக-கவுடா கட்சியிடையே மலர்ந்த உள்ள உறவைக் கண்டு கொள்ளாமல் இருந்தார். கர்நாடகத்தில் பேரணி, உண்ணாவிரதம், தில்லியில் குடியரசுத் தலைவர் முன் எம் எல் ஏக்களின் அணிவகுப்பு என அமர்க்களப்படுத்தினார் கவுடா. பாஜக ஆட்சி அமைய ஆதரவளிப்பதாக எழுத்து மூலமாகக் கடிதமும் கொடுக்கப்பட்டது. ஆனால் அதனடிப்படையில் எடியூரப்பா பதவி ஏற்க அழைக்கப்பட்ட ஒருவாரத்தில் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டார் கவுடா.
கவுடாவின் பின் வாங்கலுக்கு என்ன காரணம்? நிச்சியம் கொள்கை ரீதியான கருத்து மாறுபாடுகள் அல்ல. ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தைக் கூட அவர் வற்புறுத்தவில்லை. அவர் கோரியவை 12 நிபந்தனைகள். அதில் முக்கியமானவை மூன்று. நகர்ப்புற வளர்ச்சி, கனிமம் ஆகிய துறைகள் தனது கட்சிக்கு அளிக்கப்பட வேண்டும். குமாரசாமியின் மீதுள்ள ஊழல் வழக்குகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். குமாரசாமியின் மீது பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கொடுத்துள்ள கொலைப் புகார் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.
சுயநலம் அப்பட்டமாக வெளிப்படும் கோரிக்கைகள் இவை. கவுடாவின் குடும்பம் கிரானைட் தொழிலில் ஈடுபட்டிருக்கிறது என்பது அதன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் ஒன்று என்பதை நினைவில் கொண்டால் கனிம வளத் துறைக்கு அது ஆசைப்படுவது ஏன் என்பதை அறிந்து கொள்வது கடினமில்லை. தகவல் தொழில்நுட்பத் துறையின் வருகை காரணமாக பெங்களூரிலும், கர்நாடகத்தின் மற்ற நகரங்களிலும், நிலத்திற்கு பெரும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது.
“நான் கட்சியைக் காப்பாற்றுவதற்காகத்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளேன். கடுமையான சூழ்நிலையில் இப்படி ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்கிறார் கவுடா. ஆனால் கவுடாவின் இந்த முடிவிற்குக் கட்சி எம்.எல்.ஏக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.” உங்கள் நிலையை இப்படி அடிக்கடி மாற்றிக் கொண்டு எங்களை சித்ரவதை செய்வதற்குப் பதிலாக, எங்களை விதான் செளதா (சட்டமன்றக் கட்டிடம்) மாடியிலிருந்து தள்ளிக் கொன்றுவிடுங்கள்” என்று அவர்கள் பேசியதாகத் தெரிகிறது. “கட்சிக்குக் கட்டுப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிப்பேன். ஆனால் அதன் பிறகு என் விருப்பம் போல் என் அரசியல் பயணத்தைத் தொடர்வேன்” என்று சில எம்.எல்.ஏக்கள் பேசியதாகத் தெரிகிறது.
குடுமப நலன்களை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்வது, கட்சி அமைப்பை ‘சீரமைப்பது‘ இன்று இந்திய அரசியலில் ஓர் வழக்கமாகவே ஆகிவிட்டது.தங்கள் முதலீட்டையும், அதன் மூலம் கிடைக்கும் லாபத்தையும். கார்ப்பரேட் அமைப்பின் மூலம் கிடைக்கும் அதிகாரத்தையும் தங்கள் குடும்பத்திற்குள்ளேயே தக்க வைத்துக் கொள்வதற்காக நெடுங்காலமாக வணிகத்தில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இதே காரணங்களுக்காக இந்திய அரசியலில் கட்சிகளும் இதைப் 30-40 ஆண்டுகளாகப் பின்பற்றி வருகின்றன. 70களில் இந்திராகாந்தி கட்சியைத் தன்பிடியில் வைத்துக் கொள்ள சஞ்சய் காந்தியை வளர்தெடுத்தது ஒரு தவறான, ஆனால் கட்சிகளின் பார்வையில் ஒரு ;கெட்டிக்காரத்தனமான‘ உத்தியாக ஆகி விட்டது. அன்று இந்திராவை ‘பசுவும் கன்றும்‘ என்று அவரது தேர்தல் சின்னத்தை வைத்துக் கேலி பேசிய திமுக, நானோ என் குடும்பத்தினரோ அரசுப்பதவிகளை ஏற்க மாட்டோம் என வாக்களித்த மருத்துவர் ராமதாசின் கட்சி, எல்லாம் இன்று வாரிசு அரசியலைத் தங்கள் நடைமுறையாக்கிக் கொண்டுவிட்டன.
மாநிலக் கட்சிகள்தான் இப்படி என்றால் சித்தாந்தம் சார்ந்த தேசியக் கட்சிகளின் நிலை வேறுவிதமாக இருக்கின்றன.அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள, அங்கு வாரிசுகள் முன்னிறுத்தப்படுவதில்லை என்றாலும் கூட. அவை மேற்கொள்ளும் அணுகுமுறைகள் திகிலளிக்கின்றன. மேற்குவங்கம் நந்திகிராமத்தில் மக்களுக்கு எதிராக மார்க்க்சிஸ்ட் கட்சித் தன் தொண்டர்கள் மூலம் ஏவிவிட்ட வன்முறைகளுக்கும், குஜராத்தில் பாரதிய ஜனதாகட்சி சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்த்திய வன்முறைகளுக்கு சாராம்சத்தில் அதிகம் வித்தியாசமில்லை.
வாரிசு அரசியல் அல்லது வன்முறை என்ற அரசியல் கலாசாரத்தில் நம் அரசியல் கட்சிகள் சிக்கிக் கொண்டிருக்கின்றன.
இரண்டுமே ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிப்பவை என்பதால் மக்களுக்கு, நாட்டின் எதிர்காலத்திற்கும் எதிரானவை. மக்களின் விழிப்புணர்வு மட்டுமே இதனை மாற்றும் வல்லமை கொண்டது. அந்த விழிப்புணர்வை வலுப்படுத்தும் கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது.
புதிய பார்வை டிசம்பர் 1-16 2007