காலை நடை போகும் நாட்களில் கவனித்திருக்கிறேன். சில சமயம் சூரியன் உதித்த பின்னும் சிறிது நேரம் நிலா வானத்தில் தெரியும்.. எப்போதாவது அபூர்வமாக நிகழ்கிற நிகழ்வு அது. அல்லது நான் அபூர்வமாகக் காண்கிற நிகழ்வு.
இன்றும் (ஜூலை 7) அப்படி ஒரு அபூர்வத்தைக் கண்டேன். வெகுநாட்களுக்குப் பிறகு காலை நாளிதழ்கள் நம்பிக்கை அளிக்கும் தலைப்புச் செய்திகளோடு வெளிவந்திருந்தன. லடாக் எல்லைப் பகுதியிலிருந்து சீனப் படைகள் பின் வாங்கின என்று அவை தடித்த எழுத்துகளில் அறிவித்தன. ஆங்கில இதழ்கள் இன்னும் சற்று விரிவாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் சீன அயலுறவு அமைச்சர் வாங் யிக்குமிடையிலான பேச்சு வார்த்தைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தன. “வெளிப்படையான ஆழமான உரையாடல்” நடைபெற்றதாக சீனத் தரப்பு அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்தச் சீனப் பின்வாங்கல் பல முனைகளில் இந்தியப் பிரதமர் மேற்கொண்ட முயற்சிக்கான வெற்றி. சற்றும் எதிர்பாராமல் அவரே எல்லைப் பகுதிக்குச் சென்று வீரர்களுக்கு ஊக்கமளித்தது, ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று முந்தைய அரசு கைகளைக் கட்டிப் போட்டிருந்ததற்கு மாறாக படைகளுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கிறோம் என்ற அறிவிப்பு, எல்லையில் படைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, லடாக்கில் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியை அதிகரித்தது, சீனச் செயலிகளுக்குத் தடை, இறக்குமதி செய்யப்பட்ட சீனப் பொருட்கள் மீதான கெடுபிடி, சீன முதலீடுகள் மீதான கண்காணிப்பு, உயர் மட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை, ராஜரீக ரீதியில் உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டியது என ராணுவம், பொருளாதாரம், அரசியல், டிப்ளமசி எனப் பல முனைகளில் அரசு செயல்பட்டதன் விளைவு இந்தப் பின்வாங்கல்.
வாங்குடன் நடந்த பேச்சு வார்த்தையில் தோவல் சிறிது கூட வளைந்து கொடுக்கவில்லை (Not Budging) என்றும் இந்தியாவின் நிலையை மென்று முழுங்காமல் பட்டவர்த்தனமாகச் சொன்னதாகவும் (bluntly puts across India’s bottom line) என்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதுகின்றன. ஒருவேளை பேச்சு வார்த்தைகள் முறிந்தால் அதன் விளைவை எதிர்கொள்ளவும் இந்தியா தயாராக இருந்தது என்பதைத்தான் இது காட்டுகிறது. அடிச்சிருவானோ எனப் பயப்படாமல் அடிச்சிருவியா பார்ப்போம் என்று அதன் தைரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
தோவல் சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த அதே நேரம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பல்வேறு உலக நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். அதன் விளைவாக அமெரிக்கா, ஐக்கிய ராஜ்யம், ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், கனடா ஜெர்மனி, இந்தோனீசியா, ஆகியவை இந்தியாவை ஆதரிக்க முன் வந்தன. அமெரிக்கா இன்னும் ஒரு படி மேலே போய், வெளிப்படையாக, “இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மோதல் ஏற்பட்டால் அமெரிக்க ராணுவம் இந்தியாவின் பக்கம் நிற்கும்” என்று அறிவித்தது.
பலமுனைகளில் காய் நகர்த்தி, ஒருங்கிணைத்து, அழுத்தம் கொடுக்கப்பட்டடதன் காரணமாகச் சீனா பின்வாங்கியிருக்கிறது. இந்த ஒருங்கிணைப்பில் இந்தியாவின் தலைமை-அதாவது பிரதமர் மோதி- சிறப்பாகச் செயலாற்றியிருக்கிறார் என்பது வெளிப்படை.
ஆனால் ராஹூல் காந்தி மோதியைக் குறை சொல்வதாக நினைத்துக் கொண்டு, இந்தியப் படைகளின் வீரத்தைக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். இதில் கொடுமை என்னவென்றால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பாதுகாப்பு விஷயங்களை கவனிக்கும் நாடாளுமன்ற நிலைக் குழுவில் ராஹுல் ஓர் உறுப்பினர். ஆனால் இதுவரை ஒரு கூட்டத்தில் கூடக் கலந்து கொண்டதில்லை. ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சித் தலைவர் செயல்படும் விதம் இதுதானா?
இது போன்ற சூழ்நிலையில் ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சித் தலைவர் எப்படிச் செயல்பட வேண்டும்? எனக்கு வாஜ்பாய் நினைவுக்கு வருகிறார்.
1967ல் சீனா இந்தியா மீது ராணுவ ரீதியான தாக்குதல் நடத்தியது..அதற்கு அது சொன்ன காரணங்களில் ஒன்று வெகு அற்பமானது. நகைப்பிற்கு இடமளிப்பது. அது: இந்திய வீரர்கள் சீனாவின் 800 ஆடுகளையும் 59 யாக் என்றழைக்கப்படும் மலையாடுகளையும் திருடி விட்டார்கள் என்பது. 1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் –செப்டம்பர் மாதங்களில் அது இந்தக் குற்றச்சாட்டைக் கூறியது.
உண்மையில் அதுவல்ல காரணம். அப்போது அது சிக்கிமை விழுங்கத் துடித்துக் கொண்டிருந்தது. சிக்கம் அப்போது தனி நாடாக மன்னராட்சியின் கீழ் இருந்தது. அதன் பாதுகாப்பை இந்தியா ஏற்றிருந்தது. அந்த நேரம் நமது ராணுவம் பாகிஸ்தான் நம்மீது தொடுத்த போரை எதிர்கொண்டு போர்முனையில் இருந்தது. இதுதான் சிக்கிமை வசப்படுத்த சமயம் என்று சீனா கருதியது. அதை வெளிப்படையாகச் சொல்லி இந்தியாவோடு போருக்கு இறங்க முடியாது. பாகிஸ்தான் அப்போது அமெரிக்காவைச் சார்ந்து இருந்ததால், பாகிஸ்தான் சார்பாகவும் களமிறங்க முடியாது. இந்தியாவுடன் மோத ஒரு முகாந்திரம் தேவை அதற்காக இந்த ‘ஆட்டைத் திருடி விட்டான்’ என்ற கதை.
இதற்கு ஓர் அரசு எதிர்வினையாற்ற சில வரைமுறைகள் உண்டு. அதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான் இந்தியா சீனாவுடன் நடந்த போரில் தோற்றிருந்தது.அது போல் மறுபடியும் ஆகிவிடக் கூடாது என்று நமது அரசுக்குத் தயக்கம் இருந்தது. அன்றையத் தேதியில் அதனால் அதிக பட்சம் செய்யக் கூடியது மறுப்புக் கடிதம் அனுப்புவதுதான்.
வாஜ்பாய் அப்போது ஆட்சியில் இல்லை. எதிர்க்கட்சியான ஜனசங்கத் தலைவர். நாடாளுமன்ற உறுப்பினர். 42 வயது. அரசு பின்பற்ற வேண்டிய நாசூக்கான அணுகுமுறைகளை மேற்கொள்ளும் கட்டாயம் எதிர்க்கட்சிக்கு இல்லை. அவர் என்ன செய்தார் தெரியுமா?
800 ஆடுகளைத் திரட்டி வேன்களில் ஏற்றி தில்லியில் இருந்த சீன தூதரகத்திற்கு அனுப்பி வைத்தார் வாஜ்பாய். ஆடுகளின் கழுத்தில் ஓரு அட்டை. அதில் “ என்னைத் தின்று கொள். ஆனால் உலகத்தைக் காப்பாற்று”: (“Eat me but save the world”)
தன் தூதரகத்தின் முன் வந்து இறங்கியிருக்கும் 800 ஆடுகளை என்ன செய்வது என்று சீனத் தூதரகத்திற்குத் தெரியவில்லை. அவை மே, மே என்ற் கத்திக் கொண்டு, அலங்காரத்திற்கு வைத்திருந்த செடிகளைக் கடித்துக் கொண்டு, ஆங்காங்கே புழுக்கை போட்டுக் கொண்டு அலைகின்றன. ஒன்று இரண்டாக இருந்தால் அதட்டி விரட்டி விடலாம். 800 ஆடுகளை என்ன செய்ய?
சீனா கடுப்பானது. “எங்களை அவமதித்து விட்டீர்கள்” என்று இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. வாஜ்பாயின் குறும்பு பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. உலகின் கவனம் சீனாவின் அற்ப குற்ற்ச்சாட்டு குறித்துத் திரும்பியது. அவை சீனாவைப் பார்த்து நகைக்கத் தொடங்கின.
1967க்குப் பிறகு பல ஆண்டுகளுக்குச் சீனா எல்லையில் வாலாட்டாமல் இருந்தது. சீ வந்த பிறகுதான் சீண்டல்கள் தொடங்கியிருக்கின்றன.
இந்தப் பின்வாங்கலோடு இந்தியா திருப்தி அடைந்து விடக் கூடாது. சீனா மனம் திருந்தி விட்டதாக எண்ணிக் கொள்ளக் கூடாது. சீனா தனது நோக்கங்களை வெளிப்படையாகச் சொல்லாது என்பதற்கு இந்த ஆடு திருட்டு ஓர் உதாரணம். அதன் திட்டங்களில் கபடம் உண்டு.
சீனா மீதான பல முனை அழுத்தம் தொடர வேண்டும். அதனை இந்தியா மறைமுகமாகச் செய்து வருகிறது என்று தோன்றுகிறது. தலாய் லாமா தைவானுக்குச் செல்ல அனுமதி கேட்கிறார். வரவேற்கத் தயாராக இருக்கிறோம் என்கிறது அந்த அரசு. இந்தியாவிற்கு எதிரான மனோபாவம் கொண்ட நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி சொந்தக் கட்சிக்குள்ளேயே நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறார். அவரது இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு “ அரசியல் ரீதியாக சரியானதல்ல, ராஜரீதியாகப் பொருத்தமானதல்ல” என்று அவரது கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கூறியிருக்கிறார். ஒலியின் படவி எந்த நேரமும் பறி போகும் என்ற நிலைமை. ஹாங்காங், திபெத், தென் சீனக் கடல் போன்ற பிரசினைகளை உரிய விதத்தில் அணுகி சீனாவிற்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்
போர் என்பது களத்தில் நடக்கிற மோதல் மட்டுமல்ல.
(துக்ளக் 22-7-2020)